அறிமுகம்:
அரசறிவியல் காலத்துக்கு காலம் பல சிந்தனை ஆதிக்கங்களை முதன்மைப்படுத்தி அரசுகளின் அரசியல் இயங்கியலை நெறிப்படுத்தி வருகின்றது. முதலாளித்துவம், சோசலிசம் மற்றும் தாராண்மை என்பன அத்தகைய நெறிப்படுத்தல் கருவிகளுக்கான சான்றாகவே அமைகின்றது. இவ்வாறானதொரு மரபுக்குள்ளேயே மதச்சார்பின்மைவாதம் (Secularism) பற்றிய உரையாடல்களையும் அரசறிவியலில் தொகுக்கப்படுகின்றது. மதம் அரசியல்மயமாக்கப்பட்ட கருத்தியலிலிருந்து நேரெதிரானதாகவே மதச்சார்பின்மை என்ற கருத்தாடல் எழுச்சியடைகின்றது. மதச்சார்பின்மை என்ற கருத்தை எதிர்கொள்வது, மதச்சார்பின்மைக்கு முரணாக வைக்கப்பட்டு புரிந்து கொள்ளப்படும் மதம் பற்றிய கருத்தின் தெளிவிலேயே அமைகின்றது. மதத்தின் அரசியல்மயப்படுத்தப்பட்ட உலகளாவிய தோற்றம், மத பயங்கரவாதம், அடிப்படைவாதம், மத வன்முறை மற்றும் மதவாத அரசியல் கட்சிகளின் தெரிவு ஆகிய அரசியல் இயங்குநிலைகளுக்கு காரணமாக அமைகின்றது. சமூக-அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் அதிக பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவத்தைக் கோருகின்றன. பல்வேறு அரசுகளில் ஆட்சி அமைப்பதில் மத-அரசியல் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. மத அரசியல் கட்சிகள், ஆதிக்க சமூகத்தின் மேலாதிக்கத்தை நிறுவவும், கலாச்சார கடந்த காலங்களை ஒருங்கிணைக்கவும் மற்றும் தேசியவாதத்தை மறுவரையறை செய்யவும் முயற்சிக்கின்றன. அமெரிக்க அறிஞரான சாமுவேல் பி.ஹன்டிங்டன் தனது ஆய்வில் பனிப்போருக்கு பின்னரான அரசியலை மதம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களின் தொகுப்பான நாகரீகங்களின் மோதுகையாகவே அடையாளப்படுத்துகின்றார். இது உலக அரசியலில் மதத்தின் நடைமுறை ஆதிக்கத்தையே உறுதி செய்கின்றது. மேலும், ஐரோப்பா முழுவதும் பல நூற்றாண்டுகளாக யூதர்கள் பாகுபாட்டை எதிர்கொண்டாலும், தற்போதைய இஸ்ரேலில் யூத குடிமக்களுக்கு கிடைக்கும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நன்மைகளிலிருந்து, மதச்சிறுபான்மையினரான அரபுக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் விலக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு எதிராக நுட்பமான பாகுபாடுகள் தொடர்ந்து நீடிக்கிறது. தென்னாசிய நாடுகளில் தொடர்ச்சியாக மத சிறுபான்மையினரின் நிலையும் கணிசமான கவலைகளையே வெளிப்படுத்துகின்றது. இன்றைய உலகில் மதத்தின் பொதுத் தோற்றமும் அதன் அரசியல்மயமாக்கலும் மதச்சார்பற்ற சமூகத்தின் தேவைப்பாடுகள் குறித்து அறிஞர்களை எச்சரித்துள்ளது. இவ்எண்ணங்களே அரசியல் ஒழுங்கில் மதச்சார்பின்மைவாதம் பற்றிய சிந்தனையை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.
மதச்சார்பின்மை என்பது அரசியல் எண்ணக்கருவாக மேற்கிலிருந்து பரிணமிக்கப்பட்டதொன்றாகவே அமைகின்றது. குறிப்பாக மேற்கு அரசில் நிலவிய திருச்சபைகளின் ஆதிக்கத்திற்கு எதிராக பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் மேலெழுந்த அறிவொளியின் தாக்கம் மதச்சார்பின்மை தொடர்பான தேடலை ஊக்குவித்தது. எனினும் அறிவொளியின் தோற்றம் பதினாறாம் நூற்றாண்டில் ஜோன் லொக், தோமஸ் கொப்ஸ் போன்ற அறிஞர்களால் நிறுவப்பட்ட அறிவின் அடிப்படையில் முழு பிரபஞ்சத்தின் சித்திரத்தை உருவாக்குவதற்கான முயற்சியை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் மதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சிந்தனையும் கட்டமைக்கப்பட்டது. இவ்எண்ணங்களினுள்ளேயே மதச்சார்பின்மை பற்றிய சித்தாந்தத்திற்கான அறிவொளி யுகத்தின் பங்களிப்பும் முதன்மையாகின்றது. இவ்வாறாக அறிவொளியினை மையப்படுத்திய சிந்தனையாளர்களின் கோட்பாடுகளில் 1789ஆம் ஆண்டு இறையாண்மை கோட்பாட்டின் அடிப்படையில் அரசை புனரமைக்க மற்றும் தேசத்தை உருவாக்குவதுடன், மேலாதிக்கத்தில் எஞ்சியிருக்கும் தேவாலயத்தை இழக்க வழிவகுத்தது. தொடர்ச்சியாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஹெகல் மற்றும் இம்மானுவேல் கான்ட் எனும் அறிஞர்கள் அறிவொளியை ஆதரித்தனர் மற்றும் மேம்பட்ட பகுத்தறிவுவாதத்திற்கு வழிவகுத்தனர். இவர்களுடைய பகுத்தறிவுவாத சிந்தனைகள் மறுக்கமுடியாத உண்மையென அதிகாரபீடத்தால் கட்டமைக்கப்பட்ட அரசியலில், தெய்வீக உரிமைக்கோட்பாட்டு இறையியல் சிந்தனைகள் பெருமளவில் மட்டுப்படுத்தியது. மேலும் ஜெரமி பெந்தம் எனும் பயனுடமைவாத சிந்தனையாளரும் மதச்சார்பின்மை என்ற கருத்தை ஊக்குவிப்பவராக இருந்தார். இவை அனைத்தும் மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவதற்கான சூழலை அனுமதித்தன. இந்த பின்னணியில் மதச்சார்பின்மை (Secularism) என்ற சொல் 20ஆம் நூற்றாண்டில் ஹோலியோக்கால் (Holyoake) படைப்புக்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய காலத்தின் நிரம்பியிருந்த மதச்செல்வாக்கு, தொடர்ச்சியாக மறுமலர்ச்சி ஐரோப்பிய அரசியலிலில் தேவாலயங்கள் தொடர்பிலான மையவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும், மதத்தின் நம்பிக்கை வடிவத்தினூடாக அரசின் இயங்கியலுக்குள் திருச்சபைகளின் ஆதிக்கம் ஏதொவொரு வகையில் ஐரோப்பிய அரசியலில் தவிர்க்க இயலாத நிலையை பெற்றது. மதத்தின் பொதுத் தோற்றமானது, மதச்சார்பற்ற, நீதியான, சமத்துவ மற்றும் தாராளமய சமூகத்தின் சாத்தியங்களை சிதைத்தது. அத்துடன், வலுவான மேற்கத்திய நவீனமயமாக்க தத்துவத்தின் உலகளாவிய கொள்கைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தியது. மதம், மதச்சார்பின்மை, நவீனத்துவம், நவீனமயமாக்கல், தேசியவாதம், மற்றும் பலவற்றின் நெறிமுறை புரிதலில் இருந்து ஒரு விலகலாகவே அரசியல்மயமாக்கப்பட்ட மதம் அமைகின்றது. இவ்அரசியல்மயமாக்கப்பட்ட மதத்திற்கு எதிராக மேற்கில் வலுப்பெற்ற மதச்சார்பின்மை சித்தாந்தம் மேற்கிற்கு வெளியே பல பரிமாணங்களுக்குள் பயணிக்க முற்பட்டுள்ளது. மேற்கிலிருந்து மேற்கத்திய நாடுகள் அல்லாத சமூகங்களுக்கு ஏற்றுமதி செய்யும்போது மதச்சார்பின்மை யோசனைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதை விரிவாகக் கூற சமூக விஞ்ஞானிகள் வாதிடத் தொடங்கியுள்ளனர்.
மதச்சார்பின்மை எண்ணக்கரு
மதச்சார்பற்ற என்ற சொல் மத நம்பிக்கையுடன் தொடர்புடையது அல்ல. சமகால உலகில், மதச்சார்பற்ற நாடு அரசியலமைப்புரீதியாக பல அரசுகளில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அதிகாரத்தை நியாயப்படுத்துவது முற்றிலும் ‘மதச்சார்பற்ற அரசு’ ஆகும். எனினும், இதில் மதம் உள்ளது. ஆனால் மதம் வாழ்க்கை முறையில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. மற்றும் எல்லா மதமும் இருக்கிறது என்ற உணர்வுடன் நிலையானதாகவும் அமைகிறது. சுருங்க கூறுவதானால், மதச்சார்பற்ற சமூகங்களில் கடவுளை சந்திக்காமல் அரசியல் பங்கேற்பு இடம்பெறுகின்றது.
1851இல் பிரிட்டிஷ் சமூக சீர்திருத்தவாதி ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக்(1817-1906) தன்னையும் தன்னைப் பின்பற்றுபவர்களையும் விவரிக்க ‘மதச்சார்பின்மை’ (Secularism) என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கினார். குறிப்பாக தனிப்பட்ட ஒழுக்கங்கள், தத்துவம், சமூகம் மற்றும் அரசியலுக்கான அவரது உலக அணுகுமுறையை விவரிக்க மதச்சார்பின்மை என்ற வார்த்தையை அடையாளப்படுத்தினார். அவர் மதச்சார்பின்மையை ‘இந்த வாழ்க்கை தொடர்பான ஒரு கடமை நெறிமுறை, முற்றிலும் மனிதனை கருத்தில் கொண்டு நிறுவப்பட்டது’ என்று வரையறுத்தார். ஹோலியோக்கிற்கு இந்த வார்த்தை நாத்திகத்தை விட நேரானதாக அமைந்தது. மதத்தை மறுதலிப்பதிலிருந்து வேறுபட்டு, வாழ்க்கை தொடர்பான நெறிமுறைக்குள் மதத்தை விலக்கி அணுகியிருந்தார். இம்மரபிலிருந்தே நவீன அரசு பற்றி சிந்தனைக்குள் வாழ்க்கை தொடர்பான நெறிமுறையை கட்டமைக்கும் அரசு கட்டமைப்பிற்குள் மதச்சார்பின்மை முதன்மையான வடிவத்தை பெறுகின்றது.
மதச்சார்பின்மை என்ற ஆங்கில வார்த்தையான ‘Secularism’ ஒரு தலைமுறை அல்லது ஒரு வயதைக் குறிக்கும் லத்தீன் வார்த்தையான ‘Saeculum’ என்பதிலிருந்து பெறப்பட்டது. ‘மதச்சார்பின்மை’ என்பது இந்த வயதைச் சேர்ந்தது அல்லது வாழ்க்கையின் உலக அம்சம் என்று பொருள்படும். பொதுவாக, மதச்சார்பின்மை என்பது உள்ளார்ந்த தன்மையை உறுதிப்படுத்துவதை, இந்த உலக உண்மைகள், ஆழ்நிலை மற்றும் பிற உலக யதார்த்தங்களின் மறுப்பு அல்லது விலக்குதலை உள்ளடக்கியது. மதச்சார்பின்மை என்பது தனிநபர் மற்றும் சமூக வாழ்க்கைக்கான மதமற்ற அணுகுமுறையாகும்.
ஆக்ஸ்போர்டு அகராதி மதச்சார்பற்றது என்பது உலகின் விவகாரங்களை மட்டுமே பற்றியது. புனிதமானது அல்ல என்று விவரிக்கிறது. சமூக அறிவியல் அகராதி மதச்சார்பற்ற வார்த்தையின் மூன்று பயன்பாடுகளை அடையாளம் கண்டுள்ளது. முதலில் உலகியல் மற்றும் ஆன்மீகம், இரண்டாவதாக புனிதமானது மற்றும் மூன்றாவதாக காலப்போக்கில் தொடரும் நிலைமைகளைக் குறிக்கிறது. 1817 இல் மதச்சார்பற்ற கோட்பாட்டை வெளியிடும் போது ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை உருவாக்கியது. மதச்சார்பின்மையின் கருத்து, ஒழுக்கம் என்பது அனைவரையும் விலக்கி மனித நல்வாழ்வை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற கோட்பாடாகும்.
அமெரிக்க சட்ட அகராதி மதச்சார்பற்ற என்ற சொல்லை ஒரு அரசியல் அல்லது சமூக சிந்தனையின் ஏற்பாடாக வகைப்படுத்துகிறது. இது அனைத்து வகையான மத நம்பிக்கைகளையும் நிராகரிக்கிறது மற்றும் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பயிற்சி மற்றும் பல்வேறு மூலோபாய பிரச்சனைகள் மத கூறுகளை முன்வைக்காமல் தீர்க்கப்பட வேண்டும் என்று நம்புகிறது.
ஹார்வி காக்ஸ் (Harvey Cox – 1985) மதச்சார்பின்மையை, ‘மத மற்றும் மனோதத்துவ கல்வியிலிருந்து மனிதனின் விடுதலை, மற்ற உலகங்களிலிருந்தும், இந்த உலகத்தை நோக்கியும் அவனது கவனத்தைத் திருப்புவது அதுவே உலகியல்’ என வரையறுக்கிறார்.
ஜீன் பாபெரோட் (Jean Baubérot) எனும் அறிஞர் மதச்சார்பின்மை தொடர்பில் வழங்கிய நவீன வரையறை, மதச்சார்பின்மைக்குள் மூன்று பகுதிகளைக் அடையாளப்படுத்துகின்றது. ஒன்று, மத நிறுவனங்களை அரசின் நிறுவனங்களிலிருந்து பிரித்தல். இரண்டு, மத நிறுவனங்களால் அரசியல் துறையில் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. அனைவருக்கும் சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரம் பேணப்படல் வேண்டும். மூன்று, ஒருவரின் மதம் அல்லது மதம் சாராத உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் யாருக்கும் எதிராக அரச பாகுபாடு இல்லை என்பனவாகும்.
மதச்சார்பின்மையின் மாறுபட்ட வடிவங்கள்:
மதச்சார்பின்மை மதம் எனும் கலாசார விழுமியத்துடன் தொடர்புறுவதனால், பிராந்திய கலாச்சார வேறுபாடுகளுக்குள் மதச்சார்பின்மைக்கான வரையறைகளும் உள்ளீடுகளும் நிலையான தன்மை பெற முடியாத தன்மையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக மேற்கத்தேய மதச்சார்பின்மை தொடர்பான வாதங்களும் கீழைத்தேய நடைமுறைகளும் முரணான பதிவையே கொண்டுள்ளது.
மதச்சார்பின்மை என்பது மேற்கத்தேய அரசியல் மரபில், இயற்கைக்கு அப்பாற்பட்டவற்றிலிருந்து அகற்றப்பட்ட ஒரு கோளமாகும். குறிப்பாக மதத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் இடையே அவற்றின் தன்னாட்சி வேறுபாட்டை விளக்கியுள்ளார்கள். மதச்சார்பின்மை என்ற கருத்து, ஐரோப்பிய அரசின் நிலையிலும், மதத்தைப் பொருட்படுத்தாமல் பயனாளியின் தத்துவத்திலும் அதன் பின்னணியுடன் நடத்தைக் கோட்பாட்டை வழங்கும் நோக்கத்துடன் நிறுவுவதற்கான இயக்கம் என வரையறுக்கப்படுகிறது. எனவே மதச்சார்பின்மை சித்தாந்தத்தின் பொதுவான அல்லது முக்கியத்துவம், மதத்தை நிராகரிப்பதை உள்ளடக்கியது. மற்றும் அது ஆன்மீக விடயங்களில் இருந்து வேறுபட்டது மற்றும் தொடர்புடையது அல்ல என்பதை சுட்டிக்காட்டுகின்றது. ஐரோப்பாவில் மதச்சார்பின்மை என்ற சொல் மதத்தின் அச்சுறுத்தலை வெளிப்படுத்துகிறது. மதச்சார்பின்மையின் நோக்கம் மதத்தின் கொடுங்கோன்மையிலிருந்து விடுதலை பெறுவதாகவே அமைந்துள்ளது. மேற்கத்தேய மதச்சார்பின்மையின் அரசியலமைப்புரீதியான நடைமுறையாக்கத்தின் ஆரம்பம் பிரான்சிலேயே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 1905ஆம் ஆண்டில் பிரெஞ்சு அரசாங்கம் ‘தேவாலயங்களையும் அரசையும் பிரிக்க வேண்டும்’ என்று ஒரு சட்டத்தை இயற்றியது. இதனால் மதச்சார்பின்மை ஒரு தேசியக் கொள்கையாக பரிணமித்தது. மதக் குழுக்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பது, நிதியளிப்பது அல்லது ஒப்புதல் அளிப்பதில் இருந்து அரசைத் தடை செய்த சட்டம், பிரான்சில் தேவாலய-அரசு உறவுகளில் பெரும் மாற்றத்தைக் குறிக்கிறது. ஐரோப்பிய மதம் அதிகம் கிறிஸ்தவம் என்ற ஒற்றைக்கூறுக்குள் காணப்பட்டமையால் மதம் அரசியலிலிருந்து முழுமையாக நீக்கம் பெறவேண்டும் எனும் கருத்து வலிமையான நிலையை பெற்றது. எனினும் சமீபத்தில் ஐரோப்பாவில் ஏனைய மதங்களினது எண்ணிக்கையும் பரலவான அதிகரிப்பை எதிர்கொள்கையில், மதங்கள் முழுமையான அரசு விலக்குதலை பெறுவதனால் சிறுபான்மை மதங்கள் சில நெருக்ககடிகளை எதிர்கொள்வதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதனால், பிரெஞ்சு சமுதாயத்தில் முஸ்லீம் மற்றும் பிற மத சிறுபான்மை குழுக்களின் ஒருங்கிணைப்பு தொடர்பாக சமீபத்தில் அதிக ஆய்வுக்கு உட்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கீழைத்தேய மதச்சார்பின்மை வடிவத்தின் பிரதிபலிப்பாக இந்தியாவின் மதச்சார்பின்மை கருத்தியல்ரீதியாக முதன்மையானதாக அமைகின்றது. இந்திய மதச்சார்பின்மை மதம் மற்றும் அரசின் பிரிவினையில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. மாறாக மதங்களுக்கிடையேயான சமத்துவம் பற்றிய கருத்து இந்திய கருத்துருவுக்கு முக்கியமானதாக அமைகின்றது. இந்தியாவின் தேசபிதா என அழைக்கப்படும் மகாத்மா காந்தி மதங்கள் தொடர்பான இந்திய அரசின் நிலைப்பாட்டை விழிக்கையில், ‘எனது கனவுகளின் இந்தியா ஒரு மதத்தை வளர்க்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதாவது, முழு இந்துவாகவோ அல்லது முழு கிறிஸ்தவனாகவோ அல்லது முழு முஸ்லீமாகவோ இருக்க வேண்டும். ஆனால் அது முற்றிலும் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும். அதன் மதங்கள் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.’ எனக்குறிப்பிட்டிருந்தார். மேற்கத்திய நவீனத்துவத்தின் வருகையானது இந்திய சிந்தனையில் அதுவரை புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட சமத்துவக் கருத்துகளை முன்னுக்குக் கொண்டு வந்தது. இது மதச்சார்பின்மை யோசனைகளை கூர்மைப்படுத்தியது மற்றும் சமூகத்திற்குள் சமத்துவத்தில் கவனம் செலுத்த உதவியது. இது படிநிலை என்ற கருத்தை மாற்றுவதற்கு சமூகங்களுக்கு இடையேயான சமத்துவம் பற்றிய கருத்துக்களையும் அறிமுகப்படுத்தியது. இவ்வாறு இந்திய மதச்சார்பின்மை ஒரு தனித்துவமான வடிவத்தை எடுத்தது. மத வேறுபாடுகளைக் கொண்ட ஒரு சமூகத்தில் ஏற்கனவே இருந்ததற்கும் மேற்கிலிருந்து வந்த கருத்துக்களுக்கும் இடையிலான தொடர்புகளின் விளைவாக அமைந்தது. இது மதங்களுக்கு இடையேயான ஆதிக்கத்தில் சமமாக கவனம் செலுத்தியது. மேலும் இந்திய மதச்சார்பின்மை என்பது தனிநபர்களின் மத சுதந்திரம் மட்டுமல்ல, சிறுபான்மை சமூகங்களின் மத சுதந்திரத்தையும் கையாள்கிறது. இவ்வகையில் கீழைத்தேய மதச்சார்பின்மை மதத்தினை கையாள்வதனை மையப்படுத்தியே வடிவமைக்கப்படுகின்றது.
மேலும் மதச்சார்பின்மையின் வடிவம் பிராந்திய வேறுபாடுகளை தாண்டி ஆட்சியாளர்களின் எண்ணங்களுக்குள் பயணித்திருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக ஆசிய பரப்பினுள்ளேயே முரணான பார்வைகளை 20ஆம் நூற்றாண்டின் முன்னரை பகுதியிலும் பின்னரை பகுதியிலும் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் துருக்கியில் நடைமுறைப்படுத்தப்பட்ட மதச்சார்பின்மை என்பது ஒழுங்கமைக்கப்பட்ட மதத்திலிருந்து கொள்கை ரீதியான தூரம் அல்ல. மாறாக செயலில் தலையிடுவது மற்றும் மதத்தை அடக்குவதுடன் சம்பந்தப்பட்டதாக அமைகின்றது. மதச்சார்பின்மையின் இந்த வரையறை முஸ்தபா கெமால் அட்டதுர்க்கால் (Mustafa Kemal Atatürk, 1881-1938) முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பிறகு அவர் துருக்கியின் ஆட்சிக்கு வந்தார். துருக்கியின் பொது வாழ்வில் கலீபாவின் நிறுவனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் உறுதியாக இருந்தார். அட்டதுர்க், பாரம்பரிய சிந்தனை மற்றும் வெளிப்பாடுகள் ஆகியவற்றுடன் ஒரு தெளிவான முறிவு மட்டுமே துருக்கியை வருந்தத்தக்க நிலையில் இருந்து உயர்த்த முடியும் என்று உறுதியாக நம்பினார். துருக்கியை நவீனமயமாக்குவதற்கும் மதச்சார்பின்மைப்படுத்துவதற்கும் அவர் தீவிரமான முறையில் செயல்பட்டார். அட்டதுர்க் தனது சொந்தப் பெயரை முஸ்தபா கெமால் பாஷாவிலிருந்து கெமல் அட்டதுர்க் என்று மாற்றிக்கொண்டார். முஸ்லிம்கள் அணியும் பாரம்பரிய தொப்பியான பெஸ், தொப்பி சட்டத்தால் தடை செய்யப்பட்டது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் மேற்கத்திய ஆடைகள் ஊக்குவிக்கப்பட்டன. பாரம்பரிய துருக்கிய நாட்காட்டியிலிருந்து மேற்கத்திய காலண்டர் மாற்றப்பட்டது. 1928இல், புதிய துருக்கிய எழுத்துக்கள் (மாற்றியமைக்கப்பட்ட லத்தீன் வடிவத்தில்) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது முழுமையான மதநிராகரிப்பு மதச்சார்பின்மையாக அமைகின்றது.
மாறாக, இரண்டாம் உலகப்போரின் பின்னர், சுதந்திர இந்தியாவில் மதச்சார்பின்மை என்றால் என்ன என்று ஒரு மாணவன் கேட்டதற்கு நேரு, ‘அனைத்து மதத்தினருக்கும் அரசின் சம பாதுகாப்பு’ எனப் பதிலளித்தார். ‘அனைத்து மதங்களையும் பாதுகாக்கும் ஒரு மதச்சார்பற்ற அரசு. ஆனால் மற்றவர்களின் இழப்பில் ஒருவருக்கு சாதகமாக இருக்கக்கூடாது. எந்த மதத்தையும் அரசு மதமாக ஏற்றுக்கொள்ளாது’ என்று அவர் விரும்பினார். இந்திய மதச்சார்பின்மையின் தத்துவவாதியாக நேரு அடையாளப்படுத்தப்படுகின்றார். நேருவை பொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது மதத்தின் மீதான விரோதத்தைக் குறிக்கவில்லை. மேலும், மதத்திற்கும் அரசுக்கும் இடையே முழுமையான பிரிவினைக்கு ஆதரவாக இல்லை. ஒரு மதச்சார்பற்ற அரசு சமூக சீர்திருத்தத்தை கொண்டு வர மத விடயங்களில் தலையிட முடியும் என வரைறுக்கிறார்.
இந்த வகையில் குறுகிய கால இடைவெளியில் குறுகிய பரப்புக்குள்ளேயே மதச்சார்பின்மை முரணான மாறுதலைப் பெறுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. நேரு துருக்கியில் உள்ள அட்டாதுர்க்கிலிருந்து மிகவும் வேறுபட்டவராக காணப்படுகின்றார்.
அரசு மதச்சார்பற்றதாக இருக்க, ஒரு அரசு கடவுளின் பெயரால் ஆட்சி செய்வதை (Theocratic) மறுப்பது மட்டுமல்லாமல், எந்த மதத்துடனும் முறையான, சட்டப்பூர்வ கூட்டணியை கொண்டிருக்கக்கூடாது. மதம் மற்றும் அரசைப் பிரிப்பது ஒரு மதச்சார்பற்ற அரசின் அவசியமானதாக அமைகின்ற போதிலும், அறிஞர்களின் கருத்துக்களில் இது மாத்திரம் போதுமான மூலப்பொருளாக அமைவதில்லை. மதச்சார்பற்ற அரசு கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். இந்த நோக்கங்களில் அமைதி, மத சுதந்திரம், மத அடிப்படையிலான ஒடுக்குமுறை, பாகுபாடு மற்றும் விலக்கல் ஆகியவற்றிலிருந்து சுதந்திரம், மதங்களுக்கு இடையிலான சமத்துவம் ஆகியவை அடங்கும். இந்த நோக்கங்களை மேம்படுத்த, இந்த மதிப்புகளில் சிலவற்றின் பொருட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட மதம் மற்றும் அதன் நிறுவனங்களிலிருந்து அரசு பிரிக்கப்பட வேண்டும். இருப்பினும், இந்த பிரிப்பு ஒரு குறிப்பிட்ட வடிவத்தை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்க எந்த காரணமும் இல்லை. உண்மையில் பிரித்தலின் தன்மையும் அளவும் அது ஊக்குவிக்கும் குறிப்பிட்ட மதிப்புகள் மற்றும் இந்த மதிப்புகள் உச்சரிக்கப்படும் விதத்தைப் பொறுத்து வௌ;வேறு வடிவங்களை எடுக்கலாம். அதனையே நாம் மேற்கற்தேய மதச்சார்பின்மையிலிருந்து கீழைத்தேய மதச்சார்பின்மையின் வேறுபாட்டிலும்; அட்டாதுர்க்கியின் மதச்சார்பின்மை நிலைப்பாட்டுக்கும் நேருவின் மதச்சார்பின்மை நிலைப்பாட்டுக்கும் இடையிலான வேறுபாட்டிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
