November 7, 2025
அரசியல் கட்டுரைகள்

ஈழத்தமிழர் மனித உரிமைக்கான ஜெனீவா அமர்வை கைவிடலாமா?

ஈழத்தமிழரின் அரசியலில் நிலையற்ற தன்மை நீடிக்கின்ற போக்கினை வெளிப்படையாக கண்டுகொள்ள முடிகிறது. ஜெனீவாவின் உரையாடல்கள் நாடுகளின் நலன்களும் இலங்கை ஆட்சியாளர்களின் நலன்களோடு இசைந்து போகின்ற தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறது. கடந்த 16 வருடங்களாக ஈழத்தமிழருக்கு சார்பாக முன்வைக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் தென்னிலங்கைக்கு சாதகமானதாக மாற்றுகின்ற வரலாறு மரபாகவே வளர்ந்துள்ளது. அத்தகைய மரபுக்குள் நாடுகளின் நலன்கள் மேலோங்கி இருக்கின்றமையைக் காணமுடிகிறது. இக்கட்டுரையும் ஜெனீவா அமர்வை நிராகரித்து விட்டு ஈழத்தமிழர்கள் தமது அரசியலை நகர்வை மேற்கொள்ள முடியுமா என்ற இயல்பான கேள்விக்கு விடை தேடுவதாக அமையவுள்ளது.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னான ஜெனீவா அரங்கு எந்த விளைவையும் தரவில்லை என்பது ஈழத்தமிழர்களின் ஒரு சாராரது விவாதமாக இருக்கிறது. இன்னுமொரு தரப்பினர் ஜெனீவா அரங்கின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஈழத்தமிழருக்கு ஏதோ ஒரு வகையில் வாய்ப்பை தருவதாகவும் ஈழத்தமிழர் அரசியல் பேசுகின்ற வலிமைபடைத்ததாகவும் இருக்கின்றது என விவாதிக்க முயற்சிக்கின்றனர். இவை இரண்டு தரப்பினர் விவாதங்களின் முடிவாக ஈழத்தமிழருடைய அரசியல் நிலைத்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிலிருந்து ஒரு தீர்வை நோக்கி செல்வதற்கான சூழமைவுகள் நிலவுகிறதா என்பதை நோக்கியதாக கவனத்தன்மை முக்கியமானது. அத்தகைய தேடலில் பல விடயங்கள் கண்டுகொள்ள முடிகின்றது. அவற்றை ஆழமாக அவதானித்தல் அவசியமானது.

முதலாவது முள்ளிவாய்க்காலுக்கு பின்னான காலப்பகுதி ஈழத்தமிழரின் அரசியல் முழுவதும் சிறிய சிறிய நகர்வுகளோடும் அவற்றுக்கு எதிரான பாரிய நகர்வுகளால் மூழ்கடிக்கப்படுகின்ற நிலை ஒன்று புலத்திலும் புலம்பெயர்ந்ததளத்திலும் காணப்படுகிறது. மனித உரிமை சார்ந்து ஐக்கிய நாடு சபையின் மனித உரிமைப் பேரவையில் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை ஈழத்தமிழர்களுடைய அரசியல் பற்றிய விழிப்பு தேவையான ஓர் அம்சத்தின் பிரதிபலிப்பாக காணப்படுகிறது. அதன் பிரகாரமே பல தீர்மானங்கள் இலங்கை அரசு பொறுத்து தென்னிலங்கை அரசின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் வரைவுகள் முன்வைக்கப்படுகிறது. இதனால் எத்தகைய விளைவும் ஈழத்ததமிழர்களுக்கு ஏற்படப்போவதில்லை என்பது விவாதமாக இருந்தாலும் ஈழத்தமிழரின் இன பிரச்சனைக்கான தீர்வு நோக்கிய கோரிக்கைகளும் மனித உரிமை சார்ந்த நெருக்கடிகளும் ஜெனீவாவை மையப்படுத்தி உரையாடலாக நிலவுகிறது. அதனை மூடிவிட்டு ஈழத்தமிழருடைய அரசியல் எவ்வகையான அடிப்படையில் உரையாடலுக்கும் விவாதத்துக்கும் அது சார்ந்து ஒரு உலக முறைகளுக்கும் கொண்டுவர முடியுமா என்ற கேள்வி நியாயமானவே தெரிகிறது.

இரண்டாவது ஈழத்தமிழர் நீண்ட இனவன்முறையின் இருப்பில் உள்நாட்டு பொறிமுறைகள் அனைத்தையும் நிராகரிக்கின்றவர்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வில் சர்வதேச மட்ட ஆதரவு அவசியமானது என்ற கருத்தினைக் கொண்ட அரசியலை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருபவர்கள். உள்நாட்டு பொறிமுறைகள் அனைத்தினதும் அனுபவம் அதுவாகவே உள்ளது. ஆனால் சர்வதேச மட்டப் பொறிமுறையையும் நிராகரித்துவிட்டு எவ்வகையான செயல்பாட்டுக்குள் இயங்குவது என்பது பிரதான விடயமாகவே உள்ளது. பூகோள நாடுகள் அனைத்துமே நலன்களோடு நகருகின்றவையே. அதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அது தவிர்க்க முடியாதததுமாகும். ஆனால் நாடுகளின் நலன்களுக்குள் ஈழத்தமிழருடைய நலன்களை சந்திக்கவைக்கின்ற ஓரிடத்தை நோக்கி ஈழத்தமிழர் அணுகுமுறை நகர்த்தப்பட வேண்டும் என்பதே முக்கியமானது. உள்நாட்டு பொறிமுறைகள் அனைத்தையும் நிராகரிக்கின்ற போது சர்வதேச பொறிமுறைகள் அனைத்தும் மீது நம்பிக்கை கொள்ளுகின்ற நிலை தவிர்க்க முடியாதது. இந்த சந்தர்ப்பத்தில் ஈழத்தமிழரின் அரசியலை எவ்வகை தளத்தில் எடுத்துச் செல்வதென்பது முக்கியமானது. நாட்டுக்குள்ளும் பலவீனம் சர்வதேசத்திலும் கிடைக்கும் வாய்ப்புக்களை நிராகரிப்போமாயின்; ஈழத்தமிழர் என்ற ஒரு தேசிய இனம் காணாமல் போக வாய்ப்புண்டு. ஆதனை தவிர்க்க வேண்டுமாயின் ஈழத்தமிழரை தாங்கி முதன்மைப்படுத்துகின்ற களமாக ஜெனீவாவும், புலம்பெயர்ந்த நாடுகள் இருக்கும் ஈழத்தமிழர்களும், புலத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களின் போராட்டங்களும் அவசியமானவை. கட்சிகளின் அரசியல் காரணமாக இதில் ஏதோ ஒன்று பலவீனப்படுமாக இருந்தால் ஈழத்தமிழர்களுடன் இருக்கின்ற தற்போதைய வாய்ப்புகளும் காணாமல் போகும். மேற்கூறியவை தற்போது பலவீனமையாகவே உள்ளன என்பது ஏற்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அத்தகைய பலவீனத்துக்குள் ஒரு பலத்தை ஈழத்தமிழர்கள் கொண்டிருக்கின்றனர். அதனால் ஈழத்தமிழர்கள் இந்த பலத்தை பலவீனத்துக்குள்ளால் கொண்டு செல்கின்ற நிலையை பலப்படுத்துகிறபோது மட்டுமே ஒரு ஆரோக்கியமான மாறுதல் சாத்தியம். மிக பிந்திய எடுத்துக்காட்டு பாலஸ்தீன விடுதலைப் போராட்டம். அவ்வாறானதென்றே குருத்திஸ் விடுதலைப் போராட்டம். அதனை விடுத்து வாய்ப்புகளை கட்டமைக்க தவறுகின்ற நிலையை நோக்கி ஈழத்தமிழர்கள் நகர முடியாது. ஜெனீவாக ஏமாற்றுகிறது. ஐக்கியநாட்டு சபை ஏமாற்றுகிறது. அனுசரணை நாடுகள் ஏமாற்றுகிறன என்பது உண்மைதான். ஆனால் அத்தகைய ஏமாற்று தனத்துக்குள்ளால் ஈழத்தமிழர்கள் தமது அரசியலை நகர்த்துகிறார்கள் என்பது உண்மையாகவே தெரிகிறது. அதனை சரியாக கூட்டாக நகர்த்த தெரியவில்லையே அன்றி மற்றும்படி நகர்த்துகிறார்கள். ஏமாற்றுத்தனமான உலக ஒழுங்குகுள்ளேயே தனித்து விடப்பட்ட தேசிய இனமாக ஈழத்தமிழர் காணப்படுகின்றனர். அவர்கள் முழுமையாக உலகத்தால் கைவிடப்படுமாக இருந்தால் அல்லது தனித்து விடப்படுமாக இருந்தால் அடிப்படையான அரசியலும், இலக்கை நோக்கி அரசியலுக்கான எண்ணங்களும் காலாவதியாகிவிடும்.

மூன்றாவது ஈழத்தமிழர் தமது அரசியல் இருப்பை கட்சி கட்டமைப்பிலையோ சிவில் அமைப்புகளின் தளத்திலையோ முழுமையாக கொண்டிருக்க முடியாத நிலை காணப்படுகிறது. கட்சிகளின் கொள்கை ஒருங்கிணைப்பின்மை பிரச்சனைகள் பொறுத்து ஒரு முகத்தோடு உரையாடுகின்ற தன்மையின்மை அதிக முரண்பாடுகளை கட்சிகளும் கட்சிகளின் தலைமைகளும் கொண்டிருப்பது போன்ற அம்சங்கள் ஈழத்தமிழருடைய அரசியலை பலவீனமான நிலைக்குள் வைத்திருக்கின்றது. அவ்வாறே சிவில் அமைப்புக்களும் ஏதோ ஓர் அரசியல் கட்சிகளின் பின்புலத்துடனேயே கட்டமைக்கப்பட்டு வழிநடத்தப்படுகின்றன. குறுகிய காலத்திலோ அல்லது நலன்கள் சார்ந்தோ சிவில் அமைப்புகள் என்று கூறிக்கொள்ளுகின்ற தரப்புகள் காணாமல் போகின்றன. இவை ஏறக்குறைய அழுக்கக் குழுக்களாகவே காணப்படுகின்றனவே அன்றி சிவில் அமைப்புக்களாக இல்லை என்றே தெரிகிறது. இதனால் இவை ஈழத்தமிழரின் அரசியலை பேசுவதற்கான வலுவையோ, வளர்த்தெடுக்கக்கூடியதற்கானதாகவோ எதார்த்தத்தை முன் கொண்டு செல்லக்கூடியதானதாகவோ இல்லை என்பது கண்டு கொள்ளக் கூடிய அம்சமாகும். இது புலத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தளத்திலும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு என்பது கடந்த 16 வருடங்களில் ஈழத்தமிழர்களால் இலாபகரமான எதனையும் எட்ட முடியாதற்கு அடிப்படையாகிறது. இந்த சந்தர்ப்பத்தில் ஈழத்தமிழரின் அரசியல் இருப்பவை பாதுகாத்துக் கொள்கின்ற வலிமையான கட்டமைப்பாக ஜெனிவா அரங்கு மட்டுமே காணப்படுகிறது. ஜெனீவாவை கைவிட்டால் உலக அரசியலில் இருந்தும் உள்நாட்டு அரசியலில் இருந்தும் தமிழரின் போராட்டச் செய்முறைகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.

நான்காவது ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக சர்வதேச பொறிமுறைகூடாக உலக நாடுகளை நோக்கி தமது அணுகுமுறைகளை மாற்றி கொள்ளுதல் அவசியமானது. தமிழரின் அரசியல் இருப்புக்கும் சிதைவுக்கும் தென்னிலங்கையின் வகிபாகத்தோடு இந்தியாவின் வகிபாகம் மிக முக்கியமானது. ஆனாலும் இந்தியா ஒரு புவிசார் அரசியல் சக்தி என்ற அடிப்படைலும் பூகோள அரசியலின் வலுவான நாடு என்ற அடிப்படையிலும் ஈழத்தமிழர்க்கு நட்பு ரீதியான இந்தியா சார்ந்த ஒத்துழைப்பு அவசியமானது. இந்தியாவையும் ஈழத்தமிழரையும் கூறு போட்டதன் மூலமே தென்னிலங்கை ஈழத்தமிழரின் தேசிய விடுதலை ஒடுக்கியதோடு ஈழத்தமிழரின் அரசியல் இருப்பவை அழித்து வருகிறது. இவ்வாறே உலகம் ஒழுங்குக்குள் ஈழத்தமிழர்கள் தமது நட்புறவையும் புரிதல்களையும் கட்டி எழுப்ப வேண்டும். ஈழத்தமிழர்களின் பலமான ஒத்துழைப்பும் நட்புறவும் சர்வதேசத்திடமிருந்து கிடைக்குமா இருந்தால் ஈழத்தமிழரை நோக்கி உலகத்தின் அரசியல் பார்வை மாறுதலடையும். உலக அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ஈழத்தமிழர்க்கு ஒரு வாய்ப்பான களத்தை தவிர்க்க முடியாமல் ஏற்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கலாம். அதனை நோக்கி ஈழத்தமிழர்கள் தமது அரசியல் இருப்பை உத்தரவாதப்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவுக்கு ஈழத்தமிழர்களுடைய பாரம்பரிய நிலம் மீதும் பண்பாட்டின் மீதும் இனவிருத்தியின் மீதும் ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ள முடியுமோ அவ்வளவு கரிசனையோடு தென்னிலங்கையும் அதற்கு ஆதரவான சக்திகளும் முயன்று வருகின்றன. அதற்கு எதிராகவும் அதனுடைய கூட்டுத் தன்மைகளை எதிர்கொள்ளுகின்ற திறனோடும் ஈழத்தமிழர்கள் தமது அரசியல் இருப்பை பாதுகாக்க வேண்டும். அதற்கான அடிப்படை பிராந்தி அரசுகளையும் சர்வதேச மட்ட அரசுகளையும் நோக்கி தமிழர்களுடைய நட்புறவு விருத்தி அடைய வேண்டும். கூட்டுத்தன்மைகளாலும் ஐக்கியத்தினாலுமே விட்டுக் கொடுப்பினாலுமே உலகத்தை கையாள முடியும்.

எனவே ஈழத்தமிழர் அரசியல் ஜெனீவா அரங்கு மூடப்படுமாக இருந்தால் உலக அரங்கில் இருந்த ஈழத்தமிழர் காணாமல் போக வாய்புள்ளது. அவ்வாறே பிராந்திய களத்திலும் அதன் இருப்பு காலாவதியாகும். ஒட்டுமொத்தத்தில் ஈழத்தமிழர்களுடைய அரசியல் காணாமல் போகும். அரசியல் காணாமல் போகுமாக இருந்தால் தமிழருடைய வாழ்விடம் பண்பாடு பொருளாதாரம் சமூக இழப்பு மருத்துவம் கல்வி போன்ற அனைத்திலும் காணப்படும் தனித்துவம் காணாமல்போகும். அவ்வகையான சூழல் ஈழத்தமிழரை பிறதேசிய இனங்களோடு கரைந்து போகின்ற நிலைக்குள் உட்படுத்துகின்ற துயரத்தை எதிர்கொள்ள வேண்டியவர்களாவார். அரசியலை விடுத்து சமூகத்தினுடைய இதர பகுதிகளை நோக்கி ஈழத் தமிழர்கள் நகர்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவருடைய இருப்பின் மீது அதிக கேள்வி எழுப்பப்படும். அது முழுமையாக ஈழத்தமிழ் தேசிய இன அடையாளத்தை இல்லாமல் செய்யும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)