அரசியல் கட்டுரைகள்

இந்தியாவை கையாளும் தென்னிலங்கை அரசியலும் ஈழத்தமிழரின் துயரமும்!

இந்திய பிராந்திய நலனுக்குள் இலங்கையின் இருப்பு உள்ளது மட்டுமன்றி பூகோள நலனுக்குள்ளும் இலங்கை உட்பட்டுள்ளது. குறிப்பாக, சீனாவுடனான இலங்கையின் நெருக்கம் பொருளாதார விடயங்களை கடந்து அரசியல்ரீதியிலும் முக்கியம் பெறுகின்ற அம்சமாக பட்டி மற்றும் சாலை முன்முயற்சி காணப்படுகின்றது. அதேநேரம், இந்தோ-பசுபிக் உபாயத்திற்குள் இலங்கை உட்படுத்தும் முயற்சியில் இந்தியாவும் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் அதிக கவனம் கொள்கிறது. அதற்கான நகர்வுகளையே இந்தியா மேற்கொள்வதுடன் தனது பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் இலங்கையை கையாள்வதில் அதிக ஈடுபாட்டை முன்னெடுத்துவருகிறது. இக்கட்டுரையும் இலங்கை பொறுத்து இந்தியா முன்னெடுத்துவரும் நகர்வுகளின் அரசியலையும் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியாவின் போக்கினையும் தேடுவதாக உள்ளது.

சமகால இலங்கை இந்திய அரசியலில் அதிகம் பேசப்படும் விடயமாக இந்தியாவின் நிதி உதவி காணப்படுகிறது. குறிப்பாக, இலங்கையின் நிதியமைச்சர் 2021இன் இறுதிப்பகுதியில் இந்தியாவிடம் கோரிய நான்கு விடயங்களில் அந்நியச்செலாவணி நெருக்கடியை தீர்ப்பதற்கான கோரிக்கையை உள்ளடக்கி இருந்தது. அதனை அடிப்படையாகக்கொண்டு இந்திய மத்திய அரசு 900மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க முன்வந்திருந்தது. இதனை திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு கையளிக்க கைச்சாத்திடப்பட்ட சூழலில் எட்டப்பட்டது என்பது குறிப்பிடக்கூடிய விடயமாகும். அதேநேரம் இலங்கையின் நிதியமைச்சருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்குமிடையில் ஜனவரி-15(2021) நிகழ்ந்த இணையவழி கலந்துரையாடலில் மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கடன்தொகையை வழங்குவதாக இந்தியா உறுதியளித்திருந்தது. அதுமட்டுமன்றி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா எத்தகைய நெருக்கடியிலும் இலங்கையோடு ஒன்றினைந்து செயற்படுமென்றும் கோவிட் தொற்றினால் எற்பட்ட பொருளாதார மற்றும் பிற சவால்களை சமாளிப்பதற்கு இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமென்று தெரிவித்ததோடு நெருங்கிய நண்பர்கள் மற்றும் கடல்சார் அண்டை நாடுகளாக இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய பொருளாதார தொடர்புகளால் ஆதாயமடைகின்றன என்று குறிப்பிட்டார். அதேநேரம் இரு அமைச்சர்களும் இலங்கைக்கான உணவு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களை இறக்குமதி செய்வதற்காகவும் இந்தியாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்காகவும் இந்திய கடன் வசதிகளை விரிவுபடுத்துவதற்கான முன்னேற்றத்தை ஆய்வு செய்திருந்தனர். மேலும், இலங்கையுடன் இந்தியாவின் நீண்டகால ஒத்துழைப்பை இலங்கையின் நிதியமைச்சர் நினைவுகூர்ந்ததோடு இந்தியாவின் ஆதரவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். துறைமுகங்கள் உட்கட்டமைப்பு எரிசக்தி, மின்சாரம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி போன்ற துறைகளில் இலங்கைக்கு இந்திய முதலீடுகளை வரவேற்ற நிதியமைச்சர் அத்தகைய முதலீடுகளை ஊக்குவிக்க உகந்த சூழல் வழங்கப்படுமென்றும் உறுதியளித்தார். இந்நிலையில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை கூட்டாக நவீனமயப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அண்மையில் எடுத்த நடவடிக்கைகள் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதோடு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்குமென இரு நாட்டு அமைச்சர்களும் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விரைவில் விடுதலை செய்யுமாறு இலங்கை அரசை ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். இறுதியாக பகிரப்பட்ட முன்னேற்றம் மற்றும் செழுமைக்கான நீண்டகால பொருளாதார கூட்டாண்மையை நோக்கி பரஸ்பரம் நன்மை பயக்கும் இருதரப்பு பொருளாதார உற்பத்தி வழிநடத்துவதற்கு நெருக்கமான தொடர்பில் இருக்க இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் ஒவ்வொன்றையும் அவதானிக்கின்ற போது இந்திய-இலங்கை அரசுகள் தமது நலனுக்கேற்ப எல்லைகளை நோக்கி நகர்வதையும் அதற்கான திட்டங்களை வரைவதிலும் உரையாடுவதிலும் கவனம் கொள்கின்றது. இதனை ஆழமாக அவதானித்தல் அவசியமானது ஒன்றாகும்.

முதலாவது, இந்தியாவின் நிதி உதவிகளும், இந்திய-இலங்கை வெளியுறவு அமைச்சர்களின் இணையவழி உரையாடலும் வெளிப்படுத்தும் முக்கிய விடயம் இரு அரசுகளின் நலன்களுமேயாகும். இந்தியா, இலங்கைத்தீவில் தனது செல்வாக்கை வைத்துக் கொள்வதற்கு உபாயங்களை வகுத்து செயற்படுவதனை அவதானிக்க முடிகிறது. திருகோணமலை எண்ணெய்க்குதங்களை 50வருட முயற்சிக்கு பின் இந்திய தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக மதிப்பீடு முன்வைக்கப்படுகிறது. அதாவது திருகோணமலை துறைமுகத்தையும் அதன் வளமான பிரதேசங்களையும், பிறசக்திகளின் தலையீட்டுக்கு உட்படதா விதத்தில் அதனை தக்கவைத்திருப்பது என்பது அதன் அணுகுமுறையில் உள்ள பலவீனமானதாகவே தெரிகிறது. எனினும் அதனை வெற்றி என்று வாதிக்கிற தரப்பு ஏறக்குறை 75 எண்ணெய் குதங்களை இந்திய தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்போவதாகவும் நீண்டகால முயற்சியின் வெற்றியெனவும் விவாதிக்கின்றனர். எதுவாயினும் இந்தியாவின் அத்தகைய வெற்றி உறுதிப்படுத்தப்படுவதற்கான சூழலும் அதற்கான பின்னணியும் எதிர்ப்பு அலைகளும் இலங்கை தீவில் ஏற்பட்டுள்ளது என்பதுவும் மறுக்க முடியாது.

இரண்டாவது, இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையிலே இந்தியாவுடனான ஒத்துழைப்பு என்பது பொருளாதார நெருக்கடியை சரிசெய்வது மட்டுமன்றி அதன் அரசியல் நெருக்கடியையும் கையாள்வதாகவே அமைந்திருக்கும். உலகில் இலங்கைத்தீவு மட்டுமே இந்தோ-பசுபிக் உபாயத்துக்குள்ளும், பட்டி மற்றும் சாலை முன்முயற்சிக்குள்ளும் இயங்குகின்ற ஒரு நாடாக உள்ளது. இதனையே காலம் காலமாக இலங்கைத்தீவின் ஆட்சியாளர்கள் பின்பற்றி வந்துள்ளார்கள். ஆரம்பகாலத்தில் இந்தியாவையும் மேற்கையும் கையாண்டது போல் இந்தியாவையும் சீனாவையும் கையாண்டு வரகின்றனர். இந்த இரண்டு தேசங்களும் இலங்கைத்தீவின் நலனுக்காக பயன்படுத்தப்படுகின்ற ஒன்றாகவே காணப்படுகிறது. இலங்கை ஆட்சியாளர்களின் பிரதான நோக்கம் பொருளாதார நெருக்கடி என்பதை கடந்து அரசியல் பொருளாதார நெருக்கடியை கையாளுவதாகவே உள்ளது. ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினையுடனேயே பொருளாதார நெருக்கடியை ஒன்றிணைத்து கையாளுகின்ற போக்கை வெளிப்படுத்தி வருகின்றனர். அதாவது மேற்கும் இந்தியாவையும் நோக்கி ஈழத்தமிழரின் அரசியல் பிரச்சினை நகர்த்தப்படுகின்ற போது அதனை வளர்ச்சியடைய விடாது தடுப்பதன் மூலம் அதன் போக்கை பலவீனப்படுத்துவதும் அத்தகைய இந்திய மேற்கு நலன்களுக்குள் இசைவாக பயணிப்பதுவும் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் உபாயமாக காணப்படுகிறது. சீனாவை எதிர்க்கும் மேற்கும் இந்தியாவும் ஈழத்தமிழர் பக்கம் நகர்ந்துவிடக்கூடாதென்பதுவே தென்னிலங்கை ஆட்சியாளர்கள் கவனத்துடனும் கரிசனையுடனும் காணப்படுகிறார்கள்.

மூன்றாவது, இலங்கைத்தீவில் காணப்படும் ஈழத்தமிழர்களும் மலையகத்தமிழர்களும் இந்திய ஆட்சியாளர்களின் அண்மைய கால இலங்கையுடனான ஒத்துழைப்பில் எத்தகைய வாய்ப்புக்களுக்கும் உட்படாதவர்களாக காணப்படுகிறார்கள். இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் நம்பிக்கைமிக்க பங்காளியாக இந்தியா இருக்கும் என தெரிவிக்க இலங்கைக்கான இந்தியத்தூதுவர் தமிழ் மக்களை இந்தியா ஒருபோதும் மறக்காதென தெரிவித்தார். இதுமட்டுமன்றி இந்திய பிரதமரக்கான இலங்கை விஜயத்திலிரந்து இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் போன்ற இந்திய இராஜதந்திரிகளும் இந்திய தலைவர்களும் இலங்கைத்தமிழர்கள் பொறுத்து வாய் வார்த்தைகளால் மாத்திரமே கருத்து வெளியிடுபவர்களாக காணப்படுகின்றனர். குறிப்பாக இந்திய பிரதமர் உட்பட அனைத்த இராஜதந்திரிகளும் இலங்கைத்தமிழர்களுக்கான தீர்வு என்பது கௌரவமான, நீதியான, சமத்துவமான அந்தஸ்துடைய தீர்வொன்றையே இந்தியா வலியுறுத்துகின்றதென கடந்த ஒரு தசாப்தங்களாக கூறி வருகின்றனர். இது வெறும் வாய்வார்த்தையாகவே காணப்படுகிறது. இதற்கான செயல்வடிவமும் நடைமுறை பிரயோகமும் ஒரு சந்தர்ப்பத்திலும் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் காணப்படவில்லை. ஆனாலும் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்கள் இந்தியா மீதான நம்பிக்கையையும் கரிசனையையும் வெளிப்படுத்தியே வருகின்றனர். இந்திய தரப்பும் யாழ்ப்பாணம் நொக்கிய விஜயங்களிலும் வடக்கு-கிழக்கு பற்றி அரசியல் உரையாடல்களிலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்பது 35 வருடத்துக்கு முற்பட்ட 13ஆம் திருத்தச்சட்ட மூலம் பற்றியதாகவே இருக்கின்றது. அதன் உள்ளடக்கம் அதிகாரமற்ற ஓர் அரசியல் நிறுவனமாக மட்டுமே காணப்படுகின்றது. உலக ஒழுங்கில் தேசிய இனங்களுக்கான தீர்வுகளில் பொதுவாக்கெடுப்பு கூட்டு சமஷ;டி போன்ற விடயங்களும் முதன்மைப்படுத்தப்படுகின்றது. அதுமட்டுமன்றி இந்திய பிரதமர் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்ற பொது கூட்டுறவு சமஷ;டி பற்றி வெளிப்படுத்தியிருந்தார். அத்தகைய விடயங்கள் எதனையும் வடக்கு-கிழக்கிற்கு விஜயம் செய்யும் இந்திய இராஜதந்திரிகளும் அரசியல் தலைவர்களும் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய பிந்தைய எண்ணங்களை முதன்மைப்படுத்த தயாராக இல்லாத சூழல் காணப்படுகிறது.

எனவே, ஈழத்தமிழர் பொறுத்து வெறும் வாய்வார்த்தைகளை அறிக்கையிடும் இந்திய தரப்பு தென்னிலங்கை ஆட்சியாளர்களின் நெருக்கடியிலிரந்து பாதுகாக்கும் பொறிமுறையை தொடர்ச்சியாக பின்பற்றி வருகின்றனர். ஆனால் அவ்வகை பொறிமுறைகள் எவையும் இந்திய தேசத்தின் அரசியல் நலன்களை உத்தரவாதப்படுத்தாதவையாகவும் இந்தியாவை கையாளுகின்ற ஒரு அம்சமாகவுமே தென்னிலங்கை ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். தற்போது இலங்கைக்குள் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி என்பது அரசியல் பொருளாதார நெருக்கடி என்பதைக்கூட இந்தியத்தரப்பு கரிசணை கொள்ளாது செயற்படுகின்ற போக்கினை சுட்டிக்காட்டுதல் தவிர்க்க முடியாது. காரணம் ஈழத்தமிழர் மீதான இந்தியாவினதும் மேற்கினதும் கரிசணையை தோற்கடிக்கவும் இலங்கைத்தீவில் சீனாவின் பிரசன்னத்தால் மேற்குக்கும் இந்தியாவுக்கும் ஏற்பட்டுள்ள அதிருப்தியை கையாளவும் இந்தியாவுடனான நெருக்கத்தை தென்னிலங்கை ஆட்சியாளர்கள் வெளிப்படுத்தகின்றனர். இத்தகைய வெளிப்பாடுகள் பல தசாப்தங்களாவே தென்னிலங்கை ஆட்சியாளர்களின் உத்தியாக காணப்படுகின்றது. அனைத்து தரப்புக்களும் பலியிடலும் ஈழத்தமிழர் மீதென்பது துயரமான செய்தி.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)