அரசியல் கட்டுரைகள்

இலங்கை-சீன உறவும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவின் உரையாடலும்?

இலங்கை-இந்திய உறவு பலமானதாக இருப்பதாகவே இரு தரப்பும் பொது வெளியில் உரையாடிக் கொண்டிருக்கின்றன. அதன் நடைமுறை எந்த அளவுக்கு பொருத்தமாக உள்ளது என்பது தேடப்பட வேண்டியதொன்றாகும். காரணம் புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்னர் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு சுமூகமானதாகவே இருந்தது என்பதை இருநாட்டு ஆட்சியாளர்களும் தமது பரஸ்பரம் மேற்கொண்ட வியங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் சமீப காலத்தில் இலங்கை ஆட்சியாளர்களும் அவர்களின் கட்சியும் சீனாவுடனான உறவை பலப்படுத்துவதில் அதிக கவனம் கொண்டுள்ளனர். இலங்கையில் சோசியலிச ஆட்சி முறையை நோக்கிய பயணத்தை உறுதிப்படுத்த போவதாக தென் இலங்கை ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவுகள் இந்திய தரப்முபிடம் வெளிப்படுத்தப்பட்டு வருவதனை கண்டு கொள்ள முடிகிறது. இக்கட்டுரையும் இலங்கைக்கான இந்திய தூதவர் சந்தோஷ் ஜா தெரிவித்த கருத்துக்களின் அரசியல் பின்புலங்களை தேடுவதாக உள்ளது.

இந்தியா இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நம்பத்தகுந்த பங்காளியாகவும் உள்ளது. நிபந்தனை இல்லாமல் இந்தியா உதவி செய்கிறது.பதிலுக்கு இந்தியா எதையும் கேட்பதில்லை. நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை வளர்ப்பதிலும் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை பயற்கும் நீடித்த உறவு உறவு மட்டுமே தேவை என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பெரு நிறுவனங்களின் பிரதிநிகளுடனான சந்திப்பில் தெரிவித்திருந்தார்.அது மட்டுமன்றி கொழும்பு-புதுடில்லி-யாழ்ப்பாணம்-ஹைதரபாத் நகரங்களை இணைக்கும் ஒரு புதிய வழித்தடத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய தூதுவர் அவ்வாறான உரையாடலை ஏன் முன்வைத்தார் என்பது கவனத்திற்குரியது. ஆப்படியாயின் இருநாட்டுக்குமான உறவில் ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதற்கான வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. அதனால் இரு நாட்டுக்குமான உறவின் போக்கினை விரிவாக விளங்கிக் கொள்ளுங்கள் அவசியமானதாக தெரிகிறது.

முதலாவது, இலங்கையின் புதிய அரசாங்கம் இந்தியாவுடன் உறவை சுமூகமாக பேணிவதற்கான உரையாடல்களை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருந்தது. அதே நேரம் இந்தியாவுடன் முரண்பாடுகளை நேரடியாக அன்றி மறைமுகமாக வெளிப்படுத்துவதில் கவனம் கொண்டு இயங்கிவந்தது. கடந்தகால ஆட்சியாளர்கள் இந்தியாவை கையாளுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் சீனாவை முன்னிறுத்தி செயல்பட்டிருந்தனர். அவ்வகையான செய்முறை ஒன்றையே புதிய ஆட்சியாளர்களும் பின்பற்றி வருகின்றனர். இலங்கையின் அரசியல் பொருளாதார இராணுவ உத்திகள் பொறுத்து இந்தியாவோடு புவிசார் உறவு காரணமாக பேண வேண்டிய கடப்பாடு இலங்கை தீவுக்கு இருந்த போதும் இலங்கை தீவு இந்தியாவை எதிர்கொள்ளும் விதத்தில் உலக வல்லரசுகளோடு நெருக்கமான உறவை கடந்த காலத்தில் பேணிவருகின்றது. அத்தகைய உறவையே புதிய ஆட்சியாளர்களும் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக இலங்கை பொருளாதார ரீதியில் உலக நாடுகளோடு நெருக்கமான உறவை ஏற்படுத்த முனைகின்ற வேலை இந்தியா நிபந்தனையற்ற விதத்தில் உதவிகளை வழங்கி வருவதை கண்டு கொள்ள முடிந்தது. அதே நேரம் சீனா இலங்கையுடனான வர்த்தக உறவை வலுப்படுத்தும் விதத்தில் அண்மைக்காலமாக சீன வர்த்தக குழுவினர் இலங்கைக்கு வருகை தருவதும் இலங்கை சீன வர்த்தக மார்க்கங்களை விரிவாக்குவதும் பிரதான நடைமுறையாக காணப்படுகிறது. மே.30.2025 அன்று வர்த்தகப் உரையாடல் ஒன்று கொழும்பில் நிகழ்ந்துள்ளது. இதில் 77 சீன கம்பனிகள் கலந்து கொண்டிருந்தன. இதனை விட யூன்.1.2025 யூன்.2.2025. மற்றும் யூன்.5.2025 ஆகிய திகதிகளில் உயர்மட்ட சீனத் தூதுக்குழுவினர் வருகை தந்து வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளில் இலங்கையுடன் உடன்பாடுகளையும் உரையாடல்களையும் மேற்கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இந்திய தரப்பும் தனது வர்த்தக குழுவை இலங்கை பரப்புக்குள் பிரவேசிக்க செய்து வர்த்தகம் தொடர்பில் ஆழமான உரையாடல்களையும் உடன்பாட்டுக்கான எண்ணங்களையும் பகிர்ந்துள்ளது.குறிப்பாக யூன்.29.2025 முதல் யூலை 2.2025 திகதிவரை இந்திய தொழில் கூட்டாண்மைக் தூதுக்குழுவினர் வருகை தந்ததுடன் வர்த்தக முதலீட்டு மற்றும் தொழில்துறைகளை வலுப்பாடுத்தும் நோக்குடன் உரையாடல்களை நிகழ்த்தியுள்ளனர்.இது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான தென்பதையும் கவனத்தில் கொள்ளத் தவறக் கூடாது.

இரண்டாவது, இந்திய தூதர் குறிப்பிட்டது போல் நிபந்தனையற்ற உறவுக்கு பதிலீடு எதனையும் இந்தியா கோருவதில்லை என்ற கருத்தானது சீன இலங்கை உறவின் நிபந்தனைகள் சார்ந்த உறவினை கண்டு கொண்டதன் வெளிப்பாடாகவே அமைந்திருக்க வாய்புள்ளது. இலங்கையின் புதிய ஜேவிபி அரசாங்கம் அதன் செயலாளர் ரில்வின் டி சில்வா சீனாவுக்கு யூன்8-13.2025 வரை தனது தூது குழுவுடன் விஜயம் செய்ததோடு சீன கம்யூனிஸ கட்சியுடன் உறவை வலுப்படுத்தல் பொருளாதார நெருக்கடிக்கான ஒத்துழைப்பை பெறுதல் மற்றும் அபிவிருத்தி மாதிரிகளை ஆராய்தல் என்பவற்றை மேற்கொண்டிருந்தனர். இது இருஅ நாட்டுக்குமாதன உறவைப் பலப்படுத்திவருகின்றமை கவனத்திற்குரியதாகும். ஜேவிபியின் கொள்கை பரப்புரைகளும் அதன் அமைச்சர்களும் இலங்கையின் ஒரு சோசியலிச கட்டமைப்பை நோக்கிய ஆட்சி முறை ஒன்றை ஏற்படுத்தப் போவதாக குறிப்பிடுகின்றனர். அத்தகைய சோஸலிச கட்டமைப்பாது நிச்சயமாக சீன சார்புடையதாகவே அமையும் என்பது இந்தியாவுக்கு நன்கு புலப்படக்கூடியது. 1971 ஆம் ஆண்டு ஜேவிபி இன் எழுச்சி வன்முறையாக வெடிக்கும் போது இந்திய இராணுவம் இலங்கைக்குள் இறக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அவ்வாறே 1989 ஆம் ஆண்டு இந்தியா இராணுவம் வடக்கு கிழக்கில் பிரசன்னமாகிய சந்தர்ப்பத்தில் ஜேவிபி இரண்டாவது தடவையாக அழிக்கப்பட்டது. அது மட்டுமின்றி ஈழவிடுதலைப் போராட்டத்தின் பிந்திய வளர்ச்சியில் ஆயுதப் போராட்டம் முக்கியமானதாக இருந்தது. அதனை முடிவுக்கு கொண்டு வர பிராந்திய சர்வதேச அரசியலோடு சேர்ந்து இந்தியாவின் அணுகுமுறை காணப்பட்டது. இதனால் இந்திய கொள்கை வகுப்பு இந்திய நலனும் இலங்கையில் சோஸலிஸ கட்டமைப்பு ஒன்றை சாத்தியப்படுத்த அனுமதிக்குமா என்ற கேள்வி பிரதானமானது. அது மட்டுமின்றி இன்றைய உலக நியதிகளுக்குள் சோஸலிசம் என்பது சீன கட்டமைப்பாக அமையுமானால் அது ஒரு வகையில் கம்யூனிச கட்சியின் ஆட்சி அதிகாரத்திற்கான நிரந்தரமான வடிவமாகவே அமையும். அதனை நோக்கிய இலங்கை தீவு ஜேவிபி.யால் நகர்த்தப்படும். அதன் விளைவுகள் இந்தியாவுக்கு பாரதூரமானதாக அமைவதோடு இலங்கை தீவின் அரசியலில் நிரந்தரமான வெளியேற்றத்தை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சீன சோஸலிஸம் அதன் அதிகார வடிவமும் அரசு இறைமை சார்ந்த கோட்பாட்டின் நியமத்துக்குள் இயங்குகின்ற தன்மையினை பிரதிபலிப்பதாகவே உள்ளது. தினமென் சதுக்க நினைவுகள் வரலாற்றில் என்றுமே அழிக்கப்படாத ஒன்றாக அரசின் இறைமை கோட்பாடு ஆட்சித் துறையில் பின்னிப் பிணைந்திருக்கும். மக்கள் இறைமைக்கோ ஆட்சி மாற்றத்திற்கோ இந்திய நலனுக்கு உட்பட்ட அரசாங்க வடிவங்களும் இலங்கை தீவில் சாத்தியமற்றதாகி விடும். இதுவும் இலங்கைக்கான இந்திய தூதுவரது உரையாடலின் உள்ளடக்கத்தை வடிவமைதிருக்க வாய்ப்பை கொடுத்திருக்கும்.

மூன்றாவது, கச்சதீவு விவகாரம் தொடர்கள் அமைச்சர்களும் இந்திய தரப்பினர் மாறி மாறி விவாதங்களை எழுப்பி வருகின்றனர். இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அது பற்றிய முரண்பாடான உரையாடல்கள் முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு அரசாங்கம் கச்சதீவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர எண்ணம் கொண்டிருப்பது இலங்கை ஆட்சியாளர்கள் கச்சதீவை இந்தியாவுக்கும் தமிழகத்துக்கோ ஒப்படைக்க முடியாது என்றும் விவாதிப்பதோடு அதற்கான உந்து சக்திகளாக ஈழத்தமிழ் மீனவர்களை பயன்படுத்தி கொள்ள முனைவது கடந்த கால ஆட்சியை போன்று புதிய அரசாங்கத்திடம் காணப்படுகிறது. இங்கு கச்சதீவு இந்திய மீனவர்களின் அத்துமீறல் போன்ற உரையாடல்கள் அனைத்தும் இந்தியாவுக்கு கசப்பான அனுபவங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. இராமர்பாலம் அமைப்பது பற்றி உரையாடப்பட்ட காலப்பகுதி முடிவடைந்து கச்சதீவு பற்றிய உரையாடல் எழுந்திருக்கின்றது. ஒட்டுமொத்தத்தில் கடல் சார்ந்த இருக்கக்கூடிய அரசியலை இலங்கைத்தீவின் ஆட்சியாளர்கள் வடிவமைப்பதில் கவனம் கொள்கின்ற அதே சந்தர்ப்பத்தில் இந்திய தரப்பினர் கடந்த காலங்களில் அதீத விட்டுக்கொடுப்புகளோடு இலங்கை ஆட்சியாளர்களை அணுகி உள்ளனர். இத்தகைய விட்டுக் கொடுப்பின் விளைவுகளை இந்திய தரப்பு அனுபவிக்க ஆரம்பித்திருக்கின்றது. முரண்பாடுகள் இருதரப்புக்கிடையில் எழுவதும் குழப்பங்கள் அடைவதும் பின்னர் சுமூக உறவை எட்டுவதும் வளர்ந்து வரும் ஒரு அரசியலாக காணப்பட்டாலும் நடைமுறையில் சீன தரப்பு தென்னிலங்கையோடு கொள்ளுகின்ற நெருக்கமான உறவு நிபந்தனைகளுடனும் நலன்களின் பால் பட்டும் அதனைப் பாதுகாப்பதற்கான உத்திகளோடும் நகர்கிறது.

எனவே இலங்கைக்கான இந்திய தூதவர் வெளியிட்ட கருத்துக்கள் ஆழமாக இரு நாட்டுக்குமாதன உறவு சார்ந்ததாகும். இச்சந்தர்ப்பத்தில் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தமது இலக்கை அடையும் நோக்கோடு இந்திய தரப்பின் நலங்களுக்காக சில விட்டுக் கொடுப்புகளை இனிவரும் காலங்களில் செய்வதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. அத்தகைய விட்டுக் கொடுப்புகள் அவர்களது இலக்கை பலவீனப்படுத்தாமல் இருப்பதற்கான நகர்வாகவே அமையும். இதனை இந்தியத் தரப்பு திருப்தஜிகரமானதாக ஏற்றுக் கொண்டு சுமூகமாக செயல்பட ஆரம்பிக்கும். இது மீளவும் இந்திய தரப்பு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குள்ளேயே அல்லது அத்தகைய பொது நிலைக்குள்ளேயே இலங்கை இந்தியா உறவின் பரிமாணம் கட்டமைக்கப்பட்டப் போகிறது.. மகாநாம தேரரது மகாவம்சத்தில் இருந்து இன்று வரை இலங்கை இந்திய உறவின் போக்கானது ஏற்ற இறக்கங்களை கொண்டிருந்தாலும் இலங்கைதீவின் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் இருப்பை உத்தரவாதப்படுத்துவதில் அதீத கவனத்தை கொண்டிருக்கின்றது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)