அரசியல் கட்டுரைகள்

பாதுகாப்பு உடன்படிக்கைக்கு தயாராகும் இலங்கை-சீன உறவு?

ஈழத்தமிழரின் அரசியல் பிரச்சினை சார்ந்த தமிழ்த்தேசிய கட்சிகளின் கடித பரிமாற்றத்திற்கான ஒப்புதல் வரைபும் நகர்ந்துள்ளது. ஒப்புதலுக்கு பின்னான இந்தியா தூதரகத்தில் கையளிப்பதற்கான திகதியை தெரிவு செய்வதில் மீண்டுமொரு கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய தூதரகம் இது தொடர்பில் முடிவை தெரிவிக்காத வகையில் நெருக்கடியொன்றை உருவாக்கி இருக்கிறது. அத்தகைய நெருக்கடியில் இலங்கைக்கான இந்திய தூதுவர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளமையும் அதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்த்தரப்பு முன்னெடுக்க முடியாத நிலையும் எதிர்வரும் 18ஆம் திகதி அதனை ஒப்படைக்க திட்டமிடுவதாகவும் தெரிய வருகிறது. இக்கட்டுரை சீன வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு பின்னரான இந்திய தூதுவர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டமை சார்ந்த அரசியலினை தேடுவதாக உள்ளது.

சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் அதிக உரையாடலை இந்திய ஆளும் தரப்புக்கு ஏற்படுத்தியிருக்கக்கூடியது என்ற வாதங்கள் காணப்படுகின்றது. அதுசார்ந்து அதிக பதிவுகளும் உரையாடல்களும் எழுந்துள்ளது. அதற்கான அடிப்படை காரணம், வாங் ஜி இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்ட பின்னர் வெளியிட்ட கருத்துக்கள் இலங்கை பிரதமர் சீன தொடர்பில் முன்வைத்த உரையாடல்களும் அத்தகைய வாதங்களை பலப்படுத்தியுள்ளது. ஆனால் இலங்கை தரப்பு அதுவும் குறிப்பாக தற்போதைய தென்னிலங்கை ஆட்சியாளர்கள் சீனா சார்ந்து வெளியிடும் கருத்துக்கள் இயல்பானவை மட்டுமன்றி இந்திய-மேற்கு அணியினை இலங்கை மீதான கரிசனையை அதிகரிக்க வழிவகுப்பதாகவே அமைந்துள்ளது. அண்மையில், சீன வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுக நகரத்துக்கு விஜயம் செய்த போது இலங்கையின் பிரதமர் இலங்கையின் உயிர் நண்பன் சீனா என தெரிவித்தமையும் அதுசார்ந்து இரு நாட்டுக்குமான உறவில் கடன் தள்ளுபடிக்கான நகர்வுகளும் மேலும் பல முதலீட்டு திட்டங்களுக்கான ஆலோசனைகளை சீனா மேற்கொள்ள இருப்பதான அறிவித்தல் வெளியாக உதவியுள்ளது. இதனால் இலங்கை தரப்பு இந்தியாவையும் மேற்கையும் தனது பொருளாதார அரசியல் நலன்களுக்குள் ஈர்த்து கொள்வதற்கு அதிக முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. அதனூடான தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் வலுவான அரசியல் பொருளாதார இராணுவ உத்திகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் இதனைவிட இந்தியாவுக்கும், இந்திய நலன்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விடயமாக அமைந்திருப்பதை ஆழமாக அவதானித்தல் அவசியமாகும்.

முதலாவது, சீன வெளியுறவு அமைச்சர் தனது விஜயத்தை நிறைவு செய்கின்ற போது இலங்கையுடனான உறவு புதிய அத்தியாயத்துக்கு கொண்டு செல்லவும் பொதுவான அபிவிருத்தி மூலோபாய பங்காளித்துவத்தை ஆழப்படுத்தவும் சீனா தயாராக உள்ளதென குறிப்பிட்டுள்ளார். மேலும் வாங் ஜி குறிப்பிடுகின்ற போது சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்வதற்கு இலங்கையுடன் கைகோர்க்க சீனா தயாராக உள்ளது. தென்னாசியாவில் சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சிக்கான ஒத்துழைப்பில் இலங்கை ஒரு முக்கிய அங்கமாக காணப்படுகிறது எனத்தெரிவித்தள்ளார்.
இரண்டாவது, கொழும்பு துறைமுக நகரின் முதல்கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்றும், புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கு சீனா தயாராக உள்ளதென்றும், இலங்கைக்கு நன்மைகளை கொண்டு வரும் கொழும்பு துறைமுக நகரின் நடவடிக்கைகள் சீன-இலங்கை தேசங்களின் கூட்டு சாதனையால் அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது, இலங்கையுடன் வலுவான நிலைத்து இருக்கக்கூடிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கட்டமைக்கவும் அதனை மையப்படுத்தி சீன-இலங்கை உறவு பலப்படுத்தும் விதத்திலும் இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை தாம் மீள ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய உரையாடலை இலங்கை தரப்புடன் வாங் ஜி மேற்கொண்டார் என்பதை கொழும்பில் உள்ள ஊடகங்களும் உறுதிப்படுத்தி உள்ளது.

நான்காவது, இலங்கைக்கான சீனாவின் தூதுவர் ஷி ஷென்கொங் சீன வெளியுறவு அமைச்சரின் வருகையின் போது வெளியிட்ட கருத்து இந்திய சார்ந்து அதிக அதிருப்தியை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. அதாவது, யாழ்ப்பாணம் இலங்கையின் வடக்கில் இருக்கிறது. எந்த நாட்டிற்கும் தெற்கில் இல்லையென தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்தியாவின் தெற்கே அமைந்திருக்கும் இலங்கையை இந்தியாவின் அண்மையில் அமைந்திருக்கும் யாழ்ப்பாணத்தையும் இந்தியாவுக்கு மறைமுகமாக எடுத்துச்சொல்வதற்கானதொரு இராஜதந்திர மொழியை பிரயோகப்படுத்தி உள்ளார். அத்தகைய இராஜதந்திர மொழி பருத்தித்துறை முனையிலிருந்து இந்தியா எவ்வளவு தூரமென ஷென்கொங் கேட்டிருந்ததும் இந்தியாவை சீண்டுவதற்கான அல்லது மறைமுகமாக தென்னிலங்கை மட்டுமன்றி வடக்கும் இந்தியாவின் கரிசணைக்கு உட்பட்டதாக அமைய முடியாது என்பதையும் தெரிவிப்பதாக அமைகிறது. அதாவது, யாழ்ப்பாணமோ அல்லது வடக்கு பகுதியிலோ இந்தியா தனது கரிசணையை அதீதப்படுத்த முடியாது என்பதை சீனா கருதுவதாக இலங்கைக்கான சீன தூதுவரது அறிக்கை புலப்படுத்தப்படுகிறது. அதனை அவர் ஆதாரப்படுத்தும் விதத்திலேயே யாழ்ப்பாணத்தீவுகளில் மின்திட்டத்திற்கான நிகழ்ச்சித்திட்டங்கள் கைவிடப்படவில்லை என்பதையும் தெரிவிப்பதன் மூலம் உணர்த்த முனைகிறார்.

ஐந்தாவது, இலங்கைக்கான சீனத்தூதுவர் மிக முக்கியமான விடயமாக கருதுகின்ற அம்சமாக பின்வரும் கருத்து அமைந்துள்ளது. அதாவது, பாதுகாப்பு விவகாரங்களில் சீனாவும் இலங்கையும் இன்னமும் அதிகளவிற்கு இணைந்து செயற்படவேண்டும் என சீன தூதுவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பாதுகாப்பு ஒத்துழைப்பு, இறைமை பாதுகாப்பு ஸ்திரதன்மை ஆகிய விடயங்களில் இரு நாடுகளினதும் நலன்களிற்கு உதவியாக அமைவதுடன் மாத்திரமின்றி பிராந்தியத்தில் ஸ்திரதன்மையையும் செழுமையையும் பேணுவதற்கும் உதவப்போகின்றது என தெரிவித்துள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சரதும் சமகாலத்தில் இலங்கைக்கான சீன தூதுவரின் உரையாடல்களும் தென்னாசிய பிராந்தியத்துக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்தி இருப்பதோடு அதில் இலங்கையின் முக்கியத்துவத்தை ஒரு விடயமாக இருவரும் உரையாடியுள்ளனர். அதாவது இலங்கையுடனான சீனாவின் உறவு பட்டி மற்றும் சாலை முன்முயற்சிக்கும் இலங்கை-சீன பாதுகாப்பு உடன்பாடு என்பதுவும் தென்னாசிய பிராந்தியத்தில் முக்கியமானது என்றும் வாதிட முயற்சிக்கின்றனர். இந்த இரண்டு விடயங்களும் இந்தியாவின் இருப்பில் அதிக குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன தூதுவரின் வடக்கு விஜயம் மட்டுமல்ல சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயமும் இந்தியாவை அதிகம் நெருக்கடிக்குள்ளாக்கின்ற அம்சமாகவே தெரிகிறது. இந்தியாவின் எல்லையோர நாடாகவும் தென்னிந்தியாவின் பாதுகாப்பின் பிரதான பகுதியாகவும் காணப்படும் இலங்கை சீனாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கைக்கு செல்லுமாக இருப்பின் அதனால் ஏற்படுகின்ற நேரடி தாக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகவே அமையும். ஏறக்குறைய சீன அருணாச்சல பிரதேசத்திலிருந்து காஷ்மீர் எல்லை வரை தரைவழியாக இந்தியாவிற்கு பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய இருப்பை கட்டமைத்துள்ளது. இதே போன்று இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் கடற்பகுதிகளை ஊடறுக்கும் குவாடர், ஹம்பாந்தோட்டை, மாலைதீவு, சிட்டஹொங், சிற்சுவே போன்ற துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. இதில் இலங்கையுடனான பாதுகாப்பு உடக்படிக்கை சாத்தியப்படுமாயின் சீனாவின் இராணுவ நகர்வுகளுக்கு இலங்கை தென்னாசியாவில் பிரதான நாடாக மாற்றமடையும். இதனால் தென்னாசியாவின் ஒருமைப்பாடும், இந்தியாவின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்குள்ளாக வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே, அண்மைக்காலத்தில் இலங்கை தொடர்பில் சீன பிரதான இரு இராஜதந்திரிகளும் வெளியிட்ட உரையாடல்கள் ஆழமாக கரிசணை கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் வடக்கில் தான் யாழ்ப்பாணம் அமைந்துள்ளதே அன்றி இந்தியாவின் செல்வாக்கிற்குள்ளோ கட்டுப்பாட்டுக்குள்ளோ அல்லது புவியியல்ரீதியாக யாழ்ப்பாணம் தெற்குபகுதியில் அமைந்திருந்தாலும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே செல்வாக்கிற்குள்ளேயோ இல்லை என்பதை சீன தூதுவர் உச்சரிப்பதன் மூலம் இந்தியாவுக்கு எந்த அடிப்படையிலும் வடக்கிலேயோ யாழ்ப்பாணத்திலேயோ சரிசணை கொள்ள முடியாதென தெளிவுபடுத்தியுள்ளார். இது எதிர்காலத்தில் இலங்கை தீவை சீனா எவ்வாறு கையாளப்போகின்றது என்பதற்கான செய்தியாகவே தெரிகின்றது. இது இந்திய தரப்பும் இந்திய கொள்கை வகுப்பாளர்களும் கவனத்திற்கொள்ள வேண்டிய உரையாடலாக உள்ளது. அத்தகைய உரையாடல்களை செவிமெடுக்க இந்திய தரப்பு தயாராகி விட்டது என்பதுவே இலங்கைக்கான இந்திய தூதுவர் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டதன் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பில் மிக நீண்ட காலப்பகுதியில் இந்தியா சார்ந்த சீனா தொடர்பான எச்சரிக்கைகளை இப்பகுதி முன்வைத்துள்ளது. அதற்கான பதிலிருப்புக்கள் எதனையும் இந்திய தரப்பு முழுமையாக பேணாததன் விளைவை தற்போது எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மீண்டும் அவ்வகை எச்சரிக்கையொன்றை ஏற்படுத்த வேண்டிய நிலைக்குள் அறிவுபூர்வமான உரையாடல் தெளிவுபடுத்த முயலுகின்றது. பிராந்திய ரீதியிலும் இலங்கை தீவு என்ற அடிப்படையிலும் இந்தியா அதிகமான நெருக்கடியை எதிர்காலத்தில் அடைய வேண்டிய சூழலை இவ்உரையாடல் ஏற்படுத்துகிறது. இதனையும் இந்தியா கண்டுகொள்ள தவறினால் விளைவுகள் பாரதூரமானதாக எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)