அரசியல் கட்டுரைகள்

இலங்கை ஜனாதிபதி நியூயோர்க் உரையும் அமெரிக்காவின் தந்திரோபாயமும்?

இலங்கையின் அரசியலில் காணப்படும் போக்கு இந்திய, அமெரிக்க, சீனப் போட்டியின் பிரதிபலிப்புகள் அதிகமாக உள்ளது. ஆதனை கையாளும் விதத்தில் இலங்கை ஜனாதிபதியின் நகர்வுகள் அமைந்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அனைத்தையும் அவதானிக்கும் போது மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்துவதாகவே தெரிகிறது. அதிலும் அமெரிக்காவின் பின்னணியில் ஜனாதிபதி இயங்குவதாகவே தோன்றுகிறது. அதற்கு அமைவாகவே சர்வதேச நாணய நிதியத்தினது இலங்கை பொறுத்த தீர்மானம், ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பின் பிரதிநிதி சமந்தபவர் இலங்கை வருகைக்கான திட்டமிடல், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரை, இந்தோ-பசுபிக் தீவு நாடுகளின் சந்திப்பில் ஆற்றிய உரை என்பனவற்றை கோடிட்டுக் காட்டக் கூடியதாக அமைந்துள்ளது. இக்கட்டுரையும் இந்திய-சீன நட்புறவை விடுத்து அமெரிக்க-இலங்கை உறவின் போக்கில் ஏற்பட்டுவரும் நெருக்கத்தை தேடுவதாக அமையவுள்ளது.

இலங்கையின் பொரளாதாரத்தை மீளக்கட்டியெழுப்வதற்கான ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் செயற்றிட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக் ஜியோஸ் ஐ.நா.வின் பொதுச்சபையில் கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதியை சந்தித்த போது தெரிவித்துள்ளார். ஆவர் மேலும் குறிப்பிடும் போது பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி ஆற்றும் பணிகளைப் பாராட்டியுள்ளார்.

இலங்கையின் மீட்பு முயற்சிக்கு ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் தொடர்ந்து ஆதரவளிக்கும். தேவையான நிபுணத்துவ உதவிகளையும் வழங்கும் என அதன் பணிப்பாளர் சமந்த பவரை நீயூயோக்கில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்த போது தெரிவித்தார். ஜனாதிபதி அவருடன் உரையாடும் போது சர்வதேச நாணயநிதியத்தின் பங்களிப்பை நினைவுபடுத்தியதுடன் ஊழல் ஒழிப்புக்கான இலங்கை எதிர்கொள்கின்ற சவால்களையும் விவாதித்தார்.

இந்தியாவுடனோ-சீனாவுடனோ இலங்கை கூட்டணி அமைத்துக் கொள்ளாது எனவும் எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையின் நலன்களை முன்னிலைப்படுத்தி செயல்படும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா இந்தோ-பசுபிக் தீவு நாடுகளின் மூன்றாவது உச்சிமகாநாட்டில் நீயூயோக்கில் உரையாற்றும் போது தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றிய போது கோடிட்டுக் காட்டிய ஏனைய விடயங்களை பின்வருமாறு நோக்க முடியும்.

ஒன்று, இந்தோ-பசுபிக் தீவு நாடுகளின் சுதந்திரம் மற்றும் உள்விவகாரங்களில் தலையிடாமை தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அனைத்து நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

இரண்டு, உலக வல்லரசுகளுக்கிடையிலான போட்டியில் தலையிட தென் பசுபிக் தீவு நாடுகள் விரும்பவில்லை.

மூன்று, இந்நாடுகள் தமது இறைமையையும் சுதந்திரத்தையும் பேணவிரும்புகிறார்கள்.

நான்கு, குவாட் மற்றும் சீனாவின் இலக்குடன் தொடர்பில்லாத தீவு நாடுகள் தமது முன்னுரிமையைக் கொண்டுள்ளன. அவற்றை மதிக்கத் தயாராகும் எந்தவொரு தரப்புடனும் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்ப இலங்கை செயல்பட்டுவருவதாக குறிப்பிட்டார்.

ஐந்து, சீனாவின் எழுச்சியை பலநாடுகள் பிராந்திய மட்டத்தில் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ஆனால் வல்லரசுகளுக்கிடையில் போட்டி நிலவுவதாகவும் அதனால் அதிக கவலை இந்தோ-பசுபிக் தீவு நாடுகளுக்குள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆறு, தென்பசுபிக் மற்றும் இந்து சமுத்திரம் மூலோபாய மதிப்பைக் கொண்டிருப்பதாகவும் தெற்கு பசுபிக் பிராந்தியம் அமெரிக்க கடற்படைக்கு இன்றியமையாத கேந்திர மையமென்றும் குறிப்பிட்டார்.

ஏழு, இந்து-பசுபிக்ன் முக்கியத்துவம் சீனாவின் சவால்களால் எழுந்ததென்றும் இது பிராந்திய ஒத்துழைப்பினை மீள் மதிப்பீடு செய்ய தூண்டியுள்ளதாக தெரிவித்தார்.

எட்டு, அமெரிக்கா மாலைதீவில் தூதரகமொன்றை திறப்பது அண்மைக்கால முன்னேற்றம் என்று குறிப்பிட்டார்.

மேற்குறித்த விடயங்கள் அனைத்திலும் அமெரிக்க சார்புத்தன்மை மேலோங்கியுள்ளது. அதிலும் இந்தியாவுடனும் சீனாவுடனும் இலங்கை கூட்டணி அமைத்துக் கொள்ளாது என்ற கருத்து ஏன் முதன்மைப்படுத்தப்படுகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அப்படியாயின் அமெரிக்காவுடன் இலங்கை கூட்டணி அமைத்துக் கொள்வதில் முனைபுடன் செயல்படுவதாக விளங்கிக் கொள்டளலாமா என்ற கேள்வி நியாயமானதாகவே தெரிகிறது. அதுவே யதார்த்தமானதுமாகும். தற்போதைய இலங்கையின் களத்தை மிகத் தெளிவாக ஜனாதிபதி-அமெரிக்க கூட்டு கையாண்டுவருகிறது. ஏறக்குறைய உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் மறுபக்கம் மகிந்த ராஜபக்ஷா மற்றும் அவரது அணியினரை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அதிலிருந்து மீள்வதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்பதை ஜனாதிபதியின் விசாரணை ஆணைக்குழு தீர்மானிக்கும். பாராளுமன்ற விவாதம் அதில் இன்னோர் பக்கத்தை சாத்தியப்படுத்தும். ஆனால் இதில் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் மீதான குற்றச்சாட்டு வலுவடைகிறது. அமெரிக்கா உட்பட மேற்குலகத்தின் இலக்கான ராஜபக்ஷா குடும்பம் மீதான கவனத்தை கொண்டதாக அமைந்திரந்தாலும் நடைமுறை என்னவோ ஒருதனிநபரை நோக்கி நகர்கிறது. இத்தாக்குதல் ஒரு தனிநபர் திட்டமிட்டது கிடையாது என்பது மட்டுமல்ல நீண்டகாலத் திட்டமிடலாகவும் அமைந்துள்ளது. ஆனால் பாராளுமன்ற விவாதம் என்னவோ ஒரு தனிநபரை அதிகம் முதன்மைப்படுத்துவதாக அமைகிறது. அமெரிக்க-ரணில் கூட்டு எடுக்கும் நகர்வுகளை சீனா-ஹம்பாந்தோட்டை முறியடிப்பது வழமையான உள்நாட்டு அரசியலாக மாறியுள்ளது. அதற்கான களமாகவே பாராளுமன்றம் அமைந்துள்ளது. கடந்த காலங்களிலும் இத்தகைய போட்டி நிலவியிருந்தது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் அமெரிக்கா மற்றும் மேற்குலகம் ரணில்விக்கிரமசிங்ஹாவின் அதிகாரத்தை பாதுகாப்பதற்கான உபாயங்களை முதன்மைப்படுத்திவருகிறது. அத்தகைய நடவடிக்கை மூலம் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவை அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கொள்வது பற்றியதாகவே அமைந்துள்ளது. குறிப்பாக ஜனாதிபதி இந்தோ-பசுபிக் நாடுகள் மத்தியில் அமெரிக்காவை குறைகூறாது உரையாற்றுவதில் கவனம் செலுத்தியிருந்தார் என்பது அவ்வுரையை அவதானிக்கும் எவரும் கண்டு கொள்ளலாம். அதன் மூலம் இரு தரப்பினது தந்திரோபாயம் தெளிவாகவே உணரமுடிகிறது. தென்பசுபிக் கடலானது அமெரிக்காவின் கடற்படைக்கு உகந்ததென்ற விவாதத்தை வெளிப்படையாகவே ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்தகைய விவாதம் சீனா, இந்தியாவை சீண்டுவதாக அமைந்தாலும் அதனை எதிர்கொள்ள ஜனாதிபதி தயாராக உள்ளார் என்தே அதன் சாரம்சமாக தெரிகிறது. அப்படியாயின் சீனாவுக்கும் இலங்கைக்கான உறவு எத்தகையது என்ற கேள்வி முதன்மைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

அதாவது சீனாவுக்கும் இலங்கைத் தீவுக்குமான உறவு அமெரிக்க நலனினால் காவுகொள்ளப்படுமா என்ற சந்தேகம் தவிர்க்க முடியாதது. ஆனால் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் அமெரிக்க நட்பானது நீண்டதும் நிலையானதும் என்பது எல்லோரும் அறிந்ததென்றே. அதற்காக இலங்கையின் நலன்களை அதாவது சிங்கள மக்களின் தேச நலனை நிராகரித்துவிட்டு அமெரிக்காவின் நட்பு கொள்ளும் ஒர் அரசியல்வாதியாக ரணில்விக்கிரமசிங்ஹா இல்லை என்பதும் கடந்தகால அனுபவமாக உள்ளது. அதனையே நீயூயோர்க் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. இலங்கைத் தீவின் நலனையும் ரணில்விக்கிரமசிங்ஹாவின் நலனைம் ஒன்றாக ஒருங்கிசைக்கும் தலைவராகவே ரணில் காணப்படுகின்றார். அதில் கொஞ்சம் அமெரிக்க நலனும் இணைக்கப்பட்டுள்ளது. அதற்காக ரணில் அமெரிக்காவை கைவிடமாட்டார் என்று கூறிவிட முடியாது. அமெரிக்காவை விவாகரத்து செய்துவிட்டு சீனாவுடன் நட்புக் கொள்ள தயங்காதவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ரணில் கடந்த காலப்பிரதமர் பதவியில் இருக்கும் போது உணரக்கூடியதாக இருந்தது. சீனாவுடனான நட்பினையும் அமெரிக்கவுடனான நட்பினையும் கையாண்டதுடன் BRI உடன்பாட்டில் இலங்கையின் நெருக்கத்தை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக அமைந்திருந்தது. பீஜிங்கிலிருந்து புதுடில்லிக்கும் வோசிங்டனுக்கும் விஜயம் செய்ததை மறுக்க முடியாது. அத்தகைய ரணில் விக்கிரமசிங்ஹா இலங்கைத்தீவின் நலனில் அதிக கவனம் கொள்வாதோடு தனது நலனிலும் கரிசனை கொண்டவராகவே காணப்படுவார். இலங்கைத் தீவின் நலன் என்பது சிங்களமக்களின் நலனாகவே அன்றி வேறு எந்த இனத்திற்கானதாகவும் அமைய வாய்ப்பில்லை. தற்போது அமெரிக்கா மட்டுமே இலங்கைத் தீவுக்கு இலாபகரமானது என்றில்லை. ஆனால் அமெரிக்க சீன முரண்பாடு மட்டுமல்ல அமெரிக்க இந்திய கசப்புணர்வும் இலங்கைக்கு இலாபகரமானதாகவே உள்ளது.

எனவே இலங்கைத் தீவு மீதான அமெரிக்க நலன் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் எதிர்கால அரசியலுக்கான முதலீகளை அதிகம் முதன்மைப்படுத்தும் அமெரிக்காஅதற்கான நகர்வுகளை செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விளைவுகளை முதன்மைப்படுத்தியது போல் இலங்கையின் பொருளாதார நெருக்கயை மீட்பவராக ரணில்விக்கிரமசிங்காவை அடையாளப்படுத்துவதிலும் புதிய ஊழல்சட்டத்தை அமுலாக்குவதிலும் அமெரிக்க கவனம் அதிகரித்துள்ளது. அதன் எதிரெலிப்பாகவே இந்திய -சீனக் கூட்டணியை கைவிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்ஹா அமெரிக்காவுடனான கூட்டணியை பலப்படுத்திவருகிறார். ஆனால் இறுதியில் சீன-இலங்கைக் கூட்டணியே பலமானதாக அமையும் புவிசார் அரசியலை இலங்கைத் தீவு தனக்குள் கொண்டுள்ளது என்பதை உணர வேண்டிய நிலை ஏற்படவுள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)