வெனுசுவெலா நாட்டில் ஜனாதிபதியையும் அவரது குடும்பத்தையும் அமெரிக்கா கைது செய்து நாடு கடத்திய விடயம் சர்வதேச சட்டங்களையும் விதிகளையும் மீறுவதாக பார்க்கப்படுகிறது. இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னர் ஐக்கிய நாடு சபை இத்தகைய நடைமுறைகளை தடுக்கும் விதத்தில் பல சட்டங்களை உருவாக்கி அமுல்படுத்தி வருகிறது. ஆனால் ஐ.நா.வின் விதிகளை வலுமிக்க சர்வதேச அரசுகள் நிராகரிக்க முயலுகின்றன. வல்லரசுகளின் நலன்களுக்கு ஏற்ப சட்டங்களை மீறுவதும் பின்னர் அவற்றை எதிரி நாடுகளுக்கு பிரயோகிக்க முயல்வதும் ஒரு மரபார்ந்த அரசியலாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அத்தகைய அராஜகமான ஆக்கிரமிப்பு செயலை மேற்கொள்வதற்கு அமெரிக்காவின் மேலாதிக்க உணர்வும் உலகின் ஆளுகைக்கான வலிமையும் அதற்கான அடிப்படைகளாக காணப்படுகிறது. இக்கட்டுரையும் ஐக்கிய அமெரிக்கா இஸ்தாபிக்கப்பட்ட பின்னர் உலகில் மேற்கொண்ட தலையீடுகளை தேடுவதாக அமைந்துள்ளது.
ஐக்கிய அமெரிக்கா 1776 சமஸ்டி குடியரசாக பிரகடனப்படுத்திக் கொண்டதிலிருந்து உலகத்தை நோக்கி ஆக்கிரமிப்புகளையும் தலையீடுகளையும் நிகழ்த்திவருகிறது. ஐக்கிய அமெரிக்காவின் தோற்றமே கறுப்பின அடிமைகளின் எழுச்சிகரமான உழைப்பினால் தோன்றியதாகும். அதனால் ஐரோப்பிய குடியேற்றவாசிகளின் மனோநிலை பிற தேசங்களையும் அத் தேசங்களின் மனிதர்களையும் அடிமைகளாக்குவதும் சுரண்டுவதும் மரபார்ந்த செயலாக காணப்பட்டது. இவ்வாறு தோற்றம் பெற்ற ஐக்கிய அமெரிக்கா 1798 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த 228 வருடங்களுக்குள் 469 க்கு மேற்பட்ட தடவை உலக நாடுகள் மீது தலையீட்டை மேற்கொண்டுள்ளது. தென் அமெரிக்ககண்டத்தில் மட்டும் 120க்கும் மேற்பட்ட தலையீடுகளை கடந்த காலத்தில் மேற்கொண்டிருக்கின்றது. அவற்றில் ஆட்சி மாற்றங்கள் ஆட்சியாளர்கள் கடத்தல்கள் தாக்குதல்கள் இராணுவ சதிகள் ஆட்சி கைப்பற்றல்கள் என பல்வேறு சம்பவங்;களில் அமெரிக்காவின் ஜனநாயகத்தின் பேராலும் தாராண்மைவாதம் அரசியல் பொருளாதார குறிகாட்டியின் ஊடாகவும் அராஜகமான ஆக்கிரமிப்புகளை நிகழ்த்தி உள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றான பிரவுண் பல்கலைக்கழகத்தின் (Brown University) தகவலின்படி போர்களுக்கும் போர் திட்டங்களுக்கும் தலையீடுகளுக்கும் அமெரிக்கா செலவு செய்த நிதி மட்டும் பல ரில்லியன் அமெரிக்க டொலர் என்றும் தாக்குதலில் அல்லது நடவடிக்கையின் போது 4.5மில்லியனுக்கு மேலான மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் கூறுகின்றது. மேலும் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் மட்டுமே எட்டு(8) ரில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா செலவு செய்துள்ளமை தெரிய வருகிறது. இது ஒரு மூலோபாய ரீதியான இலாபத்தை தக்க வைக்கும் நடவடிக்கை என அமெரிக்க ஆய்வாரள்கள் விவாதிக்கின்றனர். ஆனால் அவ்வாறு அமைந்தாலும் இது சட்டபூர்வமானதோ உலகத்தின் உறுதித்தன்மை பாதுகாக்கிறதோ என்று கூறிவிட முடியாது என்ற விவாதத்தை பிரவுண் பல்கலைக்கழகத்தின் ஆய்வு வெளிப்படுத்துகின்றது. ஆனாலும் கடும் போக்காளர்களும் அமெரிக்க யதார்த்தவாதிகளும் அமெரிக்காவின் நடவடிக்கை உலகின் உறுதித்தன்மையை பாதுகாப்பதற்கானது எனக் குறிப்பிடுகின்றனர்.
1947 இல் உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை (சி.ஐ.ஏ) நீண்டதும் தொடர்ச்சியானதுமான புலனாய்வு நடவடிக்கைகளை அமெரிக்காவின் அதிகார வர்க்கத்திற்கு முன்வைப்பதும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கவும் காரணமாக உள்ளது. பனிப்போர் காலத்தில் சோவித்யூனியனின் சோஸலிஸக் கட்டுமானத்தை உடைப்பதற்கான புலனாய்வு தொடங்கி உலகத்தை ஆளுகை செய்கின்ற புலனாய்வு நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தி தாக்குதல்களையும் தலையீடுகளையும் ஆட்சி மாற்றங்களையும் பலவீனமான அரசுகளில் நிகழ்த்துவதில் கவனம் கொண்டு இயங்கிவருகிறது.
சி.ஐ.ஏ இன் முகவர்களும் அதன் அமைப்புகளும் உலகில் உள்ள எல்லா கண்டங்களிலும் பரந்து காணப்படுகின்றனர். தென் அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா, மேற்காசியா, கிழக்கு ஆசியா, தென்கிழக்காசியா போன்ற பிராந்தியங்கள் முழுவதும் வலை பின்னல்களைக் கொண்ட தலையீடுகளுக்கான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதத்தில் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது, ஆட்சி மாற்றத்தை மேற்கொள்வது, தேர்தல்களை கையாள்வது போராட்ட அமைப்புகளை உருவாக்குவது, துணை இராணுவ குழுகளை விரிவாக்குவது, போன்ற பல செயல்பாடுகளை சிஐஏ நிகழ்த்தி வருகின்றது. இதற்கு சி.ஐ.ஏ. குறிப்பிடும் வலுவான காரணம் ஒன்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவது என்பதாகும்.
1953 ஈரானில் நிகழ்த்திய ஆட்சி காவிட்ப்பைத் தொடர்ந்து சிலி, காங்கோ, இந்தோனேசியா, நிக்கரக்கூவா போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றங்களையும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான நடைமுறைகளையும் சில நாடுகளில் சர்வாதிகார ஆட்சி முறைகளையும் ஊக்குவிக்கும் விதத்தில் சி.ஐ.ஏ செயல்ப்பட்டுள்ளது. தந்திரோபாய ரீதியில் இலாபங்களை அடையும் நோக்குடன் ஜனநாயகத்தின் வீழ்ச்சி, மனித உரிமை மீறல், அமெரிக்க எதிர்ப்புணர்வு, என்பனவற்றுக்கு எதிராக அமெரிக்க நலன்களை சாத்தியப்படுத்துவதே நோக்கமாக உள்ளது. இவ்வாறு மரபு சார்ந்த அம்சங்களுக்கூடாக இராணுவ மயமாக்கப்பட்ட அரசியல் மற்றும் நீண்ட கால உறுதியற்ற தன்மைகளை இந்த நாடுகளில் ஏற்படுத்துவதற்கு சி.ஐ.ஏ.முயன்றுள்ளது. பரிப்போருக்கு பிந்திய காலத்தில் சி.ஐ.ஏ இன் வகிபாகம் பயங்கரவாதத்திற்கு எதிரானதாக வலுவூட்டப்பட்டது. இஸ்லாமிய அபாயத்தை தோற்கடிக்கும் விதத்தில் சோஸலிஸத்தை தோற்கடித்த அதே உத்திகளோடு செயல்பட தொடங்குது. சி.ஐ.ஏ. தனது உளவு தகவல்களை முன்னிறுத்திக் கொண்டு ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா போன்ற நாடுகளில் ஏற்படுத்திய அனுபவங்களை வெற்றிகரமானதாக கருதி உலகளாவிய ரீதியில் சீனா, ரஷ்சியா, இந்தியா போன்ற நாடுகளின் செல்வாக்கினை முடிவுக்கு கொண்டு வரும் விதத்தில் அல்லது அவகை அரசுகளின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துகின்ற நோக்கிலும்; நேரடியாகவும் மறைமுகமாகவும் அமெரிக்க இராணுவ நகர்வுகளை தீவிரப்படுத்தி வருகிறது.
உலகத்தை ஆளுகை செய்யும் அமெரிக்காவின் கொல்லைப் புறமாக(Back Yard) கருதப்படும் தென் அமெரிக்கா நாடுகள் அதன் தலைவர்கள் பாரிய நெருக்கடியை அமெரிக்காவின் மொன்றோ (President James Monroe) கோட்பாட்டின் ஊடாக சந்தித்து வருகின்றனர். மொன்றோ கோட்பாடு தந்திருக்கும் விளைவு பிராந்திய ரீதியில் பாரிய நெருக்கடியாக மாறி இருக்கின்றது அதன் நீட்சியாகவே டொனால்ட் ட்ரம்ப்ன் விளைவு கோட்பாடு (Trump Corollary) ஒன்றை பிராந்தியம் சார்ந்தும் உலகளாவிய ரீதியிலும் அமெரிக்காவின் வெளியுறுவின் வகைப்பாடாக முன்நிறுத்தி வருகின்றார். அமெரிக்காவின் வெனிசுவெலா மீதான நடவடிக்கை என்பது மொன்றோ கோட்பாட்டின் நீட்சி என்றே ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அமெரிக்கா அது சார்ந்த மேற்குலகம் ஊடக பலத்தையும் பிரச்சார உத்திகளையும் முன்னுறுத்திக் கொண்டு ஈராக்கிலும் லிபியாவிலும் நிகழ்த்தியது போன்றே வெனிசுவெலான் மீதும் அந்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மதுரம் மீதும் செயல்பட்டது. போதைப்பொருள் கடத்துகை ஆயுதக் கொள்வனவு மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த நாட்டின் மீது பெற்றோலிய வளத்தையும் ஏனைய கனியங்களையும் ஆதிக்கம் செய்யும் விதத்தில் போர் ஒன்றை நான்கு மணித்தியாலங்களில் நிறைவு செய்துள்ளது. வெனுசுவெலா ஜனாதிபதி மீதான இராணுவ நடவடிக்கை மிக நீண்ட காலமாக திட்டமிடப்பட்டதோடு சி.ஐ.ஏ யின் தகவல்களின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
எனவே வெனிசுவெலா மீதான அமெரிக்க தாக்குதல் சர்வதேச சட்ட விதிகளையும் அரசுகளின் திறமைகளையும் பலவீனப்படுத்தி இருக்கிறது. அத்தகைய தலையீடுகளை நிகழ்த்துகின்ற போது புலனாய்வின் போலித் தகவல்களையும், ஏற்றுக் கொள்ள முடியாத குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துக் கொண்டு நாடுகளையும் நாட்டின் தலைவர்களையும் வளங்களையும் ஆக்கிரமிப்பு செய்கின்ற போக்கினை அமெரிக்க ஆட்சியாளர்கள் கொண்டிருக்கின்றனர். தற்போது உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவ மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி ஒரு போரை குறிப்பிட்ட நாடுகள் மீது நிகழ்த்துவதற்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ. திட்டமிடுவதை காண முடிகின்றது. அடுத்து வரும் ரொனால்ட் ட்ரம்ப்ன் ஆட்சிக்காலம் உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவ மதத்தையும் கிறிஸ்தவ மக்களையும் பாதுகாக்கின்ற போர்வையில் ஏனைய நாடுகள் மீது தாக்குதலை நிகழ்த்த திட்டமிடுகிறது தெளிவாகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: யாழ் தினக்குரல்)
