அரசியல் கட்டுரைகள்

சமந்தாபவரின் வருகையும் ஈழத்தமிழரின் பூச்சியமாகும் அரசியலும்!

ஜெனீவா அரங்கு ஈழத்தமிழரின் அரசியல் அரங்கு மட்டுமே என்பதை மீள ஒருதடவை நிறுவியுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானங்களின் வீரியம் குறைந்துள்ளதுடன் அதன் திசை இலங்கை முழுவதற்குமானதாகவும் மனித உரிமை சார்ந்த பிரச்சினையாகவும் மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பொருளாதாரக் குற்றங்களையும் பொறுப்புக்கூறலின் பலவீனங்களையும் ஜெனீவா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை அரசாங்கம் தெளிவாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதுடன் செயல்படுத்தாத அனைத்தையும் செயல்படுத்தியதாக அறிக்கைவிட்டுள்ளது. அத்தோடு 46/1 தீர்மானத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும் குறிப்பட்டுள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சின் நடவடிக்கையை குறைகூறும் சில ஊடகங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக இருந்த போது ஏற்றுக்கொண்டதை ஜனாதிபதியான போது நிராகரிப்பதாகவும் வெளியுறவு அமைச்சரது முடிவு பொதுஜன பெரமுனவினது தீர்மானம் எனவும் உரையாட முயலுகிறார்கள். இதுவே தென்இலங்கையின் அரசியல் இராஜதந்திரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இக்கட்டுரையும் அமெரிக்காவுக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் நிர்வாகி சமந்தாபவரின் இலங்கை விஜயம் பற்றிய தேடலாக உள்ளது.

10.09.2022 இலங்கைக்கு வருகைதந்த சமந்தாபவர் இருநாள் இலங்கையின் முக்கிய தலைவர்களை சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கையின் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது (11.09.2022) இலங்கையின் பொருளாதார உறுதிப்பாட்டிற்கு முழுமையான ஆதரவை வழங்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது என்று தெரிவித்தார். கொழும்புக்கு வெளியேயுள்ள ஜா-எல நகரத்திற்குச் சென்ற சமந்தாபவர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அவர்களுக்கு உரத்தட்டுபாட்டினால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி கலந்துரையாடியதுடன் ஒரு மில்லியன் விவசாயிகளுக்கு காங்கிரஸின் ஒப்புதலுடன் உரம் வழங்குவதற்க USAID உதவியாக 40மில்லின் அமெரிக்க டொலர்களை அறிவித்தார். அது மட்டுமன்றி இலங்கைக்கு 60மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதாக உறுதியளித்தார். இத்தகைய உதவி சிறிதாக அமைந்தாலும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் நாடுகளுக்கும் இலங்கையில் முதலீடு செய்வதற்கான உத்வேகத்தை ஏற்படுத்தும் எனத்தெரிவித்தார். இதற்கு பதிலளித்த இலங்கையின் ஜனாதிபதி முன்வைத்த விடயங்கள் இருவராலும் உரையாடப்பட்ட தகவலாகவே தெரிகிறது. அவற்றை அவதானிப்பது பொருத்தமானதாகும்.

குறிப்பாக, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு துரித தீர்வு வழங்கப்படும் என்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவது என்றும் தெரிவித்ததோடு தலதாமாளிகை மீதான குண்டுத்தாக்குதல் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளோடு தொடர்புபட்டவர்களை தவிர ஏனையவர்கள் தொடர்பில் கவனம் கொள்ளப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடுப்புக்காவலில் உள்ள முஸ்லீம்களில் விடுதலை செய்யக்கூடியவர்களை அடையாளம் காணுமாறு புலனாய்வு பிரிவுக்கு அறிவித்துள்ளதாகவும், இக்குண்டு தாக்குதல் தொடர்பான அறிக்கையை ஆய்வு செய்ய ஸ்கொட்லாந்து யாஸ் பொலிசாரினை அழைத்திருப்பதாகவும், குண்டுவெடிப்புக்கு பின்னால் மறைந்திருக்கும் கரம் யாது என்பதையும் கண்டறியவும் முயற்சிப்பதாக சமந்தாபவருக்கு தெரிவித்துள்ளார். அதேநேரம் புணரமைப்பு திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டு வடக்கு அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க இருப்பதாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் வடக்கு மாகாணம் பெரும் பொருளாதார மையமாக மாற்றப்படுமென்றும் தெரிவித்துள்ளார். விவசாயத்துறையின் நவீன தொழில்நுட்பத்தை எதிர்பார்ப்பதாகவும் 2048இல் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருப்பதாகவும் அதனையொட்டி 2023இலிருந்து அடுத்துவரும் 25வருட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் அதற்கு அமெரிக்காவின் உதவி அவசியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமந்தாபவரிடம் தெரிவித்துள்ளார். இதன் உள்ளார்ந்த அர்த்தங்களை தேடுவது என்பது அவசியமானதாகும்.

முதலாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவால் முன்வைக்கப்பட்ட விபரிப்புக்கள் ஒவ்வொன்றும் நல்லாட்சி காலத்திலும் முன்வைக்கப்பட்ட அம்சங்கள் போன்றே தெரிகிறது. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டடோர், அரசியல் கைதிகள், பயங்கரவாத தடைச்சட்டம் போன்றன இயல்பாகவே கடந்த பல ஆண்டுகளாக உரையாடப்படும் அம்சமாக மட்டுமே விளங்குகின்றது. எந்த விடயமும் நடைமுறைக்கு உட்படாதவொன்றாகவே காணப்படுகிறது. யு.எஸ். எயிட்டின் நிர்வாகி சமந்தாபவருடன் உரையாடப்பட்ட ஈழத்தமிழர் விவகாரம் அனைத்தும் திட்டமிடலேயன்றி செயல் வடிவத்துக்கான அம்சமாக தென்படவில்லை.

இரண்டாவது, யு.எஸ். எயிட்டின் நிர்வாகி சமந்தாபவரின் இலங்கை வருகை ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் காலப்பகுதியை மையப்படுத்தி உள்ளது. இலங்கை அரசாங்கம் மீது பொறுப்புக்கூறுதல், மனித உரிமை பேணுதல், பொருளாதார குற்றங்களுக்கான தீர்வுகள் போன்றவை முன்னெடுக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஈழத்தமிழர் மீதான பொறுப்புக்கூறலை ஜனாதிபதி சமந்தாபவருக்கு முன்வைப்பது போன்றே இருவருக்குமிடையிலான உரையாடலின் உள்ளடக்கம் காணப்படுகிறது. இன்னொரு வகையில் குறிப்பிடுவதானால், இலங்கை அரசாங்கம் சமந்தாபவரின் வருகையை ஜெனிவா அரங்கை கையாள்வதற்காக பயன்படுத்துவதாகவே தெரிகிறது.

மூன்றாவது, இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கு 100மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா வழங்க முன்வந்திருப்பது சீனாவின் உதவித்திட்ங்களை விட அதற்கான முக்கியத்துவத்தை அதிகரிக்கின்ற நோக்கமாகவே காணப்படுகிறது. இதாவது, சீனா சில நிபந்தனைகளையும், கடனை மீள செலுத்த முடியாத போது சொத்துக்களை கோருகின்ற போது அமெரிக்கா உதவிகளை வழங்குவது என்பது இலங்கை-அமெரிக்க உறவின் நெருக்கத்தை அதிகரிப்பதற்கான வழிமுறையாகவே தென்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் உதவிகள் சர்வதேச நிதி நிறுவனங்களையும் நாடுகளையும் அவற்றின் முதலீடுகளையும் ஈர்ப்பதற்கான செய்முறையாகவே தெரிகிறது.

நான்காவது, இலங்கைத்தீவை மையப்படுத்தி எழுந்திருக்கும் சீன எதிர் அமெரிக்க போட்டியின் ஒரு அங்கமாகவே சமந்தாபவரின் வருகை காணப்படுகின்றது. அதேநநேரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காசார் மேற்கு நாடுகளையும் சீனா, ரஷ்சியா, இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகளையும் ஒரே தளத்தில் கையாளுகின்ற விதத்தில் செயற்படுவதனை அவதானிக்க முடிகின்றது. அதாவது பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் ஆதரவைப்பெற்ற சீனாவையும் ரஷ்சியாவையும் ஜெனிவாவில் ஆதரவு திரட்டி இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை முறியடிப்பது போன்று சமந்தாபவரின் இலங்கை வருகையை முன்னிறுத்தி அமெரிக்காவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்குமான உறவின் மூலமும் ஜெனிவா களத்தை கையாளவும் தீவிரமான அறிக்கைக்கான வாய்ப்பை தவிர்க்கவும் முயன்று வெற்றி பெற்றுள்ளது. இது தென்னிலங்கை ஆட்சியாளர்களின் கடந்த கால வரலாறு முழுவதும் ஈழத்தமிழர் விவகாரத்தில் காணப்படும் ஒரு விடயமாகும். வழமையாக ஆளும்-எதிர்க்கட்சி என்ற போட்டிக்குள்ளால் அத்தகைய தந்திரோபாயம் நகர்த்தப்படும் மரபு தற்போது ஒரே அரசாங்கத்துக்குள் மேற்கு தரப்பையும் கிழக்கு தரப்பையும் கையாளுகின்ற பொறிமுறையை காணமுடிகிறது.

ஐந்தாவது, சமந்தாபவர் இலங்கைத்தீவில் எழுந்திருக்கும் அரசியல்பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு அரசியல் தலையீட்டையும் செல்வாக்கையும் அதிகரிக்கவும் அதற்கான வாய்ப்புக்களை உருவாக்கவும் நகர்வதாகவே தெரிகின்றது. இலங்கை அரசாங்கத்தை சிங்கள பௌத்த மேலாதிக்க பாரம்பரியத்தோடு உறவுகொள்வதில் எந்தவித தயக்கமோ கேள்வியோ இன்றி செயற்படுகின்ற போக்கினையும் அவதானிக்க முடிகின்றது. இதனையே, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சமந்தாபவருடைய உரையாடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆறாவது, இந்திய தரப்பு ஜெனிவா அரங்கில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும், ஜெனிவா தீர்மானத்தையும் கண்டு கவலையடைவதாகவும், 13ஆம் திருத்தச சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. இலங்கைத்தீவின் அரசியலை சீனா ஒரு பக்கம் கையாள்வது போன்று அமெரிக்காவும் இந்தியாவை நிராகரித்துவிட்டு தனித்து கையாள முயலுகின்றது என்பதனை ஏற்கனவே பலதடவை அடையாளம் கண்டது போல் சமந்தாபவரின் வருகையிலும் அடையாளம்காண முடிகிறது. சீனாவுக்கு போட்டியாக இந்தியாவின் உதவித்திட்டங்கள் இலங்கைத்தீவுக்கு வழங்கப்பட்ட சூழல் மாறி ரணில் விக்கிரமசிங்கா ஆட்சிக்கு வந்த பிற்பட அமெரிக்கா வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவின் இலங்கை மீதான தலையீட்டையும் அழுத்தத்தையும் பலவீனப்படுத்தியிருப்பதோடு இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த அரசியலிலிருந்து இந்தியா விலகும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடக்கு-கிழக்கு மீதான பிரசன்னமும் படிப்படியாக குறைந்துவரும் சூழலில் முழுத்தீவுக்குமான இந்திய-இலங்கை உறவு பாதிப்பினை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. இலங்கைத்தீவில் முழுமையாக செல்வாக்கு செலுத்த இந்தியா முயன்ற போதும் சினூ-அமெரிக்க என்பவை அதற்கான வாய்ப்பை தகர்த்திருப்பதோடு வடக்கு-கிழக்கும் இந்தியாவின் செல்வாக்கிலிருந்து விடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு மிகப்பிந்தைய எடுத்துக்காட்டாக திருக்கோணேஸ்வர விவகாரத்தை சுட்டிக்காட்ட முடியும். எனவே, இந்தியாவுக்கு இலங்கைத்தீவை கையாள முயன்று இறுதியில் வடக்கு-கிழக்கும் காணமால் போகும் துயரத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே, இலங்கைத்தீவின் அரசியலை சீனாவாதம் அமெரிக்கா வாதம் கையாளப்படும் நிலைக்கு மாறியுள்ளது. சீனாவின் யுவாங்வாங்-05 கப்பலும் அமெரிக்காவின் ஆள்கடல் கண்காணிப்பு கப்பலும் ஒரேவகையான விளைவை ஈழத்தமிழருக்கு ஏற்படுத்தியுள்ளது. இவ்இரு நாடுகளையுமு; விரோதிக்கும் ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தென்னிலங்கை ஆட்சிக்கு நெருக்கடியையோ ஆதிக்கத்தையோ ஏற்படுத்த முடியாதா இந்தியாவை முன்னிறுத்தி வெற்றி கொள்ள முடியுமா என்பது பிரதான கேள்வியாகும். ஈழத்தமிழர் நட்பு சக்திகளையும் எதிர்ப்பு சக்திகளையும் சமதூரத்தில் முன்னிறுத்தி கையாள்வது என்பது சமந்தாபவரின் இலங்கை வருகை மீளவும் வலியுறுத்தி உள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)