நூல் தலைப்பு: மாறிவரும் புதிய உலக ஒழுங்கு புவிசார் அரசியல் நோக்கு
ஆசிரியர்: கலாநிதி கே. ரீ. கணேசலிங்கம்
முதற் பதிப்பு: 2002.10.01
வெளியீடு: Mr.TThayalan, 11, Ruedelo Hermet, 93400 ST-ouen, France.
பதிப்பு: S.S.R. Computer & Offset Printers, 288, Palaly.Road, Jaffna.
மின்நூலை தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தை அழுத்தவும் (Click செய்யவும்):
சமர்ப்பணம்
எனது உயர்வுக்கு தமது உதிரத்தை உரமாக்கி உழைத்த அன்புக்கும், மதிப்புக்கும் உரிய ஆசான்களான திரு. சு. திருஞானம் அவர்கட்கும் திருமதி இராஜலக்ஸ்மி சந்திரபாலன் அவர்கட்கும் இந்நூல் சமர்ப்பணம்.
முன்னுரை
‘மாறிவரும் புதிய உலக ஒழுங்கு’ என்ற இந்நூல் கடந்த ஓராண்டுக்கு மேலான முயற்சியின் விளைவாக ஏற்பட்டதாகும். சர்வதேச அரசியல் கற்கை நெறியானது எண்ணக்கருக்களை மட்டும் உள்ளடக்காது அதன் நடைமுறையினையும் தாங்கிய யதார்த்தவாத உலகத்தை காண்பிக்கின்ற கண்ணாடியாக துலங்குகிறது. அந்த முயற்சியில் சர்வதேச அரசியலில் மிகப் பிந்திய வடிவத்தை விளங்க வைப்பதற்கான உள்ளடக்கத்தைக் கொண்ட இந்நூல், கடந்த ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் சமூக விஞ்ஞானப்படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் அபிவிருத்தியாகும்.
உலக மாற்றத்தின் வேகம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக அமைந்த போதும் அறிவியல் புரட்சியின் வேகம் அதன் யதார்த்தத்தை காட்ட தவறுவதில்லை. மூலதன திரட்சி எங்கு குவிகிறதோ அங்கு அரசியல் அதிகாரம் மேலெழுகிறது. அவ்வாறு மேலெழும் அரசியல் அதிகாரம் பொருளாதார வளர்ச்சியை தொழில்படும் சக்தியாக கொண்டு செயல்பட விளைகிறது. அத்தகை வரலாற்றுக் கண்னோட்டம் அரசியல் கோட்பாடுகளிலும், அதன் பிரகிருதித்துவ கடமைகளிலும் அதிகமான செல்வாக்கை செலுத்திவருகிறது. அக்கடமைகளில் ஏற்பட்ட புதிய அபிவிருத்தி மூலதன திரட்சியை அரசியல் அதிகாரம் என்ற சக்தி முழுமையாக விழுங்கி ஏப்பம் விடும் உலக ஒழுங்கையே தரிசிக்க வழிசமைத்துள்ளது. இதனால் மூலதனத் திரட்சி உற்பத்தி பண்டம் சாராது, உழைப்பு சக்தியில் தங்காது, சந்தை வலுக்களுடனும், அவை சார்ந்திருக்கும் அரசியல் வலுக்களுடனும் ஒன்றிணைந்து விடுகிறது. அத்தகைய ஒன்றிணைப்பு இறைமையுடைய, மூலதன திரட்சியை உள்ளடக்கிய அரசுகளுடன் மட்டும் சுருங்கிவிடுகிறது. அத்தகைய சுருக்கத்தை சற்றுவிரிவுபடுத்திய அம்சமான அறிவியல் எழுச்சியடைந்து சித்தாந்த வேறுபாடுகள் இறைமை உடைய பல அரசுகளுக்கான தளத்தை கடந்த 20ஆம் நூற்றாண்டில் விரிவாக்கியது. அத்தளம் மிக நீண்டகாலம் நிலையான திசையை உலகத்துக்கு காட்டியிருந்தது. ஆனால் அது மீண்டும் பிசிறலை சந்தித்த போது ஒரு சில தனிமனித சக்திகள் அதனை தீர்மானிப்பவையாக அமைந்தமையினால் மீண்டும் ஒரு மாறுதல் அவசியமாகியது. பிரபஞ்சத்தின் இயக்கமும், தொழில் பாடும் மாற்றத் தரின் யதார்த்தமே அத்தகைய மாறுதல் அறிவியல்பூர்வமானதாக திகழும்போது தனித்துவமாகவும், நிலைத்ததுமான உருவாக்கங்களை ஏற்படுத்தவல்லதாக அமைந்துவிடுகிறது. எனவே மாற்றத்தை அறிவியல்பூர்வமான தளத்தினுடாக நோக்க முயலும் போது தெளிவும், முடிவும், நேர்த்தியானதாக அமையும் மூலதனத்திரட்சி அறிவியலுடன் இணையும்போது வளர்ச்சி நிர்ணயமான காரணியாக மாறுகிறது. அப் போது போலியான அரசியல் அதரிகாரமும் அயோக்கியத்தனமான பொருளாதார சுரண்டலும், அரசியல் ஆளுகையிலிருந்து அந்நியமாகி விடும்.
இத்தகைய தளத்தினை விரிவாக்கும் முயற்சியில் விளைந்த இந்நூல் நான்கு அலகுகளைக் கொண்டது. அந்நான்கு அலகுகளுக்கூடாக சமகால அரசியல் பொருளாதார இராணுவ, இலக்குகளை இனங்காட்டும் முயற்சியின்போது, புவிசார் அரசியல் கோட்பாடுகள் நிரந்தமான அரசியல் பொருளாதார- பாதுகாப்பு இருப்பை கேள்விக்குட்படுத்த முயன்றதையும் அக்கோட்பாடுகள் ஒவ்வொன்றின் தளத்திலிருந்தே உலக அதிகாரப் போட்டி இன்றுவரை சாத்தியமாகிவருகிறதென்பதை காட்டுகிறது. தற்போதைய மாறிவரும் புதிய உலக ஒழுங்கு அதற்கான முன்னாயத்தங்களையே கொண்டு இயங்குகிறது. இந்நூலில் குறிப்பிடப்படும் “விழிம்பு நிலமி’, ‘மையநிலமி’, ‘இருதய நிலம், ஆகியன புவியியல் ரீதியில் பாரிய வேறுபாட்டை கொண்டிருக்காத நிலையில் அரசியல் நோக்கில் ஏறக்குறைய ஒரே பிரதேசமாகவே இனங்காணப்படுகிறது. குறிப்பாக கூறுவதனால் அது ஐரோப்பிய, (கிழக்கு) ஆசியப் பகுதியை சுட்டுவதாகும். இப்பிரதேசம் நோக்கிய அரசியல் அதிகாரப் போட்டியே 20ஆம் நூற்றாண்டு அரசியலில் மட்டுமல்ல 21ஆம் நூற்றாண்டு அரசியலிலும் காணப்படுகின்ற அம்சமாகும். ஒழுங்கு மாற்றமுறுகிற வேளையில் அதன் இலக்கு அல்லது அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் மையம் என்றுமே ‘விழிம்பு நிலம்’, ‘மைய நிலம்’, ‘இருதய நிலம்’ என்று அழைக்கப்பட்ட பகுதிக்கே உரியதாகும் இது மாற்றத்தை ஏற்படுத்தும் பிரதேசம் என்பதானால் அதனை கருதுகோளாக கொண்டு மாறிவரும் புதிய உலக ஒழுங்கு என்ற நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்
கே.ரி.கணேசலிங்கம்,
விரிவுரையாளர், அரசியல்,
சமூகவியல்துறை,
யாழ் பல்கலைக்கழகம்.