உலக அரசியல் போக்கில் அதிக தீர்மானங்களையும் அதன் விளைவான போர்களையும் சமாதானத்தையும் தந்த வெள்ளைமாளிகை பின்தங்கிய நாடுகளுக்கு நிகரான அரசியலை 06.01.2021 இல் வெளிப்படுத்த ஆரம்பித்து நீடித்துவருகிறது. 1860களில் ஜனநாயகத்திற்கு புதிய வடிவம் கொடுத்த ஆபிகாம் லிங்கனின் நினைவுகளை சுமந்த பாராளுமன்றக் கட்டடத் தொகுதி ஜனாதிபதி ட்ரம்ப்-இன் ஆதரவாளர்களின் அவமதிக்கப்பட்டுள்ளது. அதிக அபாயத்தை வெள்ளைமாளிகை உலகத்திற்கு தந்தாலும் உலகத்தை சமநிலையில் ஓடவைத்த பணியையும் ஆற்றியது என்ற அடிப்படையில் உலக வரலாற்றில் தனித்துவமான கட்டத் தொகுதியாக அது பார்க்கப்படுகிறது. உலகத்திற்கு ஜனநாயகத்தை போதிக்கும் தேசம் தனது ஜனநாயகச் சின்னத்தையே அவமானமாக்கும் துயரத்தை உலக வரலாற்றில் பதித்துள்ளது. இக்கட்டுரையும் அமெரிக்க ஜனநாயக(நாகரீக) அரசியல் கலாசாரத்தின் போக்குகளை அடையாளப்படுத்துவதாக அமையவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை அடுத்து எழுந்த இழுபறியின் இறுதிக்கட்டமாகவே தற்போதைய ஆர்ப்பாட்டச் சூழல் அரங்கேறியுள்ளது. அத்தகைய நிலையை தூண்டியதில் ஜனாதிபதி ட்ரம்ப்க்கு பங்குண்டு என்ற குற்றச்சாட்டினை முன்வைத்துள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஜோ பைடன் இச்செயல் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பெனவும் அமரிக்க வரலாற்றில் இருள் சூழ்ந்துள்ள காலம் எனவும் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை தூண்டும் விதத்தில் நிகழ்வுக்கு வெளியே ஜனாதிபதி ட்ரம்ப் உரையாற்றியதுடன் தனது டூவிட்டர் பக்கத்திலும் ஆர்ப்பாட்டக்காரரை உற்சாகப்படுத்தும் சொற்களை பயன்படுத்தியிருந்தார். ஆர்ப்பாட்டக்காரது நடவடிக்கைகள் வன்முறையை திட்டமிட்டு தூண்டுவதாக அமைந்திருந்ததுடன் காங்கிரஸ் கட்டிடத் தொகுதியை அடித்து நொருக்கிய வண்ணமே சபையை நோக்கி நகர்ந்தார்கள் இதனை அவதானிக்கும் போது மனித சமூகத்தின் ஏற்றுக் கொள்ள முடியாத அரசியல் கலாசாரத்தை வெளிப்படுத்துவதாக தெரிகிறது. ஆசிய ஆபிக்க நாடுகள் மீது அதிக அவச்சொற்களை பிரயோகித்த அமெரிக்கர்களது நடவடிக்கைகள் அதனை விட அவமானமாகவே தெரிகிறது. இத்தாக்குதலில் நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதுடன் இதுவரை இருபதுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரரை அடக்குவதற்கு ஊரடங்கு போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இத்தகைய தாக்குதலை அடுத்து உலகத்தலைவர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஜனாதிபதி ட்ரம்ப்ன் மிக நெருக்கமான நட்பர்கள் என்பது கவனிக்கத் தக்க விடயமாகும். குறிப்பாக பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். இவர்கள் இருவரும் ட்ரம்ப்ன் மிக நெருக்கமான நட்பராகவும் இரு நாடுகளும் அமெரிக்காவுடன் சேர்ந்து இயங்கும் நிலையையும் காணமுடிந்தது. ஆனால் தற்போது இருவரும் இந்த நடவடிக்கையை ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட அவமானமாகவே வெளிப்படுத்தியுள்ளனர். இந்தகைய வன்முறைகள் உலக அரசியலில் ஏற்படுத்தவுள்ள நெருக்கடிகள் அதிகமானவை.
ஒன்று, அமெரிக்க அரசியலமைப்பு வன்முறையை கட்டிவளர்கிறது என்ற செய்தியை மறைமுகமாக வெளிப்படுத்துவதை காட்டுகிறது. காரணம் ஒரு நாட்டின் அரசியல் கலாசாரம் அந்த நாட்டின் அரசியல் அமைப்பு சார்ந்தது. அத்தகைய அரசியலமைப்பு மீது மக்கள் கொள்ளுகின்ற எண்ணம் அல்லது மனோநிலையே அரசியல் கலாசாரம் என அமெரிக்க அரசியல் சிந்தனையாளர்கள் (G.Almond) உலகத்திற்கு தந்துள்ளனர். ஆகவே அதனடிப்படையில் அவதானித்தால் 1779 முதல் உலகத்திற்கு நிலைத்திருக்கும் அரசியலமைப்பாகவும் இருபத்தியோராம் நூற்றாண்டு உரியதாகவும் வரையப்பட்டதென்ற பெருமைக்குரியதாக காணப்பட்டது. ஆனால் அதன் ஆயுட்காலமும் நிலைத்திருப்பும் மட்டும் முக்கியமானதல்ல மாறாக அதன் விளைவுகள் ஆரோக்கியமானதாகவும் மக்களது இயல்பான வாழ்வையும் அவர்களது பாதுகாப்பையும் சமமான நீதியையும் இன்னெரு மனிதனை பாதிக்காத சுதந்திரத்தையும் கொண்டிருப்பதே அந்த அரசியலமைப்புக்கான வலிமையும் சிறப்புமாகும். அதனை ஏற்படுத்துவதில் தொடர்ச்சியான முரண்பாட்டை அமெரிக்க அரசியலமைப்பு தருகிறது. குறிப்பாக உலக நாடுகளை ஆக்கிரமிப்பதும் பொருளாதார நலன்களுக்காக ஆட்சிகளை கவிழ்ப்பதும் நாடுளில் பொம்மை அரசாங்கங்களை உருவாக்குவதும் உலகத்தை முழுமையாக கண்காணிப்பதுவும் அதற்காக செனற் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களைப் பயன்படுத்துவதும் அமெரிக்க புலனாய்வுத் துறையினரை பயன்படுத்தி அமெரிக்க நலன்களை முதன்மைப்படுத்துவதையும் அமெரிக்க அரசியலமைப்பு கொண்டுள்ளது. இதனால் கட்டிவளர்க்கப்பட்ட மரபையே அமெரிக்க மக்களும் ஆட்சியாளரும் பெற்றுள்ளனர். அமெரிக்க அரசியலமைப்பு மேலாதிக்க யாப்பாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை என்பது வரையறைகளையும் வரம்புகளையும் சமநிலைகளையும் தலையீட்டையும் கொண்டிருந்த போதும் நடைமுறையில் ஆதிக்க மனோநிலையையே வெளிப்படுத்துகிறது. அதன் அவதாரமாகவே ஜனாதிபதி ட்ரம்ப் காணப்படுகின்றார்.
இரண்டு, அமெரிக்காவில் வன்முறை ஒரு தொடர்ச்சியான பதிவாகவே அமைந்துள்ளது. குறிப்பாக கறுப்பர் மீதான தாக்குதல்கள் ஒரு பக்கம் அமைய மறுபக்கத்தில் ஆயுதக்கலாச்சாரத்தின் வாயிலாக எழுந்துள்ள தாக்குதல்கள் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மற்றும் உயர் நிறுவனங்களிலும் அதிகளவான பதிவுகளை தருகிறது. இத்தகைய தாக்குதல்களுக்குப் பின்னால் அரசியல் கலாசாரமே பிரதான காரணமாகும். அரசியல் நிறுவனங்களது போக்குகளும் அதன் முடிபுகளும் சமூக இருப்பினையும் மக்களது வாழ்க்கையையும் தீர்மானிக்கும் திறனுடையதாகவே அமைந்துள்ளது. இத்தகைய தாக்குதல்களுக்கு காரணமானவர்களில் அனேகமானவர்கள் மனோரீதியில் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் அரசாங்கங்கள் தப்பிக் கொள்ள முயலுகின்றன. ஆனால் அவை ஒவ்வொன்றும் ஆட்சியாளரது தவறான கொள்கை வகுப்பினாலும் தவறான திட்டமிடலாலும் நிகழ்ந்து விடுகின்றன என்பதை ஏற்க மறுக்கின்றனர். அரசியல் சட்டங்கள் மட்டுமல்ல அதனை பின்பற்றும் தலைமைகளும் அதற்கு பொறுப்புடையவர்களாக விளங்கும் போது மட்டுமே விளைவுகள் சாதகமானதாக அமையும்.
மூன்று, உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் அங்கீகாரம் அருகி வருவதுடன் இத்தகைய தாக்குதல்கள் அபாயமான எதிர்காலத்தை அமெரிக்காவுக்கு ஏற்படுத்திவிடும். அமெரிக்க ஜனநாயகத்தின் எச்சங்கள் உலகத்திற்கு முன்னுதாரணமாக அடையாளப்படுத்திய யுகம் காணாமல் போவதற்கான வாய்ப்பினை உருவாக்கிவிட்டது. உலக நாடுகளது அரசாங்கங்கள் மீது அமெரிக்கா விரிவுரை எடுக்க முடியாத நிலை ஒன்றினைத் தந்துள்ளது. மேலாதிக்கம் செய்யவும் கட்டளை பிறப்பிக்கவும் கட்டுப்பாடு விதிக்கவும் முடியாத நிலையொன்றுக்கான பதிவாக அமைந்துள்ளது.
நான்கு, உலக நாடுகளுக்கு மட்டுமல்லாது அமெரிக்க மாநிலங்களுக்கே தற்போதைய சம்பவம் முன்னுதாரணமாக அமைந்துவிட வாய்ப்புள்ளது. ஆட்சி மாற்றங்களும் அதிகார கைமாற்றலும் இனிவரும் காலத்தில் அதிக நெருக்கடிமிக்கதாக அமைய வாய்புள்ளது. அமெரிக்க ஆட்சித்துறைக்குரிய ஆளுமைகளைக் கண்டறியும் திறனை மட்டுமே கொண்டிருந்த நிலை மாறி ஆட்சியாளரின் பலவீனங்களைகளையும் வரைபுகளையும் நடைமுறை பிரயோகங்களையும் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அல்லது தற்போதைய காலப்பகுதியை அமெரிக்கா கடந்தாலும் எதிர்காலத்தில் இதே நெருக்கடியொன்றுக்கான சூழல் தவிர்க்க முடியாததாக அமையும்.
ஐந்து, அமெரிக்க அரசியலமைப்பு முழுமையாக ஜனாதிபதி பதவியை ஆளுமையாக மட்டுமே அளவிட்டதே அன்றி அதனை தேசத்தின் அடையாளமாகக் கொள்ளத் தவறியது. அந்த மக்கள் எண்ணங்களில் பலமான ஆளுமைமிக்க தலைமையாக தெரிவு அமையவேண்டும் என்பதோடு தேர்தல் கல்லூரி ஒரு பலவீனமான அறமற்ற வேட்பாளரை தேர்ந்தெடுப்பது பற்றிய எந்த வியாக்கியானத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆளுமை என்பது தேசத்தின் அடையாளம் என்பதையும் கருத்தில் கொள்ளத் தவறியது.
ஆறு, அமெரிக்கத் தேர்தல் கல்லூரியின் முடிபும் மக்களின் முடிபும் கடந்த காலங்களை விட ட்ரம்ப் தெரிவான போது அதிக முதன்மைப்படுத்தப்பட்டது. அத்தகைய முதன்மைப்படுத்தலானது இயல்பாகவே மக்களையும் காங்கிரஸ்சையும் தனிமைப்படுத்தியும் முரண்பாடடைய வைத்திருந்ததையும் காணமுடிகிறது. இதன் வளர்ச்சிப் போக்கின் தாக்கமே ட்ரம்ப் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்டிடத்திற்குள் வன்முறையூடாக நுழைவதற்கு வழிவகுத்திருந்தது.
ஏழு, அமெரிக்க மக்களுக்கு ஆட்சியாளர் மீதும் அரசியலமைப்பு மீதும் இருந்த நம்பிக்கை தகர்ந்து போகும் அளவுக்கு ஆட்சியின் போக்கு அமைந்துள்ளது. மேல்தட்டுவர்க்கத்தின் நலன்களும் மத்தியதரவர்க்கத்தின் நலன்களையும் தரகர்களதும் வர்த்தகர்களதும் தனியார்பல்தேசியக் கம்பனிகளது ஆதிக்கத்திற்கும் கட்டுப்பட்ட ஆட்சியினால் சாதாரண மக்கள் பெரியளவில் பாதிப்புக்கு உள்ளாகியதைக் காணமுடிகிறது. இத்தகைய பொறிமுறை அமெரிக்காவில் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திடமும் காணப்படுகின்ற விடயமாகத் தெரிகிறது. அதிலும் கொவிட்-19 பின்பான காலப்பகுதி இத்தகைய இடைவெளியை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இதன் வளர்ச்சி 1860ஐப் போன்ற ஒரு நிலையை அமெரிக்காவுக்கு எதிர்காலத்தில் ஏற்படுத்திவிடுமா என்ற அச்சத்தினைத் தந்துள்ளது.
எனவே, அமெரிக்க ஜனநாயகத்தின் காவலர்களே அமெரிக்க ஜனாநாயகத்தை தோற்கடிக்கும் துயரம் ஏற்பட்டுள்ளது. எதை அமெரிக்க ஜனநாயகம் என்று உலகத்திற்கு அமெரிக்கா உணர்த்தியதோ அது தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. அதன் அரசியலமைப்பும் ஆட்சி முறைமைக்கான தெரிவும் மீளமைக்கப்பட வேண்டும் என்ற செய்தியைத் தந்துள்ளது.
-கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
