January 19, 2026
அரசியல் கட்டுரைகள்

டித்வா பேரிடரும் எதிர்கட்சிகளின் மூன்றாம்தர அரசியல் உத்தியும்?

டித்வா புயல் இலங்கை தீவு முழுமையையும் சீர்குலைத்துள்ளது. பேரிடர் என அறிவிக்கப்படும் துயரத்தை தந்துள்ளது. மீண்டும் மழையின் வோகம் அதிகரித்திருத்து வருவதாகவும் தொடர்ச்சியாக மலையகத்தில் மண்சரிவுகள் அழிவுகளை ஏற்படுத்தி வருவதாகவும் செய்திகள் உண்டு. ரம்புக்கென (Rumbukkana) போன்று கிராமங்கள் முழுமையாகவே அழிந்து போயிருப்பதாக தெரியவருகிறது. பேரிடர் அழிவுகளை மீட்டெடுப்பதற்கு உலகில் உள்ள அனைத்து நாடுகளும் எதோவோர் அடிப்படையில் உதவிகளை இலங்கைக்கு வழங்கிவருகின்றன. ஆனால் எதிர்க்கட்சிகள் தமது அரசியல் அபிலாசைகளோடு அரசாங்கத்தின் மீது சதிக்கோட்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன. இக்கட்டுரை பேரிடர் சூழலிலும் எதிர்க்கட்சிகளின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முன் வைக்கப்படுகிறது.

பேரிடரின் போது இலங்கை தீவில் உள்ள ஒவ்வொரு பிரஜை கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் பேரிடர் துயரத்துக்கு உட்பட்டு மக்களை அவர்களது வாழ்கையை மனிததாபிமான ரீதியில் அணுகுதல் அவசியமானது. அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற பணிகளோடு இணைந்து அல்லது தனித்துவமாக அரசுசார்பற்ற நிறுவனங்கள் அரச அலுவலகங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டிய காலமாக உள்ளது. ஒவ்வொரு இடர்களின் போதும் இன மத பேதமின்றி பங்கெடுக்கின்ற மரபை இலங்கை தீவில் அனைத்து மக்களும் வெளிப்படுத்துவது அவசியம். சுனாமியின் போது விடுதலை புலிகளும் இராணுவமும் இணைந்து மீட்புப் பணியை மேற்கொண்டது போன்று பாகிஸ்தானும் இந்தியாவும் அனைத்து பகைமைகளையும் கைவிட்டு விட்டு மீட்புப் பணிகளில் இரு தரப்பும் ஈடுபட்டு வருகின்றன. இதனை விட புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம் வேறு எதுவும் இல்லை. எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை புரிதலுக்காக விபரமாக நோக்குவது அவசியமானதாக உள்ளது.

முதலாவது இலங்கை தீவின் எதிர்க்கட்சிகளுக்கு என ஒரு மரபு உண்டு. ஆளுங்கட்சியை எந்த நிலையிலும் எதிர்ப்பதை தவிர வேறு எத்தகைய கொள்கையும் எதிர்க்கட்சிகளிடம் இல்லை என்பது கடந்த கால வரலாற்றில் நிதர்சனமாகும். பேரிடரின் போதும் அரசாங்கம் மற்றும் அரச நிர்வாகம் எதிர்கொண்ட நெருக்கடிகளை குறை கூறுவது எதிர்க்கட்சிகளின் அரசியலாக தெரிகின்றது. இதனூடாக அரசாங்கத்தை விட தமது கட்சியும் தமது தலைமையும் பலமானது என்பதையும் ஆளுகைத்திறன் கொண்டது என்பதையும் வாக்காளர் மத்தியில் நிறுவுவதற்கு போராடுகின்றனர். அடிப்படையில் பலவீனமான நிர்வாக கட்டமைப்பு அதன் அணுகுமுறைகளின் தோல்விக்கு காரணமாகும். எதிர்க்கட்சிகளுக்கும் கடந்த காலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் போது அவர்கள் பின்பற்றிய அணுகுமுறைக்கும் அடிப்படையானது நிர்வாக கட்டமைப்பின் பலவீனமாகும். ஆரச கட்டமைப்பு அனைத்தும் காலம் காலமாக பலவீனமானதாகவே காணப்படுகிறது. அதற்கு அனைத்துக் கட்சிகளும் பொறுப்பானவர்கள் என்பதை மறுக்க முடியாது.

இரண்டாவது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்குமாறு ஜே.வி.பி அரசாங்கத்திடம் கோரிக்கை முன் வைத்திருப்பது பேரிடரின் போது மேற்கொள்ளக்கூடிய ஒரு விடயமா என்ற கேள்வி எழுகிறது. இலங்கை தீவின் அரசியலில் ஆட்சிமுறை கைமாற்;றுவது வழிமுறை எது என்பது எதிர்க்கட்சித் தலைமைக்கு தெரியாதது ஒன்றில்லை. மக்களாக ஆட்சியை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படையுங்கள் என்ற கோரிக்கை விடுவதும் நாகரீகமான அரசியலின் அடையாளம். அத்தகைய அளவுக்கு எதிர்க்கட்சித் தலைமையும் எதிர்க்கட்சிகளும் பேரிடரில் தமது பங்கை வெளிப்படுத்தவில்லை என்பது தெரிந்த விடயமே. அரசாங்கம் மீது போலித்தனமான உரையாடலை முன்வைப்பதை தவிர வேறு ஆரோக்கியமான பணிகளை மேற்கொண்டதாக தகவல் இல்லை.

மூன்றாவது அரசாங்கம் முன் வைத்திருக்கும் வரவு செலவுத் திட்டத்தை மீளப் பெற்று பேரிடருக்கு அமைவான வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்குமாறு கூட்டாக எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது சுனாமி அழிவின் போது சுனாமி நிதி கையாடப்பட்டதை நினைவு கொள்ள வைக்கிறது. குறிப்பாக 500 மில்லியன் அ.டொ. நிதி மோசடி மேற்கொண்டதாக தகவல் உண்டு. சர்வதேச மட்டத்தில் வழங்கப்பட்ட நிதியின் கையாடல் நிகழ்ந்ததாகவும்; அப்போது ஆட்சியிலிருந்த அரசியல் கட்சிகளே வரவு செலத் திட்டத்தை மீள முன்வைக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளன. வேண்டுமாயின் பேரிடருக்கு தேவையான நிதியினை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க கோருவதென்பது நியாயமான கோரிக்கை. ஆனால் முழுமையாக வரவு செலவுத் திட்டத்தை மீள்மைப்பது என்பது அரச நிர்வாக அமைப்பு முறைக்கு ஆட்சி அதிகார முறைக்கும் அரசியல் யாப்புக்கும் முற்றிலுமே முரண்பட்ட ஒன்றாக உள்ளது. சுனாமி பொதுக் கட்டமைப்பை நிராகரித்த ஜே.வி.பி.இனர் என்பதற்காக இன்றைய பேரடரில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை மறுத்து விட முடியாது. அதனால் எதிர்கட்சிகளின் உள்நோக்கம் ஆளும் தரப்பிற்கு நெருக்கடியை கொடுத்து ஆட்சியை பிடுங்கி மீண்டும் ஊழல் பெருச்சாளிகளை இலங்கை தீவில் கட்டி எழுப்ப எதிர்க்கட்சியின்; கூட்டு முனைகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

நான்காவது எதிர்க்கட்சிகள் வரிசையில் அங்கத்துவம் பெற்றிருக்கின்ற தரப்புகள் அரசாங்கம் படுகொலை செய்திருப்பதாகவும் அழிவுகளுக்கும் சிதைவுகளுக்கும் அரசாங்கமே பொறுப்பு என வலுவான சதிக்கோட்பாட்டை கட்டமைக்கின்றன. இயற்கை அனர்த்தத்தை அரசாங்கம் தடுத்திருக்கலாம் என்ற எதிர்கட்சிகளின் எண்ணம் அறிவியல் ரீதியில் எப்படியானதென்பது வாசகர்களுக்கு நன்கு தெரியும். அத்தகைய எண்ணங்களின் பிரகாரம் அதிகாரத்தின் மீது எதிர்கட்சிகள் கொண்டிருக்கும் இலக்கு என்பதை விட இலங்கை தீவின் பேரிடரின் போது பாதிக்கப்பட்ட மக்கள் மீது கொண்டிருக்கின்ற புரிதலையே பிரதிபலிக்கிறது. அடிப்படையில் முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதமான முகாந்திரமும் இல்லாத சூழலில் அரசாங்கத்தை நிராகரிக்க முயல்வதாகவே தெரிகிறது. இலங்கையின் வரலாறு முழுவதும் கட்சிகளின் இயலாமையும் பேரிடரை புரிந்து கொள்ள முடியாததன் பிரதிபலிப்பாகவே தெரிகின்றது.

ஐந்தாவது சுனாமியின் சிதைவின் போது சர்வதேச நாடுகள் வழங்கிய பாரிய நிதியினை அப்போது ஆட்சியில் இருந்த சுந்தர கட்சியினர் பின்னர் பொதுஜன பெரமுனவினை கட்டியவர்களும் மேற்கொண்ட ஊழல் நடவடிக்கைகள் இலங்கை தீவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே நன்கு தெரிந்த அம்சமாகும். பல ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகளுக்கு பின்னால் சுனாமி நிதியத்தின் ஊழல் வெளியானதென்பது கவனத்திற்குரியதாகும். அத்தகைய ஒரு நடவடிக்கை தற்போது மேற்கொள்ள முடியாமல் உள்ளது என எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாக கருதுகின்றனர். அதில் தமிழ் சிங்கள வேறுபாடு எதுவும் இல்லாதாக உள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வுகளையும் தீர்மானங்களையும் முன்னெடுக்கும் போது அவற்றை குழப்புவதில் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு முகம் இருந்தது. அதே முகம் பேருடரிலும் காணப்படுகிறது.

எனவே இலங்கைத் தீவின் அரசியலின் எதிர்கட்சிகளின் அணுகுமுறை மோசமான பேரிடரின் போதும் அரசியல் செய்வதாகவே காணப்படுகிறது. இவ்வகை அணுகுமுறையையே இலங்கை தீவில் இன பிரச்சனைக்கான தீர்விலும் நடைமுறையிலும் காணப்படுகிறது. அனைத்துமே அரசியலாக எதிர்கட்சிகள் வடிவமைக்கின்றனர். கட்சிகளும் கட்சிகளின் தலைமைகளுக்கும் நலன்களை மட்டுமே இலக்காக கொண்டுள்ளனர். அதிகாரத்தை கைப்பற்றுகின்ற நடைமுறை மடடுமே எதிர்கட்சிகளின் இலக்காகவுள்ளது. மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்தை பிடித்த பிற்பாடு ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் பிற இனங்கள் மீது ஆக்கிரமிப்புகளையும் அரசியல் கட்சிகளை நிகழ்த்துபவையாக உள்ளன. இலங்கை தீவில் இருக்கும் எந்த கட்சியும் ஏனைய இனத்தின் மீதும் அவர்களின் பண்பாட்டின் மீதும் அவர்களின் துயரத்தின் மீதும் பங்கெடுப்பதில்லை. மாறாக அத்தகைய துயரத்தை அரசியல் ஆக்குவது மட்டுமே வரலாறு முழுவதும் நிகழ்ந்து முடிந்திருக்கின்றது. இதற்கு இன்னேர் அடையாளத்தை பேரிடரில் எதிர்கட்சிகள் ஏற்படுத்தி இருக்கின்றன. இதில் தமிழ் கட்சிகளும் விதிவிலக்கு கிடையாது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)