அரசியல் கட்டுரைகள்

புதிய அரசாங்கத்தின் தோற்றமும் மாற்றத்தின் போலிகளும்?

இலங்கை தீவின் அரசியலில் மாற்றங்களுக்கான வாய்ப்புகள் அருகி செல்வதாகவே தென்னிலங்கை மக்கள் மட்டுமல்ல வட கிழக்கு தமிழர்களும் கருதுகின்ற நிலை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அண்மைக் காலத்தில் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையும் சுதந்திர தினத்தின் போது அவரது உரையாடலும் அதிக முரண்பாட்டை வெளிப்படுத்தி நிற்கிறது. குறிப்பாக புதிய அரசியல் அமைப்புக்கான வாய்ப்புகள், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பிலான உரையாடல்கள், மற்றும்  மாகாண சபை முறைமைக்கான அடிப்படை அரசியல் அமைப்பு திருத்தங்கள் தொடர்பில் அதிக குழப்பங்கள் புதிய அரசாங்கத்திடம் காணப்படுகின்றது. வடக்கில் அதிகமான இளைஞர்கள் புதிய அரசாங்கத்தின் மீதும் அதன் கட்சியின் மீதும் அதீத நம்பிக்கை வைத்து செயல்படுகின்றனர். அத்தகைய இளைஞர்கள் அடிப்படையானதும் எதார்த்தமானதுமான அம்சங்களை பற்றி கேள்வி எழுப்பாமல் அதன் மீது நம்பிக்கை வைக்கும் நிலை அதிகரித்து வருகிறது. இக்கட்டுரையும் இலங்கையின் ஜனாதிபதி அநுர குமாரதிசநாயக்காவின் உரையாடல்களில் காணப்படும் எதிர்முரணியப் போக்கினை தேடுவதாக அமைய உள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு வருகை (01.02.2025) தந்த ஜனாதிபதி வல்வெட்டி துறையில் மக்களுடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார். சந்திப்பில் அவர் உரையாற்றுகிற போது இலங்கை தீவின் ஒருமைப்பாடு, ஊழல் எதிர்ப்பு, சமாதானமான செயல்பாடு  மற்றும் சமத்துவம் சார்ந்த அம்சங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார். கடந்த காலங்களில் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் அரசியல் ரீதியில் சமத்துவமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததோடு ஊழல் வாதிகளை அடையாளப்படுத்தியிருந்தார். அவரது உரை முன்னேற்றகரமான ஆரோக்கியமான புதிய எண்ணத்தை தெரிவிப்பதாக காணப்பட்டது. அவ்வாறே 77வது சுதந்திர தினத்திலும் இலங்கை தீவின் மறுமலர்ச்சி பற்றியும் பொருளாதார கலாச்சார தனித்துவம் பற்றியும் அதற்கான அடிப்படையை எல்லோரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்பதையும் கோடிட்டு காட்டியிருந்தார் அவரது அத்தகைய உரையும் யதார்த்தரமான சில நியமங்களை வெளிப்படுத்துவது போன்று அமைந்திருந்தது. அவர் முன்வைத்த அம்சங்களை உள்ளார்ந்த அர்த்தங்களைக் கடந்து வடகிழக்கு தமிழ் மக்களின் எண்ணமும் அது சார்ந்த எதிர்பார்க்கையும் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அடையாளப்படுத்துவது அவசியமானது.

முதலாவது ஊழல் ஒழிப்பானது இலங்கைத் தீவின் அரசியலில் ஆழமான பொருளாதார நெருக்கடியையும் வறுமையையும் உருவாக்கியது என்பது எதார்த்தமான. ஆனால் அத்தகைய ஊழல் வடகிழக்கு மீதான போரின் அடையாளம் என்பதை கடந்த ஆட்சியாளர்கள் போன்று புதிய ஆட்சியாளர்களும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறனார். ஊழல்வாதிகளை வேட்டையாடும் புதிய அரசாங்கம் ஊழலுக்குப் பின்னால் இருக்கும் போரை போரின் வடுக்களை தீர்க்க வேண்டிய பொறுப்பாண்மையை அது தொடர்பிலான கரிசனையும் கவனத்தில் கொள்ள தவறுகிறது. போருக்கு அனுசரணை வழங்கி போரை ஊக்குவித்த ஒவ்வொருவரும் ஊடலுக்குப் பின்னால் இருக்கும் ஊழல் வாதிகளின் பட்டியலில் அங்கம் பெறும் தரப்புகள் என்பதே மறக்க முடியாது. ஊழல்வாதிகளை வேட்டையாடுவது போன்றே தமிழ் மக்கள் மீதான போரையும் அழிவுகளையும் படுகொலைகளையும் நிகழ்த்தியவர்களை அடையாளப்படுத்துவதும் அவர்களுக்கு தண்டனை வழங்குவதும் புதிய அரசாங்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக அமைந்திருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத விடயமாகும். அத்தகைய சூழலில் சமாதானத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும் சாத்தியமாக்க முடியும். அதன் அடிப்படையில் இலங்கைத் தீவின் சமாதானத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துகின்ற தேவைப்பாடு பொருளாதார வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் அவசியமானது. எவ்வாறு ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்படுகிறதோ அவ்வாறே தமிழ் மக்கள் மீதான போரை நிகழ்த்தியவர்களையும் போருக்கான திட்டமிடல்களை முன் வைத்தவர்களையும் புதிய அரசாங்கம் அடையாளம் காட்டுவதோடு அவர்களை தண்டிப்பதற்கு முன்வர வேண்டும். அத்தகைய நிலை ஏற்படுமாக இருந்தால் ஒன்றிணைவும் சமாதானமும் சாத்தியமானதாகும்.

இரண்டாவது சமத்துவம் பற்றிய உரையாடல் அதிகமாகவே புதிய அரசாங்கத்தின் வருகைக்குப் பின்னர் முன்வைக்கப்படுகிறது. சமத்துவம் என்பது வளங்களின் பங்கீட்டில் தொடங்கி மக்களின் அடிப்படை உணர்வுகளை மதிப்பதில் நிறைவு பெறுகிறது. அத்தகைய வாய்ப்பே இலங்கையில் இருக்கும் அனைத்து இனங்களையும் மத மொழி கூறுகளையும் சமமானதாக மதிக்க வைப்பதுடன் பொருளாதார சமத்துவம் கலாச்சார மற்றும் அடையாளங்களின் சமத்துவம் ஏற்றுக் கொள்ளப்படும். அவ்வகை சமத்துவத்தை முன்னிறுத்திய உலகளாவிய ரீதியில் சமத்துவம் கட்டமைக்கப்பட்டது. இங்கே வள பங்கீடும் சமவாய்ப்புகளும் முதன்மையானது. அத்தகைய வாய்ப்புகளை நோக்கி இலங்கைத் தீவின் சமத்துவம் கட்டமைக்கப்படுமாக இருந்தால் அது பலவீனமான விளைவை ஏற்படுத்தும். சமத்துவமாக இருத்தல் என்பது அடிமையாக இருத்தலுக்கு ஒப்பானது இல்லை. அடிமை ஒழிக்கப்பட வேண்டுமாயின் தென்னிலங்கை மக்களுக்கு இருக்கும் அதே உரிமையும் சுதந்திரமும் விடுதலையும் தமிழ் மக்களுக்கு இருத்தல் வேண்டும். அதனை விடுத்து இவ்வாறு இருத்தல் இவ்வாறு செயல்படுதல் இதற்கு கட்டுப்படுதல் என வரையறை இடப்படுகின்ற போது சுதந்திரமும் விடுதலையும் ஒரு இனத்திடம் பறிக்கப்படுகின்ற நிலை ஏற்படும் அதுவே சமத்துவத்தை இல்லாமல் செய்துவிடும்.

மூன்றாவது பொருளாதார வளர்ச்சியில் இலங்கைத்தீவின் மறுமலர்ச்சி பற்றி உரையாடப்படுகின்ற போது புதிய அரசியல் கலாச்சாரம் அவசியமானது என்ற விவாதம் மேல் எழுப்பப்படுகிறது. காரணம் பொருளாதாரத்தின் சிதைவென்பது அரசியல் கலாச்சாரத்தின் சிதைவினால் கட்டமைக்கப்பட்டது. அரசியல் கலாச்சாரம் வெறுமையான அம்சம் கிடையாது. அரசியல் கலாச்சாரம் அரசியல் பொருளாதரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டியது. அத்தகைய அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு இலங்கை தீவின் அரசியல் அமைப்பின் மட்டுமின்றி அதன் செயல் வடிவங்களில் கூட இல்லாது வெறுமையான மரபுகளை வைத்துக்கொண்டு பழக்க வழக்கங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அவற்றில் புதிய உறவுமுறைகளை கட்டி எழுப்புவதன் மூலம் அரசியல் பொருளாதரத்தை பலப்படுத்திவிட முடியாது. அரசியல் பொருளாதாரத்தை பலப்படுத்துதல் என்பது அரசியல் கலாச்சாரத்தின் செல்நெறியில் மாற்றங்கள் செய்வதன் ஊடாக சாத்தியப்பாடு அடையும். அதனை நோக்கி ஒரு சமூகத்தை கொண்டு செல்வது ஆரோக்கியமான வளர்ச்சியையும் செழிப்பையும் சாத்தியப்படுத்த முடியும். இலங்கை தீவின் பௌத்த கலாச்சாரம் இதர கலாச்சாரங்கள் மீது மேற்கொண்ட ஆதிக்கமும் ஆக்கிரமிப்புமே இலங்கை தீவின் கலாச்சார சிதைவுக்கு அடிப்படை காரணம் .அத்தகைய அரசியல் பௌத்த கலாச்சாரத்தை மாற்றத்துக்கு உள்ளாக்காமல் அவற்றை அவ்வாறு கட்டமைத்துக் கொண்டு அதற்குள் பிறகலாச்சாரங்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற விவாதிப்பது மாற்றமாக தெரியவில்லை. அது மறுமலர்ச்சி ஆனதும் இல்லை. மறுமலர்ச்சி என்பது ஐரோப்பிய மரபுகளில் கிரேக்க உரோம நாகரிகங்களில் அல்லது அறிவியல் முறையில் காணப்பட்ட சிறப்பான அம்சங்களை மீளவும் ஐரோப்பாவுக்குள் கொண்டு வருதல் என்பது ஐரோப்பிய மறுமலர்ச்சியின் அடிப்படை கருத்துருவாக்கமாக அமைந்திருந்தது. அத்தகைய மறுமலர்ச்சியை இலங்கைத் தீவில் மேற்கொள்வது என்பது அதிக குழப்பமான விவாதிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகவே தெரிகின்றது. இலங்கை தீவின் மறுமலர்ச்சி என்பது புனிதத்துவத்தின் அடையாளங்களைக் கொண்ட அம்சங்களை மீளமைப்கதாக அமைதல் வேண்டும். அதனைவிடுத்து தென் இலங்கையின் மரபுகளை  மீள அமைப்பதென்பது செழுமை யானதா? ஏன்ற பிரதான கேள்வி தவிர்க்க முடியாது. அவை இலங்கையில் மறுமலர்ச்சி என்பது அநகாரீக தர்மபாலாவை அல்லது மகாநாமரை அல்லது தேவநம்பியதீசனின் கால மரபுகளை  மீளக் கொண்டு வருவதா என்ற கேள்வி தவிர்க்க முடியாது. அவை எவையும் இலங்கை தீவின் செழிப்பையும் நாகரீகத்தையோ அறிவியல் உண்மைகளையும் முன்வைக்க தவறியது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.  அதுவே புதிய அரசாங்கத்தின் மறுமலர்ச்சியாக இருக்குமாயின் எதனையும் இலங்கை தீவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

எனவே புதிய ஆட்சியாளர்களும் புதிய ஆட்சி முறையும் வெளித் தோற்றத்தில் மாற்றங்களை பற்றிய உரையாடலை முன்வைக்கின்றது அன்றே அவற்றின் எதார்த்தத்தை அதனால் கண்டுகொள்ள முடியவில்லை. அது கட்டமைக்கும் அனைத்து அம்சங்களும் எதிர் முரணிய நியமங்கலையே காட்டுகிறது. இலங்கை தீவின் சமாதானத்துக்கான சமிச்சை ஒருமைப்பாட்டுக்கான உழைப்பு மறுமலர்ச்சிக்கான எண்ணம் என்பன மாற்றத்தின் அடிப்படையில் புதிய சிந்தனையின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட வேண்டும். அத்தகைய தோற்றப்ப்பாட்டை உருவாக்குவதற்கான அறிவியல் எண்ணமும் அதற்கான உழைப்பும் அவசியமானது. அறிவியல் உழைப்பில் இருந்தே புதிய இலங்கை தீவை கட்டி எழுப்ப முடியும். அதுவே இலங்கையின் அரசியலில் ஏற்படுத்தக்கூடிய செழுமையான வளர்ச்சியுடையதாகும். ஆதனால் இலங்கைதீவின் ஒன்றிணைவும் கூட்டுத்தன்மையும் ஒருமைப்பாடும் வலுவானதாக இருக்கும். அதனை நோக்கி புதிய ஆட்சி கட்டமைக்க தவறுகின்ற பட்சத்தில் எந்த மாற்றங்கள்தோன்றாது. அதன் அடிப்படைகள் மட்டுமே காட்சி பொருளாக அமையும். அத்தகைய காட்சி பொருளை நம்பும் தமிழ் சிங்கள இளம்சமூகம் மீளவும் விரக்தி நிலைக்குத் தள்ளப்படும். அது ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற விளைவுகள் பொறுத்தே இளைய சமூகத்தின் இருப்பு அமையும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)