இலங்கைத் தீவில் பிரத்தானிய கால குடியேற்றங்களில் குடியமர்த்தப்பட்ட மலையக மக்கள் கடந்த இருநூறு வருடமாக தனது வாழ்விடமாக மலையகத்தை கருதினர். அண்மைய இயற்கை பேரிடர் அவர்களின் வாழ்விடத்தின் மீது இருப்புசார்ந்த பாரிய சவாலை ஏட்படுத்தியது. அதிலிருந்து மீள்வதற்கு அவர்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவது பற்றியும் அது தொடர்பிலான உரையாடல்களும் அதிகமாக மேல் எழுந்திருக்கிறது. அவ்வகை நிலையில் மலையக மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவது தொடர்பில் ஏற்பட்டிருக்கும் கருத்திற்கு எழுக்கூடிய விளைவுகளை நோக்கி இக் கட்டுரை அமையவுள்ளது.
மலையக அரசியல்வாதிகளும் வடக்கு கிழக்கு அரசியல் தமிழ் அரசியல் வாதிகளும் பேரிடரை எதிர்கொண்டிருக்கும் மலையக மக்களை வடக்கு கிழக்கு குடியேற்றுவது பற்றி உடன்பாடான கருத்துக்களை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அதற்கான அழைப்புகளை முதன்மைப்படுத்தியும் உள்ளனர். அவ்வாறே மதத் தலைவர்களும் சமூக நலன் விரும்பிகளும் மனிதாபிமான அடிப்படையில் அந்த மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவது பற்றி தெளிவான உரையாடல்களை கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள். இத்தகைய மனிதாபிமான நடவடிக்கை என்பது அவசியமானதும் தவிர்க்க முடியாதுமாகும். ஆனால் எப்போதும் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளில் இருந்து அதற்கான தீர்வுகளை கட்டமைப்பதே அவசியமானது. விளைவுகளை கருத்தில் கொண்டே செயல்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற நியதிக்கு அமைவாக இப்பகுதி ஆழமாக உரையாடப்பட வேண்டிய அம்சமாக தெரிகின்றது.
முதலாவது மலையக மக்கள் நீண்ட இருபுக்கு பின்னர் தமது தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் முனைப்பு கொண்டவர்களாக காணப்படுகின்றது. இருநூறு வருடத்தை நிறைவு செய்கின்ற போது மலையக மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை அரசியல் தளத்தில் மட்டுமல்ல சமூக பொருளாதார பண்பாட்டு அடையாளங்களிலும் உத்தரவாதப்படுத்தியிருந்தனர். அதற்கான அடிப்படை ஒரு தேசிய இனத்தின் அடையாளம் என்பது அவர்களின் வாழ்விடம்(நிலம்) மொழி பண்பாடு மற்றும் பொருளாதாரம் போன்ற மூலக்கூறுகள் பிரதானமான அம்சமாக உள்ளன. அத்தகைய அம்சங்களை தாங்கிக் கொண்ட ஓர் இனத்தின் அடையாளத்தை பெறுகின்ற போதே தேசிய இனத்திற்கான தனித்துவத்தை பெற முடியும். அத்தகைய எழுச்சியை பாதுகாக்க வேண்டிய காலப்பகுதியில் மலையக மக்கள் காணப்படுகின்றனர். வடக்கு கிழக்கு தமிழர்களின் மொழியாகிய தமிழை அவர்கள் பேசிக்கொண்டாலும் அடிப்படையில் அவர்களது பழக்க வழக்கங்களும் வாழ்வியல் முறையும் ஒப்புட்டு அடிப்படையில் தனித்துவமானவையாகவே காணப்படுகின்றன.
இரண்டாவது இயற்கை பேரிடர் என்பது உலகில் உள்ள எல்லா இடங்களிலும் நிகழ்ந்து வருகின்றதென்பது பொதுவான விடயமாகும். அதனை கருத்தில் கொண்டு ஒரு இனத்தின் வாழ்விடத்தையும் அதன் பண்பாட்டு முறைகளையும் முற்றாகவே அகற்றுவது என்பது அந்த இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் காணாமல் செய்வதற்கான செய்முறையாகவே பார்க்கப்பட வேண்டும். இயற்கை பேரிடர்கள் தோன்றுகின்ற போதெல்லாம் இடம் பெயர்வதும் புதிய இடங்களை நோக்கி குடிபெயர்வதும் புராதன காலத்தில் வேண்டுமாயின் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் அது தற்போது அந்த இனத்தின் வாழ்விடத்தை இழப்பதன் மூலம் அதன் அடையாளத்தின் அங்கங்கள் வலிமை அற்றுப் போக வழிவகுக்கும். தமிழ் மொழி ஒன்றை பேசுவதற்காக அவர்கள் ஈழத்தமிழர்களாகிவிடவோ அல்லது ஈழத்தமிழர் அடையாளமாகி விடவோ முடியாது. முஸ்லிம்கள் அவ்வகையான அடையாளத்தை தமக்குள் முன்னிறுத்தி உள்ளனர். ஒரு போதும் அவர்கள் தமது மத அடையாளத்தை விட்டு தமிழர் என்ற அடையாளத்திற்குள் நுழைய தயாராகவில்லை. எனவே காலநிலையினால் பேரிடர் நிகழ்ந்ததற்காக அவர்களது அடிப்படையானதும் மூலாதாரமானதுமான நிலத்திலிருந்து அகற்றுவது என்பது அவர்களின் தேசிய அடையாளத்தை அகற்றுவதற்கு ஒப்பானதாகும்.
மூன்றாவது மலையக மக்களின் துயரத்துக்கான மனிதாபமான நடவடிக்கை அவசியம் என்பது நிராகரிக்கக் கூடிய ஒன்று அல்ல. ஆனால் அத்தகைய மனிதாபமான உதவிகளை அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் அவர்களின் குடியிருப்பு முறைகளில் வாழ்விடங்களில் மாற்றத்துக்கு உள்ளாக்குவதே அவர்களின் அடையாளத்துடனான மனிதாபிமான செய்முறையாக காணப்படும். அந்த மக்கள் தங்களது விருப்புக்கு ஏற்ற வகையில் அவர்களை அணுகுவதும் அவர்களுக்கான தீர்வுகளை வழங்குவதும் அவர்கள் சார்ந்த விடயமாகவே நோக்கப்பட வேண்டும். மனிதாபிமான உதவி என்பது அவர்களின் தேசிய இருப்பையோ அடையாளத்தையோ அழித்து விடுவதில்லை. வடக்கு கிழக்கு என்பது ஈழத்தமிழரின் தாயகம் என்ற மரபார்ந்த உரையாடலுக்குள் அவர்களது தேசிய அடையாளம் கரைந்து போவதற்கான வாய்ப்பு அதிகம் நிலவுகிறது. ஏற்கனவே 1977 ஆம் ஆண்டு 1983 ஆம் ஆண்டு நிகழ்ந்த இன கலவரங்களின் போது குடியேற்றப்பட்ட மலையக மக்கள் ஈழத்தமிழர்களாகவே அடையாளப்படுத்தப்படுகின்றனர். அவ்வாறன்றி சில பிரதேசங்களில் கூட்டாக மலையாகத் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களது வாழ்விடம் அரசியல் உரிமை பொருளாதார உரிமை என்பது இரண்டாம் பட்சமானதாகவே தெரிகிறது. எனவே அத்தகைய ஒரு நிலையை மீளவும் மனிதாபிமான உதவி என்று அடிப்படையில் செயல்படுத்துவது தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படும் ஈழத்தமிழர்கள் மேற்கொள்ளக் கூடிய பணியாக தெரியவில்லை. ஒரு தேசிய இனம் இன்னுமொரு தேசிய இனத்தின் அடையாளத்தை அழிப்பதற்கு உதவுவதென்பது வரலாற்று ரீதியாக மோசமான செய்முறையாகவே தெரிகின்றது. எனவே அத்தகைய நடைமுறையை விடுத்து மலையகப் பிரவேசத்தில் வாழுகின்ற மத்திய தர வர்க்கத்தின் வாழ்வியல் முறைகளுக்கு ஏற்ற வகையில் சாதாரண மக்களது வாழ்வியல் முறையையும் கட்டமைக்க வேண்டிய பொறுப்பாண்மை அரசாங்கத்துக்கும் நலன் விரிம்புகளுக்கும் உரியதாகும்.
எனவே மலையக மக்கள் வடக்கு கிழக்கில் குடியமர்த்துவது என்பது மனிதாபிமான அடிப்படையில் சரியானதே. ஆனால் தேசிய அடையாளம் சார்ந்தும் இன மத மொழி அடையாளம் சார்ந்ததும் பொருத்தமானது அல்ல. அவர்களது அடையாளத்தை சிதைத்து விடுவதோ கரைத்து விடுவதோ நியாயமானதாக அமையாது. 15 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் 18 ஆம் நூற்றாண்டு அமெரிக்கா சொந்தமானது என பிரகடனப்படுத்த முடியும் எனில் மலையக மக்களும் மலையத்தில் ஒரு தேசிய இனமாகும் அடையாளத்துக்குரியவர்களாக வாழ்வதற்கு தகுதி உடையவர்களே. அதனைப் பலவீனப்படுத்துவது நியாயமானதாகாது. அவர்களது முடிபை அவர்களே முன்னெடுக்க விட்டுவிடுவதே ஈழத்தமிழர்களுக்கு பொருத்தமானது. ஈழத்தமிழர் தமது இருப்பையும் நிலத்தையும் பாதுகாக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குள் வாழ்கின்றனர்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: யாழ் தினக்குரல்)
