ரஷ்சிய-உக்ரையின் போர் பாரிய மாற்றங்களை உலகளாவிய போரியல் அணுகுமுறையிலும் ஏற்படுத்தி வருகிறது. அரசியல் பொருளாதாரத்தை கடந்து இராணுவ உபாயங்களிலும் தந்திரோபாயங்களிலும் அதிக மாற்றங்களை உருவாக்கிவருகிறது. அத்தகைய மாற்றங்கள் உக்ரையினையும் ரஷ்சியாவையும் மட்டுமல்ல பிராந்தியங்களைக் கடந்தும் நிகழ்கிறது. ஏவகணைகள், ஆளில்லா விமானங்கள், வாடகைக்கு அமர்த்தப்படும் போராட்டக் குழுக்கள் என ரஷ்சிய-உக்ரையின் களம் போரியல் மாற்றங்களை அறிமுகப்படுத்தியும் அடைவுகளை எதிர் கொண்டும் உள்ளது. எஸ்.ரி.எப். என அழைக்கப்படும் அணிகளது போர்க்களமாகவே உக்ரையின் போர்க்களம் காணப்படுகிறது. அதனை நேட்டோ அணியும் பதிலுக்கு ரஷ்சியாவும் அத்தகைய அணிகளை மையப்படுத்தியே போரை நகர்த்துகின்றன. இதில் அண்மையில் ரஷ்சியாவையும் அந்நாட்டு ஜனாதிபதி புடினையும் அதிக நெருக்கடிக்குள்ளாக்கிய வாக்னர் குழுவினரது நடவடிக்கைகளும் அதன் பின்னாலுள்ள போரியல் பரிமானத்தையும் தேடுவதாகவே இக்கட்டுரை அமையவுள்ளது.
வாக்னர் தனியார் இராணுவ கம்பனியானது (Wagner private military company) 2014 ஆம் ஆண்டு ரஷ்சியாவில் தொடக்கப்பட்டது. இது ஆரம்பத்தில் 250 இராணுத்தைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்பத்திற்கு பின்னால் தற்போதைய ஜனாதிபதி புடினே காணப்பட்டதுடன் ரஷ்சியாவின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயல்படுவதெனவும் வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பாகவும் கட்டப்பட்டது. வாக்னர் தனியார் இராணுவம் 2023 வரை ரஷ்சிய இராணுவத்தின் ஆயுதங்களையும் வாகனங்களையும் ஏனைய உட்கட்டுமானங்களையுமே பயன்படுத்தியதாக தெரியவருகிறது. அண்மைய குழப்பம் நிகழும் வரை எத்தகைய கருத்தியலும் கொண்டிராத அமைப்பாகவே இயங்கியது. இதன் ஸ்தாபகராக Dmitry Utkin (Wagner) and Yevgeny Prigozhin ஆகியோர் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பீற்ரஸ்பேக்ககை தலைமையகமாகக் கொண்ட இயங்கிய வாக்னர் அமைப்பு Blood, Honor,Homeland,Courage என்பதை மகுடவாக்கியமாகக் கொண்டு இயங்கியது. 2022 டிசம்பரில் ஏறக்குறைய ஐம்பதாயிரம் படைகளைக் கொண்டுள்ள அமைப்பாக காணப்படுகிறது. இதில் ரஷ்சியர்கள் மட்டமன்றி சிரியர்கள், லெபனானியர்கள், மற்றும் வேறு நாடுகளில் இயங்கும் தனியார் இராணுவ அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோரும் வாக்னர் படையணியில் உள்ளனர். மூன்று நாட்டு படையினரும் 21 வேறுநாடுகளில் இயங்கும் தனியார் இராணுவ பிரிவுகளின் உறுப்பினர்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் தாக்குதல் கிரிமியாவில் ஆரம்பித்தது. 2014 இல் இருந்து டொன்பாஸில் தாக்குதலை நிகழ்த்திவருகிறது. அத்துடன் சிரியாவில்North Aleppo(2016), Palmyra(2016), Campaign Hama(2017), Northwestern Syria(2017), Khasham Rif Dimashg(2017) ஆகிய பிரதேசங்களில் தற்காப்பு போர்களை மேற்கொண்டுள்ளது. இது மட்டுமல்லாது தென் சூடானியப்படைகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியமை, லிபியாவின் சிவில் போரில் லிபிய இராணுவத்துடன் இயங்கியமை, வெனுசுவெலா இராணுவத்திற்கு பயிற்சி வழங்கியமை மற்றும் மாலி இராணுவ நடவடிக்கைக்கு துணையாக செயல்பட்டமை என பல இராணுவ நகர்வுகளை உக்ரையின் போருக்கு முன்னர் மேற்கொண்டுள்ளது. அதனுடன் எஸ்தோனியா, லித்துவேனியா மற்றும் உக்ரையினில் பயங்கரவாத அமைப்பாகவும் செயல்பட்டுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் தனது அடையாளத்தை மாற்றிக் கொள்ளும் போக்கினை கொண்ட அமைப்பாகும். ரஷ்சியா உக்ரையின் மீதான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் போது பிரயோகித்த Z அடையாளத்தை வாக்னர் குழுவே பயன்படுத்தியுள்ளது. வாக்னர் குழு வேறுபட்ட சின்னங்களை மாறி மாறி பயன்படுத்தியுள்ளது. உக்ரையின் போரில் முன் அரங்ககளையும் எதிர் தாக்குதலை மேற்கொள்ளும் படையினராகவும் வாக்னர் குழுவே காணப்பட்டது.
இத்தகைய வலிமை படைத்த வாக்னர் குழுவினரது கிளர்ச்சி நடவடிக்கை மொஸ்கோவையும் ஜனாதிபதி புடினையும் அண்மைய வாரங்களில் நெருக்கடிக்கு தள்ளியது. ஆனால் அத்தகைய கிளர்சியானது சிறிது நேரத்திலேயே முடிபுக்கு வந்தது. வாக்னர் குழுவின் தலைமை பிறிகோசின் தனது முழுமையான படைகளுடன் வெளியேறியதாக தகவல் இல்லை என்றே தெரிகிறது. அப்படையின் கணிசமானவர்கள் தற்போதும் களத்தில் உள்ளதாகவே தெரியவருகிறது. அது மட்டுமன்றி தமது படைகளுக்கு போதிய ஆயுதங்கள் வழங்கப்படாமை மட்டுமன்றி அண்மைய வாரங்களில் வாக்னர் படையினருக்கு மேல் ரஷ்சிய இராணுவம் பாரிய தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டதாகவே கிளர்சிக் குழுவின் தலைமை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தது. இதுவே கிளர்ச்சிக்கான காரணம் எனவும் தெரியவருகிறது. ஆனால் இக்கிளர்ச்சியை சர்வதேச மயப்படுத்தியதில் மேற்குலக நாடுகள் வெற்றி கண்டுள்ளதாகவே கணிப்பிடப்படுகிறது. இக்குழுவினது கிளர்ச்சிக்கு உக்ரையினும் நேட்டோ நாடுகளும் காரணம் என குறிப்பிட்டாலும் அவற்றின் பங்களிப்பானது ஊடகப் போராகவே அமைந்துள்ளதைக் கண்டு கொள்ள முடிகிறது. அதாவது கிளர்ச்சி பற்றிய உரையாடல் வெளியான போதே மேற்குலக ஊடகங்கள் உசாரடைந்தனவே அன்றி இக்கிளர்ச்சியை திட்டமிடவில்லை என்பது அவர்களது முடிபிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. கிளர்ச்சிக் குழுக்களை தயார் செய்வதிலும் கிளர்ச்சியை நீடிப்பதிலும் நன்கு அனுபவமுடைய நேட்டோவும் அமெரிக்காவும் வாக்னர் குழுவை கையாளும் திறனற்றதாகவே காணப்பட்டுள்ளது என்பது அதன் முடிபிலிருந்து கண்டு கொள்ள முடிகிறது. அதற்கு காரணம் வாக்னர் முழுமையாக ரஷ;சியாவின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியுள்ளது. அதனால் ஒரு ஆர்ப்பாட்டம் செய்ய முடிந்ததே அன்றி அரசுக்கு எதிராக கிளர்ச்சியோ புரட்சியோ செய்ய முடியவில்லை. இதனை கிளர்ச்சியாகவோ புரட்சியாகவோ கொள்ள முடியாதுள்ளது. குறைந்தபட்சம் ரஷ்சிய இராணுவத்திற்குள் ஒரு கலகத்தைக் கூட அவர்களால் முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் இத்தகைய குழப்பத்தினால் நேட்டோவுக்கும் உக்ரையினுக்கும் அமெரிக்காவுக்கும் சாதகமான விளைவுகள் இராணுவ ரீதியில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அவ்வாறே ரஷ்சியாவுக்கும் புடினுக்கும் வாக்னர் நகர்வு விளைவுகளைத் தந்துள்ளது. அவற்றை விரிவாக நோக்குவது அவசியம்.
ஒன்று, ரஷ்சியாவின் போர் முன்னரங்கிலிருந்து பலமான போர் படையொன்று அகற்றப்பட்டுள்ளது. அத்தகைய படையே ரஷ்சியப் படைகளுக்கு உதவியதுடன் உக்ரையின் நிலப்பரப்பினை நோக்கிய கைப்பற்றல் நகர்வுகளை ரஷ்சிய இராணுவத்துடன் சேர்ந்து சாத்தியப்படுத்தியது. உக்ரையினுடனான போரில் அதிக இழப்பீடுகளை உக்ரையின் படைகளுக்கு களத்தில் ஏற்படுத்திய ரஷ்சியப் படைகளுக்கு உதவியது மட்டுமல்லாது பயங்கரவாத செயல்களிலும்’ ஈடுபட்டு அழிவுகளையும் படுகொலைகளையும் உக்ரையின் மக்கள் மீது நிகழ்த்தியதாக தகவல்கள் உண்டு. வாக்னர் பிரிவு ரஷ்சிய இராணுவத்துடன் இணைந்து களத்தில் போர்புரிந்தது ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் தமது தனித்தை போர்க் களத்தில் வெளிப்படுத்தவும் தவறவில்லை. அதனால் கைப்பற்றப்படும் பகுதிகளை பாதுகாப்பதும் மேலதிகமான நகர்வுகளை மேற்கொள்வதிலுமே ரஷ்சிய இராணுவம் அதிக கவனம் கொள்ள வேண்டிய நிலை தவிர்க்க முடியாது ரஷ்சிய இராணுவத்திற்கு ஏற்பட்டிருந்தது. இத்தகைய திறனுடைய தனியார் படையணியொன்றினை மேற்குலகம் களத்திலிருந்து அகற்றியுள்ளது.
இரண்டு, வாக்னர் குழுவின் வெளியேற்றம் ரஷ்சிய இராணுவத்திற்கு உளவியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு உள்ளாதாக தெரிகிறது. அதனை மேற்குலகம் திட்டமிட்டு மேலும் பலப்படுத்துவதாகவே காணப்படுகிறது. தொடர்ச்சியாக ரஷ்சிய மக்களையும் இராணுவத்தையும் குழப்பும் செய்திகளை வெளியிட்டுவருகிறது. உக்ரையினும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து ரஷ்சிய இராணுவத்தை குழப்பும் செய்திகளை தெரிவித்துவருகிறது. உலகளாவிய ஊடகப் பலத்தை கட்டுப்பாட்டில் கொண்டுள்ள மேற்குலகம் அதனை இலகுவில் கையாளும் திறனை கொண்டு செயல்பட்டுவருகிறது. ஆனால் இத்தகைய வலிமை கொண்ட மேற்குலகம் வாக்னர் குழுவை சரியாக பயன்படுத்த முடியவில்லை என்பதே வாக்னர் குழுவுடன் அது கொண்டுள்ள உறவை புரிந்து கொள்ள முடியும்.
மூன்று, வாக்னர் கிளர்ச்சியின் முடிபினைப் பார்க்கும் போது திட்டமிட்டது பலவீனமானதாகவோ அல்லது திட்டமிட்டவர்கள் புடினது ஆட்சிக்குள் இருந்தா என்ற சந்தேகத்தை தருகிறது. அதாவது திட்டமிட்டவர்கள் பின்வாங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. அது மட்டுமல்லாது ரஷ்சியாவால் உருவான வாக்னர் குழுவானது ரஷ்சியாவின் சட்டதிட்டத்திற்குள்ளும் ரஷ்சிய ஆயுத தளபாடங்களிலுமே கட்டுபட்டிருந்தது. அது மட்டுமல்லாது ரஷ்சிய இராணுவத்தின் கட்டுபாட்டுக்குள்ளேயே இயங்கியது. அதனால் வாக்னர் குழுவின் எல்லை மிக சுருங்கியது. தற்போது அக்குழுவின் தலைமை மாற்றப்படுவதாகவும் அதில் வேறு நாட்டு இளைஞர்கள் இணைவதாகவும் தெரியவருகிறது. வாக்னர் குழுவின் தலைமையும் அதன் படைப்பிரிவும் பெலாரஸ்ல் ரஷ்சிய இராணுவத்தின் கண்காணிப்பில் இருப்பதாகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரியவருகிறது.
நான்கு, வாக்னர் குழுவின் நடவடிக்கைகளை அரசியலாக்கியுள்ள ரஷ்சிய ஜனாதிபதி அடுத்தாண்டுத் தேர்தலுக்கு தயாராவது போல் நகர்வுகள் காணப்படுகின்றன. ரஷ்சிய மக்களது ஆதரவு புடினை நோக்கி நகர்வதாக பிபிசி செய்திச் சேவை குறிப்பிடுகிறது. மக்கள் மத்தியில் தோன்றுவது வெர்களுக்கு நன்றி தெரிவிப்பது மட்டுமல்லாது மேற்குலகத்தை கிளர்ச்சிக்கு அடிப்படையென குற்றம்சாட்டுவது என பலவிடயங்களை புடின் ஏற்படுத்திவருகிறார். இது சதி செயலெனவும் துரோகம் எனவும் சகோதரப்படு கொலையை மேற்குலகம் ரஷ்சியாவில் ஏற்படுத்த விளைவதாக புடின் பொதுவெளியில் உரையாடிவருகிறார். இவை அனைத்தும் 2024 வரவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான முதலீடாகவே பார்க்கப்படுகிறது. எப்போதும் ரஷ்சியர்கள் அமெரிக்காவின் எதிரிகளாகவே காட்டப்படுகிறார்கள். அது இருக்கும் வரை புடினது அதிகாரம் பாதுகாக்கப்படும். அமெரிக்காவே தம்மை வீழ்தியதென உணரும் ரஷ்சியர்கள் அதிகம். அதற்கு வலுவான நியாயப்பாடும் உண்டு. அதனால் அமெரிக்க எதிர்ப்பு அரசியல் ரஷ்சியாவின் ஆட்சியாளரைப் பாதுகாக்கும்.
எனவே வாக்னர் குழுவின் கிளர்ச்சிக்கான அணுகுமுறை மேற்குலகத்தைவிட புடினுக்கு அதிக வாய்ப்புக்களை கொடுத்துள்ளதாகவே தெரிகிறது. வாக்னர் குழுவின் நகர்வுக்கு பின்னர் உக்ரையின் போர்க்களமும் அதிக நெருக்கடியை எதிர்கொள்ளாத் தொடங்கியுள்ளது. மேற்குலகத்தின் ஊடகப்பிரச்சாரத்தைக் கடந்தும் ரஷ்சியாவின் இராணுவ நகர்வுகள் கைவிடப்பட்டதாக தெரியவில்லை. உலகம் தனியார் இராணுவ கம்பனிகளாலும் அதன் இராணுவ நடவடிக்கைகளாலும் இயங்கத் தொடங்கியுள்ள ஒரு போரியல் பரிமாணம் ஆரம்பித்துள்ளது. இதனை முதலில் தொடக்கியவர்கள் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் தங்கள் சகோதரர்களை பாதுகாப்பதற்காக இன்னோர் நாட்டு இராணுவத்துடன் இணைந்து போர் புரிந்தார்கள். அதனை இஸ்லாத்தில் புனிதப் போராக் அழைக்கப்பட்டது. இவ்வாறு நேட்டோவும் இஸ்லாமிய நாடுகளும் தனியார் இராணுவ கம்பனிகளை மையப்படுத்தி தமது போரியல் நகர்வுகளை மேற்கொண்டுவருகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
