February 8, 2026
அரசியல் கட்டுரைகள்

இலங்கைத் தீவின் அரசியல் கொதிநிலையும் எதிர்கட்சித் தலைவரின் இந்திய விஜயமும்?

இலங்கைத் தீவின் அரசியல் பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளின் தங்கியிருக்கும் நிலை இயல்பாகவே அதன் அமைவிடம் பொறுத்து காணப்படுகிறது. இலங்கைத் தீவின் நீண்ட வரலாறு ஆதிக்க சக்திகளின் ஆக்கிரமிப்புக்குள்ளும் செல்வாக்குக்குள்ளும் அகப்பட்டதோடு நவீன வரலாற்றிலும் அத்தகைய வல்லரசுகளின் செல்வாக்கும் காணப்படுகிறது. இலங்கை அரசியல் சுதந்திரமாக நகர்ந்ததாக வரலாற்றில் காண முடியாதுள்ளது. சமகாலத்திலும் அதிக மாற்றங்களுக்கான வாய்ப்புக்களை பிராந்திய, சர்வதேச சக்திகள் பிரியோகித்து வருகின்றன. அந்த வகைக்குள் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரை இந்தியா அழைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக நோக்கப்படுகிறது. இக்கட்டுரையும் இலங்கைத்தீவில் ஏற்பட்டு வரும் அரசியல் கொதிநிலைச் சூழல் மத்தியில் எதிர்கட்சித் தலைவரை இந்தியா அழைத்துள்ளமைபற்றி தேட முயல்கின்றது.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா புதுடெல்லிக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் இலங்கை அரசியலில் அதிகம் பேசப்படுகின்ற விடயமாக தெரிகிறது. ஜனாதிபதி அநுர குமாரதிஸநாயக்கா மற்றும் பிரதமர் ஹருணி அமரசூரிய போன்ற ஆட்சியாளர்களின் விஜயத்தை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவினால் அழைக்கப்படுகின்றார். அவரது விஜயம் அரசமுறை விஜயமாகவும் சம்பிரதாயபூர்வமான அழைப்பாகவும் கடந்து செல்ல முடியாதுள்ளது. அவ்வாறு ஊடக பரப்பு தகவல்கள் குறிப்பிட்டாலும் நடைமுறையில் இலங்கைத்தீவின் அரசியல் அதனை அவ்வாறு விளங்கிக் கொள்ள மறுக்கிறது. காரணம் இந்தியாவுடனான புவிசார் அரசியல் நெருக்கத்தினால் அதீதமான மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் மூலாதாரமாக விளங்குகிறது. கடந்த காலங்களிலும் இலங்கை தீவின் அரசியலில் இந்தியாவின் வகிபாகம் தவிர்க்க முடியாததாக காணப்பட்டது. இராமேஸ்வரம் தனுஷ்கோடி பகுதியில் தரித்திருக்கும் இலங்கையின் டயலாக் தொடர்பாடலை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்ற நெருக்கமான கடல்சார் எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கின்ற இரு நாடுகளும் அதிகமான நெருக்கத்தை பிரதிபலிக்கின்றன. அதன் அடிப்படையிலேயே சஜித் பிரேமதாசாவின் புதுடெல்லி அழைப்பை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அதன் முக்கியத்துவத்தை அவதானிப்பது அவசியமானது.

முதலாவது இலங்கை தீவின் தென்னிலங்கை அரசியல் சூழல் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவுக்கான முயற்சியினால் அதிக நெருக்கடியை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தக் கூடியதாக காணப்படுகிறது. அரசாங்கத்தின் சீன சார்பு கொள்கை வலுவடைந்து செல்கிறது. ஜே.வி.பி.க்கும் சீன கம்யூனிஸக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர் உடன்படிக்கை இந்தியாவை மௌனமாக நகர்வதற்கு வாய்ப்பை வழங்குமா என்பது பிரதான கேள்வியாகும். அத்தகைய சூழல் ஒன்றை இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இத்தகைய சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் இந்திய விஜயம் அது தொடர்பில் இந்தியாவின் கரிசனையை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பை கொடுத்திருக்கிறது. இது இந்தியா ஜே.வி.பி.க்கு கொடுக்கும் அழுத்தமாகக் கூட அமைய வாய்ப்புள்ளது. அடிப்படையில் ஜே.வி.பி.அரசாங்கத்தின் வருகைக்கும் அதன் ஆட்சி அதிகாரத்தின் நிலைத்திருப்புக்கும் பங்களிப்பு செய்த இந்தியா அழுத்தங்களை ஜே.வி.பி. மீது பிரயோகிப்பதிலும் கரிசனை கொள்ள தவறுவதில்லை என்பதை பல சந்தர்ப்பங்களில் கண்டுகொள்ள முடிந்தது. அத்தகைய நிழ்ச்சிநிரலாகவே சஜித் பிறேமதாஸாவிற்கான அழைப்பு அமைந்துள்ளது. ஜே.வி.பி.யின் அணுகுமுறைகள் இலங்கைத் தீவின் அரசியலுக்குள் மட்டுமன்றி பிராந்திய சர்வதேச அரசியலில் பெறக்கூடிய முக்கியத்துவத்தை கையாளுவதற்கு இந்தியா திட்டமிடுவதாக புரிந்து கொள்ள முடிகிறது. ஜே.வி.பி. இன் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவும் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக்குரிய சூழலகம் தென்னிலங்கை அரசியலை அதிகம் பீடித்துள்ளது. எதிர்க்கட்சிகளை நோக்கி அல்லது எதிர்க்கட்சி தலைவர்களின் நோக்கி இலங்கைக்கான இந்திய தூதுவரது சந்திப்புகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசங்ஹா உடனான இந்திய, சீன தூதுவர்களின் சந்திப்புகள் அவர்கள் வழங்கும் உத்தரவாதங்கள் அதிக முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. இந்தியாவும் சீனாவும் எதிர்க்கட்சிகளை கையாளுவதில் முனைப்பான போட்டிக்குள்ளும் முரண்பட்ட தளத்துக்குள்ளும் காணப்படுகின்றனர் என்பது அவர்களது சந்திப்புக்கு பின்னான அறிவிப்புகளில் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

இரண்டாவது இலங்கை தீவில் மீண்டும் ஒரு மக்கள் கிளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பை கொண்டிருப்பதாக தென்னிலங்கை ஊடகங்களின் ஆசிரியர் தலையங்கங்கள் வெளிப்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் அதிகப்படுத்துவதற்கான காரணத்தை மத்தியதர வர்க்கத்தின் மற்றும் உயர்தரவர்க்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடக பரப்புகள் பிரஸ்தாபித்து வருகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது போன்று ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பாசிச ஆட்சியை மேற்கொள்வதாகவும் ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆட்சி அதிகாரத்தை கையாள்வதாகவும் அரசியல் செய்வதாகவும் ஊடகங்களும் ஆசிரியர் தலையங்கங்களும் வெளிப்படுத்தி வருகின்றன. அவ்வாறெனின் தென்னிலங்கையின் அரசியல் சூழல் கொதிநிலைக்குரிய தயார்படுத்தலை முன்னெடுத்துச் செல்வதாக தெரிகின்றது. எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் அவற்றின் தலைமைகள் போட்டி போட்டுக் கொண்டு ஆட்சியை அதிகம் விமர்சனம் செய்கின்ற சூழலில் ஊடகங்களும் அதற்கான ஒத்துழைப்பை தீவிரப்படுத்துகிற போது மக்கள் ஆட்சிக்கு எதிரான எண்ணங்கள் முதன்மைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் தென்இலங்கையின் சூழல் அரசியல் கொதிநிலையை எதிர்கொண்டு காணப்படுகிறது. அண்மைய காலங்களில் முன்னால் ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்ஹாவின் கைது தொடர்பில் சர்வதேச நாடொன்றின் தூதரகத்தோடு ஆட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்க திட்டமிட்டதாக ஊடகபரப்பில் உரையாடப்பட்டிருந்தது. அதனால் தென்னிலங்கையின் அரசியல் சூழலில் மடகஸ்கரில் நிகழ்ந்துவரும் தற்போதைய போராட்டம் கடந்த காலங்களில் நேபாளத்திலும் வங்களாதேஷிலும் இலங்கையிலும் நிகழ்ந்தது போன்று மீளவும் இலங்கையில் ஓர் அரசியல் நெருக்கடிக்கான கொதிநிலையை தோற்றுவிப்பதற்கான சூழல் தென்படுகிறது.

எனவே எதிர்க்கட்சி தலைவரின் இந்திய விஜயம் தென்னிலங்கையின் எதிர்க்கட்சிகளின் கூட்டணிவுக்கான திட்டமிடலும் அதிக குழப்பத்தை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தக்கூடியது. ஆனால் ஆட்சியாளர்களும் அதனை கையாளுகின்ற முறைகளை அதிகம் பிரயோகப்படுத்தி வருகின்றனர். புதிய அரசியல் அமைப்புக்கான அல்லது முன்னை அரசியலமைப்புக்கான பின்னூட்டல்கள் உரையாடப்படுகின்ற சந்தர்ப்பமும் தென்,லங்கையின் கொதிநிலைச் சூழலை சாத்தியப்படுத்திவிடுமா என்ற குழப்பத்தை தருகின்றது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)