அரசியல் கட்டுரைகள்

அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளரது வருகையின் அரசியல்!

இலங்கையின் அரசியல் சர்வதேச சக்திகளின் தீர்மானங்களுக்குள்ளால் நகர்கிறது என்பதை இப்பகுதி அதிக தடவை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் இந்திய வெளியுறவுத் துறையின் அமைச்சரான ஜெய்சங்கரது வருகை முக்கிய உரையாடலாக அமைந்திருந்தது. அவ்வாறே சீன கம்யூனிஸக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களது வருகையும் உணரப்பட்டது. வல்லருசு நாடுகள் மட்டுமல்ல அந்நாடுகளது நட்புசக்திகளும் இலங்கை விடயத்தில் தலையீடு செய்யுமளவுக்கு உள் நாட்டு அரசியல் மாறியுள்ளது. மீளவும் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் விக்ரோரியா நூலண்ட் 01.02.2023 இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இக்கட்டுரையும் விக்ரோரிய நூலண்ட்ன் இலங்கை விஜயத்தின் முக்கியத்துவத்தை தேடுவதாக உள்ளது.

நூலண்டன் முதல் சந்திப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹாவுடன் நிகழ்துள்ளது. இச்சந்திப்பில் இலங்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்குமெனவும் சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுக்கள் தொடர்பில் தீர்வு எட்ட அமெரிக்கா உதவும் எனவும் உறுதியளித்துள்ளார். அதே நேரம் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா 13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை அமுல்படுத்துவது பற்றி ஏனைய கட்சிகளோடு உரையாடியது பற்றியும் நல்லிணங்கம் தொடர்பில் ஏற்பட்டுவரும் முன்னேற்றம் பற்றியும் தெளிவுபடுத்தினார். இருவரது உரையாடலும் சுமூகமாக அமைந்திருந்தது. இரு நாடுகளுக்குமான நெருக்கத்தை காட்டும் உடல் மொழியும் இராஜதந்திர அணுகுமுறையும் காணப்பட்டது. அரகளய போராட்டம் முதல் ரணில் விக்கிரமசிங்ஹாவின் ஜனாதிபதி பதவிவரையான அமெரிக்க நகர்வுகளின் உறுதிப்பாடு உரையாடலில் காணக்கூடியதாக அமைந்தது.

அமெரிக்காவின் நெருக்கமான நண்பன் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் நூலண்ட்ன் உரையாடல் அமைந்திருந்தது. வெதமுல்ல அரசியலின் எழுச்சியை முடிபுக்குக்கு கொண்டுவரும் அணுகுமுறையுடன் அமெரிக்காவின் இலங்கை அரசியல் காணப்படுகிறது. அதனூடாக சீனாவை இலங்கையிலிருந்து படிப்படியாக பலவீனப்படுத்தும் செய்முறை ஒன்றையும் அவதானிக்க முடிகிறது. அதற்கான நகர்வுகளாகவே கனடா நாட்டின் அண்மைய தடைகள் அமைந்திருந்தன. இன்னோர் அமெரிக்க ஆதரவுத்தளத்தைக் கொண்ட அரசியல் கட்சியை பதவியில் அமர்த்தும் வரை ரணில் விக்கிரமசிங்ஹாவின் தலைமையிலான ஆட்சியையே அமெரிக்கா அதிகம் பயன்படுத்திக் கொள்வதுடன் பாதுகாக்கவும் முனைகிறது. அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்கிரமசிங்ஹாவே அமெரிக்காவின் வேட்பாளராக உள்ளார். ஆனால் அவரது வெற்றி வாய்ப்பைப பொறுத்தே அத்தகைய முடிபை தொடர்வதா இல்லையா என அமெரிக்கா தீர்மானிக்கவும் வாய்ப்புள்ளது. எதுவானாலும் அடுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதியாக அமெரிக்கா ரணில்விக்கிரமசிங்ஹாவையே பதவியில் அமெர்த்த திட்டமிடுகிறது. அதற்கு அமைவாக தென் இலங்கையையும் வடக்கு கிழக்கையும் வைத்துக் கொள்ள முனைகிறது.

இரண்டாவது முக்கிய சந்திப்பாக தமிழ் -முஸ்லீம் கட்சியின் தலைவர்களுடனானதாக அமைந்திருந்தது. அதில் மலையக தமிழ் கட்சியினரும் கலந்து கொண்டனர். தமிழ்-முஸ்லீம் தரப்புடனான சந்திப்பில் காணிப்பிரச்சினை அரசியல் தீர்வு பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் உரையாடப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் இலங்கையை எப்படி மீளமைக்க அமெரிக்கா உதவ முடியும் எனவும் அதிகாரப் பகிர்வு நல்லிணங்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை விட தமிழ் -முஸ்லீம் கட்சிகளுடனான உரையாடலில் பலவிடயங்களை நூலண்ட் தெரிவித்ததாக தெரியவந்துள்ளது. அதாவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹாவுடன் ஒத்துழைக்குமாறும் அவரது ஆட்சியில் தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமாகும் என்பதுடன் ஏனைய தரப்புக்கும் தீர்வு கிடைக்கும் எனவும் நூலண்ட தெரிவித்துள்ளார். அவ்வாறே உடனடியாக பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமாவதென்பதை விட படிப்படியாக தீர்வு சாத்தியமாகும் எனவும் உடனடியாகப் பெறுவது தென் இலங்கை தீவிரசக்திகளை அல்லது இனவாதச் பலப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதனால் காலதாமதமாகவும் படிப்படியாகவும் பிணக்குகளுக்கு தீர்வு எட்டப்படும் என்பதை மறைமுகமாக நூலண்ட தெரிவித்துள்ளார். அவரது தென் இலங்கையில் தீவிரவாத சக்திகளாக வெதமுல்ல அரசியலை கோடிட்டுக் காட்டுவது போலவே தென்படுகிறது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள நூலன் மட்டுமல்ல இந்திய வெளியுறவு அமைச்சரும் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றியே உரையாடுகின்றனர். அதே போன்றே தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பதும் தமிழ் -முஸ்லீம் -மலையக கட்சிகளை ஒன்றிணைப்பதிலும் கவனம் கொள்கின்றனர். இலங்கையில் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க முயலும் இந்திய-அமெரிக்கத் தரப்புக்கள் இனப்பிரச்சினைக்கும் 13க்குள் தீர்வை எட்டிவிட முயலுவதை அவதானிக்கமுடிகிறது. இந்திய ஐக்கிய நாடுகள் சபையிலும் 13 ஆம் திருத்தத்தை இலங்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்திவருகிறது. ஏறக்குறை 13 ஐ தமிழரது அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக்க அமெரிக்க-இந்தியத் தரப்புக்கள் முயலுகின்றனர். ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள் 13 ஐ அரைகுறையாக அதாவது 13 இன் இன்றய வடிவத்தில் பிரச்சிரைனக்கு தீர்வாக்க விரும்’புகின்றன. அதே நேரம் தென் இலங்கை கடும்போக்குவாதிகள் 13 ஐ வழங்கினால் இன ஒருமைப்பாடு குலைந்துவிடும் எனவும் நாட்டை துண்டாக்கிவிடும் எனவும் கருதி எந்த தீர்வுமற்ற நிலைக்கு தமிழர்களை தள்ளிவிட முனைகின்றனர். இந்த சூழலில் தமிழ் தரப்பாக எந்த நகர்வும் மேற்கொண்டதாக தெரியவில்லை. மாறாக விக்ரோரியாவுடனான சந்திப்பின் பின்பான வெளிப்பாடுகளும் பதிவுகளும் உரையாடல் சுமூகமாக அமைந்ததாகவே தெரிகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட ஓரறிக்கையுடன் அமெரிக்க அரசியல் பிரதி இராஜாங்க செயலாளருடனா உரையாடலை நிறைவு செய்துள்ளது போல் தெரிகிறது. ஏனைய கட்சியின் தலைவர்கள் சந்திப்பில் நூலண்ட் தெரிவித்தததை ஊடகங்களுக்கு தெரிவித்ததாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.

ஒர் அரைகுறைத் தீர்வை நோக்கி தென் இலங்கை நகர முயலுகிறது. அதனையே அமெரிக்காவும் இந்தியாவும் வழிமொழிய முனைகின்றன. இந்த சூழலில் தமிழ் அரசியல் கட்சிகளாக மேற்கொள்ள வேண்டிய விடயங்களை மறந்து அமெரிக்காவினதும் இந்தியாவினதும் பேச்சாளர்களாக இருக்க முயலுகின்றனர். இதனை தமிழ் அரசியல் சமூகமாக எதிர் கொள்வதற்கான உத்திகளே தற்போது பொருத்தமானதாக அமைகிறது போல் தெரிகிறது. சிவில் அமைப்புக்கள் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் தமக்கிடையே மோதுவதும் அரசியல்கட்சிகளதும் வல்லரசுகளது ஊதுகுழலாக செயல்படுவதையும் கைவிட்டுவிட்டு தமிழ் மக்களுக்கு பொருத்தமானதும் சாத்தியமானதுமான தீர்வை நோக்கி நகர்வதை பற்றிய செயல்பாட்டில் இயங்குவது அவசியம். ரணில்விக்கிரமசிங்ஹாவின் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டியது மட்டுமன்றி எதிர்காலத்திலும் தக்க வைத்தல் அஅமெரிக்காவுக்கு தேவையானது என்பதை நூலண்ட தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரம் ரணில-மைத்திரி ஆட்சியின் போது குறிப்பிட்ட தீர்வை முழுமையாகவும் உடனடியாகவும் தமிழருக்கு வழங்கினால் தென் இலங்கையில் கடுங்கோட்பாட்டாளர்கள் தலைதூக்கிவிடுவார்கள் என்பதையும் உரையாடலில் வெளிப்படுத்தியுள்ளார். அப்படியானால் மீண்டும் அரைகுறைத் தீர்வுக்கு இழுபறி நிகழவுள்ளது என்பதை புலப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் உலகளாவிய நலனில் ஓரங்கமாகவே இலங்கை உள்ளது. அதனால் இலங்கையில் அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சியும் நலனும் பாதுகாக்கப்படுவதே அவசியமானது. அதற்கான நடவகெ;கைகளையே அமெரிக்க இராஜதந்திரிகளும் வெளியுறவுச் செயலாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை முழுமையாக கையாள வேண்டுமாயின் தமிழ் -முஸ்லீம்தரப்புக்கள் ஒன்று கூடி தெளிவான அணுகுமுறையை கொண்டு செயல்பட வேண்டும். தென் இலங்கை தற்போதைய காலத்தை கடந்தால் மீளவும் தீர்வு பற்றி உரையாடுவதற்கு ஒரு நெருக்கடி ஏற்பட வேண்டும். அதனால் தமிழ் முஸ்லீம் மலையக தரப்புக்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவது தேவையானது. அது அரசியல் கட்சிகளுக்கான அழைப்பல்ல. முழுமையான அரசியல் சமூகங்களுக்கான அழைப்பு. ஆனால் அதற்கான வாய்ப்பு ஏற்கனவே முடிபுக்குவந்த விடயம். தனித்தனியே ஒன்றிணைய முடியாதவர்கள் எவ்வாறு முழுமையாக திரட்சி பெறுவார்கள் என்பது தவிர்க்க முடியாத கேள்வியாகவே தெரியும். ஆனால் அதுவே தென் இலங்கையையும் அமெரிக்க-இந்திய நகர்வுகளை எதிர்கொள்ள ஒரே இலகுவான பொறிமுறையாகும். மலையகத் தமிழர் தமது சுயநிர்யத்தை பெறவும் முஸ்லீம்கள் தமக்குரிய சுயநிர்ணயத்தை அடையவும் ஈழத்தமிர் போன்று கோரிக்கை முன்வைத்துள்ளனர். அதனால் இத்கைய மூன்று தரப்புக்களது அரசியல் சமூகமானது இத்கைய திரட்சியை ஏற்படுத்த முடியும். அதில் ஓர் இணக்கப்பாட்டை எட்டிக் கொண்டு தீர்வை நோக்கி நகர முடியும். அது சாத்தியமற்றால் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்கள் ஒன்றிணைந்த கட்டமைப்பை ஏற்படுத்தி தெளிவான அரசியல் சமூகமாக இயங்குவதன் மூலம் இத்தகையநெருக்கடியை எதிர்கொள்ள முடியும். தற்போது உருவாகியிருப்பது தென் இலங்கைக்கான அரசியல் பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல ஏனைய தேசியங்களுக்குமுரிய நெருகடியாகவே தெரிகிறது. அதிலும் ஈழத்தமிழருக்கு பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது.

எனவே அமெரிக்க -இந்திய நகர்வகள் அனைத்தும் அந்த நாடுகளது அரசியல் இராணுவ நலன்கள் சார்ந்தது. இலங்கைத் தீவின் மீது எழுந்துள்ள வல்லரசுப் போட்டிக்குள்ளால் அந்நாடுகளது உரையாடல்கள் அமைந்துள்ளன. அது அந்த நாடுகளது நலன்சாhந்த விடயம். ஈழத்தமிழர்களாக ஈழத்தமிழ் சமூகம் கொண்டுள்ள நலனும் தீர்வும் ஈழத்தமிழருக்குரியது. அதனை கோருவதற்கும் அடைவதற்கும் முயல்வது தவிர்க்க முடியாதது. சீனாவை இலங்கையிலிருந்து அகற்றுவதும் வெதமுல்ல அரசியலை தோற்கடிப்பதும் அமெரிக்க உத்தியின் வடிவமாகவே தெரிகிறது. அது சாத்தியமாகுமாயின் ஈழத்தமிழரது அரசியல் காணாமல் போய்விடும் அபாயம் ஒன்றுள்ளது என்பதையும் ஈழத்தமிழ் சமூகமாக புரிந்த கொள்வது அவசியம். இது இதர தேசியங்களுக்கும் பொருத்தமானதாக அமையும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)