தென் இலங்கை அரசியல் கொதிநிலையில் உள்ளதென்பது அதன் வெளியுறவு நகர்வுகளின் மூலம் உணரமுடிகிறது. அவ்வாறே கொரனோ பரவலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளும் தடுப்பூசி அரசியல் இறக்குமதிகளும் சுகாதார உதவிகளும் என அதிக அதிர்வுகளுக்குள் இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் வெளியுறவில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களும் அதனை எதிர் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களும் தவிர்க்க முடியாது ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது. மீளவும் தென் இலங்கை ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் உபாயமொன்றை மேற்குலகமும் இந்தியாவும் பின்பற்ற ஆரம்பித்துள்ளதா என்ற கேள்வியே பரவலாக எழுப்பப்படுகிறது. இதனை இலங்கைத் தமிழருக்கு ஆதரவானதாக கருதும் திரிபுகளும் தவிர்க்க முடியாது உள்வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் நிலவுகிறது. ஆனால் இலங்கைத் தமிழரை முன்னிறுத்தி வல்லரசு நாடுகள் பிராந்திய நலன்களை அடைகின்றனவே அன்றி இலங்கைத் தமிழ் தலைமைகள் தமிழருக்கான நலனுக்கான நகர்வுகளை செயல்படுத்துவதாக தெரியவில்லை. மீண்டும் ஒரு வாய்ப்பு உலகளாவிய தளத்தில் திரட்சி பெற ஆரம்பித்துள்ளது.இக்கட்டுரை தென் இலங்கை மீது உலகம் மேற்கொள்ளும் நகர்வுகளையும் அதன் பதில் நடவடிக்கைகளையும் தேடுவதாக உள்ளது.
முதலாவது, அமெரிக்க காங்கிஸ்ல் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ள தீர்மானம் இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக்குள் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் கவனத்திற்குரியதாகும். குறிப்பாக இலங்கைத் தமிழர்களது பாரம்பரியத் தாயகம் வடக்கு கிழக்கு என்பதையும் ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களது சுதந்திரத்திற்கானது எனவும் அதனை மேற்கொண்ட விடுதலைப்புலிகள் சுதந்திரப் போராட்ட அமைப்பு எனவும் 2021 மே18இல் அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட (H.RES.413) தீர்மானம் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியான டெபோரா கே. ரோஸினால் காங்கிரஸ்க்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பிரேரணையை பில் ஜோன்சன், டேனி கே. டேவிஸ், பிரெட் ஷெர்மன் மற்றும் கேத்தி மெனிங் ஆகிய நான்கு காங்கிரஸ் பிரதிநிதிகளும் ஆதரித்துள்ளனர்.
இரண்டாவது, யூன் 8 இல் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால பாக்லே இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷாவை அலரிமாளிகையில் சந்தித்து உரையாடியுள்ளார். இருவரும் உரையாடிய விடயம் எதுவும் வெளிவராத போதும் கொழும்புத் துறைமுக நகர சட்டமூலத்தினால் அதிக நெருக்கடிக்குள்ளாகியுள்ள இந்தியா எத்தகைய விடயங்களை உரையாடியிருக்கும் என்பதை விளங்கிக் கொள்வது ஒன்றும் கடினமானதல்ல. அது மட்டுமன்றி இந்தியாவின் கொல்லைப்புறத்திற்குள் (Backyard) சீனா நுழைந்துள்ளதாகவே தெரிகிறது. அதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தியத் தூதுவரது சந்திப்பு சுகம் விசாரிப்பதாக அமைந்திருக்காது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். ஆனால் இந்தியத் தூதுவர் இலங்கையின் ஜனாதிபதியை விடுத்து பிரதமரை சந்திப்பதன் முக்கியத்துவம் அதிக குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
மூன்றாவது பிரெஞ்சுக் கடற்படையின் எப்.என்.எஸ்.ரொன்னர் மற்றும் எப்.என்.எஸ்.சர்கோவ் ஆகிய இரு போர் கப்பல்கள் 750 மாலுமிகளுடன் யூன் 7 திகதி கொழும்புத் துறைமுகத்தை நோக்கி வருகை தந்துள்ளன. 11 திகதி வரையும் அக்கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் எனவும் கடந்த மூன்று மாதமாக கடலிலேயே கடற்படை பணியாளர்கள் பயணம் செய்ததனால் இலங்கையின் அவர்கள் விடுதிகளில் தங்குவதற்கும் சிகிரியா அனுராதபுரம் மின்னேரியா யால மற்றும் உடவளவ பிரதேசங்களுக்கு செல்ல அனுமதித்துள்ளதுடன் அவர்களது வருகையால் 250 மில்லியன் ரூபா வருமானம் இலங்கைக்கு கிடைக்கும் எனவும் தெரியவருகிறது. அதனுடன் இக்கப்பலின் வருகை;ககான பிரதான காரணமாக தொழில் நுட்பத் தேவை என மட்டும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. கொவிட் தொற்றின் பாரிய விளைவுகளிலிருந்து மீள போராடிக் கொண்டிருக்கும் இலங்கையை நோக்கி போர்க்கப்பல்கள் வருகை தருவதென்பது சாதரண விடயமாக கருத முடியாது.
நான்காவது தடுப்பூசி இராஜதந்திரத்தினால் (Vaccine Diplomacy) உலகம் கையாளப்படுவது போல் இலங்கையும் உலக வல்லரசுகளது நலனுக்காக நகர்த்தப்படுகிறது. இதில் இந்தியா முன்னோடியாக அமைந்தாலும் சீனா அமெரிக்கா ரஷ்சியா என அனைத்து வல்லரசுகளும் இலங்கைக்கு தடுப்பூசி வழங்குவதுடன் சுகாதார மருத்துவ உதவிகளையும் வழங்கிவருகின்றன. குறிப்பாக யூன் 6 திகதி அமெரிக்க விமானம் ஒன்று மருத்துவ உதவிகளுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்திறங்கியது. அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனமாகிய USAID மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ள அவசர உதவி அமைந்துள்ளது. அதில் 880000 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் 1200 துடிப்பு ஒப்சி மீற்றர்களும் மற்றும் 200 செயற்கை சுவாசக்கருவிகளும், மற்றும் படுக்கைகளும் உள்ளடங்களாக பல மில்லியனுக்கான பெறுமானமுடைய உதவிகளை வழங்கியுள்ளது. இதே தினத்தில் சீனா ஒரு மில்லியன் தடுப்பூசிகளை இலங்கைக்கு அனுப்பியிருந்தமையும் கவனத்திற்குரியதாகும். ஒருபுறம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மறுபக்கத்தில் மருத்துவ உதவியடங்கிய தொகுதியின் வருகை. இரண்டுமே முரண்பாடானதாக தெரிந்தாலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. சீனாவின் நலன்களுக்கு இடங்கொடுத்தது போன்று அமெரிக்க நலன்களுக்கு இலங்கை வாய்ப்பளிகட்குமாக இருந்தால் உதவிகள் தொடரும் அல்லது தமிழரது அரசியல் முதன்மை பெறும் என்பதை உணர்த்துவதாக உள்ளது.
மறுபக்கத்தில் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் நகர்வுகளை எதிர் கொள்ள இராஜதந்திர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஆரிய அபயசிங்ஹா மூலம் அமெரிக்க காங்கிரஸ் நகர்வை தடுத்து நிறுத்த முயலுகிறது. அவ்வாறே இலங்கையின் வெளியுறவு அமைச்சின் வாயிலாகவும் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக பெரும் கண்டன அறிக்கையை முன்வைத்துள்ளது. காலதாமதமான அறிக்கையாயினும் அதிக தர்க்கங்களை உருவாக்கும் விதத்தில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறே யூன் 8 இல் ரஷ்சிய வெளியுறவு அமைச்சருடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். அதில் ஸ்புட்னிக் -5 பற்றிய உரையாடலாக அமைந்தாலும் இருபக்க வர்த்தகம் சுற்றுலாத் துறை மற்றும் இரு பக்க உறவு பற்றிய உரையாடல்கள் நிகழ்ந்ததாக தெரியவருகிறது. எதுவாயினும் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடான ரஷ்சியாவுடனான இலங்கையின் உறவு அவசியமானதாக இலங்கை கருதுகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிரான சக்திகளுடனான உறவைப் பலப்படுத்தும் நகர்வை இலங்கை மேற்கொள்கிறது. அதனை அடுத்து இலங்கைக்கான ரஷ்சியத் தூதுவர் யூரி பி. மேட்டரி ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார். அப்போது கொரனோ தடுப்பு செயலணியின் நடவடிக்கையை தூதுவர் பாராட்டியதுடன் பலவிடயங்களை கேட்டறிந்துகொண்டார். அதே நேரம் ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சவாலை நோக்கிச் செல்லும் மூலோபாயத்தையும் ரஷ்சியத் தூதுவரிடம் முன்னாள் இராணுவத் தளபதி பகிர்ந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே, இலங்கை அரசாங்கம் பல முனைகளில் நகர்ந்து அமெரிக்காவின் பிரேரணையை கைவிடத் திட்டமிடுகிறது. ஆனால் அமெரிக்காவோ தனது நலனுக்கு எதிரான இலங்கை சீன உறவின் போக்கினைத் தடுக்கவும் பிராந்திய அதிகாரத்தை தனதாக்கவும் முயலுகிறது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் சீனாவுக்கு எதிரான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறன. அமெரிக்காவின் இந்தோ-பகபிக் உபாயத்தையும் இந்தியாவின் இந்து சமுத்திரம் மீதான செல்வாக்கினையும் முடிபுக்கு கொண்டுவரும் விதத்தில் சீனா-இலங்கை உறவு அமைவதாக அவை கருதுகிறன. அமெரிக்கா தலைமையிலான அணியிடம் தென்னாசியா மட்டுமன்றி ஆசியாவின் இதர பிராந்தியங்களும் பறிபோய் கொண்டிருக்கின்றன. எனவே அத்தகைய நடைமுறையை தடுப்பதற்கான நகர்வுகளை ஜோ பிடன் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதன் பிரதிபலிப்பே அமெரிக்க காங்கிரல் முன்மொழியப்’பட்டுள்ள பிரேரணையாகும்.
எனவே அமெரிக்காவின் நகர்வுகள் மீளவும் தனது பிடியை பிராந்திய அடிப்படையில் உறுதிப்படுத்திக் கொள்ள முனைவதாகவே தெரிகிறது. சீன-இலங்கை உறவுவில் அமெரிக்க நலன்கள் பாதிக்கப்படுவதாகவே அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்காவுடனான மிலேனிய உடன்பாட்டை நிராகரித்துவிட்டு கொழும்புத் துறைமுக நகரச் சட்டமூலத்தை அமுலாக்கியதே அமெரிக்காவினது அதிருப்திக்கான பிரதான காரணமாகும். மாறாக கடந்த கால ரணில்-மைத்திரி அரசாங்கம் போல் இரு தரப்பையும் இலங்கை திருப்திப் படுத்தமாயின் அதனால் அமெரிக்க நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற அடிப்படையில் நகர்ந்திருக்கும். இங்கு தமிழ் மக்களோ அல்லது அவர்களது போராட்டமோ முக்கியமானதல்ல. அமெரிக்க நலனே முக்கியமானது. ஆனால் அதற்குள் இலங்கைத தமிழரது நலனும் உள்ளடங்கியுள்ளது என்பது கவனத்தரிற்குரியதாகும். அதனை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தலைமைகளும் புலம்பெயர்ந்த தரப்புக்களுமே உரியது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
