அரசியல் கட்டுரைகள்

வங்களாதேஷில் ஏற்பட்டுவரும் மீள் எழுச்சியும் தென்னாசிய பிராந்திய அமைதியின்மையும்?

தென்னாசிய பிராந்திய நாடுகளில் இளைஞர்களின் அரசியல் புரட்சி கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. தென்னாசியா அரசியல் கலாச்சாரத்தின் பலவீனங்களை வெளிப்படுத்தும் நோக்கிலேயே தீவிர எதிர்ப்பு வாதம் ஆட்சியில் உள்ள அரசாங்கங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக எழுச்சி பெற்றுள்ளது. 2024 யூலையில் வங்களாதேஷில் நடந்த பாரிய கிளற்ச்சி மீளவும் 2025 டிசம்பரில் நிகழ்ந்து வருகிறது. வங்களாதேஷ் மீள் எழுச்சிக்கான அடிப்படை காரணமாக தீவிர போராட்டக்காரரும் வங்களாதேஷின் எதிர்கால அரசியலை நிர்ணயிக்கும் தலைமையாகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷரீம் ஒஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) படுகொலையை முக்கியமான விடயமாக மாறியது. இது ஒரு திட்டமிட்ட அரசியல் படுகொலை என்பதை இடைக்கால அரசாங்கமே உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் அத்தகைய காரணங்களையும் கடந்து வேறு காரணங்களும் தாக்கம் செலுத்தியுள்ளதாகவே தெரிகிறது. தற்போதைய கிளர்ச்சி மீளவும் இந்து-இஸ்லாமிய இன மோதலுக்குரிய பரிமாணத்தை உருவாக்கி உள்ளதாகவே உணரப்படுகிறது. இக்கட்டுரையும் வங்களாதேஷில் நிகழ்ந்துவரும் கிளர்ச்சிக்கு பின்னால் இருக்கின்ற காரணங்களையும் அதன் பலவீனங்களையும் அடையாளப்படுத்த முயற்சிக்கிறது.

இலங்கையில் தொடங்கி வங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் மாணவர்களும் இளம் தலைமுறையினரும் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளை தொடராக மேற்கொண்டுவருகின்றனர். இதில் மீளவும் வங்களாதேஷில் நிகழ்ந்துவரும் கிளர்ச்சிக்கு பின்னால் வங்களாதேஷ் அரசியலை தலைமை தாங்குகின்ற இடைக்கால அரசாங்கத்தின் அணுகுமுறை குழப்பகரமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. இளைஞர்களின் தலைமைகளை எழுச்சி பெறவிடாது தடுக்கும் விதத்தில் அவர்கள் மீதான அரசியல் படுகொலைகளை முக்கிய காரணமாக கொள்ளப்படுகிறது. அவை நேரடிக்காரணமாக அமைந்தாலும் அதனை விட பல காரணங்கள் மீள வங்களாதேஷ் மக்கள் எழுச்சிபெறுவதற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன. அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது இடைக்கால அரசாங்கத்தின் ஆட்சி முறைமை அரசியல், பொருளாதார, சமூக நெருக்கீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையொன்றை அதிகம் முன்னெடுத்திருந்தது. பதிலாக அதிக இந்திய எதிர்ப்பு உணர்வுகளை ஆட்சி காலத்தில் ஆட்சியாளர்களும் உயர் நிலையில் இருக்கும் அரசியல் தலைவர்களும் வெளிப்படுத்தியிருந்தனர். அது பெரும் அளவுக்கு இந்திய எதிர்ப்பு உணர்வை தோற்றுவித்தது. முன்னாள் வங்களாதேஷ்பிரதமர் இந்தியாவுக்குள் அரசியல் தஞ்சம் கோரி இருப்பது அதற்கான வலிமையான காரணமாக ஆட்சியாளர்களால் பார்க்கப்பட்டது. அதனாலேயே இந்திய எதிர்ப்பு வாதத்தை வெளிப்படுத்துகின்றது என்ற விவாதம் மேல் எழுந்தது. ஆனாலும் தென்னாசிய பிராந்திய நாடுகளுக்குள் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் செல்வாக்கு அதீதமாகவே காணப்படுகிறது. வல்லரசுகளின் திட்டமிடல்களும் அவற்றின் உத்திகளும் ஆழமான மாற்றத்தை நோக்கி நகர்த்தப்படுகிறது. அதன் ஒரு அங்கமாகவே வங்களாதேஷில் மீள உருவான கிளர்ச்சி இந்திய எதிர்ப்பு அல்லது இந்து எதிர்ப்பு வாதத்தை திட்டமிட்டு வடிவமைக்க முயலுகிறது. பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் உறுதிப்பாட்டை பேணுகின்ற ஒரு சூழலுக்குள் நுழைகின்ற காலப்பகுதியில் அதன் மீதான இளைய சமூகத்தினரின் கிளர்ச்சி அதன் அரசியல் இருப்பை முற்றாகவே மாற்றத்துக்கு உள்ளாவதற்கு திட்டமிடுகிறது. அத்தகைய மாற்றத்திற்கு பின்னால் வல்லரசுகள் மட்டுமல்ல வங்களாதேஷ் இராணுவத்தினது இலக்காகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அரசியல் ரீதியில் வங்களாதேஷின் ஆட்சியாளர்கள் ஒடுக்கு முறையின் சின்னமாக ஆட்சியை வெளிப்படுத்தியதன் பிரதிபலிப்பும் அத்தகைய கிளர்ச்சிக்கு பின்னால் இருந்த வலிமையான காரணமாக உணரப்படுகிறது. ஆனால் அதற்கான தீர்வினை சாத்தியப்படுத்தக்கூடிய முறை எதனையும் இடைக்கால அரசினால் சாத்தியப்படுத்த முடியவில்லை. அதன் விளைவு சட்டம் ஒழுங்குமுறை அற்ற ஆட்சி அரசியல் ரீதியான படுகொல்லைக்குரிய எத்தனத்தை முதன்மைப்படுத்தியது.

இரண்டாவது இந்திய நோக்கிய வங்காளதேஷின் வெளியுறவு என்பது முன்னாள் வங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்துக்குப் பின்னர் நெருக்கடிக்கு உள்ளானது. வரலாற்று ரீதியாகவே இந்தியா பின்பற்றி வந்த வெளியுறவுக்கொள்கையில் இருந்து ஒரு மாற்றத்தை நோக்கி பிரதமர் நரேந்திரமோடி அரசாங்கம் 2014 இல் இருந்து செயல்பட தொடங்கியது. அது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை வலிமையான பொருளாதார இராஜதந்திர நெருக்கத்தை பிராந்திய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்துவனை முதன்மைப்படுத்தியது. அரசியல், பொருளாதார, இராணுவ பாதுகாப்பு சார்ந்தும் பேரிடருக்கான உதவிகள் என இந்தியாவின் வெளியுறவு அரசுகளை நோக்கி வடிவமைக்கப்பட்டது. இதனை முறியடிக்கும் விதத்தில் இந்திய எதிர்ப்பு வாதம் என்பதும் தெனாசிய பிராந்தியத்தில் வன்முறைக் கலாச்சாரத்தின் நீட்சியையும் மீள ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பிற வல்லரசுகளுக்கு தேவையானதாக அமைந்திருந்தது. அதன் மறுபக்கத்தை உள்நாட்டில் இருக்கும் அடிப்படைவாத இஸ்லாமிய தரப்புகளுக்கும் வங்களாதேஷ் பாகிஸ்த்தான் பிரிவினைக்கு வித்திட்ட இந்தியா மீதான பாகிஸ்தான் மறைமுகமான அணுகுமுறையும் இதற்கு வலு கொடுக்கும் ஒன்றாக காணப்படுகிறது. இந்திய வங்களாதேஷ்முரண்பாடு என்பது இந்துத்துவ இஸ்லாமிய முரண்பாடாக பரிமாணம் பெற தொடங்கியிருக்கின்றது. 1971 ஆம் ஆண்டு யுத்தத்தில் பாரிய அழிவுகளை சந்தித்த வங்களாதேஷ்மீளவும் ஒரு நெருக்கடிக்குள் அகப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் காஷ்மீர் யூனியன் பிரதேசம் முதல் மேற்குவங்கம் வரை அனைத்து வடமாநிலங்களிலும் இந்துத்துவ வாதிகளது கண்டனம் முதன்மை படுத்தப்படுகிறது. வங்களாதேஷ் மீதான அழுத்தத்தை இந்துத்துவவாதிகள் தமது போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். வங்களாதேஷில் இந்து இளைஞன் திபு சந்திரடாஸ் (Dipu Chandra Das) உயிரோடு தீயிட்டு கொலை செய்தமை பாரிய அதிர்வலைகளை வட இந்திய மாநிலங்களில் ஏற்படுத்தி இருக்கின்றது. மதச்சார்பற்ற அரசியலமைப்பு கொண்ட இந்திய இந்துத்துவா ஆட்சி முறை கொள்கையால் ஆளப்படுகின்றது. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் வங்களாதேஷின் இந்து எதிர்ப்பு வாதம் அதீத நெருக்கடியை பிராந்தியத்தில் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மூன்றாவது இந்திய வங்காளதேஷம் முறுகல் நிலை இந்து இஸ்லாமிய முரண்பாடாக பரிமாணம் பெறுகின்ற போது பிராந்திய ரீதியான வன்முறை அரசியலுக்குரிய வாய்ப்புகளை சாத்தியப்படுத்தக் கூடியது. வங்களாதேஷ் புரட்சியின் பங்கெடுத்த இளைஞர்கள் படுகொலையை மேற்கொண்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்திருப்பதாகவும் அல்லது தப்பியேடி உள்ளதாகவும் ஷேக்ஹீனாவை இந்தியா பாதுகாப்பானாலும் இந்தியா மீதான வெறுப்புணர்வை வங்களாதேஷ் தீவிர போக்குடைய இஸ்லாமிய அடிப்படை வாதிகள் முன்னிறுத்தி வருகின்றனர். வங்களாதேஷின் எழுச்சி பெறுகின்ற இந்துக்களின் அடிப்படை அணுகுமுறையானது டாக்காவின் நகரத்தை பெருமலவுக்கு எதிரெதிர் ஆர்ப்பாட்டங்களினால் மையப்படுத்தி உள்ளது. இத்தகைய மையப்படுத்தல் அதீதமான பகைமையை உருவாக்குவற்கான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை, சீனா போன்ற நாடுகள் அதிகமான கண்டனங்களை வெளிப்படுத்திய போதும் வங்களாதேஷினுடைய ஆர்ப்பாட்டமும் எதிர் புரட்சியும் முடிவுக்குவராத ஒரு நிலையில் சில கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன் வைத்திருப்பதை கண்டு கொள்ள முடியும். குறிப்பாக ஒஸ்மான் ஹாடியின் படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்கத் தவறிய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வங்களாதேஷ் இடைக்கால ஆட்சியாளர்களை கோரியுள்ளனர். அதே நேரம் வங்களாதேஷின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் தாரிக் ஹகுமான் (Tarique Rahman) 17 வருடத்திற்கு பின் வங்களாதேஷ் வருகைதந்துள்ளார். மேலும் இன்னோர் இந்து மதத்தை சார்ந்த இளைஞன் அப்ரி மொண்டால் (Amrit Mondal) அடித்துக் கொல்லப்பட்டதாக தகவல் உண்டு.

எனவே வங்களாதேஷில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியானது இந்து-இஸ்லாமிய பகைமையின் இன்னொரு வடிவமாக பரிமாணம் பெறுகின்றது. தென்னாசியப் பிராந்தியம் பொருளாதார நெருக்கடியையும் சமூக ஒழுக்கும் முறைகளையும் அரசியல் உறுதிப்பாட்டையும் கோரி இருந்த நிலை மாறி மத எதிர்ப்பு வாதத்துடன் இந்து -இஸ்லாமிய முரண்பாட்டினால் பிராந்திய ரீதியான ஒருமைப்பாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. இது இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையில் நெருக்கடிக்கான ஒரு அடிப்படையாகவே தெரிகின்றது. இது இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் மீள எழுவதற்கான வாய்ப்புகளை தோற்றுவிக்கக் கூடியதாகவே தெரிகிறது. எதிர்காலத்தில் தென்னாசியா மீண்டும் அமைதியற்ற இன மதம் முரண்பாடுகளால் பகைமைக்கும் வன்முறைக்கும் உள்ளாக்கப்படுகின்ற நிலையென்றை நோக்கி நகர்வதை அடையாளப்படுத்தியுள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)