உக்ரைன்-ரஷ்ய போர் உலகளாவிய அரசியலை மாற்றிவருகிறதென்பதை அவதானிக்கக் கூடியதாக அமைந்து ள்ளது. இரு நாட்டுக்குமான போர் தொடங்கியதிலிருந்து ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகளும் தமது வெளியுறவில் அதிக மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்கா தனது வெளியுறவில் அதிக மாற்றத்தை மேற்கொண்டு வருவதாக ஏற்கனவே இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை நோக்கிய நகர்வுகளில் உக்ரைனை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் முனைப்புச் செலுத்தி வருகின்றன. அண்மையில் உக்ரைன் ஜனாதிபதியின் ஐரோப்பிய யூனியனுக்கான பயணமும் உரையாடலும் அத்தகைய தேவையை மேலும் அதிகரித்துள்ளது. இக்கட்டுரையும் உக்ரைன்-ரஷ்ய போர் ஏற்படுத்திவரும் பிந்திய நகர்வுகளைத் தேடுவதாகவும் அது உலகளாவிய தளத்தில் ஏற்படுத்திவரும் மாற்றங்களையும் நோக்கியதாகவும் அமையவுள்ளது.
முதலாவது, ரஷ்ய-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த இந்தியப் பிரதமர் எந்த முயற்சி எடுத்தாலும் அதை அமெரிக்கா வரவேற்கும் என வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது. ஷங்காய் மாநாட்டிலும் ஜி-20 சந்திப்பிலும் இந்தியப் பிரதமர் உரையாற்றும் போது ரஷ்ய -உக்ரைன் போரை நிறுத்துவதற்கான கருத்தினை முன்வைத்து வருகிறார். ஷங்காய் மகாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்த போது இன்றைய யுகம் போருக்கானதல்ல. அமைதிக்கான பாதையில் எப்படி செல்லலாம் என்பதற்கான வாய்ப்புகள் தற்போது உள்ளது என குறிப்பிட்டிருந்தார். இதனை உலக நாடுகளின் தலைவர்கள் வரவேற்றிருந்தனர். இந்நிலையில் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி ரஷ்யா-உக்ரைன் போருக்கு ஜனாதிபதி புடின்தான் காரணம் எனவும் அவரால் தற்போது கூட போரை நிறுத்த முடியும் எனவும்’ ஆனால் அவர் தொடர்ந்து உக்ரைனை ஏவுகணைகள் கொண்டு அழித்து வருகிறார். இரு நாட்டுக்கும் இடையிலான விரோதம் முடிவுக்கு வர வேண்டும். பேச்சு நடத்த உக்ரைன் ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும். இந்தப் போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார். ஆனால் போரை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விரும்பாததனால் அமெரிக்கா உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்க வேண்டியுள்ளது. இந்தியப் பிரதமர், புடினை சமாதானம் செய்ய முடியும். இது குறித்து இந்தியப் பிரதமரை மீண்டும் புடினுடன் பேசும்படி அமெரிக்கா வேண்டுகிறது. உக்ரைன் போரை நிறுத்த இந்தியப் பிரதமர் மோடி எந்த முயற்சி எடுத்தாலும் அதை அமெரிக்கா வரவேற்கும் என்றார்.
உக்ரைனில் நடப்புவாரத்தில் ரஷ்ய இராணுவம் பாரியளவான உயிரிழப்பை எதிர் கொள்வதாக உக்ரைன் பாதுகாப்பு சபையின் அறிக்கை வெளியிட்டுள்ளது. போரில் நாள் ஒன்றுக்கு 824 ரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்படுவதாக தமக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. உக்ரையின் தரப்பு வீரர்கள் ரஷ்யாவின் தாக்குதலை வலுவாக எதிர்கொண்டு முறியடித்து வருவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய ரஷ்ய இராணுவ இழப்பீட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ஆயுததளபாடங்களே காரணம் என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வழங்கிய ஆயுததளபாடங்கள் அனேகமானவை உக்ரைனை வந்தடைந்த நிலையில் ரஷ்ய இராணும் பாரிய இழப்பீடுகளை சந்தித்துள்ளதாகவே உணரப்படுகிறது. ஆனாலும் உக்ரைனது அறிக்கையை மட்டும் கொண்டு அத்தகைய முடிவினை மேற்கொள்ள முடியாது என்பதுடன் அத்தகைய செய்திகளையே மேற்கு ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வருகின்றன. அதே நேரம் அமெரிக்காவின் உக்ரைனுக்கான ஆயுததளபாடங்களை வழங்குவதற்கான நியாயமானது வேடிக்கையாகவே தெரிகிறது. போரை நிறுத்துவதற்கான உத்திகளைப் பற்றி உரையாடும் வெள்ளைமாளிகை உக்ரைனுக்கான ஆயுததளபாடங்களை விநியோகிப்பதில் அதிக கவனம் கொண்டுள்ளது. வெள்ளைமாளிகை அமைதி பற்றி உரையாடுவது உலகத்தை ஏமாற்றுவதற்கான உத்தியாகவே தெரிகிறது. இரு நாட்டுக்குமான போர் பெரியளவான வாய்ப்புக்களையும் ரஷ்யாவின் இராணுவ வளர்ச்சியையும் கீழைத்தேச நாடுகளது எழுச்சியையும் அமெரிக்கா தடுத்துள்ளதாகவே தெரிகிறது. ரஷ்யா–சீனா-இந்தியா எனும் அணியினது எழுச்சியை வெற்றி கொள்வதில் ரஷ்யா–உக்ரைன் போர் அமெரிக்காவுக்கும் மேற்குலகத்திற்கும் வாய்ப்பானதாகவே அமைந்துள்ளது. அதனையே அமெரிக்கா தொடர முனைவதுடன் தனது வெளியுறவில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. அதன் வெளியுறவில் இந்தோ பசுபிக் பிராந்தியம் முக்கியமானதாக மாறியுள்ளது.
இரண்டாவது, அத்தகைய நட்புறவுக்குள்ளேயே இந்திய-அமெரிக்க உறவு வடிவமைக்கப்படுகிறது. அமெரிக்க-இந்திய உறவை ரஷ்ய-இந்திய உறவை தகர்ப்பதற்கான உத்தியாகவும் இந்து சமுத்திரத்தில் அமெரிக்கா தனது நிலையை பலப்படுத்துவதற்கும் திட்டமிடுவதாகவே தெரிகிறது. குறிப்பாக இந்தியாவுடனான உறவு மேலும் வலுப்பெற அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க போயிங் விமான நிறுவனத்திடமிருந்து ஏர் இந்தியா விமான நிறுவனம் 290 வகை விமானங்கள் 200 ஐ கொள்வனவு செய்வதற்கான உடன்பாட்டில் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் தொலைபேசியில் உரையாடும் போது அத்தகைய கருத்தினை அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படுத்தியிருந்தார். இரு நாடுகளுக்கும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப உறவை பலப்படுத்துவதென இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இது இரு நாட்டுக்குமான நெருக்கம் என்பதைக் காட்டிலும் ரஷ்ய- இந்திய நெருக்கத்தை கையாளும் இரண்டாவது நகர்வாகும். ஆரம்பத்தில் வெளியுறவு மட்டத்திலும்’ மற்றும் அமெரிக்க இரண்டாம் நிலைத் தலைவர்களால் கையாளப்பட்டதுமான நிலையைக் கடந்து அரச மட்டத்திலான கையாளுகையாகவும் தொழில்நுட்ப உறவை கொண்ட பொருளாதார ஒத்துழைப்புக்கான நகர்வாகவும் தெரிகிறது. இந்தியா எப்போதும் நடுநிலை என்ற கொள்கைக்குள் அகப்பட்டுள்ளதனால் அதனை எப்போது வேண்டுமானாலும் எப்படியும் கையாள முடியும் என்பதை உலக நாடுகள் விளங்கிக் கொண்டுள்ளன. அத்தகைய நடவடிக்கையையே தற்போது அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. முன்னாள் இந்தியப் பிரதமரையும் அமெரிக்கா ஆரம்பத்தில் அரவணைக்க முயன்று தோற்றுப் போக மறுவளமான உத்திகளை திட்டமிட்டு நகர்த்தி அதில் வெற்றி கொண்டது. அதனையே ரஷ்ய-இந்திய உறவிலும் அமெரிக்கா செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அதானியை வீழ்த்திவிட்டு டாடாவை வளர்க்க முயல்வது போல் நகரத் தொடங்குகிறது. ஆனால் எதனையும் வளரவிடாது தடுப்பதுடன் இந்திய-ரஷ்ய நெருக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நகர்வாகவும் அவற்றை அமெரிக்க மேற்கொண்டுவருகிறது. இதில் இன்னொரு நடவடிக்கையையும் அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. எப்போதும் இந்தியாவை அமெரிக்கா கையாள இலங்கைத் தீவையும் அதன்’ அரசியலையும் பயன்படுத்திக் கொள்ளும் மரபைக் காணக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக இலங்கைத்தீவை தனித்துவமான அரசியலுக்குள் அமெரிக்கா நிலைப்படுத்த ஆரம்பித்துள்ளது. அதாவது அமெரிக்க பாதுகாப்புக் துணைச் செயலாளர் தலைமையில் பாதுகாப்புத் தொடர்பில் பேச்சுக்களை நடத்தும் நோக்குடன் 20 பேர் கொண்ட அமெரிக்க தூதுக்குழு ஒன்று 14.02.2023 அன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இந்தக் குழுவில் இந்தோ-பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஜெடியா றோயாவும் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் பண்டார தென்னக்கோன் திருகோணமலையில் அமெரிக்க இராணுவத்தளம் பற்றி உரையாடுவதற்காக அமெரிக்க தூதுக்குழு வருகை தரவில்லை எனவும் அத்தகைய ஊகங்கள் நிலவுவதாகவும் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.அது மட்டுமன்றி இரு நாட்டுக்குமான பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது இந்தோ-பசுபிக் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறுதிப்பாடு அத்துடன் ரஷ்ய-உக்ரைன் போரின் தாக்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார். 150 இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமெரிக்க பயிற்சி வாய்ப்புக்களை வழங்கியதுடன் இரு கப்பல்களை இலங்கை கடற்படைக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கையில் மூலோபாய நலன்களை கொண்டிருக்கின்றன. அவற்றின் பூகோள-அரசியல் போட்டியாளரான சீனாவின் செல்வாக்கு மற்றும் அனைத்து உலக வல்லரசுகளினது கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கை இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் மூலோபாய ரீதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
எனவே ரஷ்ய-உக்ரைன் போர் உலகளாவிய தளத்தில் பாரிய மாற்றங்களை நோக்கி நகர்கிறது. அமெரிக்காவின் வெளியுறவு இந்து சமுத்திரத்தை நோக்கி அதீதமாக கட்டமைக்கப்படுகிறது. அதன் விளைவுகளால் இந்திய-அமெரிக்க உறவு மட்டுமல்ல இலங்கை-இந்திய உறவும் வடிவமைக்கப்படப் போகிறது. இது ரஷ்யாவை மட்டுமல்ல சீனாவையும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்போகிறது. ரஷ்யா உக்ரைனுடன் போர் எனும் முடிச்சினால் கட்டப்பட்ட நிலையில் சீனாவுக்கு தாய்வானுடன் போர்ச் சூழலை ஏற்படுத்த அமெரிக்க முனைகிறது. சீனாவுக்கு தாய்வான் முதன்மையானது என்பதில் அமெரிக்காவுக்கு எந்த குழப்பமும் கிடையாது. ஆனால் தாய்வானுடன் ஒரு போரைத் தொடங்கினால் சீனா இலகுவில் வெல்லும் என்பதைக் கடந்து ஆபத்தான விளைவை சீனா சந்திக்க வழி ஏற்படும் என அமெரிக்கா கருதுகிறது. இதனால் இலங்கைத் தீவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் அதனால் இந்து சமுத்திரத்திலிருந்து சீனாவை நெருக்கடிக்குள்ளாக்கலாம் எனவும் அமெரிக்காவின் திட்டமிடல் உள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
