இந்திய இராஜதந்திரிகளது இரகசிய இலங்கைப்பயணம் குறித்து சிங்கள ஊடகங்கள் ஆரம்பத்தில் முதன்மைப்படுத்தின. தற்போது தென் இலங்கை ஆங்கில ஊடகங்களும் அத்தகைய செய்திகளை முதன்மைப்படுத்த ஆரம்பித்துள்ளன. குறிப்பாக இந்திய பாதுகாப்புச் செயலாளர் அஜித் டோவால் மற்றும் இந்திய புலனாய்வு அமைப்பான றோவின் தலைமை நிர்வாகி சமந்த்; கோயாலே ஆகிய இருவரது இலங்கை வருகை அதிக முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. ஏன் அத்தகைய இராஜதந்திரிகள் இரகசியமாக இலங்கை வருகைதந்து போகின்றனர் என்ற கேள்வி நியாயமானதாகவே தெரிகிறது. அதனை இந்திய அரசாங்கம் போன்று இந்திய ஊடகங்களும் இரகசியம் பேணமுயலும் போது சிங்கள் ஊடகங்கள் ஏன் அதனை அம்பலப்படுத்த முயலுகின்றன என்ற சந்தேகம் நியாயமானதாகவே தெரிகிறது. இவற்றைத் தேடுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒர் இராஜதந்திர நெருக்கடி நீடிக்கிறதாகவே தெரிகிறது. ஆனால் இந்திய இலங்கை இராஜதந்திரிகள் மீள மீள இரு நாட்டுக்கும் பரஸ்பரம் விஜயம்செய்வதும் உரையாடுவதும் நிகழ்ந்து கொண்டே இருகிறது. முரண்பாடு முடிபுக்கு வந்ததாக தெரியவில்லை. ஏதோவெரு இழுபறி நிகழ்வதாக உணரப்படுகிறது. இந்தியா இலங்கையிடம் பாரிய கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது. சீனா தொடர்பில் இலங்கை பின்பற்ற வேண்டிய விடயத்தை உறுதிமொழியை இந்தியா கோரியதாகவும் அதற்கு இலங்கை முழுமையாக உத்தரவாதம் வழங்க தயாரில்லாத நிலை உள்ளதாகவும் கொழும்பு இராஜதந்திரிகள் குறிப்பிடுகின்றனர். அதே நேரம் இலங்கைக்கான சீனத்தூதரகம் இலங்கைக்கு நிதி வழங்குவதிலும் தொடர்ச்சியாக இலங்கைக்கு பொருளாதார உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்திவருகிறது. அதனைக்கூட ஜனாதிபதியை சந்திப்பதன் மூலம் உறுதிப்படுத்தி வருகின்றதைக் காணமுடிகிறது. அதே நேரம் இந்தியாவின் உதவிகளை அதிகரிப்பதற்கும் இரு நாடுகளுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டை திருத்துவதற்குமான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அதனடிப்படையில் பொருளாதார உறுதிப்பாடும் தேசியக் கொள்கையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செய்முறைகளாலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் விமல் வீரவன்ச நுவரெலிய மாவட்டத்தில் நிகழ்ந்த சந்திப்பென்றில் தெரிவித்த விடயம் கவனத்திற்குரியதாகும்.
அதாவது இலங்கை பொருளாதார ரீதியில் பலமிழந்துள்ளது.இதனை முதன்மைப்படுத்திக் கொண்ட வலுவான நாடுகள் இலங்கையின் கழுத்தை இறுக்கிப் பிடிக்கமுற்படுகின்றன.தமது உபாயத்திற்குள் இலங்கையை கொண்டுவருவதற்கு கடும்பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றன. தமது நாட்டு ரூபாவை இலங்கையில் செயல்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கிறது.அவ்வாறு நடந்தால் இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாறக்கூடிய சூழ்நிலை தானாகவே உருவாகிவிடும் என்றார். மேலும் அவர் குறிப்பிடும் போது நாட்டின் போராட்டங்களை தூண்டிவிட்டு அராஜகநிலையொன்றை உருவாக்குவதற்கு மேற்குலக நாடுகள் திட்டம் தீட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். இது இந்திய மேற்கு எதிர்ப்புவாதமாகவே தெரிகிறது. ஏறக்குறைய சிங்கள மக்களது தேசிய உணர்வைத் தூண்டுவதற்கான நகர்வாகவே உள்ளது. கடந்த காலம் முழுவதும் இந்திய எதிர்ப்புவாதத்தினாலேயே இலங்கைத் தமிழர் இனப்பிரச்சினை கையாளப்பட்டதுடன் இந்தியா மீதான எதிர்புவாதமே தமிழர் மீதான தாக்குதலாக அமைந்திருந்தது. அதன் நீட்சியையே பாராளுமன்ற உறுப்பினரது உரை உணர்த்துகிறது. அறகளய (காலிமுகப்) போராட்டத்திற்கு பின்னர் காணப்பட்ட நிலை படிப்படியாக மாற்ற பெரும்பான்மை அரசியலவாதிகள் முயல்வதாக புரிந்து கொள்ளப்படுகிறது.
மறுபக்கத்தில் இந்தியாவும் சீனாவும் இந்துசமுத்திரப் போட்டியில் இந்துசமுத்திர நாடுகளுடன் சந்திப்புகளை நிகழ்த்தியுள்ளன. 24.11.2022 அன்று இந்துசமுத்திரத்தின் கரையோர நாடுகள் (Indian Ocean Rim Countries) வங்களாதேஷ் தலைநகரில் ஒன்றுகூடியிருந்தன.இதில் 24 நாடுகள் அங்கம்வகிக்கின்றன. 2023 ஆண்டுக்கான மகாநாட்டின் தலைமைப் பொறுப்பை இலங்கை பொறுப்பேற்க உள்ளது. இதே நேரம் 21.11.2022 அன்று சீனாவின் யுனான்(Yunan) மாகாணத்தின் கும்மிங்(Kunming) நகரத்தில் சீனா-இந்துசமுத்திர நாடுகளுடனான சந்திப்பொன்றை நிகழ்ந்துள்ளது. ஏறக்குறைய 19 இந்து சமுத்திர நாடுகள் பங்குபற்றியுள்ளன. இந்தியா தவிர்ந்த இந்துசமுத்திர நாடுகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்ததாக தெரிய வருகிறது. மாலைதீவு, மற்றும் அவுஸ்ரேலியாவின் அரச பிரதிநிதிகள் கலந்து கொள்ளாத போதும் முன்னாள் தலைவர்கள் அதில் கலந்து கொண்டதாக தெரியவருகிறது. இரு மகாநாட்டிலும் இலங்கை கலந்து கொண்டதுடன் சீனாவின் சந்திப்பில் இலங்கையின் முக்கியத்துவம் பற்றி சீனப்பரதிநிதி அதிகம் முதன்மைப்படுத்தி உரையாடியதும் இலங்கைத் தீவின் வகிபாகம் சார்ந்து முதன்மைப்படுத்தப்பட்டதும் நினைவு கொள்ளத்தக்கது.
இதேநேரம் தமிழக புலனாய்வுத் துறையின் சீனாபற்றிய எச்சரிக்கைகளை அடுத்து நிகழ்ந்த கோவைக் குண்டுவெடிப்பு அதிக சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டுமல்ல இந்தியக் கரையோரப் பகுதியும் அதிக கண்காணிப்புக்குள் வந்துள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறே இலங்கையின் வான்பாதுகாப்புப் பொறுத்து சில சர்ச்சைகள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிகழ்வதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்களுககூடாக தெரியவருகிறது. மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா பெரும் போர் ஒத்திகையொன்றை மேற்கொண்டுவருகிறது. இந்திய வான்படையும் தரைப்படையும் இணைந்து நடாத்தும் ஒத்திகையில் முதல் தடவையாக கதிரியக்கத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய வான்படை தரை இலக்குகளை தாக்கும் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது குறிப்பிடத்த்க விடயமாக உள்ளது. இதில் அமெரிக்கப் படைகளும் இணைய இருப்பதாக தகவல்கள் உண்டு. அது சர்யான தகவலா என்பது உறுதிப்படுத்த முடியவில்லை.
இத்தகைய நிலைமைகளிலேயே இந்திய இராஜதந்திரிகள் இலங்கைத் தீவை நோக்கி இரகசியமாக நகர்கின்றனர். அவர்களது உரையாடல்களில் பொருளாதார ஒத்துழைப்புக்கு பதிலான பிராந்திய பாதுகாப்புக்கான விண்ணப்பங்கள் அதிகம் நிகழ்வதாக தகவல்கள் உண்டு. குறிப்பாக சீனா, மற்றும் பாகிஸ்தான் தூதுவரது வடக்கு கிழக்கு விஜயம் தொடர்பில் அதிக விடயம் இந்திய இராஜதந்திரிகளால் இலங்கை ஜனாதிபதியுடன் உரையாடப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை கைது செய்வது மற்றும் அவர்களது படகுகளை நாசம் செய்வது தொடர்பில் அதிக கண்டிப்பு வெளிப்படுத்தப்பட்டதாகவும், சீனாவுடன் இலங்கை நெருக்கமாக செயல்படுவது தவறானது என்றும் எடுத்துரைக்கப்பட்டதாக தெரியவருகிறது. ஆனால் சிங்கள ஊடகமொன்று இலங்கையிலிருந்து சீனாவை முழுமையாக வெளியேற்றினால் உங்களோடு முழுமையாக இந்தியா இருக்கும் என கொழும்பு வருகைதந்த அஜித் டோவால் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறே றோவின் தலைமைச் செயலாளர் கொழும்பு வருகை இந்திய ஊடகங்களால் மறைக்கப்பட தென் இலங்கை சிங்கள ஊடகங்கள் அதிகம் முதன்மைப்படுத்துகின்றன. அதற்கான அடிப்படை இந்தியா சார்ந்து சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் நகர்வாகவே தெரிகிறது. அத்தகைய அச்சத்தை பெரும்பான்மைத் தேசியவாதமாக மாற்றி அரசியல் நலன்களை எட்டுவதுடன் இலங்கைத்தீவின் பல்லினப் பண்பாட்டின் அடையாளங்களை முடிபுக்குக் கொண்டுவர முடியுமென கருதுகின்றன. அதில் சிங்கள ஊடகங்களும் தீவிரவாத உணர்வு கொண்ட அரசியல்வாதிகளும் இயங்குகின்றனர். மீளவம் அத்தகைய சூழலை நோக்கி நகர்வதற்கான திட்டமிடல் ஒன்றினை தென்இலங்கையில் அவதானிக்க முடிகிறது.
எனவே, இலங்கைத்தீவின் அரசியலில் பாரிய இழுபறிநிலை ஒன்று இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படுகிறது. இந்திய தேசிய பாதுகாப்புச் செயலாளரது வருகையைவிட இந்தியப் புலனாய்வுத் துறையின் தலைமை கொழும்புக்கு வருகைதந்திருப்பது அதிக கவனம் கொள்ளவேண்டியதும் முக்கியமானதென்பதும் உணரப்பட வேண்டும். அவ்வாறே சீனாவும் இந்தியாவும் இலங்கைத் தீவில் முரண்படுவது போல் இந்துசமுத்திர விடயத்திலும் முரண்பாடுகளை அதிகம் கொண்டுள்ளன என்பது இரு நாட்டினது நகர்விலிருந்தும் தெளிவாகிறது. பொருளாதார வர்த்தக விடயத்தில் இரு தரப்பும் இணங்கிச் செயல்பட்டாலும் அரசியலிலும் இராணுவ விடயங்களிலும் அதிக முறுகல் நிலையை கொண்டுள்ளன. ஆனால் இந்தியாவின் இராணுவ வலிமையை விட சீனா பலமடங்கு முன்னேறிய நாடாகவே உள்ளது. பொருளாதாரத்திலும் அத்தகைய நிலையே காணப்படுகிறது. மறுபக்கத்தில் தென் இலங்கையில் மீளவும் இந்திய எதிர்ப்புவாதம் தூண்டப்படுகிறது.அதன் விளைவுகள் அபாயமானதாகவே உணரப்பட வாய்ப்புள்ளது.
-பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
