அரசியல் கட்டுரைகள்

உளவு பலூன் விவகாரமும் அமெரிக்கா-சீனா இராஜதந்திர முறுகலும்

உலகளாவிய விவகாரம் துருக்கி, சிரிய நிலநடுக்கத்தை மையப்படுத்தியுள்ளது. அந்த நாடுகளின் பாரிய அழிவையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் உதவிகள் தொடர்ந்தாலும் நிலநடுக்கமும் தொடர்வதனால் அழிவுகளை கட்டுப்படுத்த முடியாது இரு நாடுகளும் திணறிக் கொண்டுள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களையும் உடலங்களையும் மீட்பதில் அதிக சிரமங்களை இரு நாடுகளும் எதிர் நோக்கியுள்ளன. இத்தகைய துயரம் ஒருபக்கம் நிகழ மறுபக்கத்தில் சீனா, அமெரிக்க இராஜீக முறுகல் இரு நாடுகளுக்குமிடையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஏற்கனவே வர்த்தக முறுகல் மற்றும் தைவான் விவகாரம் இரு நாட்டுக்குமான அரசியல் பொருளாதார இராணுவ பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய பதற்றத்தை அதிகரிக்கும் விதத்தில் சீனா அனுப்பியதாக அமெரிக்கா குறிப்பிடும் உளவு பலூன் விவகாரம் பாரிய முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரையும் இரு நாட்டுக்குமான இராஜீக முரண்பாட்டை தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது இரு நாட்டுக்குமான அண்மைய முரண்பாட்டுக்கான அடிப்படையாக சீனாவின் இராட்சத பலூன் அமெரிக்க தென் மாநிலத்தில் அமைந்துள்ள மோண்டடானாவில் உள்ள அணுசக்தி ஏவுதளத்திற்கு மேல் பறந்ததாகவும் அது உளவு பார்ப்பதற்காக சீனாவால் அனுப்பப்பட்டதாவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. வானிலை ஆராய்ச்சி என்ற பெயரில் அமெரிக்காவுக்கு மேல் பறந்து கொண்டிருந்த பலூன் ஜனவரி 28 ஆம் திகதி அமெரிக்காவுக்குள் பிரவேசித்துள்ளது. பெப்ரவரி 3ஆம் திகதி வரை அதன் பறப்பு அமெரிக்க வான் பரப்பில் நிகழ்ந்துள்ளது. சீனாவின் உளவு பலூன் அமெரிக்க விமானத் தளமான மால்ஸ்ட்ரோமை இலக்கு வைத்தே பறந்ததாகவும் அதனை உளவு பார்ப்பதற்காகவே அனுப்பப்பட்டதாவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இத்தகைய விமானத் தளம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கொண்டிருப்பதுடன் அணுவாயுதங்களை தாங்கிச் செல்லும் திறன்கொண்ட ஏவுகணைகளை ஏவும்தளம் எனவும் தெரியவருகிறது. அது மட்டுமன்றி சீனா உளவு பலூன் அமெரிக்காவின் இறையாண்மைக்கு எதிரானது திட்டமிட்ட தெளிவான அத்துமீறல் என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் உளவு பலூன் மூன்று பேருந்துகளை ஒன்றாக சேர்த்தது போன்ற பாரிய அளவுடையது எனவும் தெரியவந்துள்ளது.

இரண்டாவது அத்தகைய இராட்சத பலூனை அமெரிக்கா அத்திலாந்திக் சமுத்திரத்தில் வைத்து சுட்டுவீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை பென்டகன் சீனாவின் உளவு ஊர்தி என அறிவித்துள்ளது. இது மூன்று நாட்களுக்கு மேல் அமெரிக்காவின் வான்பரப்பில் அமெரிக்க பாதுகாப்பு பிரிவான பென்டகனால் கண்காணிக்கப்பட்டதெனவும் தரையில் சுட்டு வீழ்த்தாது கடலில் பாதுகாப்புக் கருதி சுட்டு வீழ்த்தியதாகவும் பென்டகன் அறிவித்துள்ளது. சுடப்பட்ட சமயம் பலூன் 60 ஆயிரம் அடியில் பறந்து கொண்டிருந்ததாகவும் ஏறக்குறைய ஒரு இலட்சத்து பன்னிரண்டாயிரம் அடி உயரம் வரை சீன உளவு பலூன் பறந்ததாவும் கூறப்படுகிறது. பலூனை வெடிக்க வைத்ததை அடுத்து அமெரிக்கப் போர் விமானங்கள் அருகே பறந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் இலகுவில் சுட்டு வீழ்த்த முடியாததாக உள்ளதுடன் அதன் சிதைவுகளை கண்டு கொள்வதும் கடினமாகவே உள்ளதென தெரியவந்துள்ளது. இருந்தபோதும் சிதறிய பலூன் சிதைவுகள் கரோலினா கடற்கரை நகருக்கு அருகே வீழ்ந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சிதைவடைந்த பலூனின் பாகங்கள் அமெரிக்க பாதுகாப்பு பிரிவினரால் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதுபற்றிய மேலதிக தகவல்கள் எதையும் வெளியிட முடியாது எனவும் அமெரிக்க பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது.

மூன்றாவது அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள சீனாவின் வெளியுறவுத் துறையானது, சீனா வானிலை ஆராய்ச்சிக்காக பலூன்களை பயன்படுத்துகிறது. அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட பலூன் ஒன்றுதான் வழிதவறி அமெரிக்க எல்லைக்குள் நுழைந்துவிட்டதென்றும் விளக்கம் அளித்துள்ளது. இது சர்வதேச விதிகளை மீறி அமெரிக்கா செயல்பட்டிருகிறது எனவும் வானிலை ஆராய்ச்சிக்கான சீனாவின் பலூனை சுட்டுவீழ்த்தியது சட்டவிரோதம் எனவும் சீனா பதிலுக்கு அமெரிக்கா மீது குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் எனவும் சீனா எச்சரித்துள்ளது.

நான்காவது சீனாவை எதிர்கொள்ளவும் அதன் மீதான எச்சரிக்கையை அதிகரிக்கும் விதத்திலும் அமெரிக்கா சில நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா பிலிப்பைன்ஸில் அமைத்துள்ள விமானப்படைத் தளங்களில் போர் விமானங்களை அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளது. அவ்வாறே அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பிளிங்டனின் சீன விஜயத்தை ஒத்தி வைத்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அவ்வாறே 08.02.2023 அன்று மாநிலங்கள் சபையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீனா மீது பாரிய குற்றச்சாட்டினை முன்வைத்ததுடன் அதனை எதிர்த்து செயல்பட அமெரிக்க இராணுவம் தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். பலமான கரகோசத்திற்கு மத்தியில் பைடன் தனது உரையை நிகழ்த்தியிருந்தார். சீனா மீது அதிக குற்றச்சாட்டுகளை பைடன் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இரு நாட்டுக்குமான பதற்றம் அதிகரித்திருப்பதுடன் தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் நகர்வுகளுக்கு பதில் நடவடிக்கையாகவே பலூன் விவகாரம் அமைந்திருப்பது போல் தெரிகிறது. தாய்வான் விடயத்தை சீனா இலகுவில் விட்டுக் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. அதனால் எப்படி அமெரிக்கா எவ்வாறு சீனாவின் எல்லைக்குள் நகர்ந்ததோ அவ்வாறே சீனாவும் அமெரிக்க எல்லைக்குள் நகர்த்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இது இரு நாடுகளதும் பாதுகாப்பு மற்றும் இறைமை சார்ந்த விடயமாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் எல்லைக்குள் நிகழ்ந்ததால் அமெரிக்க இறைமை பாதிக்கப்படுகிறது எனக்கூறும் அமெரிக்கா சீனாவின் எல்லைக்கு நுழையும் போது மட்டும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை எனக் கூறிக்கொள்ள முனைகிறது.

ஆனால் ஏனைய நாடுகளை விட சீனா அமெரிக்க வானில் அமெரிக்காவுக்கு சவால் விட்டுள்ளதாகவே தெரிகிறது. குறிப்பாக உலக நாடுகளின் உள்விவகாரங்களில் உளவு பார்ப்பதும் ஆட்சி மாற்றத்தை மேற்கொள்வதும் நெருக்கடியை உருவாக்குவதும் வழமையான அரசியலாகக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சீனாவின் உளவு பலூன் பாரிய சவாலாக அமைந்துள்ளது. அதன் பாதுகாப்பில் அதிக பலவீனம் உள்ளதாகவே தெரிகிறது. அதாவது 28.01.2023 முதலே அமெரிக்கா, சீனாவின் உளவு பலூனை கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் எப்போது முதல் அந்த உளவு பலூன் அமெரிக்க வான் பரப்புக்குள் பிரவேசித்ததென அமெரிக்காவால் உறுதிப்படுத்த முடியவில்லை. அது மட்டுமன்றி உளவு பலூன் அத்திலாந்திக் கடல்பரப்புக்குள் நுழையும் வரை அமெரிக்கா வெறுமனே கண்காணித்ததே தவிர வேறு எந்த நடவடிக்ைகயையும் அதன் மீது எடுக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இது அமெரிக்கப் பாதுகாப்புச் சார்ந்து வேறு நகர்வுகளுக்கு வித்திடும் விடயமாக மாறுவதற்கான வாய்ப்பு உண்டு. செப்டெம்பர் தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்கா அதிகம் கொதிப்படைந்த நிகழ்வாகவே இது தெரிகிறது. அது ஜோ பைடனது உரையில் தெளிவாக தெரிந்திருந்தது. அதனால் தாய்வான் விடயம் தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாகவே உணரப்படுகிறது.

இரு நாடுகளதும் இராஜீக நகர்வுகள் முறிவடைவதற்கான வாய்ப்புக் குறைவாக அமைந்தாலும் அச்சுறுத்தல் பரஸ்பரம் அதிகரிப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் உலகளாவிய போக்கில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. உலக ஒழுங்கில் இரு நாடுகளும் தனித்துவமான பாதுகாப்பு எச்சரிக்கைகளை கட்டமைக்க முயலுகின்றன. வட-, தென் கொரியாவுக்கிடையிலான பலூன் முரண்பாடு போன்றதல்லாத போக்கொன்றுக்கான சூழலே அதிகமாக உள்ளது.

எனவே அமெரிக்க, -சீன பொருளாதார அரசியல் போட்டியானது முழு அளவிலான இராணுவப் போட்டியாக மாறுவற்கான சூழலை உருவாக்கத் தொடங்கியுள்ளது. பட்டி மற்றும் பாதை முன்முயற்சியானது இந்தோ-, பசுபிக் சமுத்திரங்களைக் கடந்து உலகளாவிய ரீதியில் நிகழ்ந்து வருகிறது. இத்தகை சந்தர்ப்பத்தில் எழுந்துள்ள நாடுகளுக்கிடையிலான பரஸ்பர போட்டி புறச்சூழலின் பலத்தினால் கட்டமைக்கப்பட வாய்ப்புள்ளது. அமெரிக்க வெளியுறவில் ஏற்பட்டுவரும் மாற்றமானது மீளவும் இராணுவ கெடுபிடிக்கு வித்திடுவதாகவே தெரிகிறது. வெளிப்படையாக சீனா, -ரஷ்யா, -வடகொரியா, -ஈரான் அணியானது மேற்குலகத்தை எதிர்கொள்ள இத்தகைய நகர்வுகள் தவிர்க்க முடியாத தேவையாக எழுந்துள்ளது. உலக நாடுகளுக்குள் அமெரிக்க நுழைவை தடுக்க முடியாது விட்டாலும் எச்சரிக்கை செய்யுமளவுக்கு சீனாவின் பலம் வலுவடைந்துள்ளதாகவே நோக்கப்படுகிறது. அண்டவெளித் தொழில் நுட்பத்தில் அமெரிக்காவின் பலத்தை விஞ்சமுடியாத சீனா, அதனை அடைவதற்கு முனைகிறதாகவே தெரியவருகிறது. இஸ்ரேலின் ஈரானிய அணுவிஞ்ஞானி மீதான தாக்குதல் அண்டவெளித் தொழில் நுட்பத்தின் இராணுவத் தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது. சைபர் தாக்குதலை கடந்து சற்றிலைற் மூலமான தாக்குதல்களை இராணுவம் கொண்டிருக்க வேண்டிய தேவையை அதிகரித்துள்ளது. அரசியல் அதிகாரத்தின் முக்கிய அங்கமாக அண்டவெளி உருவெடுத்துள்ளது. தரையும் கடலையும் கடந்து அரசியல் அதிகாரத்தை அடையும் ஓரங்கமாக அண்டவெளியும் அதன் தொழில் நுட்பமும் காணப்படுகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)