ஜெனீவா 48வது கூட்டத்தொடர் செப்டெம்பர்-13 முதல் ஒக்டோர்-08 வரை நடைபெற உள்ளது. இது தொடர்பில் அரசாங்கமும் தமிழ் தரப்பின் நடவடிக்கைகள் அதிகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் அரசாங்க தரப்பு வெளிவிவகார அமைச்சை ஜி.எல்.பீரிஸ் பொறுப்பேற்ற பின்னர் ஜெனீவா நோக்கிய அதிக கரிசனைகளை கொண்டிருந்தது என்பது இப்பகுதியில் கடந்த பல கட்டுரைகளில் உரையாடப்பட்டிருந்தது. அதன் நீட்சியாக இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் வெளிவிவகார அமைச்சு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் இராஜதந்திர பணிமனைகளுக்கும் 31.08.2021அன்று அனுப்பியிருந்த மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளின் உள்நாட்டு பொறிமுறை எவ்வாறு செயற்பட்டது என்பதை சமர்ப்பித்துள்ளது. அதனடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடர் இலங்கையின் போக்கில் ஓர் ஆரோக்கியத்தன்மை நிகழ்வதாகவும் அதனை மதித்து இலங்கை அரசாங்கத்தினை பாராட்டி செயற்படப்போவதாகவும் ஜெனீவாவில் இயங்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருப்பதாக கூர்மை இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இக்கட்டுரையும் வெளிவிவகார அமைச்சு ஜெனீவா கூட்டத்தொடருக்காக தயார் செய்து அனுப்பிய அறிக்கையின் சாரம்சத்தை வெளிப்படுத்தும் நோக்கோடு முன்வைக்கப்படுகிறது.
முதலாவது, மனித உரிமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடந்த காலத்தில் மேற்கொண்ட ஆக்கபூர்வமான செயற்பாடுகளை சர்வதேச கடப்பாடுகளை அடிப்படையாக கொண்டு நிலையான சமாதானத்தையும், நல்லினக்கத்தையும் எட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகள் பொறிமுறைகளூடாக ஒன்றுபட்டு செயற்பட தயாராக இருப்பதாக அவ்வறிக்கையில் வெளியுறவு அமைச்சு உறுதியளித்துள்ளது.
இரண்டாவது, வடக்கு-கிழக்கில் வாழும் அனைத்து இன மக்களின் அடிப்படை உரிமைகளை கட்டியெழுப்பும் நோக்கோடு தீவிரவாதத்தை ஒழித்தது மாத்திரமின்றி அதிலிருந்து அந்த மக்களை மீட்டெடுப்பதற்கான கள சூழலை உருவாக்கியதோடு ஜனநாயக பொறிமுறைகளையும் பொருளாதார நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மூன்றாவது, காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் காணாமல் போனோர் குறித்த தகவல்களையும் காணாமல் போனோர்களுக்கான இழப்பீட்டு அலுவலகம் ஒன்றையும் ஸ்தாபித்ததோடு உள்நாட்டு சட்ட அமுலாக்க அதிகாரிகள் சபை மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களங்களோடும் மேற்குறித்த தகவல்களை பகிர்ந்தளித்துள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் 21,374 பதிவுகள் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தூடாக திரட்டப்பட்டுள்ளதாகவும் அதில் படையினர் மற்றும் இயற்கை பாதிப்புக்களால் காணாமல் போனோரை நீக்கி 14,988 பதிவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவற்றுக்கான கொடுப்பனவுகள் மற்றும் உதவிகள் அரசாங்கத்தினால் மேற்’கொள்ளப்படுவதாகவும் வெளிநாட்டமைச்சு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்து;ளளது.
நான்காவது, இழப்பீட்டு அலுவலகத்தினூடாக 2018ஆம் ஆண்டு 34ஆம் இலக்க இழப்பீட்டுக்கான அலுவலக சட்டத்தின் பிரகாரம் இழப்பீட்டுக்கான கொள்கை வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பிரகாரம் 2021ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டதில் 900மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 800மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட்-01 திகதியின் அடிப்படையில் 11,327 இழப்பீட்டுக்கான விண்ணப்பத்தில் 5,760 விண்ணப்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், மரணங்கள் குறித்த நஸ்டஈடாக 28,425,000 ரூபாய்களும், ஆதனங்கள் சேதன நஸ்டஈடாக 219,495,814 ரூபாய்களும், காயங்கள் தொடர்பான நஸ்டஈடாக 2,125,000 ரூபாய்களும் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்ட நபர்களுக்கான கடனுதவி அரச வங்கிகளூடாக வழங்கப்பட்டதெனவும் உளவியல் உதவி திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும் அவ்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது, தேசிய ஒற்றுமையும் மற்றும் ஒருமைப்பாட்டுக்குமான செயலகம் ஒன்று உருவாக்கப்பட்டு தேசிய நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் முன்னெடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நல்லிணக்கத்துக்கான கல்வி, நல்லிணக்கத்தக்கான உயர்கல்வி மற்றும் ஆய்வுகள், நல்லிணக்கத்துக்கான கலை மற்றும் கலாசாரம், மோதல் நிலைமாற்று நிகழ்ச்சி திட்டம், நல்லிணக்கத்துக்கான ஊடகம் மற்றும் தொடர்பாடல், இராணுவ விதவைகள் மற்றும் குடும்பத்துக்கான நிகழ்ச்சி திட்டம், பொருளாதார ஈடுபாட்டுடன் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சி திட்டம் மற்றும் உளவியல் உதவி நிகழ்ச்சி திட்டம் என எட்டு கருப்பொருளை கொண்டு தேசிய ஒற்றுமை ஒருமைப்பாட்டுக்கான செயலணி இயங்குவதாக அவ்அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய நிகழ்ச்சி திட்டங்கள் ஒவ்வொன்றையும் மாவட்டங்களூடாகவும் கிராம சேவகப்பிரிவுகளுக்கூடாகவும் கட்டியெழுப்பப்பட்டு வருவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
ஆறாவது, நிலைத்திருக்கும் அபிவிருத்தி என்ற அடிப்படையில் செயற்பட்டுவரும் அரசாங்கமானது அதில் முன்னேற்றமடைந்து இருப்பதாகவும் தேசிய வழிகாட்டல் சபையூடாகவும், பிரதமர் மற்றும் 14 அமைச்சர்களை உள்ளடக்கிய பிரிவினால் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, மனித உரிமைகளோடு நேரடி பொருத்தப்பாட்டை உடைய நிலையான அபிவிருத்தி திட்டங்களை நீதி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்;சி, நீதியை நிலைநாட்டுதல் என்ற அடிப்படையில் ஊக்குவிக்கப்பட்டு வருவதாக அவ்அறிக்கை குறிப்பிடுகின்றது.
ஏழாவது, தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அரசியலமைப்பால் கட்டளையிடப்பட்ட நடைமுறைகளுக்கேற்ப மறுசீரமைக்கப்பட்டதுடன், அதன் சட்டபூர்வமான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய பிராந்திய அலுவலகங்கள் நிறுவுவதற்கும் அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வருகிறது. இதுமட்டுமன்றி விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் அடுத்துவரும் ஆறு மாதங்களில் பொறுப்புக்கூறல் மீது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது என்றும், குறித்த ஆணைக்குழுக்களால் கண்டறியப்பட்ட சர்வதேச மனித உரிமை சட்ட மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களை முன்னைய விசாரணைக்குழுக்களின் கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் பொறுப்புக்கூறல் மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளதாக அவ்அறிக்கை குறிப்பிடுகிறது.
எட்டாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை மறுபரிசீலனை செய்தல் என்ற அடிப்படையில் நீதி அமைச்சின் கீழ் சட்டவல்லுனர்களை உள்ளடக்கி உபகுழுக்களூடாக அதற்கான நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட:டள்ளதாக அவ்அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக ஜனாதிபதியால் அண்மைக்காலத்தில் பெர்துமன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டதையும் அவ்றிக்கை முதன்மைப்படுத்;துகிறது.
ஒன்பதாவது, மீள்குடியேற்றம், நிலத்தை விடுவித்தல் போன்ற பல விடயங்களை சுட்டிக்காட்டும் இவ்அறிக்கை தனியார் காணிகளில் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிக்க வெகுவிரைவில் நடிவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 82.26வீதமான அரச காணிகளையும் 92.22வீதம் தனியார் காணிகளையும் பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவ்அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பத்தாவது, சிவில் சமூகங்களுடனான பிணைப்பினை பலப்படுத்தும் விதத்தில் சிவில் அமைப்புக்களின் கூட்டு என்ற அமைப்பை ஜனாதிபதியின் தலைமையில் 2021.08.03ஆம் திகதி கலந்துரையாடப்பட்டதெனவும், தற்போது சமூக மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டதாகவும் அவ்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச மனித உரிமைகளும் ஏனைய ஒப்பந்தங்கள் குறித்த கடமைகளினையும் ஐ.நா ஸ்தாபனத்தின் சிறப்பு நடவடிக்கைகளுக்காக ஆணையாளரின் பிணைப்பினையும் வலியுறுத்தும் இவ்அறிக்கை எதிர்காலத்தில் ஆரோக்கியமான ஒத்துழைப்பை மேற்கொண்டு சுமூக நிலையை உருவாக்குமென வெளிநாட்டமைச்சு தனது ஜெனீவா அமர்வுக்கான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டு அவதானிக்கும் போது இலங்கை அரசாங்கம் ஜெனீவா அரங்கை கையாளும் அறிக்கையில் தன்மை ஆரோக்கியமான தகவல்களையும் புள்ளிவிபரங்களையும் ஒத்துழைப்புக்கான நகர்வுகளையும் கோடிட்டு காட்டுகிறது. கடந்தகால அரசாங்கங்களை விட அதீத புத்திபூர்வமான அணுகுமுறைக்கூடாக ஜெனீவா களத்தை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அணுகியுள்ளது. இதற்கான பதிலீடு வழங்க வேண்டிய பொறுப்பான்மை தமிழ்த்தேசிய பரப்பில் உள்ள அரசியல் தலைமைகளுக்கே உரித்தானதாகும். ஆயினும் அவ்வகை தலைமைகள் அறிக்கையிடலில் காலதாமதம் மாத்திரமின்றி தமக்குள்ளே முரண்பட்டு கொள்வதும் வழமையான அரசியல் பலவீனமாகவே தெரிகிறது. வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்பட்ட அறிக்கையிடலின் உண்மைத்தன்மையை ஆதாரபூர்வமாக நிறுவுவது அவசியமானதாகும். குறிப்பாக, பயங்கரவாத தடைச்சட்டம், மனித உரிமைகள் ஆணைக்குழுக்களின் நிலைப்பாடு, மனித உரிமைகள் பேணுவதற்கான நடைமுறைகள், காணாமல் போனோர், இழப்பீடு தொடர்பிலான நடைமுறையில் உள்ள பலவீனங்கள், இராணுவத்தை அடிப்படையாக கொண்ட அவ்வகை கட்டமைப்புக்களின் உருவாக்கங்கள், காணி விடுவிப்பு தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளும் நடைமுறைகள் மற்றும் கைதிகள் விடுவிப்பது தொடர்பிலே அரசாங்கம் பின்பற்றிய அணுகுமுறைகளின் பலவீனங்கள் என அனைத்து விடயங்களது உண்மைத்தன்மையும் தகவல்களாகவும் புள்ளிவியல்ரீதியாகவும் நிறுவ வேண்டிய பொறுப்பான்மை தமிழ்த்தரப்புக்கு உண்டு.
எனவே, இலங்கை அரசாங்கம் தந்திரோபாய ரீதியில் ஜெனீவா அரங்கை கையாள ஆரம்பித்துள்ளது. ஜெனீவா களம் அரசாங்கத்தின் ஆரோக்கியமான நகர்வுகளையும் இலங்கை முழுவதற்குமான மனித உரிமை சார்ந்த விடயங்களையும் இராணுவரீதியிலான பிரசன்னத்தை பற்றிய கண்டனங்களோடு இஸ்லாமிய சமூகம் மீதான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பதற்கான ஒரு அரங்கமாகவும் மாறுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரங்கமாக இருந்த ஜெனீவா தென்னிலங்கை ஆட்சியாளர்களின் இராஜதந்திர செய்முறையூடாகவும் தமிழ் தரப்பின் போலித்தனமான அணுகுமுறைகளாலும் வேறுதிசையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இதன் விளைவுகள் இலங்கை தமிழரது அரசியல் பரப்பில் உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டுரீதியிலும் அதிக பாதிப்பை தரக்கூடியதாக அமைய வாய்ப்புள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
