அரசியல் கட்டுரைகள்

பலமடையும் இலங்கை-இந்திய இராஜீக உறவும் பொய்த்துப் போகும் ஈழத்தமிழர் அரசியலும்

இலங்கை தீவை மையப்படுத்தி இந்திய-சீன போட்டி மீண்டும் ஒரு அரங்கை திறந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியா அதிக ஈடுபாட்டை கொண்ட நகர்வுகளை இந்திய வெளிவிவகார செயலாளரின் வருகையோடு முதன்மைப்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவுக்கும் இலங்கைக்குமான நெருக்கம் நட்புறவாகவும் (Friendship), இலங்கைக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு உறவாகவும் (Relationship) இலங்கை ஆட்சியாளர்கள் இந்திய தரப்பை அணுகும் போக்கொன்றை கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் இந்தியாவும் இலங்கை மீது தன்னுடைய அதீத கவணத்தை ஆரம்பித்துள்ளனர். இந்தியாவின் இராஜதந்திர உபாயங்களுடன் இலங்கை அதனை எதிர்கொள்ளும் அணுகுமுறைகளும், தெளிவான அரசியல் களத்தினை பிராந்திய அரசியலில் உருவாக்கியுள்ளது. இக்கட்டுரையும் இலங்கை-இந்திய உறவில் ஏற்பட்டள்ள இராஜதந்திர ஒத்துழைப்பின் விளைவுகளையும் அடையாளப்படுத்துவதாக அமைய உள்ளது.

முதலாவது, இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் வருகையை அடுத்து இராணுவ தளபதி ஐந்து நாள் விஜயமாக இலங்கை வருகை தந்துள்ளார். இலங்கை இராணுவ தளபதியின் அழைப்பின் பேரில் இந்திய இராணுவ தளபதி வருகை தருவது இரு நாட்டுக்கும் இடையிலான பலமான உறவையும் நெருக்கமான ஒத்துழைப்புக்களையும் இருநாடுகளுக்குமிடையில் எற்படுத்துவது என்றும் பரஸ்பரம் இரு நாட்டுக்குமான நலன்களை பலப்படுத்துவதோடு இருநாட்டுக்குமான பாதுகாப்பு ஒத்துழைப்பினை வலுப்படுத்துவதற்கான உரையாடல் என்றும் இலங்கையின் முதல்தரமான பங்காளி என்ற எண்ணப்பாட்டை பலப்படுத்தவது என்றும் கோவிட் தொடர்பான நடவடிக்கைகளில் வழிகாட்டலை மேற்கொள்வது என்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனவே இலங்கை-இந்திய இராணுவரீதியிலான பர்துகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தும் நோக்கோடு இந்திய இராணுவ தளபதியின் வருகை உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய இராணுவ தளபதி இலங்கை வருகை தந்திருக்கும் சமகாலத்தில் அமெரிக்க கடற்படை தளபதி ஐந்து நாள் விஜயமாக இந்தியா வருகை தந்திருப்பதுவும் இதன் தனித்துவங்களையும் விளைவுகளையும் புரிந்து கொள்வதற்கு உதவுவதாக அமையும். அமெரிக்க-இந்திய இராணுவ ஒத்துழைப்பு வலுவடைந்துள்ள சந்தர்ப்பத்தில் அதிலும் குறிப்பாக இந்தோ-பசுபிக் உபாயத்துக்கான கட்டமைப்பு விருத்தி பெறுகின்ற சந்தர்ப்பத்தில் மேற்குறித்த இரு விஜயங்களும் அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மையப்படுத்தி நிகழப்படுவதாகவே தெரிகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் கடற்படைரீதியாக வலுவான ஒத்துழைப்புக்களை ஆரம்பித்து இருக்கிறது.

இரண்டாவது, இந்திய வெளிவிவகார செயலாளர் ஜனாதிபதியை சந்தித்த போது இந்து சமுத்திர பாதுகாப்பு தொடர்பான முன்மொழிவுகளை முதன்மைப்படுத்தி இருந்தார். இந்தியாவும் அதனை ஆரோக்கியமான எண்ணப்பாங்காக கருதுவதுடன் 1971ஆம் ஆண்டு ஐ.நா பொதுச்சபை தீர்மானத்தின் அமைவாக அத்தகைய உரையாடல் ஒன்றுக்கான வாய்ப்பை எதிர்பார்த்ததோடு இலங்கையும் 1960கள் 1970கள் காலப்பகுதியை நோக்கி இலங்கை-இந்திய உறவை நகர்த்த வேண்டுமென விண்ணப்பங்களை இந்திய தரப்போடு முன்வைக்கின்றது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சியிலிருந்த காலப்பகுதியில் இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்திருந்த காலப்பகுதியில் கட்டுப்படுத்தும் நோக்குடன் அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்துக்குமிடையில் அணுவாயுத போர் ஒன்று இந்து சமுத்திர பிராந்தியத்தில் என்ற உணர்வின் அடிப்படையிலேயே இந்து சமுத்திரம் சமாதானத்திற்கான வலயமாக முன்மொழியப்பட்டு சோவியத் ஒன்றியம் உட்பட 123 நாடுகள் அத்தீர்மானத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தன. அப்போது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. ஆனால் இன்றையநிலை வேறுவிதமான சீனாவின் பிரசன்னம் இந்து சமுத்திரத்தில் அதிகரித்த போது சீனாவின் கடற்படையும், நீர்மூழ்கிகளும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் வலுவான நிலையில் 2009களுக்கு பின்னர் அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்துக்கு சீன நீர்மூழ்கியின் வருகை இந்தியாவிற்கு அதிர்ச்சியான விடயமாக அமைந்தது. அதுமட்டுமன்றி இந்து சமுத்திரத்தின் விளிம்பு நாடுகளை மையப்படுத்தி சீனாவின் துறைமுக விஸ்தரிப்பு கொள்கை கடற்படைரீதியாகவும் இராணுவரீதியாகவும் முக்கியமானது என்ற கருத்துநிலை வளர்ச்சியடைந்துள்ளது. லேடன் துறைமுகத்திலிருந்து மலாக்கா நீரிணை வரையில் துறைமுகங்களூடான சீனாவின் பலம் இந்து சமுத்திரத்தில் அதிகரித்துள்ளது. இத்தகைய பலப்படுத்தல்களையும் 49வருடம், 99வருடமென பல துறைமுகங்களை இந்து சமுத்திர பிராந்தியத்துக்குள் சீனா குத்தகைக்கு பெற்றுள்ள நிலையில் இந்து சமுத்திரத்தின் சமாதான வலயத்துக்கான பிரகடனம் அதிக குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்தியா அண்மைக்காலத்தில் இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் கூட்டமைப்பில் இலங்கை, மாலைதீவு மொரிசியஸ், சிசில் தீவுகள் என்பவற்றை உள்ளடக்கி உருவாக்கி இருப்பதோடு இந்தோ-பசுபிக் உபாயத்தின் அங்கமாக குவாட் நாடுகளின் உருவாக்கம் நிகழுகின்ற போது பிரித்தானியா, அமெரிக்க அவுஸ்ரேலியா கடற்படைரீதியிலான உடன்படிக்கையை வலுவாக்கிய சூழலில் அதன் எதிர்கால கட்டமைப்பு பிளஸ்3 என்று அழைக்கப்படும் இந்தியா, ஜப்பான், தென்கொரியாவினையும் இணைத்து கொள்வதற்கான உரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இலங்கையோடு அதீத இராணுவ நெருக்கத்தையும் உறவையும் பலப்படுத்த விளையும் போது இந்து சமுத்திர சமாதான பிரகடனம் அதிக குழப்பத்தை ஏற்படுத்த முனைகின்றது.

மூன்றாவது, அண்மைக்கால கட்டத்தில் இந்திய-இலங்கை உறவினை சீர்படுத்துவதற்கான முனைப்புக்களை இந்தியா முதன்மைப்படுத்தி வருகிறது. வெளிப்படையாக பார்த்தால் இந்தியா இலங்கை மீது செல்வாக்கு செலுத்துவதாகவே தெரிகிறது. ஆனால் அண்மைக்கால கட்டங்களில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட இந்திய வெளிவிவகார அமைச்சர், இந்திய வெளிவிவகார அமைச்சரின் செயலாளர் தற்போது இராணுவ தளபதி உட்பட அணைவருமே இலங்கை அழைத்ததின் பேரிலே வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே இதனை இராஜதந்திர உரையாடலாக கருத வேண்டிய நிலை காணப்படுகிறது. இலங்கை பிராந்தியத்திலும் சர்வதேசத்திலும் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சுமுகமாக நகர்த்துவதன் மூலம் உள்நாட்டில் ஏற்படும் நெருக்கடிகளை சிறப்பாக கையாள்கிறது. இந்தியா தரப்பை அழைப்பதன் மூலம் அத்தகைய இலக்கை அடையாளமென இலங்கை ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்திய தரப்போ அத்தகைய சூழலை பயன்படுத்தி இலங்கை மீதான சீன தலையீட்டை நிராகரிப்பதோடு தனது தனித்துவமிக்க பிராந்தியமாக இலங்கை தீவையும் பயன்படுத்த திட்டமிடுகிறது. எனவே இங்கு இரண்டு தரப்புக்கும் இடையிலே இருக்கின்ற அரசியல் நலன்களுக்குள்ளே சமகால அரசியலின் போக்கு காணப்படுகிறது. இதில் இரு தரப்புக்களும் தமது நலன்களை அடைவதில் குறியாக இருக்கின்றார்கள் என்பதை அவர்களது உரையாடல்கள் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

நான்காவது போர் முடிந்த பிற்பட இலங்கை-சீன உறவு பலப்படுத்தலானது இந்திய-இலங்கை உறவின் பலப்படுத்தலின் ஒப்பீடோடு அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக 2009களுக்கு பிற்பட சீன ஜனாதிபதி, பிரதமர் உட்பட சீன அரச மட்டத்திலான அதிகாரிகள் 60இற்கு மேற்பட்ட விஜயங்களை மெற்கொள்ள இந்திய தரப்பு பிரதமர் மற்றும் வெளிவிவகார செயலாளர் உட்பட 20இற்கும் குறைவாக இராஜதந்திர சந்திப்புக்களையே இலங்கையுடன் ஏற்படுத்தியுள்ளார். இதனை அவதானிக்கும் போது இராஜீக உறவு என்பது சீனாவினால் நெறிமுறைக்கு உட்படுத்தி தொடர்ச்சியான உரையாடல்களையும் உடன்பாடுகளையும் ஒத்துழைப்புக்களையும் ஏற்படுத்தியதன் மூலம் நெருக்கத்தையும் பலத்தையும் இலங்கையோடு ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் இந்தியாவோ அத்தகைய அணுகுமுறையை மிகப்பிந்திய காலத்திலேயே ஆரம்பித்துள்ளனர். ஆனால் இந்திய மட்டத்தில் அத்தகைய இராஜீக செய்முறையொன்றை தொடர்ச்சியாக மேற்கொள்கின்ற கொள்கை வகுப்போடு இயங்க அரம்பித்துள்ளது. இதன் தனித்துவம் அதிக மாற்றங்களை ஏற்படுத்துமென இந்திய தரப்பு எதிர்பார்க்கிறது.

ஐந்தாவது, கலாச்சார ரீதியிலான உறவை இலங்கைக்கும் இந்தியாக்குமிடையே முதன்மைப்படுத்தும் வகையில் இலங்கை-இந்திய உறவ காணப்படுகிறது. ஆனால் அத்தகைய கலாச்சார உறவின் மையப்புள்ளி தமிழர்களும்-தமிழகமும் என்றே அதிகம் முதன்மைப்படுத்தப்படுகிறது. ஆனால் பௌத்தத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை-இந்திய உறவின் கட்டமைப்பு புதுடில்லி-கொழும்பு உறவை அசோகனுடைய ஆட்சிக்காலத்திலிரந்த வெள்ளரசு மரக்கிளையிலிருந்து இலங்கை ஆட்சியாளர்கள் புனிதப்படுத்தி வருகின்றனர் அதன் தொடர்ச்சியே ஒக்டோபர்-20(2021) அன்று குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தினை ஆரம்பித்து வைப்பதற்கு இந்திய பிரதமரோடு இணைய விளையாட்டத்தறை அமைச்சர் 100 பௌத்த பிக்குகளோடு விஜயம் செய்ய உள்ளதாகவும் புதுடில்லி-கொழும்பின் கலாச்சார உறவை இது பலப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னோடியாக இலங்கையில் உள்ள சீதாஎலிய கோயிலிலிருந்து பாபர் மசூதியில் அமைக்க உள்ள இராமர் கோயிலுக்கு அத்திவாரக்கட்டமைப்புக்கு இந்தியாவிற்கான இலங்கைத்தூதுவர் மிலிந்த மொறகொடவால் அத்திவாரக்கல் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இது இரு நாட்டுக்குமான கலாசார பிணைப்பின் வலிமையான இராஜீக முயற்சியாக தெரிகிறது. அதேநேரம் பலாலி விமான நிலையத்திலிருந்து காரைக்கால் விமான நிலையத்துக்கும் மற்றும் இந்தியாவிற்கான விமான பயணங்களுக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நடைமுறையும் வடக்கு-கிழக்கு மீதான பௌத்த மதத்தின் பரவலாக்கத்திற்கு எதிரான நடைமுறைகளும் எத்தகைய அர்த்தத்தையும் இந்திய-இலங்கை தமிழர் அரசியலில் தீர்வு தரும் விடயமாக அமையும் என்ற சந்தேகம் தவிர்க்க முடியாததாகும்.

ஆறாவது, இந்தியாவின் அரசியல் தலைமைகளின் முக்கியமானவரும் இலங்கை ஆட்சியாளர்களில் நெருக்கமான நண்பருமாகிய சுப்பிரமணியம் சுவாமி அலரி மாளிகையில் நிகழ்ந்த சரஸ்வதி பூஜை நிகழ்வுக்காக தனி விமான நிலையத்தில் இலங்கை வருகை தந்திருந்தார். அவரது வருகை கலாச்சாரரீதியில் முக்கியத்துவம் பெற்றதுடன் இலங்கை-இந்திய நட்புறவின் பிரதான விடயமாக பதிவு செய்யப்படுகிறது. தென்னிலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களால் அதிகம் முதன்மைப்படுத்தப்படும் சுப்பிரமணிய சுவாமி இலங்கைக்கான உண்மையான நண்பன் இந்தியா என்பதை மீள வலியுறுத்தி வருவதோடு இலங்கை-இந்திய உறவை பலப்படுத்துவது புதுடில்லியின் நகர்வுகளை கடந்து செயற்படுகின்ற ஒருவராகவும் தற்போதைய ஆட்சியளார்களின் அரசியல் போக்கினை அங்கீகரிப்பவராகவும் காணப்படுகின்றார். இவரை முன்னிறுத்தி இலங்கை-இந்திய உறவினை உரையாடுவதை விட தற்போதைய இலங்கை ஆட்சியாளர்களையும் சுப்பிரமணியம் சுவாமியையும் மையப்படுத்தி கொழும்பு புதுடில்லி உறவை மதிப்பீடு செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது. ஆனால், நெருக்கடியான சந்தர்ப்பங்கள் எல்லாவற்றிலும் இலங்கையை உற்ற நண்பனாக செயற்படுவதே முக்கியமான அரசியல்வாதியாக காணப்படுகிறார்.

எனவே, இலங்கையும் இந்தியாவும் அதிக நெருக்கமாகின்ற சந்தர்ப்பத்தில் ஈழத்தமிழரின் அரசியல் கவனத்தில் கொள்ளாத நிலை கடந்த காலங்களில் அவதானிக்க முடிகிறது. மாகாணசபை தேர்தலை மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கான முனைப்பை இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக நிகழ்த்த வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை ஆட்சியாளருக்கு ஏற்பட்டள்ளது. ஆனால் இத்தகைய அறிவிப்புகள் பலது மாகாண சபை தேர்தல் பற்றி தென்னிலங்கை முன்வைத்த ஆனால் கைவிட்டுள்ளது. ஆனால் ஜெனிவா அரங்கு அதற்கான சூழலை அதிகரிக்கும் என்ற நிலை தெரிகிறது. இலங்கையும் இந்தியாவும் இராஜீக நடவடிக்கையூடாக பாரிய போராட்டத்தில் ஈடுபடுகிற போது ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகள் அத்தகைய அரசியல் பற்றிய எவ்வித கரிசணையுமின்றி முதலமைச்சருக்கும் கட்சியின் தலைமைக்கும் போட்டிபோட்டு தமக்குள்ளேயே மோதிக்கொள்ளும் அபத்தம் அரங்கேறிவருகிறது. இவர்களை முன்னிறுத்தி ஈழத்தமிழரின் அரசியல் நகர்வது என்பது சாத்தியமா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகும். இந்திய தரப்பு அரசியல் தலைமைகளின் ஒற்றுமை பற்றி விரிவுரை எடுக்கும் துயரம் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கிடைத்திருக்கிறது. இவர்களது அணுகுமுறை மாகாணசபையின் ஆளுகையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)