கடந்த 13 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட சிரிய உள்நாட்டுப் போர், குறுகிய கால உறைநிலைக்கு பின்னர், மீண்டும் ‘சிரிய உள்நாட்டு போர் 2024’ என்ற பெயர்ப்பலகையில் தலைப்பு செய்தியாகி உள்ளது. மேற்காசியாவின் புவிசார் அரசியல் நிலைமைகள் மற்றும் சர்வதேச அரசியலில் நிறைந்துள்ள போர்க்களங்கள் என்பவற்றை உள்வாங்கி சிரியா உள்நாட்டுப் போர் மீள் வடிவம் பெற்றுள்ளது. குறிப்பாக சிரியாவின் கிளர்ச்சிப்படைகள் சிரிய அரசாங்கத்தின் ஆதரவு அணியின் வலிமை பலவீனப்பட்டு மற்றும் வேறு போர்க்களங்களில் கவனம் குவிக்கப்பட்டுள்ளமையை திட்டமிட்டு போரை நகர்த்தியுள்ளதுடன், ஆரம்ப வெற்றிகளையும் உறுதி செய்துள்ளது. அதேவேளை சிரிய உள்நாட்டுப் போரும் ஒரு பினாமி போராக இருப்பதால், மீளவொரு முடிவற்ற போருக்கான ஆரம்பமாகவே சிரிய உள்நாட்டு போரை சர்வதேச அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இக்கட்டுரை சிரிய உள்நாட்டு போர் 2024இன் அரசியல் பரிமானத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் வடமேற்கில் உள்ள கிளர்ச்சிப் படைகள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் படைகளுக்கு எதிராக நவம்பர்-27(2024)அன்று திடீர் தாக்குதலைத் தொடங்கி வியத்தகு பிராந்திய ஆதாயங்களைப் பெற்றனர். ஒரு வாரத்தில் சிரிய கிளர்ச்சிப் படைகள் சிரியாவின் வடமேற்கின் பெரும்பகுதியை அரசாங்கத்திடம் இருந்து வேகமாக நகரும் தாக்குதலில் கைப்பற்றியுள்ளன. 2011இல் அரபு வசந்தத்தால் தூண்டப்பட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் வெடித்த சிரிய உள்நாட்டுப் போர், 2016ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆட்சி அதன் இழந்த பெரும்பாலான பகுதிகளை மீண்டும் கைப்பற்றிய பின்னர் ஒரு உறைந்த கட்டத்திற்குள் நுழைந்தது. ஓரளவு அமைதி நிலவியது. ஆனால் அரபு குடியரசில் உண்மையான அமைதி இல்லை. சமீபத்திய மோதல்களால், அமைதி உடைந்து, சூடான போர் மீண்டும் தொடங்கியுள்ளது. அலெப்போ மகாணத்தின் பெரும்பகுதியை, அதன் விமான நிலையம், இராணுவ தளங்கள் மற்றும் பல நகரங்கள் மற்றும் கிராமங்களைக் கைப்பற்றிய பின்னர், டிசம்பர்-05அன்று கிளர்ச்சியாளர்களின் கைகளில் இதுவரை சிக்காத மேற்கு நகரமான ஹமாவிலிருந்து அரசாங்கப் படைகளை சிரிய கிளர்ச்சிப்படை விரட்டியடித்தனர். கிளர்ச்சிக்குழு சிரிய தலைநகர் டமாஸ்கஸிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர்கள் (125 மைல்கள்) தொலைவில் உள்ள ஹமா கவர்னரேட்டிற்கு தெற்கே முன்னேறியுள்ளனர். அல்-கொய்தாவுடன் முந்தைய உறவுகளைக் கொண்ட ஒரு சுன்னி இஸ்லாமியக் குழவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) எனும் கிளர்ச்சிக்குழுவே 2024ஆம் ஆண்டு உள்நாட்டுப்போரில் சிரிய கிளர்ச்சிக்குழுவிற்கு தலைமையினை வழங்குகின்றது.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் இந்த நடவடிக்கையை பல மாதங்களாகத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்பட்டாலும், புவிசார் அரசியலின் மாற்றம் இது மிகவும் பொருத்தமான நேரமாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் சிரிய அரசாங்கத்துக்கான ஆதரவை மற்றும் சிரிய ஜனாதிபதி அசாத்தை பாதுகாப்பதில் ரஷ;யா, ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு ஆகியன வழங்கியிருந்தன. எனினும் சமகாலத்தில் மூன்றும் நெருக்கடியான சூழலில் காணப்படுகின்றது. லெபனானில் ஹிஸ்புல்லாவை பெருமளவு இஸ்ரேல் சிதைத்துள்ளது. சிரியா மற்றும் பிற இடங்களில் ஈரானின் பினாமி வலையமைப்பை கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் சீரழித்தது. மற்றும் ரஷ;யா உக்ரைனில் அதன் மூன்று வருட காலப் போரில் கவனம் செலுத்துகிறது. இதனால் சிரியாவில் ரஷ;யாவின் ஆதரவும் குறைந்து கொண்டே வந்தது. இத்தகைய அசாத் மற்றும் சிரிய அரசாங்கத்தின் பலவீனமான மதிப்பீட்டிலேயே சிரிய கிளர்ச்சிப்படை விரைவான தாக்குதலை ஆரம்பித்து, குறுகிய காலத்தில் வெற்றிகளையும் உறுதி செய்துள்ளது.
சிரிய உள்நாட்டுப் போரை குறுகிய நிலையில் சிரிய எல்லைக்குட்பட்ட போராகவோ அல்லது பகுதியளவில் பிராந்திய செல்வாக்கு கொண்டதாகவோ சுருக்கி விட முடியாது. தலைப்பு ‘சிரிய உள்நாட்டுப் போராக’ அமைகின்ற போதிலும், இதுவொரு வகையில் சர்வதேச பிராந்திய சக்திகளின் பினாமி போராகவே கடந்த 13 ஆண்டுகளாக நிலை பெற்றுள்ளது. பினாமி போர் கருத்தின் அடிப்படையில் அதைப் பார்ப்பது அவசியம். அரசறிவியலாளர் மற்றும் இராணுவ வரலாற்றாளர் அன்ட்ரூ மம்போர்ட் (Andrew Mamford) பினாமி போரால் ஏற்படக்கூடிய மூன்று விளைவுகளை அடையாளப்படுத்துகின்றார். ஒன்று, பயனாளிக்கும் பதிலாள்களுக்கும் இடையே நீண்ட காலத்திற்குச் சார்ந்திருத்தல்; இரண்டு, அசல் போரின் நீட்சி அல்லது தீவிரமடைதல்; மூன்று, மோதல் ஆரம்ப எல்லைக்கு அப்பால் செல்லுதல் அல்லது ஒரு போர் முடிவடைந்தவுடன் பங்கேற்பாளர்களுக்கு திட்டமிடப்படாத பின்னடைவை ஏற்படுத்துகிறது. இக்கருத்தியலின் பொருத்தப்பாடுகளுடனேயே சிரியாவில் இடம்பெறும் பினாமி போர் கடந்த 13 ஆண்டுகளும் நீட்சி பெறுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அதேவேளை தற்போது குறுகிய காலத்தில் கிளர்ச்சிப்படைக்கு ஏற்பட்டுள்ள வெற்றிகள் அசாத் ஆட்சியின் முடிவாகவும் உறுதிப்படுத்த இயலாது. அசாத்தின் ஆதரவாளர்கள் எந்த அளவுக்கு கவனச்சிதறல் அல்லது சோர்வடைகிறார்களோ, அந்த அளவுக்கு அவரது ஆட்சி பாதிக்கப்படும். ஆனால் அசாத் பலவீனமாக இருப்பதால், சண்டை அவரது ஆட்சியைக் கவிழ்க்க வாய்ப்பில்லை. ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் அசாத் மிக முக்கியமான கூட்டாளி. ஈரான் சிரியாவிற்கு ஒதுக்கக்கூடிய வளங்கள் மேற்கத்தேய தடைகள் மற்றும் ஹிஸ்புல்லாவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய வாய்ப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டிருந்தாலும், ஈரானின் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பு அச்சில் மற்றொரு பெரிய இழப்பைத் தவிர்க்கவே விரும்புவார்கள். ஈரான் ஏற்கனவே ஈராக்கில் இருந்து இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையுடன் இணைந்த போராளிகளை நிலைநிறுத்தியது போல், பணியாளர்களுடன் தலையிடுவது உட்பட, அசாத்துக்கு முட்டு கொடுக்க ஆதரவை முறையாக அதிகரிக்கும். ரஷ;யாவும் அதன் பங்கிற்கு, சிரியாவில் உள்ள இராணுவ தளங்களுக்கு அதன் அணுகலைத் தக்க வைத்துக் கொள்ளவும், அவமானகரமான வெளியுறவுக் கொள்கை தோல்வியைத் தவிர்க்கவும் முனைப்புடனேயே செயற்படும். ஊக்ரைனின் இடம்பெறும் போருக்கு, சிரியாவில் இடம்பெறக்கூடிய வெளியுறவுத் தோல்வி உளவியல்ரீதியாக பலவீனத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் எனவே, உக்ரைனில் நீட்டிக்கப்பட்டிருந்தாலும், அது அதிகரித்த வான்வழித் தாக்குதல்கள் மற்றும் புதிய இராணுவ வன்பொருள் மூலம் அசாத்தின் படைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும். அவ்வாறே பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கும் இப்போர் நீடிப்பது ஹமாஸிடனான போருக்கான சுதந்திரமான சூழலை உருவாக்கக்கூடியதாகும். சிரியாவில் தொடரும் சண்டையானது லெபனானில் பலவீனமான போர்நிறுத்தத்தை பாதுகாக்க உதவும். ஏனெனில் ஈரானோ அல்லது ஹிஸ்புல்லாவோ தங்கள் நட்பு நாடு கயிற்றில் இருக்கும் வரை அந்த முன்னணியை மீண்டும் திறக்க விரும்பபோவதில்லை. பினாமிகளின் இந்நாட்டம் இப்போரை இரத்தக்களரியாக நீடிக்க செய்யக்கூடிய ஏதுகூறுகளே காணப்படுகின்றது.
சிரிய உள்நாட்டு போரில் புவிசார் அரசியலின் தாக்கம் மற்றும் ஈடுபாடு நவ-யதார்த்தவாத கோட்பாட்டை ஆழமான பிணைக்கிறது. சிரிய மோதல்கள் பிராந்திய ரீதியாகவும் உலக அளவிலும் பாதிக்கப்படுவதாகக் காணப்படுவதால், கென்னத் வால்ட்ஸின் நவ-யதார்த்தவாத கோட்பாடு செல்வாக்கு செலுத்துகிறது. இந்த கோட்பாடு மனித இயல்பை விட கட்டமைப்பு அல்லது சர்வதேச அமைப்பு அரசுளின் அராஜக இயல்பை தீர்மானிக்கிறது. கட்டமைப்புவாதம், அதிகார சமநிலை மற்றும் பாதுகாப்பு சங்கடங்கள் ஆகியவற்றின் முக்கிய கருத்துக்கள் ஆட்சிப் படைகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான சண்டையை மட்டுமல்ல, இந்த உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளர்களின் இயக்கவியலையும் விவரிக்க சிறந்ததாகக் கருதப்படுகிறது. மத்திய கிழக்கு புவிசார் அரசியலின் கட்டமைப்பு அராஜகம் மற்றும் பாதுகாப்பு சங்கடங்களை ஏற்படுத்தியது. அதையொட்டி போட்டி மற்றும் அதிகாரத்தை சமநிலைப்படுத்துகிறது. முதலாவதாக, அராபிய எழுச்சி நிகழ்வின் வடிவில் உள்ள புவிசார் அரசியல், ஒரு சர்வாதிகாரிக்கு அடுத்ததாக ஒரு சர்வாதிகாரியை வீழ்த்தியது. அசாத்தை அதிகாரத்தில் நீடிக்க தனது அனைத்தையும் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியது. இது அவரது முதன்மை ஆர்வமும் பாதுகாப்பு சங்கடமும் ஆகும். இரண்டாவதாக, குறுங்குழுவாத பிளவு பிராந்திய இருமுனையில் விளைகிறது. அங்கு தாக்குதலுக்கு போட்டியிடும் மற்றும் சமநிலைப்படுத்தும் சக்திகள் சிரிய உள்நாட்டுப் போரில் அந்தந்த பினாமிகள் மூலம் போராடுகின்றன. இதன் விளைவாக, சர்வதேச சமூகமும் இந்த பிளவுக்கு இழுக்கப்படுகிறது, ரஷ்யா ஒரு பக்கம் அசாத்துக்கு ஆதரவாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுபுறம் எதிர்ப்பை ஆதரிக்கின்றன. இத்தகைய கட்டமைப்பு நிலைமைகள் மிகவும் வலுவானவை, 2011இன் சிரிய எழுச்சி, ஆரம்பத்தில் குறுங்குழுவாத இயல்புடையதாகக் காணப்படவில்லை. இது குறுங்குழுவாதத்தால் வலுவாக வகைப்படுத்தப்பட்ட நீண்ட உள்நாட்டுப் போராக விரைவாக உருவெடுத்தது. உலகளாவிய அளவில், நவயதார்த்தவாதம் ‘கிழக்கு-மேற்கு போட்டியில்’ தெளிவாக உள்ளது. உள்நாட்டுப் போர் முழுவதும் இந்தப் பிளவு தொடர்ந்தது மற்றும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம் அதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அர்த்தமுள்ள முயற்சிகளுக்கு இடையூறாக இருந்தது. இந்த மோதலில் சர்வதேச கட்டமைப்பு அமைப்பின் செல்வாக்கு இதுதான். இந்த தொடர்ச்சியிலேயே சிரிய உள்நாட்டுப்போர்-2024உம் நகர்கின்றது.
எனவே, ‘சிரிய உள்நாட்டுப்போர்-2024’ 13 ஆண்டுகால பினாமி போரின் தொடராக நீள்வதாகவே அமைகின்றது. சிரியாவின் புவிசார் அரசியல் காரணி இப்போரை சிரிய வரலாற்றின் மற்றுமொரு இரத்தக்களரியாகவே பதிவு செய்யக்கூடியதாகவே அமைகின்றது. இது புதிதானதாகவோ அல்லது புதியதொரு ஆட்சியை உருவாக்குவதற்கான போராகவோ வரையறுத்துவிட முடியாது. இது கடந்த காலத்தின் நீட்சி மற்றும் எதிர்காலத்திற்கான இடைத்தங்கல். இதில் பெரிய மாற்றங்களை உருவாக்கி விடப்போவதில்லை. சிரியாவின் கொடிய இரத்தக்களரி வரலாற்றில் ஒரு பகுதியாகவே அமையக்கூடியதாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
