உலக அரசியலுக்கு தலைமை தாங்கும் நாடான அமெரிக்கா, டொனால்ட் ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சி காலத்துக்கு தயாராகின்றது. அவரது இரண்டாவது ஆட்சி காலம் அதிக நெருக்கடிமிக்கதாக அமையப்போகிறது என்பதை முன்கூட்டியே அவரது உரையாடல்கள் உணர்த்துகின்றன. உலகத்தை தனது பிடிக்குள் வைத்துக்கொள்ள திட்டமிடும் அமெரிக்காவின் அரசியல் அமைப்பு, உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளையும் மாநிலங்களாக கருதுகின்ற மனோநிலையோடு கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலை விட உலகளாவிய அரசியலே முதன்மையானதாக காணப்படுகின்றது. அதற்கு தலைமை தாங்கும் ஆளுமை அமெரிக்க ஜனாதிபதிக்கு உண்டு என்பதை அரசியல் அமைப்பு வெளிப்படுத்துகிறது. இக்கட்டுரையும் இரண்டாவது பதவிக்காலத்தில் டொனால்ட் ட்ரம்ப் எதிர்கொள்ள இருக்கும் அல்லது திட்டமிடும் உலக அரசியல் விடயங்களை தேடுவதாக அமைய உள்ளது.
அமெரிக்காவின் தாராண்மைவாத ஜனநாயக முகமும், உலகத்தின் மீதான சர்வாதிகார முகமும் ஒன்றாகவே காட்சிப்படுத்தப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டு உலக அமைதிக்கானதாக விவாதிக்கும் மேற்கு நாட்டவர்கள், அமெரிக்காவின் தாராள ஜனநாயக முகத்தை சர்வாதிகாரமாகவோ அல்லது இராணுவ கெடுபிடிக்குரியதாகவோ அளவீடு செய்வதில்லை. மாறாக அதுவே ஜனநாயகம் என்றும், சட்டத்தின் ஆட்சி என்றும் விவாதிப்பதுண்டு. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் முன் இருக்கும் நெருக்கடிகள் ஆழமாக அவதானிக்கப்பட வேண்டும். முக்கியமாக அவற்றை விரிவாக நோக்குவது அவசியமானது.
முதலாவது, உலக அரசியலில் காசா-இஸ்ரேல் போரானது முடிவுக்கு வரவேண்டிய நெருக்கடிக்குள் இருக்கிறது. அதே வேளையில் ஹமாஸ் அமைப்பு மீது போர் நிறுத்த உடன்பாட்டை டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தி வருகின்றார். அதற்கான காலக்கெடுவையும் தனது பதவிக்காலத்தின் ஆரம்ப நாட்களை மையப்படுத்தி முன்வைத்துள்ளார். ட்ரம்ப் யூதப் பணய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மைப்படுத்தியுள்ளார். அது சாத்தியப்படத் தவருகின்ற பட்சத்தில் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தகைய எச்சரிக்கை ஈரானையும், மேற்காசிய அரசியலையும் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது ஆட்சி காலப்பகுதி எவ்வாறு கையாள போகிறது என்பதை அடையாளப்படுத்துகிறது. இதுவரையிலும் முழுமையாக ஹமாஸ் அமைப்பினால் கைது செய்யப்பட்ட யூதப் பணய கைதிகள் இதுவரையில் மீட்டெடுக்கவும், விடுவிக்கப்படவோ இல்லை. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கை அதிக குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டாவது, அமெரிக்க ஜனாதிபதி தனது முதலாவது ஆட்சிக் காலப்பகுதியில் ஈரான் மீது அணு ஆயுதம் தொடர்பில் தன்னிச்சையான முடிவுகளை எடுத்திருந்தார். மேலும், ஈரானின் இராணுவ தளபதி சுலைமானி மற்றும் அணு விஞ்ஞானியை கொலை செய்ததன் மூலம் ஈரானுக்கு எதிரான எண்ணப்பாங்கை முதன்மைபடுத்திருந்தார். பதிலுக்கு டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி பதவியை இரண்டாவது தடவை கைப்பற்ற முயற்சிக்கின்ற போது, அவர் மீது இரு தடவை தாக்குதல் நிகழ்த்தப்பட்டதோடு ஈரான் தொடர்புபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடனான உறவானது பாரிய அச்சுறுத்தலையும் நெருக்கடியையும் ஏற்படுத்தக் கூடியதாக தென்படுகின்றது. மேற்காசியாவின் அரசியல் வரலாற்றிலே இக்காலப் பகுதி அதிகம் போர்ச் சூழலை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது, ரஷ்சிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக தேர்தல் காலத்தில் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தாலும், அதற்கான வாய்ப்புகளை ரஷ்சியா வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக உக்ரைன் மீது தொடர்ச்சியான தாக்குதலை ரஷ்சியா நிகழ்த்துகின்ற சூழலில், நேட்டோவும் மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு வழங்கும் நீண்ட தூர தாக்குதல் ஆயுதங்கள் எதிர்காலத்தில் இரு நாட்டுக்குமான போரை முடிவுக்கு கொண்டு வருமா என்ற கேள்வியே தந்துள்ளது. இதனால் டொனால்ட் ட்ரம்ப் அதிக நெருக்கடியை சந்திக்கும் நிலையை எதிர்கொள்ள உள்ளார். ஆனால் அத்தகைய நெருக்கடியை ட்ரம்ப் பெற்றுக் கொள்வாரா என்பது ரஷ்சிய ஜனாதிபதி புடின் சார்ந்தது. இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட நட்பு மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது முக்கியமானது.
நான்காவது, இவை எல்லாவற்றையும் கடந்து பனாமா கால்வாய் பொறுத்து எழுந்திருக்கும் புதிய சர்ச்சை அமைகின்றது. பனாமா கால்வாயை அமெரிக்காவின் ஆதிக்கத்துக்குள் கொண்டு வர டொனால்ட் ட்ரம்ப் எடுத்திருக்கும் நடவடிக்கை குழப்பத்தை தந்துள்ளது. சீனா கொண்டிருக்கின்ற ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல் என்ற யுக்தியின் அடிப்படையிலேயே அமெரிக்க ஜனாதிபதியின் அணுகுமுறை காணப்படுகிறது. பனாமா கால்வாயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுதல் என்பது அதிக அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியது. உலக அரசியலில் மிகப் பிரதான இடத்தை வகிக்கும் பனாமா கால்வாய் பொருளாதார ரீதியிலும் மிக முதன்மையான விடயமாக காணப்படுகிறது. கடல் வர்த்தகம், போக்குவரத்து போன்ற விடயங்களில் பனாமா கால்வாயின் முக்கியத்துவம் சுயஸ் கால்வாய் போன்று காத்திரமானது. இதன் மீது அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கவனம், சீனா-அமெரிக்காவுக்கு இடையில் மட்டுமின்றி ஏனைய கீழைத் தேச மேற்குலக நாடுகளுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தக் கூடியது. இப்போக்குவரத்து பாதையினுடைய நெருக்கடி மேற்கு நாடுகளின் பொருளாதார ரீதியான இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
ஐந்தாவது, டொனால்ட் ட்ரம்ப் தனது ஆட்சிக்கால பகுதியில் ஐஸ்லாந்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயல்கின்றார். ஐஸ்லாந்து ரஷ்சியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே காணப்படும் மிக முக்கியமான புவிசார் அரசியல் பிரதேசமாக விளங்குகிறது. ஐஸ்லாந்தினுடைய தற்போதைய இருப்பை அமெரிக்கா கைப்பற்றுமாக இருந்தால், அது சார்ந்து எழக்கூடிய நெருக்கடி ஐரோப்பிய-அமெரிக்க உறவிலும்; ரஷ்சிய-ஐரோப்பிய உறவிலும்; ரஷ்சிய-அமெரிக்க உறவிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. எனவே இதன் மூலம் மேற்கு தனது எல்லைக்குள் மோத வேண்டிய அடிப்படைகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.
எனவே, ஏற்கனவே அவதானிக்கப்பட்ட அம்சங்களை கடந்து புதிய பல விடயங்களை அமெரிக்காவின் ஜனாதிபதி ஏற்படுத்த விளைவதாகவே தெரிகிறது. சீனாவுடனான வர்த்தக உறவில் அதிக மாற்றங்களை ஏற்படுத்த போவதாக அறிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவோடும் அதிக குழப்பமான முடிவுகளை வெளிப்படுத்தி வருகின்றார். இவை டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது ஆட்சி காலப்பகுதி அதீதமான குழப்பத்தையும், குடியரசு கட்சிக்கே உரித்துடைய போர் முகத்தையும் அடையாளப்படுத்த தயாராவதாக தெரிகிறது. இச்சூழலில் மீள முடியாத இராணுவவாதத்தையும் அதற்கான கட்டமைப்புகளையும் திட்டமிடும் அமெரிக்கா, உலகளாவிய ரீதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்ற முயற்சிகளில் ஈடுபட தயாராகின்றது. பொருளாதாரச் சுமை, வறுமை, உலகளாவிய தொற்று நோய்களின் தாக்கம், காலநிலை சிதைவு என்பனவற்றோடு டொனால்ட் ட்ரம்பின் வருகை மீளவும் உலகத்துக்கு பாரிய நெருக்கடியை தரக்கூடியதாக அமைய உள்ளது. அமெரிக்காவின் வெளியுறவு என்பது தனித்துவமானதாக அமைந்திருந்த போதும், அதில் ஏற்படுகின்ற மாற்றங்களை நோக்கி அமெரிக்க ஆட்சியாளர்கள் செயல்படுகின்ற போது, உலகத்தின் பிடியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என கருதுகின்றனர். அதற்கான அணுகுமுறைகளையே அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் ஆட்சிக்கு முன்னரே அடையாளப்படுத்த தொடங்கியுள்ளார். அவரது இரண்டாவது ஆட்சி காலப்பகுதி உலகம் அதிக நெருக்குவாரங்களை எதிர்கொள்ளும் என மதிப்பீடு செய்யப்படுகிறது. இதன் விளைவுகள் கீழைத்தேச நாடுகளையும் அதற்கான அரச கட்டமைப்பையும் பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கக்கூடியது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
