வெனிசுவெலா நாட்டின் மீது அமெரிக்காவின் அடாவடித்தனமான ஆக்கிரமிப்பு உலக நாடுகளின் அரசியல் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களிலும் அமெரிக்கா தென் அமெரிக்கா பிராந்தியத்தின் மீது இவ்வகையான ஆதிக்கங்களை மேற்கொண்ட போதும் ஆட்சியாளரை கடத்தி வந்து நீதிமன்றத்தில் நிறுத்துவது என்பது புதிய ஒரு உபயமாக தெரியவில்லை ஏற்கனவே பனாமா நாட்டின் இராணுவத் தலைவர் மானுவல் நோரியேகாவை 1989இல் கைது செய்திருந்தது. அவ்வாறே ஹண்டுராஸ் முன்னாள் தலைவர் ஆர்லாண்டோ எர்னாண்டஸ் 2002இலும் சதாம் உஷைன் 2006இலும் கைது செய்யப்பட்டனர். இது அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையான மொன்ரோ (Monroe Doctrine) கோட்பாட்டை முன்னிறுத்தி பிராந்தியம் மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா கடந்த காலங்களில் கையாண்டுள்ளதைக் காட்டுகிறது. ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் ஆட்சித் துறையினதும் அமெரிக்க அரசாங்கத்தினதும் தேசியக் கொள்கையாக நோக்கப்பட்டது. ஆனால் வெனுசுவெலா ஜனாதிபதி மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்தமையும் அமெரிக்க நீதிமன்றத்தில் ட்ரம்ப்ன் நடவடிக்கைக்கு நெருக்கடியானதாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அமெரிக்க மக்கள் ட்ரம்ப்க்கு எதிராக போராட்டங்களை தொடங்கியதுடன் ஜனாதிபதி ட்ரம்ப்க்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு காங்கிரஸ்ல் தயாராவதாக தகவல்கள் உண்டு. இக்கட்டுரையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்ன் வெனிசுவெலா மீதான நடவடிக்கையை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களையும் தேடுவதாக உள்ளது.
முதலாவது அமெரிக்கா தராளவாத அரசியல் பொருளாதார முறைமையை கொண்டிருந்தாலும் அதன் அடிப்படைக் கொள்கைகள் ஏகாதிபத்தியமாகவே காணப்படுகிறது. உலகில் சிறிய நாடுகளையும் சிறிய நாடுகளின் ஆட்சியாளர்களையும் அச்சுறுத்துவதன் மூலம் அந்த நாடுகளின் வளங்களை ஆக்கிரமிப்பதும் சூறையாடுவதும் அமெரிக்காவின் மரபார்ந்த அரசியலாக காணப்படுகிறது. அந்த வரிசையில் 21ம் நூற்றாண்டில் ஈராக்கின் ஜனாதிபதி சதாம் உசேன் லிபியாவில் கேணல் கடாபி ஈரானின் இப்ரைஹீம் ரைசி போன்ற தலைவர்கள் அமெரிக்க உளவுத்துறையினரால் கொல்லப்பட்டதோடு உலகத்தை அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொண்டிருந்தது. இத்தகைய கொலைகளால் பிரமிப்பான தேசம் என்பதை நிறுவுகின்ற தேசியவாத உணர்வை அமெரிக்கா எப்போதும் கொண்டிருக்கிறது. அத்தகைய பாணியிலேயே வெனுசுவெலா ஜனாதிபதி மதுரோ மீதும் அமெரிக்காவின் நடவடிக்கை அமைந்துள்ளது. ஏறக்குறைய 50,000முதல் 80,000 வரையான படைகளைக் கொண்ட ஒரு நாட்டின் மீது 150 க்கு மேற்பட்ட பி-2 குண்டு வீச்சு விமானங்களையும் போர்க்கப்பல்களையும் நகர்த்தி மதுரோவை கைது செய்துள்ளது. இது அமெரிக்காவின் இயல்பான உலகை அச்சுறுத்தும் இராணுவ வடிவமாக தெரிகிறது. அமெரிக்கா எப்போதும் பலவீனமான நாட்டுத் தலைவர்களை பலமான இராணுவ ஒடுக்குமுறைகளுக்கு ஊடாக கையாண்டு உலக அரசியலை ஆதிக்கம் செய்து வருகிறது. அவ்வகை ஒரு செய்முறை ஒன்றையே மதுரோ மீது மேற்கொண்டுள்ளது.
இரண்டாவது வெனுசுவெலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் உலக அரசியல் தலைவர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்ற நோக்கத்தை அதிகம் பிரதிபலித்துள்ளது. ஐக்கிய நாடு சபையின் விதிகளையும் வரைவுகளையும் வரைந்து கொண்ட அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் அதனை மீறுகின்ற செய்முறை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. அமெரிக்கா மீறுகின்ற போது அத்தகைய அனுபவம் உலகில் உள்ள இதர நாடுகளுக்கும் பொருத்தப்பாடுடையதாக மாற்றுவதற்கு வாய்ப்பளிக்கிறது. அமெரிக்காவின் நடவடிக்கை உலகில் உள்ள ஏனைய அரசுகள் எதிரி நாடுகள் மீது நடவடிக்கை எடுத்தால் அதனை தடுத்து நிறுத்தும் வலிமை அமெரிக்காவுக்கு மேற்குலக நாடுகளுக்கு இல்லை என்பது வெளிப்படையான யதார்த்தமாகியுள்ளது. அதற்கான வாய்ப்புகளை நோக்கிய உலகம் நகருகின்றது. ரஷ்சியாவின் உக்ரையின் மீதான தாக்குதல்களும் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் நியாயப்படுத்தப்படுகிற நிலயை தந்துள்ளது. அமெரிக்கா பிராந்தியத்தில் அந்நிய சக்திகள் அல்லது பிற வல்லரசுகளின் தலையீடுகள் ஏற்படக்கூடாதென கருதுகிறதோ அவ்வகையான செய்முறை ஒன்றையே ரஷ்சியாகவும் இஸ்ரேலும் மேற்கொண்டு வருகின்றன.
மூன்றாவது உலக அரசியலில் அமெரிக்க நடவடிக்கை உலக நாடுகளில் இறைமைக் கோட்பாட்டை முற்றாகவே நிராகரிக்கின்ற செய்முறையாக மாறியுள்ளது. 1648ஆம் ஆண்டு வெஸ்பாலியா உடன்படிக்கைக்கு பின்னர் அரசுகளின் இறைமை அங்கீகரிக்கப்பட்டிருந்த சூழல் என்பது நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் தொடர்ச்சி ஒன்றுக்கும் அமெரிக்கா நகர்வதற்கான வாய்ப்பை கொடுத்திருப்பதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றார். அதற்கான வாய்ப்பை நோக்கி அமெரிக்க இராணுவ தலைமையகம் செயல்படுவதாகவும் எச்சரிக்கப்படுகிறது. இது அமெரிக்காவின் மாநிலங்களாக உலகத்தை அடையாளப்படுத்தும் நிலை ஒன்றுக்கான வாய்ப்பை திறந்து விட்டிருக்கிறது. ஆனாலும் ரெனால்ட் ட்ரம்ப்ன் நடவடிக்கையை வெளிப்படையாக கண்டிக்கும் அமெரிக்கா அரசியல்வாதிகளும் நீதித்துறையினரும் காணப்படுகின்றனர் என்பதே கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகவுள்ளது. நீயூயோர்க் நகரத்தின் மேயர் மம்டானி தொடக்கம் மதுரோ மீதான குற்றச்சாட்டை விசாரித்த நீதிபதி வரையும் ட்ரம்பன் நடவடிக்கையின் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறனர்.
நான்காவது உலகளாவிய இராணுவ பலத்தில் அமெரிக்கா பிராந்திய ரீதியில் நடவடிக்கையை மேற்கொண்டாலும் உலகளாவிய ரீதியில் வலிமையானது என்பதை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. பல்துருவ அரசியல்-பொருளாதார ஒழுங்கு நிலவினாலும் வெனுசுவெலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கை ஒற்றைமைய உலகத்தையே மீளவும் அடையாளப்படுத்தியுள்ளது. இது பிற பிராந்தியங்களிலும் அமெரிக்காவில் நடவடிக்கை இலகுவானதாக மாறும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. காரணம் அமெரிக்காவோடு போட்டியிடுகின்ற ரஷ்சியா சீனா போன்ற நாடுகள் அமெரிக்காவில் நடவடிக்கை பொறுத்து அமைதியை கடைப்பிடிப்பதோடு பாரிய பதில் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாமை உணர்த்துகிறது. அது மட்டுமல்ல வெனுசுவெலா நாட்டின் ஜனாதிபதியையும் நாட்டுடனான உறவையும் கைவிட்டமை அந்த நாடுகளில் பலவீனத்தைக் காட்டுவதாகவே தெரிகிறது. இரண்டு வருடங்களை கடந்து உக்ரையின் மீதான ரஷ்சியாவின் தாக்குதலும், கடந்த தசாப்தங்களைக் கடந்து தைவானை மீட்டெடுக்க முடியாத சீனாவையும் அமெரிக்காவினுடைய நகர்வோடு ஒப்பிட முடியாத நிலை காணப்படுகிறது. இது இராணுவ ரீதியில் காணப்படும் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது. ஆனாலும் சர்வதேச விதிகளும் ஒழுங்குகளும் கோட்பாடுகளும் அமெரிக்கா போன்று உலகத்தில் ஏனைய வல்லரசுகளாலும் மீறப்படுமாயின் உலக அரசியலின் போக்கை கையாள முடியாத நிலை ஏற்படும். அமெரிக்காவுக்கு ஏறக்குறைய இரண்டாவது நிலையில் இராணுவ ரீதியில் விளங்கும் ரஷ்சியா கூட இவ்வகையான அராஜக இராணுவ நகர்வுகளை நிகழ்த்தியதில்லை.
ஐந்தாவது உலக அரசியல் வரலாற்றில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய அடாவடித்தனம் மரபானந்தாக உள்ளாகவே கடந்த காலத்தைப் போன்று சமகாலத்திலும் காணப்படுகிறது. அத்தகைய அராஜகத்தை முன்வைத்தே அமெரிக்கா உலக நாடுகளின் வளங்களை சூறையாடுகின்றது. வெனுசுவெலாவின் கனிமங்களையும் வளங்களையும் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்வதே ரொனால்ட் ட்ரம்ப்ன் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. அதே நேரம் பிற வல்லரசுகளின் தலையீடு அமெரிக்க கண்டத்திலேயே இருந்து விடக்கூடாது என்பதையே இராணுவ நடவடிக்கையும் அதன் பின்னாலுள்ள உரையாடல்களும் வெளிப்படுத்துகின்றன. இதனால் அமெரிக்காவின் நகர்வுகளும் ஒவ்வொன்றும் உலகத்தின் சிறிய நாடுகளும் வலு குன்றிய அரசுகளும் அச்சமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் அணு ஆயுதத்தின் அவசியப்பாடு உலக நாடுகளிடம் அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதனையே வடகொரிய தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே வெனுசுவெலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் பிரதிபலிப்பாக நோக்கப்பட வேண்டும். அதே நேரம் பலவீனமான ஆட்சியாளர் மீது மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகள் உலகத்தை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியதுடன் ஆக்கிரமிப்புக்களை நியாயப்படுத்துகிறது. இத்தகைய உத்திகள் தொடர்ச்சியாக வல்லரசுகளால் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப்ன் விளைவுக் கோட்பாட்டு (Trump Corollary) வெளியுறவுக் கொள்கையென்பது மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை வலியுறுத்துவதுடன், பிராந்தியத்தில் வெளிநாட்டுத் தலையீட்டை முற்றாக எதிர்கிறது, மற்றும் தேசியபாதுகாப்பு பொருளாதார நலன்கள் மற்றும் எல்லைக்கட்டுப்பாடு ஆகியவற்றை குறிப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே அடுத்துவரும் ட்ரம்ப்ன் ஆட்சிக்கால வெளியுறவுக் கொள்கையாக அமையவுள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
