சர்வதேச அரசியல் மாற்றங்களுக்கான போட்டிக்குள்ளால் நகர்கிறது. ரஷ்சியா தொடக்கிவைத்த உக்ரையினுடனான போர் நாடுகளையும் அவற்றின் அணிகளையும் மாற்றியமைக்கும் செயல்பாட்டுக்குள் கொண்டு செல்கிறது. அது மட்டுமன்றி அரசியல்-பொருளாதார இயங்கியல் விதியை புதிய வடிவத்திற்குள் உட்படுத்த முயலுகிறது. ஆனால் முதலாளித்துவம் இடம்மாறும் காட்சிகளும் அதன் தகவமைப்பும் உலகத்தின் சுழற்சிக்கு புதிய எழுச்சியை கொடுக்க முனைகிறது. உலகமயவாக்கத்தின் (அப்போது ஜிடிபி 76சதவீதம்) தோல்வி உலகப் பொருளாதாரத்தின் தோல்வியாகக்காணும் யதார்த்தம் ஒன்றின் விழிம்பில் உலகம் காணப்படுவதாகவும் இது 2075 இல் உலகளாவிய பொருளாதாரத்தை (ஜிடிபி4.5சதவீதம்) படுமோசமான நிலைக்குள் தள்ளும் என்ற எடுகோளையும் கருத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. இதனைக் கையாளும் உத்திகளையே மேற்கு நாடுகளும் கிழக்கு வல்லரசுகளும் போட்டியிட்டுக் கொண்டு செயல்படுகின்றன. ஜி-7 மாகாநாடு,உக்ரையின் ஜனாதிபதியின் சவுதியரேபிய விஜயம் மற்றும் துருக்கியத் தேர்தலும் போட்டியாளர்களின் மோதலும் காணப்படுகிறது. இகக்ட்டுரையும் துருக்கிய ஆட்சிக்கான அரசியலைத் தேடுவதாக அமையவுள்ளது.
துருக்கி வரலாற்றுக் காலம் முதல் அறியப்பட்ட நாடு. துருக்கிய ஓட்டமன் பேரரசும் அதன் ஆட்சியும் மேற்கு நாட்டவருக்கு ஏற்படுத்திய நெருக்கடியிலிருந்து அறியக் கூடியதாகவே இருந்துள்ளது. கொன்சாந்திநோபல் உலக வரலாற்றையே மாற்றியமைத்தது என்ற எண்ணம் அதன் மீதான மேற்கு நாட்டவரின் கவனம் அதிகரிக்க காரணமாக அமைந்தது. தற்போதைய துருக்கிய தலைநகரமான ஸ்தான்புல் ஏறக்குறை ஐரோப்பிய -ஆசிய தலைநகரமாகவே காட்சியளிக்pறது. முழுமையாக கூறுவதாயின் அது ஒரு ஐரோப்பிய நகரமே. புவியல் ரீதியில் இரு கண்டங்களது அரசியல் பொருளாதார பண்பாட்டு மரபுகளைக் கொண்ட மையமாகவும் உள்ளது. இத்தகைய இயல்புகளைக் கொண்ட துருக்கியை கடந்த இருபது ஆள்டுகளாக தொடர்ச்சியாக ஆட்சி செய்துவரும் ஜனாதிபதியாக எட்டோகன் காணப்படுகின்றார். துருக்கிய ஆட்சியை 2002இல் கைப்பற்றிய எடடோகன் 2017 அரசியலமைப்பில் மாற்றம் செய்து நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சியை உருவாக்கினார். 2018 முதல் ஜனாதிபதியாக இருந்த எட்டோகன் கடந்த 14(மே2023) திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் பிரதான வேட்பாளராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து கெமல் கிலிசிடறோக்லு போட்டியிட்டார். ஆனால் முதல் சுற்று வாக்கு எண்ணப்பட்ட போது பிரதான இரு வேட்பாளரிலும் இருவரும் 50 வீதத்திற்கு மேலாக வாக்குகளைப் பெறவில்லை. ஆனால் மீண்டும் போட்டியிட்ட எடோகன் (Tayyip Erdogan) 49.52 வீத வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த போட்டியாளர்களில் கெமல் கிலிசிடறோக்லு (Kemal Kilicdaroglu) 44.88 சதவீத வாக்குளையும் பெற்றிருந்தார். துருக்கிய அரசியலமைப்பில் 50 சதவீதத்திற்கு மேல் பெறும் வேட்பாளரே வெற்றியாளராக கணிக்கப்படுவார் என்ற நிபந்தனையைக் கொண்டுள்ளது. அதனால் இரண்டாவது சுற்றுக்கான வாய்ப்பே வெற்றியாளரை தீர்மானிக்கும். எதிர்வரும் 28 மே அதற்கான முடிபுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் வெற்றிவாய்ப்பு எட்டோகனுக்கு அதிகமாகக் காணப்பட்டாலும் நகரவாழ் ஐரோப்பியரும் துருக்கியரும் ஆட்சியில் ஒரு மாற்றம் வேண்டும் என கருதுகின்றனர் ஜனநாயகத்தின் பெயரால் பிபிசி செய்திச் சேவையின் தேடலில் அறிந்து கொள்ளக்கூடியதாக அமைந்த போதும் அதனை மேற்குலகத்தின் விருப்பாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. பிபிசி மேற்குலகத்தின் ஊடகமாகவே கருதப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தகை பிபிசி மீதான விமர்சனம் நியாயமானதாகவே தெரிகிறது. இத்தகை துருக்கியின் ஜனாதிபதி தேர்தல் ஏன் முக்கியமானதாக அமைந்துள்ளது என்ற கேள்வி வாசகனுக்கு ஏற்படலாம். அதனை விபரமாக அவதானிப்பது அவசியமானது.
ஒன்று, துருக்கியின் அமைவிடம் சார்ந்தது. அதாவது துருக்கியின் புவிசார் அரசியல் ஐரோப்பிய நாடுகளையும் ஆசிய நாடுகளை கையாளும் மையப்புள்ளியில் அமைந்துள்ளது. அதனை துருக்கிய ஆட்சி கையாளலாம் அல்லது துருக்கியை ஆளும் சக்திகள் கையாளலாம் என்ற விதியே முக்கியமானதாக அமைந்துள்ளது. அதாவது ஆட்சிக்கு வரப்போகும் ஜனாதிபதி எத்தகைய உலகளாவிய சக்தியோடு கூட்டுச் சேரப்போகிறார் என்பதைப் பொறுத்து அத்’தகை வலு துருக்கி சார்ந்து அத்தகைய நாட்டுக்கு கிடைக்கும். அதில் எட்டோகன் மேற்குடனும் ரஷ;சியாவுடனும் சமமான வெளியுறவைக் கொள்கையை தாம் கடைப்பிடித்ததாக அண்மைய பிபிசி ஆங்கிலச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் நேட்டோவில் துருக்கி அங்கத்துவம் பெற்றிருந்தாலும் அது ஒரு ஆசிய நாடு என்ற பார்வைக்கு இயங்கும் அமெரிக்கா தனது MI-17 ரக விமானங்களை துருக்கிக்கு வழங்க மறுத்ததாலும் குருத்திஸ் போராளிகளுக்கு பாதுகாப்பு வழங்கியதாலும் ஆத்திரமடைந்த எட்டோகன் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கமே ரஷ்சியா-துருக்கிய நெருக்கமாகும். அதனால் எஸ்-400 ரக ஏவுகணைகளை துருக்கி தனது பாதுகாப்புக்காக ரஷ்சியாவிடமிருந்து பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அது மட்டுமன்றி ரஷ்சியா மேற்காசியாவில் வலுவான சக்தியாக எழுச்சியடைந்துள்ளமையும் எண்ணெய்வள நாடுகளையும் ஏனைய மேற்காசிய நாடுகளையும் ரஷ்சியா தனது நட்பு நாடுகளாக கொண்டிருப்பதும் துருக்கியால் உற்று நோக்கப்படுகிறது.
இரண்டு, துருக்கி ஒரு நோட்டோ நாடு என்ற வகையில் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளுக்கு அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தக் கூடியது. அது நெருக்கடியாகவே எட்டோகன் காலத்தில் அமைந்திருப்பதாக அமெரிக்காவால் புரிந்து கொள்ளப்படுகிறது. ரஷ்சிய-உக்ரையின் போருக்கு முன்பிருந்தே அமெரிக்காவுடனான உறவில் எட்டோகன் விரிசலை உருவாக்கியிருந்தார். துருக்கியின் மாற்றமே நேட்டோவுக்கு மேற்காசியாவில் நெருக்கடி ஏற்படுவதற்கான அடிப்படையாக அமைந்தது. குறிப்பாக அரபுவசந்தம் சிரியாவில் ஸ்தம்பித்து போனமைக்கு துருக்கியும் ஒரு காரணமாக மேற்குலக ஆய்வாளர்களால் கணிப்பிடப்படுகிறது. எட்டோகன் தனது ஆட்சி மீதும் அத்தகைய நெருக்கடி ஏற்பட்டுவிடும் என்ற புரிதலாலே அவர் அரபுவசந்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காது தவிர்த்திருந்ததாக அத்தகைய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நேட்டோ என்பது ஐரோப்பிய நாடுகளதும் அமெரிக்காவினதும் பாதுகாப்புச் சார்ந்தும் அரசியல்-பொருளாதாரம் சார்ந்தும் வலுவான அணியாகும். அத்தகைய அணிக்குள் நெருக்கடியை ஏற்படுத்துவதென்பது மேற்கினதும் அமெரிக்காவினதும் இருப்புக்கு ஆபத்தினை ஏற்படுத்தக் கூடியது. அதனை ஒருபோதும் அமெரிக்கா அனுமதியாது என்பதே தற்போதைய தேர்தலில் கெமல் கிலிசிடறோக்லு அமெரிக்கா ஆதரவளிப்பதற்கான காரணமாகும். அதனைக் கூட அமெரிக்கா வெளிப்படையாக நிகழ்த்தவில்லை. ஆனால் எட்டோகனை ரஷ்சியா ஆதரிப்பதாக தெரியப்படுத்தாவிட்டாலும் ஆதரவுதளத்திலேயே முதன்மைப்படுத்திவருகிறது. இதனால் இரண்டாவது சுற்று அதிக நெருக்கடியைத் தரக்கூடியதாக அமையும் என்ற விவாதமும் காணப்படுகிறது. மேற்கு ஊடகங்களும் அதற்கு சார்பான ஆய்வாளர்களும் கெமல் கிலிசிடறோக்லுக்கான வெற்றிவாய்ப்பினை அதிகப்படுத்த முனைகின்றனர். அதற்கான எதிர்வு கூறல்கள் அதிகரித்’துக் கொண்டுள்ளது. ஆனால் எட்டோகனது வெற்றியையும் அவர்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அதற்கான வாய்பு குறைந்துள்ளதாக கூறுகிறார்களே அன்றி இல்லை என தெரியப்படுத்த தயாரில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மூன்று, எட்டோகன் ஆட்சியின் போது ஏற்பட்டுள்ள அரசியல்-பொருளாதார- இராணுவ மாற்றங்கள் கீழைத்தேச சக்திகளை கட்டமைப்பதாக உள்ளது. அதற்கான அணியுடன் துருக்கி கூட்டுச் சேந்துள்ளது. ரஷ்சியா சீனாவுடன் மட்டுமல்லாது மேற்காசிய இஸ்லாமிய நாடுகளுடன் நெருக்கமான உறவை தக்கவைத்துள்ளதுடன் இஸ்ரேலுக்கு எதிரான அணியைப் பலப்படுத்துவதில் கவனம் கொள்கிறது. இத்தாகை துருக்கியின் நகர்வு ஆபத்தான விளைவை அமெரிக்காவுக்கு ஏற்படுத்திவருகிறது. அதனால் ஜனநாயகம் தராளபொருளாதாரம் போன்ற செய்முறைகளை கெமல் கிலிசிடறோக்லு ஏற்படுத்தும் திறனுடைய வேட்பாளராக மட்டுமல்லாது துருக்கியின் அமைவிடம் சார்ந்து மேற்குடனான நட்புறவு அவசியமானதென விவாதிக்கப்படுகிறது. அத்தகைய நிலையில் எட்டோகன் இல்லை என்பதை முதன்மைப்படுத்தும் மேற்கு அதற்கான வேட்பாளராக கெமல் கிலிசிடறோக்லுவை சிபார்சு செய்கிறது.
எனவே, துருக்கியின் பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல் வல்லரசுகளது வளையத்திற்குள் அகப்பட்டுள்ளது. எட்டோகனது நீண்டகால ஆட்சியால் துருக்கிய மக்கள் வெறுப்புக் கொண்டுள்ளார்கள் என்பதைவிட அமெரிக்காவும் மேற்கும் வெறுப்படைந்துள்ளது. அவரது பொருளாதாரக் கொள்கையையும் ஜனநாயகம் மீதான விமர்சனங்களையும் அதிகப்படுத்தும் மேற்குலகம் அவரது அட்சியை முடிபுக்கு கொண்டுவர முயலுகிறது. அதற்கான வாய்பு ரஷ்சியாவினாலும் எதிர்கொள்ளப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்வது அவசியமானதாகும். இரு தரப்பினது போட்டிக்குள் துருக்கிய மக்களது தேர்தல் அரசியல் அல்லது ஜனநாயக அரசியம் அரங்கேறியுள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
