இலங்கைத்தீவின் அரசியல் போக்கானது வல்லரசுகளது களமாக தொடர்கிறது. அது பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவதாகவே உள்ளது. இதில் இந்தியாவும் சீனாவும் போட்டிக்களத்தில் அங்கம் பெறும் நாடுகளாக காணப்படுகிறன. அமெரிக்காவும் இலங்கைத் தீவில் கவனம் கொள்ளும் பிரதான நாடாகும். இந்து சமுத்திரத்திற்கான போட்டியாகவே அத்தகைய அரசுகளது நகர்வுகள் அமைந்திருக்கின்றன. இந்து சமுத்திரத்தில் இந்தியாவா சீனாவா என்பதை விட சீனாவா அமெரிக்காவா என்ற போட்டி வலுத்துவருகிறது. தென் இலங்கை எப்போதும் சீனாவுடன் பயணிக்கவே அதிகம் முனைகிறது. இந்தியா அமெரிக்கா அணியைவிட சீனாவே தென் இலங்கைக்கு பாதுகாப்பானது என்பதில் கவனமாக கொள்கை வகுத்து நகர்துகிறது. அத்தகைய பரீட்சையின் வெற்றி அமெரிக்கா மீளமைக்க ஆரம்பித்துள்ள அதன் வெளியுறவுக் கொள்கையிலேயே தங்கியுள்ளது. இக்கட்டுரையும் தென் இலங்கை- இந்திய உறவு சார்ந்து நிகழ்ந்துவரும் மாற்றங்களை தேடுவதாக உள்ளது.
இலங்கைத் தீவில் ஜனாதிபதியாக ரணில்விக்கிரமசிங்ஹா பதவியேற்ற பின்னர் இந்திய-இலங்கை உறவு இராஜீக ரீதியில் அதிக முரண்பாட்டைக் கொண்டது என்பதை இப்பகுதி பலதடவை சுட்டியுள்ளது. அதற்கான நீட்சி தொடர்வதாகவே தெரிகிறது. இதனை சரிசெய்ய எடுத்த முயற்சிகள் அனைத்தும் நெருக்கடியை எதிர்கொள்வதாகவே தெரிகிறது. இலங்கைக்கான இந்தியத் தூதுவரது பெரும் நகர்வுகள் சாதகமான விளைவுகள் எதனையும் தந்துவிடவில்லை என்ற விமர்சனம் தவறானதாகத் தெரியவில்லை. இதில் இந்தியாவின் நகர்வு எதுவாகவுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியா அமெரிக்காவிடம் தோற்றாலும் பறவாயில்லை சீனாவை இலங்கைத் தீவில் எதிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தியா தனது மண்ணில் கூட சீனாவுடன் ஒத்துழைக்க முயலுகிறது. ஆனால் இலங்கைத் தீவில் முரண்பாட்டை அதிகம் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. இதற்கு பின்னாலுள்ள வலுவான காரணம் இலங்கைத் தீவு சீனாவிடம் முழுமையாக வீழுமாயின் இந்துசமுத்திரமே சீனாவிடம் வீழ்ந்துவிடும் என்பதேயாகும். இந்து சமுத்திரம் சீனாவிடம் வீழுமாயின் உலகம் சீனாவின் பிடிக்குள் அகப்பட்டுவிடும் என்பதில் இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை உண்டு. ஆனால் அமெரிக்கா சார்ந்து இந்தியாவின் நிலைப்பாடு அதிக அபாயமானது. அதாவது சீனா இந்தியாவின் எதிரி மட்டும் தான் ஆனால் அமெரிக்கா இந்தியாவின் நண்பனானாலும் எதிராளியாகவே உள்ளது. அதிலும் உக்ரையின் போருக்கு பின்னான நிலை அவ்வாறனாதாகவே மாற்றமடைந்துள்ளது. பாகிஸ்தானுடனான அமெரிக்க கொள்கையின் போக்கினை அவதானிக்கும் போது கண்டுகொள்ள முடிகிறது. இத்தகைய பின்னணிக்கூடாகவே இந்திய-தென் இலங்கை உறவு இரு தரப்பாலும் கட்டமைக்கப்படுவதை கண்டு கொள்ள முடியும். இதில் இன்னோர் பரிமாணமும் நிகழ்ந்துள்ளது. அதாவது இந்தியா, சீனா, ரஷ்சியா எனும் கீழைத்தேச அரசுகளது எழுச்சியானது அமெரிக்காவாலும் அதன் மேற்குலக அணியாலும் முடக்கப்பட்டுள்ளதாகவே தென்படுகிறது. அதாவது ரஷ்சியாவின் வலுவானது உக்ரையினுக்குள்ளும் சீனாவின் பலமானது தைவானுக்குள்ளும் கட்டுப்படுத்தப்படும் உபாயத்தை அமெரிக்கா தெளிவாக வகுத்து செயல்படுத்துகின்றது. இந்தியா மேற்குறித்த இரு நாடுகளுடனும் இணைந்து பயணிக்கும் போது மட்டுமே பலமானதாக அமையக்கூடியது. அது மட்டுமன்றி இந்தியா ஒரு போதும் எந்த வல்வரசுகளுடனும் முரண்பாட்டை அதிகம் கொண்டிராத நாடு. அதனடிப்படையில் இணைந்து செயல்படுவதை தடுத்தாலே இந்தியாவின் கீழைத்தேச கூட்டின் இருப்பை பலவீனமாக்க முடியும். அதற்கான உபாயங்களைக் கொண்டே அமெரிக்காவின் நகர்வுகள் காணப்படுகிறது. இத்தகைய சூழலுக்குள்ளாலேயே தென் இலங்கை இந்திய உறவு புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
தற்போது தென் இலங்கையில் எழுந்துள்ள அரசியல் சூழலில் அமெரிக்காவின் நகர்வு பிரதானமானது என்பது இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதாகவே உள்ளது. அரகளய முதல் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹாவின் ஆட்சி வரையுமான நடவடிக்கைகளுக்கு பின்புலமாக அமெரிக்காவும் அதன் மேற்குலக ஒத்துழைப்பும் அடிப்படையானது என்பதை நிராகரித்துவிட முடியாது. மீண்டும் வெதமுல்ல ஆட்சி சாத்தியமாகிவிடக் கூடாது என்பதில் கனடாவின் அண்மைய நகர்வுவரை மேற்குலகத்தின் வரைபாகவே தெரிகிறது. ஏற்கனவே மேற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமான உடன்பாட்டின் காலம் முழுவதும் நேர்வே நிறுத்தப்பட்டது போல் தற்போது கனடா முன் நிறுத்தப்பட்டுவருகிறது. கனடாவுடனான உறவும் நட்பும் நேர்வேயைவிட தமிழர்களுக்கு அதிகமுண்டு என்பதை புரிந்து கொள்வது தேவையானதாக உள்ளது. ஆனாலும் கனடா மேற்கின் நிகழ்சி நிரலையுடைய நாடு என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமானது. இத்தகைய பின்புலங்களில் இந்திய-தென் இலங்கை உறவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை தேடுவது பொருத்தமானது. காரணம் இந்தியாவுக்கும் இலங்கை தவிர்க்க முடியாத நிலையத்திலுள்ளது. அவ்வாறே இலங்கைத் தீவுக்கும் இந்தியா முக்கியத்துவமான புவிசார் அரசியலில் நிலையத்திலும் அமைந்துள்ளது. ஆனால் இந்தியாவுடன் முழுமையாக ஒத்துழைப்பதன் மூலம் ஈழத்தமிழரின் நலனுக்குள் அகப்பட்டுவிடக் கூடாது என்பதில் தென் இலங்கை கவனம் கொள்கிறது. அதே நேரம் இந்தியாவை முற்றாக புறந்தள்ளிவிட்டு செயல்படவும் முடியாத நிலையில் இந்தியாவை கையாளுவதே பொருத்தமானதென்ற முடிபுடன் காணப்படுகிறது. இந்தியா தென் இலங்கை தனித்துக் கையாள முடியாததென்பதைக் கடந்து உலக வல்லரசுகளை துணைக்களைத்துக் கொண்டு தென் இலங்கை நகர்கிறது. ஏறக்குறைய 2500 ஆண்டு கால வெளியுறவுக் கொள்கையின் பாரம்பரியத்தை கொண்ட நாடு இலங்கை என்பதை மறந்துவிட முடியாது. (பார்க்க: V.L.B.Mendise,(1983) Foreign Relations of Sri Lanka-from earliest time to 1965) அத்தகைய உபாயத்திற்குள்ளாலேயே தென் இலங்கையின் அரசியல் பொருளாதார இராணுவ இருப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியானது வெதமுல்லைக்கும் மேற்குலகத்திற்குமான முரண்பாட்டின் எதிரெலிப்பே அன்றி வேறு தனித்துவமான காரணங்கள் அதீதமானதாக தெரியவில்லை. அதனை மேற்கு தானாகவே சரி செய்துவிடும். அதற்கான ஆட்சியையும் ஆட்சியாளரையும் பதவியில் நிரந்தரமாக்க முயலுகிறது. அதனாலேயே இலங்கைக்கு வருகைதந்த சீனாவின் கம்யூனிஸக்கட்சி உயர்மட்டக் குழுவினர் அதிகாரத்திற்கு வரும் எந்தக் கட்சியுடனும் தாம் பயணிக்க தயாராக இருப்பதாக ஓரறிக்கையிட்டுள்ளனர். அத்தோடு இந்தியவும், சீனாவும் நிதி தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்துடன் கடன்மறுசீரமைப்பிற்கு உடன்பட்டுள்ளதாக தென் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதே நேரம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வருகைதந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருகோணமலை தொடர்பிலான உடன்பாடு உட்பட வர்த்தக மற்றும் பொருளாதார அடிப்படையிலான உடன்பாடுகளை எட்டும் நோக்கத்தோடு வருகை தந்துள்ளதாக முன்கூட்டிய ஊகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்தியா இலங்கையுடனான உறவில் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் அரசியல் செல்வாக்கை செலுத்த முயலுகிறதை காணக்கூடியதாக உள்ளது. அண்மைக்காலங்களில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை அதிகம் தவிர்க்க இந்தியாவே முன்வந்திருந்தது. ஆனாலும் இலங்கை சீனா பக்கம் செயல்படுவதை கவனத்தில் கொண்டே தென் இலங்கை அரசாங்கத்துடனான நெருக்கத்தை எச்சரிக்கையுடன் இந்தியா கையாள முனைகிறது. அதற்காகவே பொருளாதார ஒத்துழைப்பில் கவனம் கொண்டு செயல்படும் சந்தர்ப்பத்தையும் இராஜீக ரீதியில் முரண்பாட்டை வெளிப்படுத்தும் போக்கையும் இந்தியா கையண்டு வருகிறது. அவ்வகை இராஜதந்திரத்தின் மூலம் அதிக நெருக்கடியை தென் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவதன் மூலம் இந்தியாவின் செல்வாக்கை இலங்கைத்தீவில் ஏற்படுத்த முடியும் என்பதோடு சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்த முடியுமென்பதையும் கவனத்தில் கொண்டுள்ளது. இந்த-pயாவின் போர்க்கப்பல்களது வருகை இலங்கைத் தீவில் தாராளமாகவே உள்ளது. இந்தியப் போர்க்கப்பலான (16.01.2023) INS Delhi திருகோணமலைத் துறைமுகத்திற்கு வருகைதந்துள்ளது. இதனைவிட அவுஸ்ரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளது போர்க்கப்பல்களும் கால அடிப்படையில் இலங்கைத் துறைமுகங்களுக்கு வருகை தருகின்றன. ஆனால் அத்தகைய நகர்வு எதனையும் இந்தியா ஒரு போதும் கண்டித்ததாக தகவல்கள் இல்லை.
யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த பொங்கல்விழாவில் இந்தியாவுக்கான துணைத்தூதுவர் சரியான முறையில் கௌரவிக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு உடகங்கள் மத்தியில் வெளியாகியுள்ளது. அது இராஜதந்திர ரீதியில் அதிகமான முரண்பாட்டை தோற்றுவிக்கலாம் என்ற ஊகங்களை அத்தகைய ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. எதுவாயினும் இவ்வாறான நிகழ்வுகள் அரசியலில் ஒரு வகையான இராஜீக மோதலாகவே வெளிப்படுத்தப்படுவதுண்டு. அது ஒரு அரசியல் இராஜதந்திரமாக கருதப்படுவதுண்டு. கொழும்புக்கும் புதுடில்லிக்குமான இராஜீக முறுகல் யாழ்ப்பாணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே இலங்கையின் இனப்பிரச்சினையின் அடிப்படையுமாகும். இந்தியா மீதான அச்சம் பொறுத்தே ஈழத்தமிழர் மீதான அணுகுமுறையை தென் இலங்கை வரலாற்றுக் காலம் முதல் கையாண்டுவருகிறது. இன்னோர் வகையில் கூறுவதாயின் இந்தியாவுக்காகவே ஈழத்தமிழர்கள் அனைத்து துயரங்களையும் அனுபவித்துவருகின்றனர். ஈழத்தமிழர் இலங்கை-இந்திய புவிசார் அரசியலுக்குள் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளனர். அத்தகைய அரசியலுக்குள்ளேயே துணைத்தூதுவர் சார்ந்த விடயம் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இங்கு சீனாவின் உலகளாவிய அரசியல் பொறுத்தே இலங்கைத் தீவினதும் தென் இலங்கையினதும் இருப்பின் மாற்றங்கள் தங்கியுள்ளது. தைவானா இலங்கைத்தீவா சீனாவுக்கு முக்கியம் என்பதற்குள் சீனாவை அமெரிக்கா சிக்கவைத்துள்ளது. அமெரிக்காவின் நகர்வு வெற்றியடையுமாயின் தென் இலங்கை பெரும் மாறுதல் காலத்தை எதிர்கொள்ளும். அதனையும் கையாள தென் இலங்கை திட்டமிடுகிறது என்பதாகவே தெரிகிறது. அடுத்துவரும் தசாப்தங்களில் தாராள முகத்தின் ஆட்சி தென் இலங்கையில் சாத்தியமாகுமாயின் அவ்வகை உலகளாவிய மாற்றத்தையும் தென் இலங்கை கையாண்டுவிடும் போலவே தெரிகிறது. இம்மாறுதல் நிலவும் இடைப்பட்ட காலத்தை ஈழத்தமிழர்கள் சரிவர அடையாளம் கண்டு செயல்படுவதென்பது அவசியமானதாகவே தெரிகிறது. மறுவளமாக சீனாவின் எழுச்சி உலகளாவிய தரிசனத்துக்குள் செல்லுமாயின் அமெரிக்க-சீனப் போட்டி என்பது தவிர்க்க முடியாததாக அமையும். அமெரிக்கா தனிதலைமையாகாத சூழல் ஏற்பட்டால் இணைத்தலைமையை தக்கவைப்பதில் வெற்றி கொள்ளும். அதாவது மீளவும் ஒரு இரு துருவ அரசியல் பாரிமாணம் நிகழ வாய்ப்புள்ளது. எதுவாயினும் ஈழத்தமிழர்கள் அமெரிக்க-இந்திய அணியையும் சீனாவின் பலத்தையும் அளவிட வேண்டிய நிலைக்குள்ளேயே உள்ளனர். இதில் தமிழர்கள் ஒரு தேசியமாக செயல்படும் போதே மாற்றங்களை அடையாளம் கண்டு நகர்வுகளை சாத்தியப்படுத்த முடியும். இன்றய இந்திய-தென் இலங்கை சூழலும் உலகளாவியச் சூழலும் ஈழத்தமிழரைப் பொறுத்து ஆரோக்கியமான காலமாகவே தென்படுகிறது. அதற்கான அரசியல் அவசியமானது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

