தென் அமெரிக்க நாடான பிரேசில் உதைபந்தாட்டத்தால் மட்டுமல்ல அமேசன் மழைக்காடுகளாலும் அதிகம் பிரபலமான நாடாகும். தற்போது அந்த நாட்டில் ஏற்பட்டுவரும் அரசியல் போராட்டங்களால் பிரபலமடைந்துள்ளது. 2022இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியும் தீவிர வலதுசாரியுமான சயீர் போல்சனாரோவை தோற்கடித்து இடதுசாரி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான இனாசியோ லூலாடா சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து வன்முறை நகரமாக பிரேசிலியா வன்முறையின் மையமாக மாறிவருகிறது. போர்த்துக்கல் காலனித்துவத்திலிருந்து 1825இல் விடுதலை பெற்று 1889ஆம் ஆண்டு குடியரசாகவும் உருவான பிரேசில் 1998ஆம் ஆண்டு சமகாலத்தில் வரைந்த அரசியலமைப்பைக் கொண்ட சமஷ்டிக் குடியரசாக விளங்குகிறது. சேகுவேராவின் எழுச்சிக்கு பின்னர் அதிக தென் அமெரிக்க நாடுகள் இடதுசாரி அரசியலை முதன்மையாக கொண்டு செயல்படுவதுடன் இப்பிராந்தியம் சமகாலத்தில் கூட இடது, வலது என்ற மரபுகளுக்குள்ளால் ஆட்சி அதிகாரத்தை பரிமாற்றும் நாடுகளாக உள்ளன. இக்கட்டுரையும் பிரேசிலில் நிகழும் வன்முறைக்கான அடிப்படைகளையும் விளைவுகளையும் தேடுவதாக உள்ளது.
பிரேசில் வன்முறைக்கு பின்னால் முன்னாள் ஜனாதிபதி சயீர் போல்சனராவின் ஆதரவாளர்களது போராட்டங்களே காரணமென தெரியவருகிறது. கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதிக்கான தேர்தலில் இடதுசாரி வேட்பாளரான லூலாடா சில்வாவின் வெற்றியை ஏற்றுக் கொள்ளா சயீர் ஆதரவாளர்களது நடவடிக்கையே அத்தகைய வன்முறைக்கும் குழப்பத்திற்கும் காரணமாக உள்ளது. மக்கள் ஆதரவை சயீர் இழந்தமைக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக 2021 இல் உலகம் முழுவதும் பரவிய கொவிட் பிரேசிலை அதிகம் பாதித்தது. அதிகமான மக்கள் கொல்லப்பட்ட போது அதனை ஒரு பிரச்சினையாகவோ கொவிட் பரவலாகவோ கருதாது ஜனாதிபதி செயல்பட்டதுடன், அத்தகைய கொவிட் தொற்றை உதாசீனப்படுத்தி சயீர் தனது பதவிக்காலத்தில் நடந்து கொண்டார் என்பது மக்கள் மத்தியில் அதிக கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அவ்வாறே உலகத்தின் நுரையீரல் என்று கருதப்பட்ட அமேசன் மழைக்காடுகளை திட்டமிட்டு அழிக்கும் கும்பல்களை கட்டுப்படுத்தாது செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டும் சயீர் மீது எழுந்திருந்தது. இதனைவிட சரியான பொருளாதாரக் கொள்கைகளையோ சட்ட ஒழுங்குக்கான நடவடிக்கைகளையோ மேற்கொள்ளாத ஜனாதிபதி என்ற குற்றச்சாட்டும் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தது. அதனால் தோற்கடிக்கப்பட்ட போதும் இடதுசாரிகள் வலதுசாரிகள் என்ற மோதலும் பிரேசிலை அதிகமாக உட்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் பிரேசில் ஜனாதிபதி லூலாடா சில்வாவுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்களை நிகழ்த்திவரும் சயீர் ஆதரவாளர்கள் பிரேசில் பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை மற்றும் உயர் நீதிமன்றம் போன்றவற்றை முற்றுகையிட்டு போராடிவரும் நிலையை அவதானிக்க முடிகிறது. இப்போராட்டத்தை இராணுவம் மற்றும் காவல்துறை முழுமையாகவோ சரியாகவோ கையாளத் தவறியுள்ளது என்ற குற்றச்சாட்டை லூலாடா தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி சயீர்ன் ஆதரவாளர்களது கோரிக்கையும் ஜனாதிபதி பதவி விலகுவதுடன் இராணுவத்தின் ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதாக உள்ளது, அதாவது ஆட்சியை இராணுவம் கைப்பற்ற வேண்டும் என்ற அடிப்டையிலேயே போராட்டம் நிகழ்ந்துவருகிறது. முன்னாள் ஜனாதிபதி சயீர் ஆதரவாளர்களை ஜனநாயகத்திற்கு முரணாக போராட தூண்டுகிறார் என்பதுடன் உச்ச நீதிமன்றத்தின் முடிவுகளை நிராகரிக்கும் ஆட்சித் துறையின் நகர்வுகளையும் நிராகரிக்குமாறு பணிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. புதிய ஜனாதிபதியின் ஆட்சி கையளிக்கும் நிகழ்விலும் கலந்து கொள்ளாது செயல்பட்டதுடன் தனது தோல்வியை இதுவரை ஒப்புக்கொள்ளாதவராகவும் காணப்படுகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. அவர் ஒரு வலதுசாரி என்ற அடிப்படையில் அமெரிக்காவுடன் அதிக உறவை பேணமுயலுவதாகவும் இடதுசாரி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சயீர் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக போராடிவருவதுடன் காவல் நிலையங்களை தீயிட்டு கொளுத்தியும் வருகின்றனர். இராணுவத்தின் தலையீட்டை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மைப்படுத்தி வருகின்றனர். இதுவொரு ஆபத்தான செயலாகவே பிரேசிலுக்குள்ளும் அயல்நாடுகளாலும் கருதப்படுகிறது. தென் அமெரிக்கப் பிராந்தியம் ஏறக்குறைய இராணுவ கட்டமைப்பையும் இடதுசாரிகளது செல்வாக்குப் பிராந்தியமாகவும் உள்ளதனால் வேகமாக, இராணுவ ஆட்சியை சாத்தியப்படுத்திவிடும் என்ற விவாதம் உண்டு. அதற்கு அமைவாகவே சயீர் ஆதரவாளர்களும் செயல்படுவதனால் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிவிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனாலும் இடதுசாரிகளது ஆதரவுத்தளம் மக்கள் மத்தியில் பலமானதாக அமைந்திருப்பதுடன் இராணுவத்திற்கான கட்டளைகளை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உண்டு என்ற வாதத்தையும் சில ஊடகங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன. ஆனால் இராணுவ ஆட்சியானது அரசியலமைப்புக்கும் நியாயாதிக்கத்திற்கும் ஜனநாயகத்திற்கும் முரணான செய்முறை என்பதை மறுக்க முடியாது. இதனால் இராணுவத்தின் ஆட்சிக்கான வாய்ப்பு நிலவக் கூடியதாக அமையும் என்ற கருத்தினை நிராகரித்துவிட முடியாது. அது மட்டுமன்றி ஜனாதிபதி 2017களில் ஊழல்குற்றச்சாட்டுக்காக சிறையிலடைக்கப்பட்டவர் என்ற அவர் மீதான எதிர்ப்புவாதத்தை சயீர் ஆதரவாளர்கள் வெளிப்படுத்த முயலுகின்றனர். அதனால் அவரது வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற வாதத்தை அதிகம் வெளிப்படுத்துகின்றனர். அதேநேரம் சயீர் மீது ஊழல் அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டு அதிமாக உள்ளது என்பதையும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை ஜனாதிபதி லூலாடா மேற்கொள்ளத் தயாராவதாகவும் தெரியவருகிறது.
பிரேசிலின் தலைநகரில் சயீரின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய தாக்குதல்களையும் முற்றுகைப் போராட்டத்தையும் இராணுவம் மற்றும் காவல்துறை தடுக்காது பார்வையாளர்களாக இருந்தது என்ற குற்றச்சாட்டுக் காணப்படுகிறது. ஆதனால் பெரும் வன்முறை ஏற்படாது தடுக்கப்பட்டுள்ளதாகவே சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராணுவம் அல்லது காவல்துறை ஏதும் நடவடிக்கை எடுத்திருந்தால் பாரிய மனித அழிவுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது எனவும் அதனை தவிர்த்திருக்க இராணும் முயன்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
மறுபக்கத்தில் சயீர் ஆதரவாளர்கள் பிரேசில் தலைநகரை மட்டுமே முற்றுகையிட்டு போராடுவதாகவும் ஏனைய பிரதேசங்களில் இப்போராட்டம் பரவவில்லை என்ற பார்வையும் காணப்படுகிறது. ஆட்சித்துறையின் அனைத்து செயல்பாட்டையும் முடக்குவதன் மூலம் முழுநாட்டையும் கட்டுப்படுத்த முடியும் என்ற நோக்கு நிலையும் நிலவுகிறது. பிரேசில் மக்கள் உலகளாவிய பொருளாதார நெருக்கடியாலும் கொவிட் தாக்கத்தாலும் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். தற்போதைய போராடமும் அவர்களை அதிகமாக பாதிக்கும் போது ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் ஏனைய பிராந்தியங்களிலும் பரவ வாய்ப்புள்ளதாக பிரேசில் ஊடகங்கள் வெளிப்படுத்துவதாக, பிபிசி தெரிவிக்கின்றது. அதேநேரம் ஜனாதிபதி லூலாடாவுக்கு ஆதரவாக மக்களது போராட்டங்கள் பிற பிராந்தியங்களிலும் ஆரம்பித்துள்ளதாகவும் வலதுசாரி ஆதரவாளரின் முற்றுகைப் போராட்டத்தை கண்டித்து நகரத்திலும் போராட்டங்களை அம்மக்கள் நிகழ்த்தி வருவதாகவும் தெரியவருகிறது. அது மட்டுமன்றி அத்தகைய போராட்டங்கள் நீதியையும் ஜனநாகத்தையும் வலியுறுத்துவதாகவும் மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி வருவதாகவும் அமைந்துள்ளது. அவ்வாறே சயீருக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் 1500 மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களது வன்முறையில் நீதிமன்ற வளாகம் முற்றாக அடித்து நெருக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி மாளிகையின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பாராளுமன்ற கட்டடத் தொகுதியும் போராட்டக் காரரின் தாக்குதலால் சிதைவடைந்துள்ளது.
பிரேசிலில் சயீர் ஆதரவாளரின் போராட்டத்தையும் முற்றுகையையும் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் நிகழ்த்திய தேர்தலுக்கு எதிரான போராட்டத்துடன் ஒப்பிடப்படுகிறது. ஏறக்குறைய அதற்கு சமமானதாகவே திட்டமிடப்பட்டதுடன் நகர்த்தப்பட்டதாக தெரியவருகிறது. தீவிர வலதுசாரிகள் ஒரே மாதிரியான அணுகுமுறைகளை உலகளாவிய ரீதியில் பின்பற்றுவது போல் தோன்றுகிறது. இதனை இன்னோர் Capital போராட்டமாகவே ஊடகங்களால் உச்சரிக்கப்படுகிறது.
எனவே பிரேசிலில் நிகழும் வன்முறைகள் இராணுவ ஆட்சிக்கான வாய்ப்பினை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஆட்சியில் மீளவும் தமது ஜனாதிபதி அமராது விட்டாலும் ஆட்சியை மாற்றி அமைக்கும் உத்தியுடன் முன்னாள் ஜனாதிபதி செயல்படுவதாக அவரது ஆதரவாளர்கள் பலர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திவருகின்றனர். போராட்டத்தை அடக்குவதில் லூலாடா நிதானமாக செயல்படுவதாகவும் அதுவே அவரது ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்து வருவதாகவும் தெரியவருகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
