April 15, 2026
அரசியல் கட்டுரைகள்

ஈரான்-அமெரிக்க இடையே நிகழும் போரும்-சமாதானமும்?

உலக அரசியல் மேற்காசியாவின் பிராந்தியத்தை போர் வலயமாக மாற்றி வருகிறது. அமெரிக்காவின் போர்க் கப்பல்களும் போர் உத்திகளும் ஈரானை சுற்றிவளைத்திருந்தாலும்; அது ஒரு பிராந்திய ரீதியான நெருக்கடியை தோற்றுவித்திருக்கிறது. அத்தகைய பிராந்திய நெருக்கடி உலகளாவிய அரசியல் பொருளாதரத்தையும் இராணுவச் சமநிலையையும் அதிக குழப்பத்துக்குள் நிறுத்தி இருக்கின்றது. அமெரிக்காவின் போர்ப்பதற்றம் மேற்க்காசியாவின் கடல் பரப்பை நோக்கிய பிற வல்லரசுகளின் விரிவாக்கங்களை தடுத்திருக்கிறது. அமெரிக்க போர் உத்திகள் கடல்பிராந்தியத்தின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதோடு நெருக்கடிக்கு தள்ளி இருக்கின்றது. இத்தகைய சூழலில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர் பதற்றமும் சமாதான பேச்சுக்களும் இரு வேறு திசைகளில் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற போக்களை விளங்கிக் கொள்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

போரும் சமாதானமும் பற்றிய வாசிப்பு லெனின் காலத்தில் வெளியான ஆய்வுகளோடு மையப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கைத் தீவிலும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் வெளியிட்ட போரும் சமாதானமும் ஈழத்தமிழரின் கடந்தகால வரலாற்றைத் தந்தது. உலக அரசியலில் போருக்கும் சமாதானத்திற்குமான உறவு பலமானதாகவே அமைந்துள்ளது. ஹகல் முதல் அலான்மாஸ் வரையும் போரின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டியுள்ளனர். இவற்றுக்கு நிகராக ரஷ்சிய எழுத்தாளர் லியோ டாஸ்டாய்ன் போரும் சமாதானமும் இலக்கியப்பரப்பில் அதிக முதன்மையானது. போர் மாற்றங்களுக்கான அடிப்படை. சமாதானம் போருக்கான தயாரிப்புக்காலம். இதற்குள் ஈரான்-அமெரிக்கப் போரச் சுழல் நகர்கிறது.

முதலாவது அமெரிக்கா ஈரான் மீது போரை நிகழ்த்தும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற உலகத்துக்கு சமாதான கதவுகளை இரு தரப்பும் திறந்துள்ளன. ஒரு பக்கம் போர் உத்திகளும் மறுபக்கம் சமாதான பேச்சுகளும் என இரண்டு திசைகளில் ஈரான் கையாளப்படுகிறது. ஈரானை அண்மைய கடல் பகுதி அமெரிக்கா இராணுவ கடல்படையின் வியூகக் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. ஆனாலும் இராணுவ நடவடிக்கை காலம் தாழ்த்தப்படுகிறது. இதற்கான காரணங்கள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆபத்துமிக்கது என்ற உரையாடலை தந்திருக்கின்ற அனுபவமாகத் தெரிகிறது. அதுவே போர் காலதாமதப்படுவதற்கு முக்கியம் என்று விவாதிக்கப்படுகிறது.

இரண்டாவது அமெரிக்கா போரை தீவிரபடுத்த எடுத்த திட்டங்கள் உலக அரசியல் சக்திகளின் போக்கினால் நெருக்கடிக்குள் அகப்பட்டிருக்கின்றது. ஈரான் மீதான போரை அமெரிக்கா எதிர்பார்த்தது போன்று நிகழ்த்த முடியாது உள்ளது என்பதை சீனாவின் நகர்வுகளில் முக்கிய காரணம் என குறிப்பிடப்படுகிறது. சீனா சமகாலத்தில் அமெரிக்காவின் மேற்காசியாவில் குவிந்துள்ள தளங்களையும் அதில் காணப்படும் ஆயுத தளவாடங்களையும் தொழில் நுட்பத்தையும் சற்றலைற் படங்கள் மூலம் உலகத்துக்கு காட்டியுள்ளது. அமெரிக்காவின் இராணுவ ரீதியான தொழில்நுட்ப உத்திகள் அனைத்தும் சர்வதேச மட்டத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இது பெரும் அளவுக்கு அமெரிக்க இராணுவ நகர்வுகளை பாதிக்கும் என்று இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இராணு மீதான யுத்தத்தை விட சீனா நிகழ்த்தும் நிழல் யுத்தமே அமெரிக்காவுக்கு ஆபத்தானதாக மாறி இருக்கின்றது.

மூன்றாவது ஈரானின் உயர்மதத் தலைவர் ஆரம்ப நாட்களில் இருந்து ஒரே தகவலை வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் போரை எதிர்கொள்வதற்கு ஈரான் தயாராக இருப்பது என்பது ஒரு புறம் அமைய மறுபக்கத்தில் பிராந்திய போருக்கான தயாரிப்பை ஈரான் முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்துவருகிறார். அதனை மதத்தலைவர் வலியுறுத்துகின்றனர். அதாவது அவரது இலக்கு இஸ்ரேல் மீதான போர் என்பதை தெளிவாகவே உணர்த்துகின்றனர். பிராந்தியரீதியான போர் என்பது தனித்து இஸ்ரேல் மீதான போர் என்பதை விடுத்து அமெரிக்காவின் வளைகுடாப் பகுதியிலும் இதர மேற்கு ஆசியா பகுதியிலும் காணப்படும் இராணுவ இலக்குகளை தாக்கி அழிப்பதாகவே கருதப்படும். அத்தகைய ஒரு போருக்கான தயார் நிலையில் ஈரான் முதன்மைப்படுத்த ஆரம்பித்துள்ளது. இது ஒரு வகையில் அமெரிக்காவின் போர் பின்தள்ளவும் போரின் நெருக்கடிகளை எதிர்கொள்ளவும் தயாராகின்ற அணுகுமுறையாகவே தெரிகின்றது.

நான்காவது ஈரான் -அமெரிக்க பேச்சுவார்த்தை அமெரிக்காவின் போரை பின் தள்ளுவதற்கான இன்னுமெரு உத்தியாகத் தெரிகின்றது. உலகளாவிய ரீதியில் ஈரானுடைய அணு ஆயுத வளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வருவதே அமெரிக்காவின் நோக்கம் என்று அமெரிக்க ஜனாதிபதி தெரிவிக்கின்ற சந்தர்ப்பத்தில் பேச்சுக்களுக்கு உடன்பட்டு ஈரான் போரை தந்திரமாக நகர்ந்துகிறது. இது போரை பின் தள்ளுவதற்கான உத்தியாகவே பார்க்கப்படுகிறது. எல்லா வகையான சூழலும் போரையும் சமாதானத்தையும் நெருக்கடிக்கு உள்ளாகின்ற நிலை ஒன்றை எட்டியிருக்கின்றது. ஆனாலும் அமெரிக்கா தனது டெல்டா படை அணியை தயார் நிலையில் வைத்திருப்பது கவனத்திற்குரியது. ஏறக்குறைய நான்காயிரத்திற்கு மேற்பட்ட படைப் பிரிவினரை ஈரானுக்குள் அனுப்புவதற்கு தயாராக இருக்கின்றது. வெனிசுவெலா ஜனாதிபதியை கைது செய்தது போன்று ஈரானின் பிரதான தலைவர்களை இலக்கு வைத்து அமெரிக்கா பயன்படுத்த தயாராகிவருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐந்தாவது இதே நேரம் ஈரானின் தலைநகரில் பாரிய தீவிபத்தென தகவல்கள் வெளியானதும் யு.எஸ். ஆபிரகாம் லிங்கள் போர்க்கப்பலை நோக்கி பறந்த ஈரானிய டரோன் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் உண்டு. ஆனால் வெள்ளைமாளிகை தெளிவாக அறிவித்துள்ளது ஈரானுடனான பேச்சுவார்த்தை நடைபெறுமென்று. அப்படியானால் அமெரிக்கா போரைவிட சமாதானத்தை விரும்புவதாக தெரிகிறது. அது போருக்கான தயாரிப்புக் காலத்தை இலக்காகக் கொண்டதாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஈரானின் இலக்குகள் மீதான அடையாளப்படுத்தல் மற்றும் முழுமையான தாக்குதல் இலக்கை அமெரிக்க இராணுவம் அடையவில்லை என்பதற்கான கால நீடிப்பாகவே தெரிகிறது. இஸ்ரேல் மீதான தாக்குதல் ஒருபக்கம் அமைய மறுபக்கத்தில் இஸ்ரேல்-அமெரிக்க உளவுப் பிரிவுகளின் தகல்கள் குழப்பகரமானதாக உள்ளதென்பதை வோசிங்டன் போஸ்ட் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே போருக்கான வேகத்தை ஈரானியர்கள் மட்டப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை, சீன ரஷ்சிய ஒத்துழைப்பிலான கடல் படை ஒத்திகை மன்றும் பாரிய நெருக்கடிகளை அமெரிக்காவுக்கு கொடுத்து சீனாவின் சற்றலையில் படங்கள் என்பன போரை பின்தள்ளி இருக்கின்றதாகவே தெரிகிறது. இராஜேந்திர ரீதியில் சீனர்கள் ரஷ்சியர்களின் ஒத்துழைப்போடு ஈரானியர்கள் போரை பின்தள்ளியள்ளனர். மறுபக்கத்தில் ஈரானிய தலைவர்களை ஈரானின் இராணுவ இலக்குகளை சரியாக அடையாளம் காணவும் அதன் மீது தொழில்நுட்ப ரீதியான தாக்குதலை நிகழ்த்தவும் அமெரிக்கா சமாதான காலத்தை பயன்படுத்தி வருகிறது. இரு தரப்பும் தாக்குதலை அடையாளம் கண்டு இருப்பதோடு அதற்குரிய நடவடிக்கைகளை தொடக்கி இருக்கின்றன. பேச்சுவார்த்தை தோல்வி அடையும்போது இராணுவ ரீதியான நகர்வை அமெரிக்கா சாத்தியப்படுத்தும் என்று எச்சரிக்கையை முன் வைத்துக்கொண்டு அமெரிக்கா நகர்ந்தது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)