உலகளாவிய அரசியலில் இரகசிய நகர்வுகளும் ஊடறுப்புத் தாக்குதல்களும் விஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சிகளும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதற்கு இரையாவதும் கட்டுப்படுவதும் அல்லது அதனை எதிர்த்து போரிடுவதும் ஆட்சியாளர்களின் இயல்பாக மாறிவருகின்றன. அரசுகளை ஆளும் ஆட்சியாளர்கள் தமது இருப்பினை மட்டுமல்ல தேசத்தின் இருப்பினையும் மேலாதிக்கத்தையும் பாதுகாப்பதில் கவனம் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். பலவீனமான அரசுகளின் ஆட்சியாளர்களைவிட வல்லரசுகளின் ஆட்சியாளர்களும் அவர்களது நகர்வுகளின் கருத்தியலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து காணப்படுகிறது. அந்த வரிசையில் கடந்த 18.07.2023 அன்று 52 வருடங்களுக்கு பின் அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கீசிங்கரது சீனாவுக்கான இரகசிய விஜயம் தொடர்பிலான கொள்கையை தேடுவதாக இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு யூலை 9-11 வரை ஹென்றி கீசிங்கர் சீனாவுக்கான இரகசிய விஜயத்தை மேற்கொண்டார். அதன் பிரகாரம் இருநாட்டுக்குமான உறவு உதயமானது. 1972 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்சனின் உத்தியோகபூர்வ சீனா விஜயத்துடன் அத்தகைய உறவு விரிவடைந்தது. அந்த உறவை ஆரம்பித்துவைத்ததில் அப்போது அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளராக இருந்த ஹென்றி கீசிங்கர் முதன்மையானவராக காணப்பட்டார். அவர் மீளவும் 101வது வயதில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே 100 தடவைக்கு மேல் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜதந்திரியாக கருதப்படுகிறது. சீனாவின் ஜனாதிபதி ஜின் பிங் மற்றும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்பூவை சந்தித்து உரையாடியுள்ளார். இவரது விஜயத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் காலநிலை மாற்றத்திற்கான ஆலோசகரான ஜோன் ஹரியும் பங்கேற்றிருந்தார்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவு அதிக முரண்பாடுடையதாக மாறிவருகிறது. குறிப்பாக வர்த்தக ரீதியில் ஏற்பட்ட போட்டித்தன்மை இரு நாடுகளது பொருளாதாரத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறே தைவான் விவகாரமும் இரு நாட்டுக்குமான உறவை பாதித்துள்ளது. உக்ரையின் போரில் ரஷ்சியா-சீன நெருக்கமும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான உறவை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் மீளவும் சீனா-அமெரிக்காவிற்கு இடையில் புதிய பனிப்போருக்கான யுகம் ஆரம்பித்துள்ளதாக உரையாடப்படும் சந்தர்ப்பத்தில் ஹென்றி கீசிங்கரது சீன பயணம் நிகழ்ந்துள்ளது. அது மட்டுமல்லாது சீன ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுடனான உரையாடலின் போது வெளிப்படுத்திய விடயங்கள் சுமூகமான உறவை நோக்கியதாகவே தெரிகிறது. முழுமையான தகவல்களை ஊடகங்கள் தரத்தவறிய போதும் வெளியான விடயங்கள் இரு தரப்புக்கும் இடையில் சுமூகத் தன்மை நிலவியதாகவே தெரிகிறது. குறிப்பாக சீனப்பாதுகாப்பு அமைச்சர் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவு அழிந்துவிட்டது என்றார். காரணம் அமெரிக்கர்களில் சிலர் சீனாவை பாதியிலே கைவிட்டுவிட்டார்கள் என்றார். அப்போது கீசிங்கர் அமெரிக்கா சீனாவின் நண்பர் என்றார். அமெரிக்காவோ சீனாவோ எதிரியாக நடத்த முடியாது. இரு நாடுகளும் போருக்குச் சென்றால் இரு நாட்டு மக்களுக்கும் எந்த அர்த்தமுள்ள விளைவையும் ஏற்படுத்தாது என்றார் கீசிங்கர். இரு நாட்டுக்குமான இராணுவ ஆயுததளபாட கொள்வனவு தொடர்பில் உரையாடப்பட்டதாகவும் 2018 முதல் ரஷ்சிய-சீன இராணுவ உறவு உள்ளதாகவும் அதற்கான அடிப்படையில் அமெரிக்காவின் சீனா மீதான தடைகளே காரணமென தெரியவருகிறது.
இதே நேரம் சீன ஜனாதிபதியுடனான கீசிங்கரின் உரையாடலில் பழைய வரலாற்றை நினைவு கொண்டதுடன் ஜின்பிங் இது இரு நாட்டுக்கும் பயனளிப்பது மட்டுமல்லாது உலகையே மாற்றத்திற்கு உள்ளாக்கக் கூடியது என்றார். இரு நாடுகளும் நெருக்கடி நிலையிலுள்ளன. இதில் இரு தரப்பும் சரியான தெரிவை மேற்கொள்ள வேண்டும் என்றார். இவ்வாறு உலகளாவிய ரீதியில் முதல் இரண்டு வல்லரசுகளது இராஜதந்திர உரையடல் மீளவும் ஒரு புதிய அத்தியாயத்திற்கான தொடக்கமாக கொள்ள முடியும் என கீசிங்கர் கருதுவதாகவே ஊடகங்கள் காண்பிக்க முயலுகின்றன. ஆனால் அதன் யதார்த்தம் எதுவாக அமையும் என்பதனை விரிவாக நோக்குவது அவசியமானது.
முதலாவது, முன்னாள் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் அமெரிக்கா தனது சமபலக் கொள்கையின் அடிப்படையான முடக்கல் (Containment) கொள்கைக்கு பதிலாக பங்குகொண்டு பலன்பெறல் (Engagement) கொள்கையை முதன்மைப்படுத்தத் தொடங்கியது. அதாவது நாடுகளின் அரசியல் பொருளாதாரத்தில் தானும் ஒரு பகுதியாக பங்குவகிப்பதன் மூலம் தன் அரவியல் பொருளாதமாரத்தை பலப்படுத்தவும் அத்தகைய பலம்பொருந்திய நாட்டின் மீது அரசியல் பொருளாதார இராணு ரீதியில் தலையீட்டைச் செலுத்துவதன் வாயிலாக அமெரிக்கா தனது பிடியை பலப்படுத்த முடியுமென அமெரிக்கா திட்டமிட ஆரம்பித்தது. சீனாவும் நாடுகளைப் பகைத்தல் (Confrontation) கொள்கையிலிருந்து விலகி இடங்கொடுத்து ஒத்துழைத்தல் (Accommodation) கொள்கைக்கு தன்னை மாற்றிக் கொண்டது. கீசிங்கரது விஜயமும் மீளவும் பங்கு கொண்டு பயன்பெறல் எனும் கொள்கையில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யவும் சீனாவின் அணுகுமுறை இடங்கொடுத்து ஒத்துழைப்பது என்ற முடிபையும் நோக்கியதாக அமைந்துள்ளது. இது பற்றி சீன அறிஞரான Lu-Yen-Chung குறிப்பிடுவதை கவனிப்பது பொருத்தமானதாக அமையும். வெளிப்படையாக ஆதிக்க சக்தி கொண்ட அரசின் தவறுகளை, பிழைகளை, தீமைகளை இடையறாது அறிக்கையிடுவது ஒருபுறம். ஆனால் அத்தகைய அறிக்கைக்கு அப்பால் சென்று பகைமை நிலைப்பாட்டை எடுக்காமல் அந்த அரசுடன் செயல்பூர்வமாக தனது தேவையின் பொருட்டு இணைந்து போவது சீனாவின் நடைமுறைசார் கொள்கை என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு, சீனா இன்னோர் கொள்கையைக் கொண்டுள்ளது என அறிஞர்கள் விவாதிக்கிறார்கள். அதாவது சந்தை வெடிகுண்டு கோட்பாடு (Market Bomb Theory). அதாவது இடங்கொடுத்து ஒத்துழைத்தல் கொள்கை மூலம் மேற்குலகத்தை வீழ்த்த முடியாது என்பதனால் சந்தை மூலம் மேற்குலகத்தை எதிர் கொள்வதுடன் உலகத்திற்கு தலைமை தாங்க முடியுமென சீனா நகர்கிறது. அதுவே கீசிங்கரது சீன விஜயத்தின் பிரதிபலிப்பாகும். அதாவது அமெரிக்காவுடன் ஒத்துழைத்து சந்தைப் பொருளாதாரத்தில் ஈடுபட்டு உலகளாவிய வர்த்தகத்தை ஆதிக்கம் செய்வதன் மூலம் அரசியலை ஆதிக்கம் செய்யலாம் என்பதே சீனாவின் இலக்காக உள்ளது. சீனாவின் புதிய பட்டுப்பாதை மார்க்கம் அதுவாகவே உள்ளது.
மூன்று, அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளராக செயல்பட்ட ஜோசப் நை சீனாவின் மாற்றத்திற்கு அமைவாக Ideas-Realism-Constructivism எனும் சூத்திரத்தை அமெரிக்காவின் இயல்பூக்கத்திற்குள் கொண்டுவந்தார். அதாவது யதார்த்த நிலையை தமது எண்ணக்கருக்களால் மாற்றியமைத்து தமது இலக்கை அடைவதாகும். இதில் யதார்தவாமானது சூழ்நிலை சார்ந்து சமூக அரசியல் இராணுவ பலக்கொள்கையை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனையேஅமெரிக்கா உலகளாவிய பிராந்தியங்களுக்கு பிராந்தியம் வேறுபட்ட தளத்தில் தனது நகர்வை உறுதி செய்து வருகிறது.
எனவே சீன-அமெரிக்கப் போட்டிக்குள் அகப்பட்டுள்ள உலக ஒழுங்கு ஒத்துழைப்பினையும், பங்கெடுத்து பயன்பெறல் கொள்கையையும் பிரயோகித்துவருகிறது. அத்தகைய போக்கினையே நடைமுறை யதார்த்தமென அடையாளப்படுத்தப்படுகிறது. இதற்குள் உக்ரையினும் தைவானும் அகப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. சீனா அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பும் பயன்பெறல் கொள்கையும் சாத்தியமாகுமாக அமைந்தால் உக்ரையினைவிட தைவான் விடயம் நேரடியான விளைவை ஏற்படுத்தும். கீசிங்கரது விஜயத்தை அடுத்து தைவான் தனது இராணுவப் பயிற்சியை அதிகரித்துள்ளதாக தகவல்கள் உள்ளன. ஆனால் மேற்கு ஊடகங்களின் அணுகுமுறையில் அதிக மாற்றம் நிலவுவதாகத் தெரிகிறது. அதாவது இரு போர்க்களத்தையும் பற்றிய மேற்குலக ஊடகப் பார்வை மாற்றமுறத் தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது. அதற்கு பின்னால் பயன்பெறல் கொள்கை வழிகாட்டுவதாகவே தெரிகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
