உக்ரைன்- – ரஷ்ய போர் மீளவும் அதிர்ச்சியான திருப்பங்களை எட்டிவருகிறது. போர்த் தொழில் நுட்பம் வாய்ந்த ஆயுத தளபாடங்களால் தீர்மானிக்கப்படுகிறது. சமகாலப் போர்கள் தந்திரங்களாலும் கூட்டணி நாடுகளின் பலத்தினாலும் மட்டுமல்ல நுட்பம் பொருந்திய ஆயுத தளபாடங்களாலும் தீர்மானிக்கப்படுகின்றன. உக்ரைனுக்கு வழங்கும் ஆயுதங்களிலேயே ரஷ்யாவின் வெற்றி முடிவுக்கு கொண்டுவர முடியுமென அமெரிக்காவும் இதர நேட்டோ நாடுகளும் கருதுகின்றன. ரஷ்யாவின் இராணுவ வளர்ச்சியை தோற்கடிக்க கிடைத்த வாய்ப்பாகவே உக்ரைன் மேற்குலக நாடுகளால் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆப்கானிஸ்தானை வைத்து சோவியத் யூனியனை வீழ்த்தியது போல் உக்ரைனை வைத்து ரஷ்யாவை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் முயலுகின்றன. இக்கட்டுரையும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்க திட்டமிடும் பேட்ரியட் ஏவுகணை தொடர்பில் எழுந்துள்ள இராணுவச் சமநிலையை தேடுவதாக அமையவுள்ளது.
பேட்ரியட் ஏவுகணை Surface to Air missile ஆகும். அமெரிக்காவின் தயாரிப்பானது அதன் நட்பு நாடுகளால் பாவனைக்கு உட்படுத்தப்படுகிறது. கதிரியக்கத்தினால் கட்டுப்படுத்தப்படும் ராடர்களைக் கொண்ட ஆகாயப்பாதுகாப்புக்கான ஏவுகணை முறைமையாகும். ஆரம்ப மற்றும் நடுத்தர ஆகாயப் பாதுகாப்பு ஏவுகணையானது துல்லியமாக இலக்கை அடையும் திறனையும் வீச்சு எல்லையையும் கொண்டுள்ளது. இதன் பிந்திய வடிவமானது 2040 வெளிவர தயாராக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கதாகும். 1981ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1984இல் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட பேட்ரியட் ஏவுகணை வளைகுடாப் போரிலிருந்து தற்போது வரை பயன்பாட்டில் பிரயோகிக்கப்படும் ஏவுகணையாக உள்ளது. ஆகாயத்தில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் ஏவுகணைகளையும் விமானதிலிருந்து நிகழ்த்தப்படும் தாக்குதலையும் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டதாக பேட்ரியட் விளங்குகிறது. ஏறக்குறைய ஆகாயத் தாக்குதல்களை எதிர் கொள்ளும் ஆற்றல் மிக்க இடைமறிப்பானில் ஒன்றாக உள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யா அதிகம் தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளாலும் ஆளில்லா விமானத்தினாலும் பாரிய தாக்குதலை மேற்கொண்டு உக்ரைன் உட்கட்டமைப்பை முழுமையாக அழித்துவருகிறது. உக்ரைனால் அத்தகைய தாக்குதலை எதிர் கொள்ள முடியாத நிலை எழுந்துள்ளது. இத்தகைய ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்கும் உத்தியாகவே உக்ரைன் பேட்ரியட் தடுப்பு ஏவுகணை முறைமையை உக்ரைன் ஜனாதியதி ஜெலன்ஸ்கி கோரியிருந்தார். இதற்கு சாதகமான பதிலை அமெரிக்கா வழங்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கான ஒப்புதலை அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகிய இருவரும் வழங்க வேண்டும். அதற்கான கோரிக்கை அவசியமானதென அமெரிக்க முன்னாள் உக்ரைன் இராணுவ கொள்கை வகுப்பாளரும் ஓய்வு பெற்ற இராணுவ லெப்ரினன்ட் கேணல் அலெக்சாண்டர் விண்ட்மேன் குறிப்பிட்டுள்ளார். பேட்ரியட் வான்பாதுகாப்பு திறனை உக்ரைன் பெறுவது அவசியமானது. இவை உக்ரைனியருக்கு இருக்கும் பல்வேறு சவால்களை சமாளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். குறிப்பாக ரஷ்ய தாக்குதலுக்கு ஈரானிய தயாரிப்பான குறுந்தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை முன்னிறுத்துமாயின், பேட்ரியட் வான்பாதுகாப்பு அவசியமானதாக அமையும் என அவர் அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பேட்ரியட் மிகவும் மேம்பட்ட அமெரிக்க வான்பாதுகாப்பு அமைப்புக்களில் ஒன்றாகும். இவை வரையறுக்கப்பட்ட அளவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. இதனை பெற்றுக் கொள்வதற்கு உலகிலுள்ள அமெரிக்க நட்பு நாடுகள் அதிகம் பிரயத்தனம் செய்துவருகின்றன. ஆனால் அதனை அமெரிக்கா மட்டுப்படுத்திய உற்பத்தியிலும் நட்பு நாடுகளுக்கு வழங்குவதிலும் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான அடிப்படை இத்தகைய தொழில் நுட்பத்திறன் எதிரி நாடுகளால் கைப்பற்றப்பட்டுவிடும் என்பதேயாகும். அதிலும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அந்த விடயத்தில் விழிப்பாக இருக்கும். நாடுகள் என்பதை அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் கவனம் கொண்டுள்ளது. குறிப்பாக ஏற்கனவே உக்ரைனுக்கு அதிநவீன ஆட்லறி ரொக்கெட் முறைமையை வழங்கியிருந்தது. ஆனாலும் அதன் முழுமையான திறனை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. அவ்வாறே உக்ரைனுக்கு வழங்கப்பட்ட பல ஆயுத தளபாடங்களுக்கும் நிகழ்ந்ததாகவே தெரியவருகிறது. அவ்வாறான ஒரு முடிவையே அமெரிக்கா பேட்ரியட் வான்பாதுகாப்பு முறைமையிலும் பென்டகன் செயல்படும் எனவும் திறனை மட்டுப்படுத்துவதனால் ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்வினை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் உலகளாவிய ரீதியில் பேட்ரியட் வான்பாதுகாப்பு முறைமையை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கப் போவதான பிரசாரம் மட்டும் பலம்வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இதேநேரம் இத்தகைய வான்பாதுகாப்பினை உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் வழங்குவதென்பது போரை விஸ்தரிப்பதற்கு ஒப்பானதாக அமையும் என ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் நேட்டோ நாடுகளை எச்சரித்துள்ளார். இது முழுமையான உலகப் போருக்கு வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வகை எச்சரிக்கைகள் நிகழ்ந்தாலும் அமெரிக்கா போரை நீடிப்பதற்கும் ரஷ்யாவை உக்ரைனில் எதிர்கொள்வதற்கும் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு ஆயுத தளபாடங்களையும் பொருளாதார ஒத்துழைப்பையும் வழங்குவதில் பின்னிற்காது என்பதை விளங்கிக் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது. அதனால் அமெரிக்கா வழங்கப்போகும் வான்பாதுகாப்பு முறைமையானது ரஷ்ய -உக்ரைன் போரின் இராணுவச் சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற மதிப்பீடு ஏற்பட ஆரம்பித்துள்ளது.
ஒன்று, ரஷ்யாவின் உக்ரைன் மீதான தரைவழித் தாக்குதலானது அதிக நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. பெருமளவுக்கு உக்ரைன் மற்றும் நேட்டோவின் உத்திகளாலும் ஆயுதங்களாலும் ரஷ்யாவின் தரைவழித் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா கைப்பற்றிய சில பிரதேசங்களை கைவிட வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டிருந்தது. ஆனால் அதன் ஏவுகணைத் தாக்குதலும் தற்போது வலுவடைந்து வரும் ஆளில்லா விமானத் தாக்குதலும் அதிக இழப்பீடுகளை உக்ரைனுக்கு ஏற்படுத்தி வருகிறது. உக்ரைனது உட்கட்டமைப்புக்களான மின்சக்தித்துறை, இராணுவ தளங்கள், குடியிருப்புக்கள் என்பன முற்றாகவே தகர்ந்துள்ளன. உக்ரைன் மக்கள் தொகையில் மூன்றில் ஒருபகுதியினர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இதனை தடுத்து நிறுத்தாத போது உக்ரைன் படிப்படியாக மக்களற்ற நாடாக மாறும் நிலையை அடைந்துவிடும் என்ற அச்சம் மேற்கு நாடுகளுக்கு உண்டு. எனவே பேட்ரியட் வான்பாதுகாப்பு உக்ரைனுக்கு வழங்கப்படுமாக இருந்தால் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலும் அதனால் உக்ரைனுக்கு ஏற்படும் விளைவுகளிலும் மாற்றம் நிகழும். இது ரஷ்யாவின் போர் உத்தியில் இன்னோர் பின்னடைவாகவே மாற்றமடையும்.
இரண்டு, உக்ரைன் – ரஷ்யப் போர் தொடங்கப்பட்டதற்கு ரஷ்யா முன்வைத்த காரணமே உக்ரைன் நேட்டோவில் இணைவதால் ரஷ்யாவினதும் அப்பிராந்தியத்தினதும் புவிசார் அரசியலுக்கும் ஏற்படவுள்ள பாதிப்புகளாகவே அமைந்திருந்தது. அதாவது நேட்டோவின் கண்காணிப்பும் தலையீடும் ரஷ்யப் பிராந்தியத்திற்குள் நிகழும் என்பதாகவே அமைந்திருந்தது. தற்போது எழுந்துள்ள மாற்றங்களை நோக்கும் போது போர் ரஷ்யாவின் இலக்கை ஓரளவு நிறைவு செய்ததாகவே தெரிகிறது. உக்ரைன் அத்தகைய நிலையை அடையமுடியாத சூழலை ரஷ்யத் தாக்குதல்கள் ஏற்படுத்திவிட்டன. உக்ரைனை மீட்டெடுப்பதற்கு பல பில்லியன் டொலரும் போதாதான நிலை காணப்படுகிறது. ஆனால் தற்போது நேட்டோ தரப்பும் உக்ரைனும் வகுத்துள்ள வான்பாதுகாப்பு முறைமைக்கான நகர்வுகள் ரஷ்யாவின் அணுகுமுறைகளை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வாய்ப்பு எழுந்துள்ளதாகவே தெரிகிறது. ரஷ்யாவை கண்காணிக்கவும் உக்ரைன் நேட்டோவில் இணைவதிலும் கொண்டுள்ள ஈடுபாட்டை பேட்ரியட் சாதகமாக்கிவிடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பேட்ரியட் படிப்படியாக உக்ரைன் நேட்டோ இராணுவ சமநிலையை ரஷ்யப் பிராந்தியத்தில் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது.
எனவே பேட்ரியட் வான்பாதுகாப்பு முறைமை உக்ரையினுக்கு முழமையான திறனுடன் அமெரிக்கா வழங்குமாக அமைந்தால் ரஷ்சியா போரின் உத்திகளில் மாற்றங்களை மேற்கொள்வது அவசியமாகும். அது முழுமையான உலகளாவிய போரா அல்லது முழுமையான ஐரோப்பிய போரா என்பதைவிட மீளவும் அணுவாயுப் போர் பற்றிய உத்திகளை ரஷ்சியா முதன்மைப்படுத்த திட்மிடும் என்பதில் குழப்பமடையச் தேவையிருக்காது. அதனால் ரஷ்சியா தற்போது எழுந்துள்ள நகர்வையும் முறியடித்துவிடும் என்ற வாதங்களும் உண்டு.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)
