அரசியல் கட்டுரைகள்

பொருளாதார நெருக்கடியால் வல்லரகளின் பொறிக்குள் இலங்கை அகப்படுமா?

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமான அரசியல் பிரச்சினைகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. தென்னிலங்கை ஆர்ப்பாட்டங்களாலும், எதிர்க்கட்சி அணுகுமுறைகளாலும், ஆளுங்கட்சியின் குழப்பகரமான முடிவுகளாலும், ஆட்சியதிகாரம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு வருகிறது. அதனால் ஆட்சியை தக்கவைப்பதற்கான பொறிமுறையை தென்னிலங்கை முன்னிறுத்துகின்ற போது உலக நாடுகள் பொருளாதாரரீதியிலான நெருக்கடியை முன்னிறுத்தி தமது நலன்களை இலங்கைக்குள் நிலைநாட்டுவதில் அதிக கரிசணை கொண்டவையாக காணப்படுகிறது. இக்கட்டுரையும் உலக வல்லரசுகள் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி ஆட்சியதிகாரத்தை தமது பொறிக்குள் வைத்துக்கொள்வதற்கு மேற்கொள்ளும் நகர்வுகளை தேடுவதாக உள்ளது.

முதலாவது, சீன-இலங்கை உறவானது ஓர் அரசியல், பொருளாதார, இராணுவ உறவாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. அத்தகைய உறவு அண்மையில் குழப்பத்துக்கு உள்ளாகி வருகின்ற சூழல் நிலவுகிறது. ஆனால் சீனாவின் உரக்கப்பலை பரிசோதிப்பதற்காக மூன்றாம் தரப்பிடம் ஒப்படைக்கப்படும் இணக்கம் என்பது, உறவின் முக்கியத்தவத்தை பலப்படுத்துகின்ற உத்தியாகவே தெரிகின்றது. தற்போது சீன சேதன உரத்துடன் வருகை தந்த Hippo Spirit எனும் கப்பல் களுத்துறை பேருவலை கடற்பரப்பில் மிக நீண்டகாலமாக நங்கூரமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong கண்டி அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்த பிற்பாடு சீன உரத்தை மூன்றாம் தரப்பிடம் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் சீனாவும் சிந்தாவோ நகருக்கும் கண்டி நகருக்குமான உடன்படிக்கை ஒன்று 11.11.2021அன்று கையெழுத்தாகி உள்ளது. இலங்கைக்கான சீன தூதுவர் இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு கண்டி மற்றும் சிந்தோவோ நகர மேயர்கள் இணையவழியூடாக இவ்உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளார்கள். இரு நகரங்களுக்கிடையே கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்ப அறிவு, கலாசார மத விவகாரங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பிலான ஒத்துழைப்பு போன்றவற்றை மேம்படுத்தும் விதத்தில் இவ்உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுமட்டுமன்றி இலங்கை அரசாங்கத்தை உரம் தொடர்பிலான உற்பத்தியில் ஈடுபட்ட சீன நிறுவனமான Qing Dao Seawin Biotech என்பது இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் உணவு விவசாய ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்யப்போவதாக எச்சரித்துள்ளது.

மேற்குறித்த சீன அரசாங்கத்தின் நடவடிக்கையை நிறுவனங்களது அணுகுமுறைகளும் அதிக எச்சரிக்கைகளை இலங்கைக்கு வழங்க முயலுகிறது. இது இலங்கையினது பொருளாதார நெருக்கடியை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இலங்கை மீது அழுத்தத்தையும் நெருக்கடியையும் கொடுத்து பணிய வைக்க சீனா முயலுவதை காட்டுகிறது. இலங்கை தீவின் கேந்திர முக்கியத்துவத்தை சீனாவின் பிடிக்குள் வைத்திருப்பதற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை உருவாக்கி வருகிறது. பாரிய அளவிலான கடனை வழங்கி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99வருட கால குத்தகைக்கு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது போல் மீண்டுமொரு நெருக்கடியை ஏற்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்கும் உத்தியை சீன வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.

இரண்டாவது, இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட வல்லுனர்கள் பயணம் மேற்கொண்டுள்ள சமகாலப்பகுதியில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலாளர் Kelly Keiderling உத்தியோகபூர்வ விஜயம் ஒன்று மேற்கொண்டு 16.11.2021 இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவரது வருகை இலங்கையின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து உரையாடுவதோடு நாட்டின் பொருளாதாரம் முன்னோக்கி பயணிப்பதற்கான பங்களிப்பை வழங்குதற்கான திட்டமிடலையும்,Good Market முயற்சியான்மையின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளார். இவர் தெற்கு மற்றும் மத்திய ஆசியா விவகாரங்களின் பணிப்பாளரகாவும் பங்களாதேஷ் பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான இராஜதந்திர துணைச்செயலாளராகவும் பணி புரிகிறார். எனவே இவரது விஜயம் இலங்கைக்கு எற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கையாள்வதாகவும் அதற்கான உத்திகளை வகுப்பவராகவும், அவரது விஜயம் வெளிப்படுத்தி நிற்கிறது.

இதே சந்தர்ப்பத்தில் இலங்கையின் அமைச்சர்கள் பலர் அமைச்சரவைக்கூட்டத்தில் நாட்டில் டொலர் நெருக்கடியை iகாயள சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு எதிரான அபிப்பிராயங்கள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட போதும் அது தொடர்பில் நிதியமைச்சர் இவ்வகை பொறிமுறை பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார். இது இலங்கையில் மீண்டுமொரு நெருக்கடியை பொருளாதார தளத்திலும் அரசியல் நடவடிக்கையிலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவற்றை ஆழமாக அவதானித்தல் அவசியமானதாகும்.

ஒன்று, இலங்கையில் எற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி உலக நாடுகளில் வாய்ப்பான களத்தை எற்படுத்தியுள்ளது. இலங்கையால் உலக நாடுகளுக்கும் பொருளாதார இலாபம் எதனையும் வழங்க முடியாத நிலைமை பொதுவான எடுகோளாகும். ஆனால் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் பொறுத்து சர்வதேச வல்லரசுகளுக்கும் பிராந்திய வல்லரசுகளுக்கும் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் அதிக இலாபத்தை கொடுக்கக்கூடியதாகும். அதனால் உள்நாட்டு பொருளாதாரத்தை பயன்படுத்தி கொண்டு அத்தகைய அரசியல் இராணுவ நலன்களுக்கு அப்பால் இலங்கையின் கரையோரங்களையும், துறைமுகங்களையும் கையகப்படுத்துவதில் அதிக கரிசணையோடு சர்வதேச வல்லரசுகள் செயற்படுகின்றது. போர்க்காலத்திலும் போர்ப்பொருளாதாரம் என்ற உபாயத்தின் மூலம் தென்னிலங்கையின் அரசியல், பொருளாதார, இராணுவ கொள்கைகளை வகுப்பவையாக வல்லரசுகளின் உத்திகள் காணப்படுகின்றன. இலங்கை மீது செல்வாக்கு செலுத்தவோ அல்லது தலையீடு செய்யவோ பொருளாதார நெருக்கடி ஒரு வாய்ப்பான களமாகும்.

இரண்டு, இவ்வகை பொருளாதார நெருக்கடி உள்நாட்டிலும் அதிக அதிர்ச்சி தரும் மாற்றங்களை நோக்கி செயற்பட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தென்னிலங்கை அரசாங்கம் தள்ளப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. அதற்கான அனுபவங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்டிருந்தது. இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் எழுந்திருக்கும் முரண்பாடு தீவிரப்படுத்தும் பிரச்சாரங்களினூடாக இலகுவாக ஒரு நெருக்கடியை கட்டமைத்துவிடும். 2022ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் மக்கள் பாதுகாப்புக்கு ஒதுக்கிய செலவீனத்தினை விஞ்சும் விதத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு ஒதுக்கிய நிதி காணப்படுகிறது. இதேபோன்று பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியும் ஒப்பீட்டடிப்படையில் அதீகமானதாகவே காணப்படுகின்றது. இலங்கையின் பொருளாதாரத்தில் இத்தகைய ஒதுக்கீடானது அதீக சந்தேகங்களை ஏற்படுத்த முனைகிறது. குறிப்பாக, வனஜீவராசிகள் திணைக்களமும் தொல்லியல் திணைக்களமும் வடக்கு-கிழக்கில் கையாளும் நடைமுறை சமூகங்களுக்கிடையிலே மேலும் முரண்பாட்டை கூர்மைப்படுத்தும் விடயமாகவே தெரிகின்றது. இதனை இலங்கை முழுவதற்குமான பொருளாதார நெருக்கடி என்று ஜனநாயகத்துக்கு நெருக்கடி ஏற்படுத்துவதை விட சமூகங்களுக்கிடையில் அல்லது இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்துகின்ற போக்கொன்று கடந்த காலங்களில் அவதானிக்க முடிகிறது. அதன் நீட்சிக்கான வாய்ப்பே மீண்டும் எழுவதற்கான சூழல் ஒன்றை இத்தகைய பொருளாதார நெருக்கடி சாட்சியாளர்களின் தெரிவாக அமைந்து விடுமா என்ற சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

மூன்று, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள் வெற்றிகரமான பிரதிபலிப்பை தந்திருந்தாலும் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அத்தகைய போராட்டங்கள் மேலெழவில்லை என்ற குறைபாடும் காணப்படுகின்றது. உலக நாடுகளின் தூதுவர்களும், விசேட பிரதிநிதிகளும் அத்தகைய ஆட்சி மாற்றத்துக்கான உந்துதல்களை ஏற்படுத்துவதற்கான முனைப்பான செயற்பாடுகளை ஈடுபடுவதாக தெரியவில்லை. எதிர்க்கட்சியின் தலைமை ஆட்சி மாற்றத்துக்கு திட்டமிட்டாலும் அதனை அங்கீகரிக்கக்கூடியதான பிராந்திய சர்வதேச அரசுகளின் அணுகுமுறையும் அமைவதாக தெரியவில்லை. மாறாக, இச்சூழலை பயன்படுத்திக்கொண்டு தமக்கான அரசியல் இலாபங்களை எட்டுவதையே இலக்காக கொண்டு செயற்படுகின்றனர். 2015ஆம் ஆண்டில் அட்சி மாற்றத்தை ஊக்குவித்த இந்திய-அமெரிக்க தரப்புக்கள் இலங்கை அரசாங்கத்தோடு சுமூகமான அரசியல் பயணத்தையே மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு பின்னால் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் சீன முரண்பாடு பற்றிய காட்சிபடுத்தலும் அமெரிக்க-இந்திய உட்பட்ட மேற்குடனான ஒத்துழைப்பும் ஆட்சியின் இருப்பை பாதுகாக்கின்ற பொறிமுறையாக விளங்குகின்றது.

எனவே, இலங்கை எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடி அரசியல்ரீதியில் அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. தென்னிலங்கை பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கு மேற்கொள்ளும் குழப்பகரமான முடிவுகள் மக்களின் இருப்பையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பது என்பது ஆட்சியினர் மீதான நெருக்கடியாகவே காணப்படுகின்றது. நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்க திட்டமிடும் வெதமுல்ல ஆட்சியின் எண்ணம் பலவீனப்படுவதோடு மாற்று தலைமைகளை நோக்கிய தேடலும் அதற்கான அவசியப்பாடும் அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சியினரின் பலவீனமான போக்கும் உலகத்தலைவர்களால் கண்டுகொள்ள முடிய இயலாத எதிரணியும் தொடர்ச்சியான அரசியல் நெருக்கடியாக இருப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார நெருக்கடி ஆட்சியாளர்களால் திசைதிருப்பப்படவும் போலி விம்பங்கள் தோற்றுவிக்கப்படவும் அதனால் ஒரு நெருக்கடியை இலங்கைதீவு சந்திக்கவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)