இலங்கை-ஈரானிய உறவு வலுவானது. இலங்கையில் நிகழ்ந்த இறுதி கட்டப் போரில் உலக நாடுகள் அனைத்தும் வழங்கிய ஆதரவு போன்றே ஈரானும் இலங்கைக்கு பாரிய உதவிகளை வழங்கியிருந்தது. அன்றைய இலங்கையின் ஆட்சியாளர்கள் ஈரானோடு நெருக்கமான உறவு வைத்திருந்தமையால் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் இருநாட்டுக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்பட்டது. தற்போதும் அத்தகைய உறவின் நீட்சியை ஜே.வி.பி.அரசாங்கத்திலும் கண்டு கொள்ள முடிகின்றது. ஈரானின் போர்க்கப்பல் (IRIS Dena) ஒன்று காலி துறைமுகத்தை அண்டிய கடல் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாகவும் அதன் பணியாளர்கள் மற்றும் கடல் படையினர் மீட்கப்பட்டதாகம் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து மீண்டும் பல கப்பல்கள் வருகை தருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இக்கட்டுரையும் ஈரான்-இலங்கை உறவில் பிரதிபலிப்புக்கள் அமெரிக்க இலங்கை உறவில் எழுக்கூடிய புதிய நெருக்கடியையும் அதன் முக்கியத்துவத்தையும் தேட முயலுகிறது.
ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேலியா கூட்டத் தாக்குதல் இலங்கையில் பொருளாதாரத்தில் பாதித்திருப்பதாக கூறப்படுகிறது. தவிர்க்க முடியாமல் இலங்கை ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலின் விளைவுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஆரம்பத்தில் மறைமுகமான பாதிப்பு நிகழும் என எதிர்பார்த்த இலங்கை தற்போது நேரடியாகவே ஈடுபட வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.
முதலாவது குறிப்பாக பெற்றோலியம் மற்றும் எரிவாயுசார்ந்து ஏற்படும் நெருக்கடி மட்டுமன்றி ஏனைய இலங்கை பொருட்களுக்கான ஏற்றுமதி சார்ந்தும் ஈரானுடன் இலங்கை உறவுகளைக் கொண்டிருக்கின்றது. இலங்கை நோக்கி ஈரானிய போர்க்கப்பலின் நகர்வு அத்தகைய உறவின் நீட்சி என்பதை காட்டுகின்றது. ஈரானிய போர்க்கப்பலின் நகர்வானது அதிகம் இலங்கையை நோக்கியதாக அமைந்திருக்காதுவிட்டாலும் அடுத்துவரும் கப்பல்களின் வருகை அதிக குழப்பத்தை தருகிறது. காரணம் ஈரானிய கப்பல்களது வருகை இரு நாட்டுக்குமான உறவின் ஒரு கட்டமாகவே விளங்கிக் கொள்ளப்படுகிறது. இந்தியாவுடனான போர்ப் பயிற்சிக்கு வருகை தந்த போர்க்கப்பல் எனக்குறிப்பிட்டாலும் அதன் வரவு இலங்கையை மையப்படுத்தியிருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகவே தெரிகிறது. அத்தகைய போர் பயிற்சியில் ரஷ;சியா, சீனா, இந்திய மற்றும் இலங்கைக் கப்பல்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிட்த்தக்கதாகும். ஏறக்குறை 74 பங்கேற்ப்பாளர்கள் இருந்ததாகவும் நீர்மூழ்கிகள் போர் கப்பல்கள் விமானம்தாங்கிக் கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டதாவும் தெரியவருகிறது. உலகில் உள்ள அனைத்து நாடுகளாலும் அதிகம் நெருக்கடிக்கு உள்ளாகின்ற நிலையில் ஈரானிய வெளியுறவு இலங்கையோடு கொண்டிருந்த நட்பும் நெருக்கமும் போர்க்கப்பலின் இலங்கை நோக்கிய நகர்வுக்கு அடிப்படையாக அமைய வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. காரணம் இந்து சமுத்திரத்தின் பல நட்பு நாடுகளை ஈரான் கொண்டிருந்த போதும் இலங்கை கடல் பரப்பை நோக்கிய அதன் கப்பல்கள் நகர்த்தப்படுவது முக்கியமானதாகவே உணரப்படுகிறது. இதற்கு அடிப்படையில் கடந்த காலங்களில் இரு நாட்டுக்குமான அதிக நெருக்கம் வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம்.
இரண்டாவது இதே நேரம் ஈரானுக்கும் இலங்கைக்குமான உறவில் சீனா சார்ந்தும் சீன-இலங்கை உறவின் பிரதிபலிப்புச் சார்ந்தும் அத்தகைய நகர்வு அதிகம் முதன்மைப்படுத்தப்படுகிறது. இலங்கை தீவோடு சீனா கொண்டிருக்கின்ற நெருக்கமான உறவு ஈரானின் போர்க்கப்பலை இலங்கை நோக்கி நகர்த்துவதில் வாய்ப்பு இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாக ஹம்மாந்தோட்டை காலி போன்ற துறைமுகங்கள் சீனாவின் செல்வாக்கு வலையங்களாகவே காணப்படுகின்றன. இதுவே சீனா இலங்கை பொறுத்த அணுகுமுறையில் ஈரானின் நகர்வை உறுதிப்படுத்த உதவுகிறது. போரின் பிந்திய நாட்களில் மட்டுமல்லாது ஆரம்ப நாட்களிருந்து சீனாவின் அணுகுமுறை ஈரானுக்கு சார்பானதாக காணப்பட்டது மட்டுமன்றி அமெரிக்காவுடன் ஈரான் ஒரு போரை நிகழ்த்துவதற்கான தெளிவான திட்டமிடலை சீனா வகுத்திருந்தது என்றும் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கை சீனாவுக்கு அவசியமானது என்றும் கருதப்படுகின்றது. இந் நிலையில் பாகிஸ்தான மூலமாக சீனா ஈரானுக்கு உதவுவதாகவும் போரை சீனா நீடிக்க விரும்புவதாகவும் உணரப்படுகிறது. இலங்கை நோக்கி ஈரானிய போர்க்கப்பலகள் நகர்ந்து கொண்டமைக்கான காரணங்களை வெளிப்படையாக எத்தகைய தரப்பு முன்வைக்காத போதும் அமெரிக்க தரப்பு இது தொடர்பில் தெளிவான அறிவிப்பு ஒன்றை முன் வைத்துள்ளது.
மூன்றாவது அத்தகைய அறிவிப்பு ஈரானிய போர்க்கப்பலை இந்து சமுத்திரத்தின் கிழக்கு பகுதியில் வைத்து அமெரிக்காவின் கடற்படையினது Arleigh Burke-classguided-missile destroyer USS Pinckney (DDG-91) தாக்குதல் மூலமே சேதமாக்கப்பட்டது என்றும் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் இவ்வகை தாக்குதல் ஒன்றை அமெரிக்கா வெற்றிகரமாக நிகழ்த்தியதென்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். எனவே கப்பலின் நகர்வு இந்து சமுத்திரத்தின் கிழக்கு பகுதியிலுள்ள இலங்கையை மையப்படுத்தியதாக அல்லது நோக்கியதாக அமைந்திருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உணரப்படுகிறது. ஆனால் சர்வதேச கடல் எல்லையிலோ அல்லது இலங்கையின் கடல் எல்லையிலோ தாக்குதல் நிகழ்ந்ததாக தெளிவுபடுத்தப்படுகிறது. எத்தகைய கடல் பகுதியாயினும் சர்வதேச விதிகளை முழுமையாக அமெரிக்கா மீறிவருகிறது. தரையிலும் கடலிலும் ஆகாயப்பரப்பிலும் சர்வதேச விதிகளை மீறி அமெரிக்கர் இஸ்ரேலியருடன் இணைந்து கொண்டு அழிப்புகளையும் கொலைகளையும் நிகழ்த்தும் மோசமான இனமாக மாறிவருகின்றனர்.
நான்காவது இலங்கைக்கு ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் பெரும்ப பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தாலும் வெளிப்படையாக அல்லது நேரடியாக அரசியல் ரீதியில் பாரிய நெருக்கடி ஒன்றை ஈரானிய போர்க்கப்களின் நகர்வு ஏற்படுத்தியுள்ளது. அது இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமான சுமூக உறவுகளை பாதிக்கக் கூடியதாக அமைந்துவிடுமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. இலங்கையின் நிலையினை இலங்கையின் இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இடதுசாரி கட்சியினர் வெளிவிவகார அமைச்சு ஆயத்துல்லா கொமேனியின் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்ததுடன் கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர். அமெரிக்கா இஸ்ரேலிய நடவடிக்கைக்கு எதிராகவும் தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற சூழலில் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஏற்படுத்தக் கூடியதாகவுள்ளது. இத்தகைய நகர்வு இலங்கை அமெரிக்கா உறவு மட்டுமின்றி இலங்கை இந்தியா உறவையும் அதிகமான குழப்பத்துக்குள் நகர்த்தும் என தெரியவருகிறது. ஏனெனில் இந்திய பிரதமர் இஸரேலுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ இரண்டு நாள் விஜயத்தை அடுத்தே இஸ்ரேல்-அமெரிக்கப் போர் ஈரான் மீது நிகழ்த்தப்பட்டது. இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இருக்கிற நெருக்கமான உறவு எதிரான உணர்வை கொடுப்பதாகவே உணரப்படுகின்றது.
ஐந்தாவது இலங்கை தனது வெளியுறவில் நெருக்கடி மிக்க சூழல் ஒன்றுக்குள் அகப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகின்றது. மனிதாபமான அடிப்படையில் இலங்கை செயல்பட்டாலும் போர்க்கப்பலின் இலங்கை நோக்கிய பயணம் அமெரிக்காவினால் கண்டறியப்பட்டிருப்பதோடு சீன-இலங்கை பலமான நட்புறவின் பிரதிபலிப்புக்களையும் அத்தகைய நகர்வு தேடுதல்போட ஆரம்பித்திருக்கிறது. இதன் விளைவு இலங்கையின் வெளியுறவில் பாதகமான விடயங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இது இலங்கை சீன நட்புறவின் பிரதிபலிப்பின் விளைவாகவே ஈரானுடைய போர்க்கப்பல் நகர்ந்து இருக்கின்ற செய்தி மீண்டும் கப்பல்களின் காலித் துறைமுகத்தை அண்டிய பிரதேசத்தில் நங்கூரமிட்டிருப்பதான செய்தியும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுடன் இலங்கை தவிர்க்க முடியாமல் இணைந்து இருப்பதாகவே தெரிகிறது. ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் பிராந்திய சர்வதேச சக்திகளை கையாண்டது போல் அல்லாத ஒரு நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது.
எனவே ஈரான் மீதான தாக்குதலில் இலங்கையின் வெளியுறவு நெருக்கடியை எதிர் கொள்ள ஆரம்பித்துள்ளதாகவே உணரப்படுகிறது. அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத்தாக்குதலின் விளைவுகள் இலங்கையின் வெளியுறவில் வாய்ப்புக்களை தரக்கூடியதாக அமையுமா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. அது ஈரான், சீனாவின் நகர்விலேயே தங்கியுள்ளது. ஸ்பெயின் மீதான அமெரிக்காவின் நடவடிக்கை கவனத்தில் கொள்வது அவசியமானது. இலங்கையின் வெளியுற அமைச்சர் விஜித ஹரத்தின் இந்திய விஜயம் அனைத்தையும் சர்செய்யுமா என்ற சந்தேகம் அதிகமாக உள்ளது. அவ்வாறே இலங்கையிலுள்ள ஈரானிய உடலங்களும் காயப்பட்ட படையினரதும் இருப்பும் இலங்கையின் இறைமைக்குள் இருக்குமா அல்லது வெனுசுவெலா மாதிரி மீறப்படுமா என்ற குழப்பமும் அதனோடு கூடியுள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
