December 12, 2024
அரசியல் கட்டுரைகள்

மீளெழுச்சி பெறும் காலிஸ்தான் விடுதலை போராட்டம் தேசிய இனப் பிரச்சினைகளுக்கு புதிய வாய்ப்பளிக்குமா?

புதிய உலக ஒழுங்கு சர்வதேச அரசியலில் தேசிய இனங்கள் மீதான அடக்குமுறையை அதிகரித்தே வந்துள்ளது. தனது நலனுக்கும் விருப்புக்கும் உட்பட்ட விதத்தில் தேசிய இனப்பிரச்சனைகளை கையாண்டு வந்த புதிய உலக ஒழுங்கு மீளவும் ஒரு நெருக்கடி ஒன்றினை எதிர்கொள்ள தொடங்கி இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. காரணம் காலிஸ்தான் விடுதலைப் போராட்டம் கனடாவை மையப்படுத்தி மீளவும் தொடக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதரவை கனடா வழங்குவது போன்று, அதன் பின்புலத்தில் அமெரிக்கா இருப்பது என்றும் விவாதங்கள் காணப்படுகிறது. இக்கட்டுரையும் அண்மைய காலங்களில் காலிஸ்தான் விடுதலைப் போராட்டம் ஏற்படுத்தியிருக்கின்ற மாற்றத்தையும், அதன் ஒழுங்கையும், இந்திய-கனடிய உறவின் தாக்கத்தையும் தேடுவதாக உள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் ஒரு பிரிவான சீக்கியர்களுக்கான நீதி அமைப்பும் அதன் தலைமையும் அண்மையில் விடுத்திருக்கும் அறிக்கையானது அதிக பரபரப்பையும் முக்கியத்துவத்தையும் தந்துள்ளது. குறிப்பாக அவ்அமைப்பினுடைய தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன் அயோத்தி ராமர் கோயிலை தாக்க போவதாகவும், இந்துக் கோயில்களை தாக்கி அளிக்கப் போவதாகவும் குறிப்பிட்டதோடு, எதிர்வரும் 16-17 ஆம் திகதிகளில் இத்தகைய தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும், கனடாவில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றில் தெரியப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி கனடாவில் வாழும் வெள்ளையர்களை வெளியேறுமாறும், ஐரோப்பாவுக்குள் மீண்டும் சென்று விட வேண்டுமென்றும் குறிப்பிட்டதோடு, கனடா சீக்கிய மக்களின் நாடு என்றும், சீக்கியர்கள் இந்த நாட்டின் இறைமை உடையவர்கள் என்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சரோவில் நடைபெற்ற நிகழ்வுகளில் தெரிவித்துள்ளார். அயோத்தி கோவிலின் அடித்தளத்தை தகர்க்கப் போவதாகவும், கனடாவில் மீசி சாவு கா வில் உள்ள காளி பாரி கோவிலை 16ஆம் திகதியும், பிராம்ப்டனின் திரிவேணி கோவிலை 17ஆம் திகதியும் தாக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இரு தினங்களிலும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நிகழ்வுகளில் பங்கெடுக்க இருப்பதனால் அவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். அவ்வாறே கனடாவின் பாராளுமன்ற உறுப்பினரான சந்திர ஆர்யா இந்து தீவிரவாதத்தை விசுவாசிப்பதாகவும், அவரது நடவடிக்கைகளில் தாம் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் இந்து தீவிரவாதத்தை கைவிட்டு கனடாவை அவர் விசுவாசிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். அது மீறுகின்ற பட்சத்தில் அவர் மீதான தாக்குதல்களை காலிஸ்தான் அமைப்பு மேற்கொள்ளும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு கனடாவில் மறைந்திருந்த காலிஸ்தான் பிரிவினை இயக்கத்தின் பிரதானி அர்ஷ் தல்லா என்பவரை இந்திய அரசாங்கம் தனது நாட்டுக்கு அனுப்பி விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இவர் 2023ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தினால் பயங்கரவாதி என்றும் கொலை மற்றும் கொலை முயற்சிக்கான 50க்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொள்கிறவர் என்றும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடா அர்ஷ் தல்லா கைது செய்வதற்கு இந்தியாவிடம் விளக்கக் கேட்டிருந்ததோடு, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா அதற்குரிய விளக்கத்தினையும் காரணத்தினையும் கனடிய அரசாங்கத்திடமும் அதன் நீதித்துறையிடமும் முன்வைத்திருந்தது. அதன்பிரகாரம் அவரை கைது செய்து இந்திய நாட்டுக்கு கொண்டு வருமாறும் இந்திய மத்திய அரசு கனடிய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி அர்ஷ் தல்லாவும் அவரது சகாவும் பயணம் செய்து கொண்டிருந்த கார் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்ததோடு, கனடிய போலீசார் அவரை மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். அதேநேரம் அர்ஷ் தல்லா பயணம் செய்த காரை பரிசோதித்த போது துப்பாக்கிகளும் ரவைகளும் இருந்ததோடு; அவரது வதிவிடத்தை பரிசோதனை செய்த போதும் பல ஆயுதங்களும் துப்பாக்கிகளும் ரவைகளும் கண்டெடுக்கப்பட்டது என்றும் அவர் மீது குற்ற நடவடிக்கையின் பெயர் கைது செய்ததோடு விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றது.

மேற்குறித்த சம்பவங்கள் இரு நாட்டுக்குமான உறவில் விரிசலை தந்திருப்பது மட்டுமன்றி, தேசிய இனப் பிரச்சனை பொறுத்து புதிய ஒரு சூழ்நிலை உலகத்திற்கு ஏற்படுத்த முனைவதாகவே தெரிகிறது. அதனை சற்று ஆழமாக அவதானிப்பது அவசியமாகும்.

முதலாவது, இந்திய-கனடிய உறவானது இராஜதந்திர ரீதியில் முக்கியமானது. அத்தகைய இராஜதந்திர உறவில் காலிஸ்தான் விவகாரத்தில் கனடா நேரடியாகவும், அமெரிக்கா அதன் பின்புலத்திலும் செயல்படுவதாக கடந்த காலங்களில் இந்திய தரப்பு பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அதற்கான அடிப்படை காரணம் காலிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை இந்திரா காந்தி பாரிய இராணுவ நகர்வுகளுக்கு உள்ளால் அழித்தொழித்ததோடு, பொற்கோயிலை தகர்த்த வரலாற்று ரீதியான துயரம் ஒன்றை சீக்கிய சமூகத்துக்கு ஏற்படுத்தி இருந்தார். பனிப்போர் காலத்தில் இத்தகைய அணுகுமுறையை இந்தியா மேற்கொள்ளுகின்ற போது ரஷ்சியாவின் ஒத்துழைப்போடு செயல்பட்டதனால் அதனை எதிர்கொள்ள முடியாது, அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்தனர். அதுமட்டும் அல்ல மேற்குலகமும் தேசிய இனங்களுக்கான விடுதலையை தனது நலனுக்கு உட்பட்டு நோக்கியது அன்றி, அதனை முழுமையான விடுதலைக்கான அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இதனால் காலிஸ்தான் விடுதலைப் போராட்டம் முற்றாகவே அழிந்து போனது. ஆனால் அதன் போராட்டக்காரர்களும் போராட்டமும் சீக்கிய மக்களிடமிருந்து முற்றாகவே அளிக்க முடியாத நிலையில், அவர்களது புலப்பெயர்ச்சி அத்தகைய போராட்டத்தை தொடர்ந்து தக்க வைப்பதுக்கும் வழி வகுத்தது. கனடாவின் சட்டதிட்டங்களும் அதற்கான வாய்ப்பை அதிகமாக கொடுத்தது. இதனால் மீளவும் காலிஸ்தான் விடுதலை போராட்டம் கனடிய மண்ணில் இருந்து மீட்கப்பட்டதோடு, அதற்கான அணுகுமுறைகளும் துரிதப்படுத்தப்பட்டது. அதன் பின்புலத்தில் கனடிய அரசாங்கமும் காரணமாக இருந்தது. இந்தியாவை கையாளுவதற்கு அல்லது இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு இதனை ஒரு கருவியாக பயன்படுத்துவதற்கு அமெரிக்காவும் பின்புலத்தில் செயல்பட்டது. தற்போதைய புதிய ஜனாதிபதியாக ரொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் காலிஸ்தான் விடுதலைப் போராட்டம் பொருத்து மாறுபட்ட சூழல் ஒன்றை கனடாவும் அமெரிக்காவும் தொடங்கியிருப்பதாகவே தெரிகின்றது. ஆகவே அடிப்படையில் காலிஸ்தான் விடுதலைப் போராட்டம் மீளவும் ஒரு நெருக்கடிக்குள் செல்லப் போவதாகவும் விமர்சனங்கள் காணப்படுகின்றது. எதுவாயினும் கனடிய-இந்திய உறவு நெருக்கடிக்கு உள்ளாகின்ற விதத்தில் காலிஸ்தான் விடுதலைப் போராட்டம் காணப்படுகிறது. ஆனாலும் அத்தகைய போராட்டம் தீவிரமடைந்து வருவதாகவும், அதனுடைய அணுகுமுறைகள் அதிகம் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுவதாகவும் மதிப்பீடுகள் உண்டு.

இரண்டாவது, காலிஸ்தான் விடுதலைப் போராட்டம் தேசிய இனங்கள் பொருத்து புதிய அத்தியாயத்தை தென்னாசிய பிராந்தியத்தில் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு கொடுத்திருப்பதாகவே தெரிகின்றது. அதனுடைய அணுகுமுறைகள் அது கனடாவை பயன்படுத்திக் கொள்ளுகின்ற முறைகள் அதிகம் அழுத்தத்துக்கு உட்படுவதோடு நெருக்கடிமிக்கதாக காணப்படும் என்பது துயரகரமானது. ஆனால் காலிஸ்தானுடைய எழுச்சி என்பது ஒட்டுமொத்த தேசிய இனங்களுக்கும் அவற்றின் உடைய விடுதலைப் போராட்டங்களுக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத கூடியதாக மாறுகின்ற வாய்ப்பினை கொண்டிருக்கின்றது. அதனை சரிவர பிரயோகப்படுத்த காலிஸ்தான் விடுதலைப் போராட்ட பிரிவினர் முனைபவர்களாக இருந்தனர். அதன் அடிப்படையில் ஒரு புதிய அணுகுமுறைக்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாக அமையும். இந்தியாவைப் பொறுத்தவரையில் பேரரசுவாத கனவோடு எழுச்சி பெறுகின்ற சூழல் என்பது காலிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை முற்றாகவே அழித்தொழிக்கும் அணுகுமுறைகளை கொண்டிருக்கின்றது. அதிலிருந்து மீளுவது என்பது சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பிலும் சர்வதேச சட்ட வரைவுகளின் ஒத்துழைப்பிலுமே தங்கி இருக்கின்றது. அதனை நோக்கி காலிஸ்தான் விடுதலைப் போராட்ட அமைப்பு செயல்படுமாக இருந்தால், வன்முறையற்ற ஆயுத கலாச்சாரம் பெற்ற தேசங்களில் சட்ட அளவுக் கூடாக நகருமாக இருந்தால் ஒரு ஆரோக்கியமான முயற்சியை தேசிய இனங்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும். அதனுடைய அடிப்படையில் இருந்து மீளவும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் உயிர்பிப்பதோடு, அதற்கான புதிய அணுகுமுறைகளை கட்டமைத்துக் கொள்ள முடியும்.

எனவே, தென்னாசியா அரசியலில் காலிஸ்தான் விடுதலைப் போராட்டம் ஒரு நீண்ட வரலாற்றை தனக்குள் கொண்டிருக்கின்றன. பிரித்தானியர்களுடைய வருகையிலிருந்து பெற்றிருந்த ஒரு தேசிய இனம் தனக்கான விடுதலையை பெற்றுக் கொள்வதற்கு மிக நீண்ட காலமாக போராட்டத்தில் மேற்கொண்டு, தற்போது அத்தகைய போராட்டத்திற்கு மீளவும் எழுச்சி பெறுவதற்கான ஒரு வாய்ப்பை அது கொண்டிருக்கின்றது. அதனுடைய எழுச்சி தென்னாசிய பிராந்தியத்தில் மட்டுமின்றி பிற பிராந்தியங்களில் இருக்கும் தேசிய இனங்களின் விடுதலைக்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தப் போகின்ற ஒரு சூழலை தரக்கூடியதாக காணப்படுகின்றது. அதனை கட்டமைப்பதும் அதனை சரியான செல்நெறியில் கொண்டு செல்வதும் மிகப் பிரதானமான பங்குதாரர்களாக காலிஸ்தான் விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் காணப்பட வேண்டும். அவற்றினுடைய அணுகுமுறைகளிலே தேசிய இனங்களின் மீழ் எழுச்சி சாதகமான விளைவுகளை தரக்கூடியதாக அமையும்.

-பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)