அரசியல் கட்டுரைகள்

ரஷ்சிய தயாரிப்பான சுகோய்-57 உலகளாவிய அதிகாரப் போட்டியை தீவிரப்படுத்துமா?

உலகளாவிய அரசியலில் இராணுவத்தின் எழுச்சி அதன் ஆயுத பலத்தினால் தீர்மானிக்கப்படுகின்ற நிலை வளர்ச்சியடைந்துள்ளது. அத்தகைய ஆயுத தளபாடத்தின் போட்டி ஒவ்வொரு அரசுகளதும் உலக ஆதிக்கத்தினை சாத்தியப்படுத்துடன் அதிகாரச் சமநிலையை வெளிப்படுத்துவதாக விளங்குகிறது. உலகளாவிய அதிகாரப் போட்டியில் அமெரிக்கா மற்றும் சீனா முதல் நிலையில் காணப்பட்டாலும் ரஷ்சியாவும் அத்தகைய போட்டியில் ஈடுபடும் நாடாக விளங்குகிறது. முன்னாள் சோவியத் யூனியனது மைய நாடான ரஷ்சியா பொருளாதாரத்தில் பலவீனமடைந்தாலும் இராணுவத்திலும் ஆயுத தளபாட வளர்ச்சியிலும் முதன் நிலைக்குரிய தேசமாக காணப்படுகிறது. ரஷ்சியா சுகோய் 57 ரக போர் விமானத்தை ரஷ்சிய விமானப்படையில் சேர்த்துக கொண்டதன் விளைவுகளைத் தேடுவதாக இக்கட்டுரை அமையவுள்ளது.

சுகோய் 57 போர் விமானம் ஐந்தாம் தலைமுறை போர்விமானத்தின் வரிசையில் அதிவேகம் பொருந்தியதென தெரியவந்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின ஐந்தாம் தலைமுறை போர் விமானமான எப்-22 மற்றும் எப்-35 என்பன அமெரிக்க இராணுவத்தில் பயன்பாட்டிலுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் ரஷ்சியத் தயாரிப்பு போர் விமானத்துடன் ஒப்பிடும் போது அதி நவீனமானவை என கூறப்படுகிறது. குறிப்பாக சுகோய்ன் வேகம் எப் 35 ஐ விட அதிகமாவும் அதாவது சுகோய் மணிக்கு 1600 மைல் வேகத்தில் பறக்கக் கூடியது. அமெரிக்கத் தயாரிப்பு 1200 மைல் வேகமுடையது. அவ்வாறே 22000கிலோ எடையைச் கொண்ட ஏவுகணைகளை சுமக்கும் திறன் கொண்டதாக ரஷ்சியா தயாரித்துள்ளது. அவ்வாறே 78300 கிலோ எடையுடன் மேல் கிழம்பும் திறன் கொண்டதாகும். ஆனால் அமெரிக்க தயாரிப்பானது 70000 கிலோ எடையுடனே மேலெழும்பும் திறனுடன் 20000 கிலோ வெடிப்பொருட்களை சுமந்து செல்லக் கூடியது. சுகோய் 65000 அடிவரை பறக்கக்கூடியது. எப்-35 50000 அடிவரை பறப்பு உயரத்தைக் கொண்டது.

இது மட்டுமன்றி சுகோய்-57 இரட்டை இயந்திரத்தையும் ஒரு இருக்கையையும் கொண்டிருந்தாலும் அதன் கொட்பீட் அறையிலுள்ள கம்பியூட்டரின் உதவியுடன் உள்புற வெளிப்புற அழுத்தங்கள் கணிக்கப்பட்டு பறக்கும் உயரம் மற்றும் வேகத்தினைக் கணித்து தனாகவே விமானத்தை பறக்கவைக்கும் தொழிநுட்பத்தைக் கொண்டுள்ளது சுகோய்-57 விமானம். இதனை Electronic second pilot என அழைக்கப்படுகிறது. இதனுடன் இவ்விமானம் ஹைப்பசொனிக் ஏவுகணையையும் சுமந்து செல்லும் திறனுடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி ராடர்களுக்கு சிக்காத தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ளது. அதாவது ரடர்கள் அனுப்பும் சிக்னல்களை இந்த விமானங்களின் உலோக அமைப்புக்கள் உறிஞ்சி வைத்துக் கொள்வன எனபது குறிப்பிடத்தக்கதாகும். கம்பியூட்டர் பைலட் தான் சுகோய் -57 இன் துணைவிமானியாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

2028 ஆண்டுக்குள் 76 சுகோய் போர் விமானங்களை ரஷ்சியா தனது விமானப்படையில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்தியாவும் சுகோய் விமானங்களை கொதள்வனவு செய்ய ஆர்வம் காட்டிவருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு சுகோய் ஏவியேன் எனும் ரஷ்சிய நிறுவனம்தயாரிப்பினை ஆரம்பித்த போதும் 2010இல் தயாரிப்பு முழுமையடைந்துவிட்டது. ஆனால் அதன் பரிசோதனை பல நெருக்கடியினால் காலதாமதாகியதுடன் அநேகமான பரிசோதனை ஓட்டங்களை சிரியாவின் வான்பரப்பிலேயே மேற்கொண்டது. அத்துடன் எந்தவித குண்டு வீச்சுக்களையோ ஏவுகணைத் தாக்குதலையோ நிகழ்தாது பரிசோதனையை முடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தகைய வெற்றியை அடுத்து 25.12.2020 ரஷ்சிய விமானப்படையில் சுகோய்-57 சேர்க்கப்பட்டுள்ளது. சுகோய்-57 இன் வருகை ஏற்படுத்தப்போகும் தாக்கங்களை நோக்குவது அவசியமானது.

முதலாவது போரியல் ஆயுதங்களின் வளச்சிக்கான முனைப்பானது ரஷ்சியாவின் ஆயுதபலத்தை அதிகரித்துள்ளது. அதன் பிரதான எதிரி நாடான அமெரிக்காவின் ஆயுதங்களுக்கு சமமான வலுவைக் கொண்ட நாடாக ரஷ்சியா காணப்படுவதும் உலகளாவிய ரீதியில் அதிகாரச் சமநிலைக்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொவிட்-19 பிரதிபலிப்புடன் அமெரிக்க ஆட்சித்துறையில் ஏற்பட்டுவரும் நெருக்கடிகள் ஐரோப்பிய பொருளாதார குழப்பங்கள் மத்தியில் ரஷ்சியாவின் அதிதிறன்வாய்ந்த ஆயுததளபாடத்தின் உற்பதியானது இராணுவ அரசியல் பரப்பில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளதுர.

இரண்டாவது பிராந்திய நாடுகளுக்கிடையே நிலவிவரும் ஆயுதப் போட்டிக்கான வாய்ப்பு ரஷ்சியாவினது ஆயுத தளபாடத்தால் ஒருங்கிணைக்கப்படும் சூழல் ஏற்படக்கூடியதாக உள்ளது. குறிப்பாக அமெரிக்காவினது எப்-35 இனைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட இழுபறியினாலேயே துருக்கி நேட்டோவிலிருந்து கொண்டு ரஷ்சிய தயாரிப்பான எஸ்-400 ஏவுகணையை கொள்வனவு செய்யும் நிலை ஏற்பட்டதும் அமெரிக்காவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் முரண்படும் நிலை உருவானது. இது மேலும் துரக்கிய-ரஷ்சிய உறவை பலப்படுத்துவதுடன் பிராந்திய ரீதியான சமநிலைக்குள் போட்டி நிலவவாய்ப்புள்ளது. மேற்காசியா ரஷ்சியாவின் கட்டுக்குள் தீவிரமாக மாறும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. சிரியா, ஈரான், துருக்கி வரிசையில் இன்னும் பலப்படுத்தல் மட்டுமல்ல பிராந்திய ஆதிக்கம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படவுள்ளது. ஏறக்குறைய அமெரிக்காவின் மேற்காசிய இருப்பு நெருக்கடிக்குள்ளாகும் போக்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

மூன்றாவது, ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க-இஸ்ரேல் உறவானது ரஷ்சிய நட்பு சக்திகளுக்கு பலமானதாக அமையும். அமெரிக்கா அதிகம் இஸ்ரேல் நட்புறவை கையாள முனையும் போது ரஷ்சியாவுக்கும், இஸ்ரேலுக்குமான உறவு நேர்கணியமில்லாததனால் ஈரான் சிரியா துருக்கிக்கு இலாபகரமானதாக அமைய வாய்ப்புள்ளது. இதனை முன்கூட்டியே கணித்த அமெரிக்காவின் தற்போதைய நிர்வாகம் இஸ்ரேல் சின்னி முஸ்லீம் அரசுகளுடனான நட்புறவைப் பலப்படுத்தியுள்ளமை கவனிக்கத்தக்கதாகும். இத்தகைய அவதானிப்பின் விளைவு ஏனைய பிராந்தியங்களிலும் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக முன்னாள சோவியத் குடியரசுகள் மத்தியிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் தென் ஆசியா போன்ற பிராந்தியங்களிலும் ரஷ்சியாவின் இராணுவ திறன் பலமானதாக அமைய வாய்ப்புள்ளது. இந்தியா முன்கூட்டியே அதற்கான விண்ணப்பத்தினை செய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே ரஷ்சியாவின் ஐந்தாம் தலைமுறை போர்விமானம் பிராந்திய சர்வதேச அரசியலில் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியதாகவுள்ளது. இதனை எதிர்கொள்ளும் விதத்தில் அமெரிக்காவின் இன்னோர் தயாரிப்புக்கான நகர்வுகள் ஆரம்பித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் அதனால் ஏற்படும் போட்டித் தன்மை உலகளாவிய அரசியலைத் தீர்மானிக்கும் விடயமாக அமையும். ஆனால் இத்தகைய ஆயுதப் போட்டியினால் உலகளாவிய ரீதியில் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் நிரந்தரமானவையாக அமைவதுடன் இது தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்கள் தவிர்க்க முடியாதவையாக உள்ளன. அத்தகைய விமர்சனங்களும் சுகோய்-57 தொடர்பில் முன்வைக்கப்படும் மதிப்பீடுகளும் இயல்பானவையாகவே தெரிகிறது. எதுவாயினும் உலகம் தொடர்ச்சியாக ஆயுதப் போட்டிக்குள் அகப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.

-கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்-