அரசியல் கட்டுரைகள்

ரஷ்யா-உக்ரைன் போரை நீடிக்கச் செய்யுமா ஜெலன்ஸ்கியின் அமெரிக்க விஜயம்?

உலகளாவிய அரசியலில் ரஷ்ய-உக்ரைன் விவகாரமே மீண்டும் முதன்மை பெற்றுள்ளது. இரு நாட்டுத் தலைவர்களது அண்மைய வெளிநாட்டு விஜயங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உலக விவகாரமாக விளங்குகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பெலாரஸ் நாட்டுக்கான விஜயமும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் அமெரிக்க விஜயமும் தனித்துவமான உலக அரசியலை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த பெப்ரவரியில் தொடங்கிய ரஷ்ய- உக்ரைன் போர் 300 நாட்களை கடந்துள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி போருக்கு பின்னர் பல நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள போதும், இருவரது தற்போதைய விஜயமும் போரை முழு நீளப் போராக மாற்றுவதுடன், உலகளாவிய போராக மாற்றுமா என்ற சந்தேகத்தைத் தந்துள்ளது. இக்கட்டுரையும் இரு நாட்டு ஜனாதிபதிகளது வெளிநாட்டு விஜயங்கள் தந்துள்ள விளைவுகளைத் தேடுவதாக அமைந்துள்ளது.

முதலாவது, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி 21.12.2022 அன்று அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளார். அவரது விஜயம் இரகசியமாக வைக்கப்பட்டதுடன் அதிமுக்கிய பாதுகாப்புக்குரியதாகவும் அமைந்திருந்தது. அவர் அமெரிக்க இராணுவ விமானத்தில் ஆன்ட்ரூஸ் விமானப் படைத்தளத்துக்கு வருகை தந்தார். உக்ரைன் ஜனாதிபதிக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்த அமெரிக்கா, செங்கம்பள வரவேற்பளித்தது. அது மட்டுமன்றி இரு அவைகளும் கொண்ட காங்கிரஸ் அவையில் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். முன்னாள் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சேச்சிலுக்கு பின்னர் போர்க்காலத் தலைவராக ஜெலன்ஸ்கியே காங்கிரஸில் உரையாற்றியதாகக் குறிப்பிடப்படுகிறது. அங்கு ஜெலன்ஸ்கி உரையாற்றும் போது, அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத தளபாடங்களுக்காகவும் நிதி உதவிக்காகவும் நன்றி தெரிவித்ததுடன், அமெரிக்கா வழங்கிய இராணுவ உதவிகள் வெறும் உதவிகள் மட்டுமல்ல அனைத்தும் உலக பாதுகாப்புக்கான முதலீடுகள் என்றும் தெரிவித்தார். அமெரிக்க காங்கிரஸின் இறுதி முடிவுதான் உக்ரைனைப் பாதுகாக்கும் எனவும் குறிப்பிட்டார். அவரது விஜயம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், அடுத்துவரும் வாரங்களில் காங்கிரஸின் பெரும்பான்மையை குடியரசுக்கட்சி பெற்றுக் கொள்ளும் தறுவாயில், உக்ரைனுக்கு வழங்கப்படும் நிதி கட்டற்றதாக உள்ளதென்ற விமர்சனத்தை எதிர்கொள்ளும் விதத்தில் ஜெலன்ஸ்கியின் உரையும் விஜயமும் முதன்மைப்படுத்தப்படுகிறது. மேலும் ஜெலன்ஸ்கி உரையாற்றும் போது உக்ரைன் படைகள் ஒருபோதும் ரஷ்யாவிடம் சரணடையாது எனத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன்- ரஷ்யப் போர் எவ்வளவு காலமானாலும் அமெரிக்கா உக்ரையினுக்கு உதவும் என உறுதியளித்ததுடன், மேலும் உடனடியாக 1.85 பில்லியன் அமெ.டொலர் உதவியை அறிவித்தார். அது மட்டுன்றி அமெரிக்க தயாரிப்பான பேற்றியட் வான்தடுப்பு ஏவுகணையை உக்ரைனுக்கு வழங்குவதாகவும் அவ்வறிப்பில் பைடன் முன்வைத்தார். உக்ரைன் ஒவ்வெரு நகர்விலும் அமெரிக்கா உக்ரைனுடன் இருக்கும். உக்ரைனுக்கு எப்போதும் துணையாக அமெரிக்கா செயல்படும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். இரு நாட்டுக் கொடிகளையும் மாற்றிக் கொண்ட தலைவர்கள் நம்பிக்கையூட்டும் பயணத்தை தொடர்வதாகவே தமது உடல் மொழிகளை வெளிப்படுத்திக் கொண்டனர்.

இரண்டாவது, 19.12.2022 அன்று ரஷ்ய ஜனாதிபதி புடின் பெலாரஸ் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார். அவரது விஜயம் இரு நாட்டுக்குமான இராணுவ எல்லைகளை பலப்படுத்துவதுடன் இராணுவ ஒத்திகைக்கான உரையாடலையும் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பலமானதாக இருப்பதுடன் உக்ரைன்- ரஷ்யப் போர் தொடங்கியது முதல் பெலாரஸ் ரஷ்யாவின் ஆதரவு நாடாகவே விளங்குகிறது. அதேநேரம் தனது இராணுவ அதிகாரிகளுடன் புடின் உரையாடும் போது போருக்கும் இராணுவத்திற்கு தராளமாக நிதி உதவி வழங்கப்படும் என உறுதியளித்த ரஷ்ய ஜனாதிபதி உக்ரைனுடனான போர் மூன்றாவது நாடொன்றின் கொள்கையின் விளைவே எனவும் போருக்கு ரஷ்யா காரணமல்ல என்றும் தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடும் போது உக்ரைனை சகோதர தேசமாகவே பார்ப்பதாக குறிப்பிட்டார்.

இரு நாட்டுத் தலைவர்களையும் பற்றிய மேற்கு உலக ஊடகங்களின் பார்வை வேறுவிதமாகவே தெரிகிறது. குறிப்பாக புடினது பெலாரஸுக்கான விஜயத்தை ஜெலன்ஸ்கியின் அமெரிக்க விஜயத்துடன் ஒப்பிடுகின்றனர். மிக மோசமான ஒப்பீடாகவே தெரிகிறது. புவிசார் ரீதியாக ரஷ்யாவின் அயல் நாடாகவும் நட்பு நாடாகவும் பெலாரஸ் விளங்குகிறது. இரு நாட்டுக்குமான புவிசார் அரசியலாக அமைந்திருப்பதுடன் முன்னாள் சோவியத் யூனியன் காலத்தில் ஒரே தேசமாக இரு நாடுகளும் காணப்பட்டன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அது மட்டுமன்றி உக்ரைனியர்கள் அமெரிக்க நலனுக்காக பலியிடப்படுவது போல் பெலாரஸ் மக்களோ இராணுவமோ ரஷ்யாவுக்காக பலியிடப்படவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆனால் அமெரிக்காவை உக்ரைனின் நட்பு நாடாகக் கொள்ள முடியுமா என்பது தற்போதும் கேள்வியாகவே உள்ளது. காரணம் தொழில்நுட்ப ரீதியாக அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கும் ஆயுதங்கள் எவையும் முழுமையான திறன் கொண்டவை எனக்குறிப்பிட முடியாது என இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதுமட்டுமன்றி அமெரிக்காவின் இராணுவ ஆயுத தளபாட ஏற்றுமதி உக்ரைனுக்கானதாக மாறியுள்ளதுடன் பொருளாதார உதவிகளை விட இராணுவத்திற்கே அதிக நிதியை அறிவித்துவிட்டு அதற்கான ஆயுதங்களை அமெரிக்காவே வழங்குகிறது. ஏறக்குறைய அமெரிக்க நலனுக்காக உக்ரைன் சுடுகாடாக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடன் நேரடியாக மோதாது உக்ரைனை கையாண்டு போரை வெற்றிகரமாக அமெரிக்கா நகர்த்தியுள்ளது. இந்தப் போரின் வெற்றிகள் அனைத்தும் அமெரிக்காவுக்கும் நேட்டோவுக்குமானதே.

ஜெலன்ஸ்கியை பிரித்தானிய முன்னாள் பிரதமர் சேர்ச்சிலுடன் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஒப்பிடுவதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதுவும் மிக மோசமான ஒப்பீடாகவே தெரிகிறது. வின்ஸ்டன் சேர்ச்சில் இரண்டாம் உலகப் போரை நிகழ்த்தியவர் என்றும் மேற்குலகத்தின் போரை திட்டமிட்டு வழிநடத்தியவர் என்பதுடன் ஹிட்லரின் போர் உத்திகளை தோற்கடித்தவர் என்றும் பெருமைப்படக் கூடிய தலைவராக விளங்கினார். அவர் சொந்த நாட்டு மக்களை கொல்வதற்கு ஒரு போதும் ஜெலன்ஸ்கியைப் போல் துணை போகவில்லை என்பது நினைவு கொள்ளத்தக்கது. அமெரிக்க நலனுக்காக மட்டுமல்லாது மேற்கு ஐரோப்பாவின் நலனுக்காகவும் போர்க் களத்தை கையாண்டவரே சேர்ச்சில். புவிசார் அரசியலையும் சர்வதேச அரசியலையும் ஒருங்குசேர கையாண்டவரே சேர்ச்சில். முதலாளித்துவத்திற்கும் மேற்குலகத்திற்கும் ஆபத்தான கம்யூனிஸத்தையும் நாசிசத்தையும் ஒன்றாகவே தோற்கடித்த இராஜதந்திரியே சேர்ச்சில். ஏறக்குறைய இரண்டாம் உலகப் போரை முழுமையாக செயற்படுத்தி மேற்குலகத்திற்கான வெற்றியாக்கிய தலைவராகவே பிரித்தானிய பிரதமர் சேர்ச்சில் காணப்படுகிறார்.

இரு நாட்டுத் தலைவர்களது நகர்வுகளும் தெளிவாக போரை நீடிக்க திட்டமிடுவன என்பதை அமெரிக்க ஜனாதிபதியின் உரையிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது. அதாவது உக்ரைன் போர் எவ்வளவு காலம் நீடித்தாலும் அமெரிக்கா உக்ரைனுடன் இருக்கும் என்பதன் மூலம் போரை நீடிக்கவே அமெரிக்கா விரும்புகிறது. காரணம் இத்தகைய போர் ரஷ்யாவுக்கான எதிர்காலத்தை தோற்கடித்துள்ளதாகவே தெரிகிறது. உலகத்தின் இருதய நிலத்தை கட்டுப்படுத்தாதுவிடின் அது எப்போதும் மேற்குக்கு ஆபத்தானதாகவே அமையும் என்பதை அமெரிக்கா நன்கு புரிந்துள்ளது. அதனாலேயே உக்ரைனுக்கான ஆயுத தளபாடங்களையும் நிதி உதவியையும் வகைதொகையின்றி வழங்கி வருகிறது. அவ்வாறே ரஷ்யாவும் இப்போரை கைவிட்டால் நேட்டோவால் ஏற்படப் போகும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் முயற்சியில்’ ஈடுபட்டு வருகிறது. எனவே இருதரப்புக்கும்’ போர் அவசியமானது மட்டுமன்றி போர் நீடிக்கப்படுவதும் தவிர்க்க முடியாததாயுள்ளது. அதாவது இரு நாடுகளுக்குமான போர் புவிசார் அரசியலால் நிர்ணயிக்கப்படுகின்ற தென்பதை உணர முடிகிறது. இதன் விளைவுகள் அதிகமானவை ரஷ்ய உக்ரைனியர்களுக்கே அன்றி அமெரிக்கர்களுக்கல்ல. ஐரோப்பியர் பாதிக்கப்பட்ட அளவுக்குக் கூட அமெரிக்காவுக்கு உக்ரைன்-ரஷ்யப் போரால் பாதிப்பு ஏற்படவில்லை.

எனவே உலகம் போரின் எல்லைக்குள் நகர திட்டமிடுகிறது. பொருளாதார பாதிப்புகளால் வறிய நாடுகள் தொடர்ந்தும் ஆபத்தான நிலைக்குள் தள்ளப்பட வல்லரசுகள் ஆயுதப் போட்டியிலும் ஆதிக்க போட்டியிலும் முனைப்புச் செலுத்தி வருகின்றதைக் காணமுடிகிறது. ஐரோப்பா மீளவும் ஒரு வரலாற்றுத் துயரத்திற்குள் நகர்கிறது. அமெரிக்காவுக்காக உக்ரைனின் ரஷ்யாவுக்கு எதிரான போரை தொடரப் போகிறது. ஜெலன்ஸ்கியின் அமெரிக்க விஜயம் உக்ரைன் படைகளின் ஆயுத தளபாடங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியே பிரதான காரணமாகத் தெரிகிறது. நேட்டோவிடமும் அமெரிக்காவிடமும் ஆயுதங்களையே உக்ரைன் ஜனாதிபதி கோரிவருகிறார். போரை நிறுத்துவதற்கு பதிலாக போரை நீடிக்கவே இரு நாட்டுத் தலைவர்களது நகர்வுகளும் அமைந்துள்ளன. உக்ரைன் -ரஷ்யப் போரை அமெரிக்க அதிகம் தீவிரப்படுத்த விரும்புகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)