April 15, 2026
அரசியல் கட்டுரைகள்

ஊழலற்றவர்களின் ஊழல் ஆட்சியும் ஜே.வி.பி. அரசாங்கமும்?

தென்பூகோள நாடுகளில் ஊழல் பாரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இலஞ்சம், மிரட்டிப் பணம் பறித்தல், கையாடல் மற்றும் உறவினர்களுக்குச் சலுகை காட்டுதல் போன்றவை இதன் பொதுவான வடிவங்களாகும். முழு உலகத்திலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளிலே ஊழல் பாடிய பிரச்சனையாக காணப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் சராசரி ஊழல் உணர்வுக் குறியீட்டு (CPI- Corruption Perceptions Index) மதிப்பெண் 44 ஆக உள்ளது. இது ஊழலுக்கு எதிரான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதை பிரதிபலிக்கிறது. ஊழலுக்கு எதிரான நகர்வுகளில் சிங்கப்பூர் உயர் தரவரிசையில் இருக்கிறது. இலங்கை தீவிலும் ஊழலை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்சியாளர்களும் ஆட்சி முறமைகளும் தேசத்தின் பொருளாதார இழப்பையும் நாட்டின் வங்குரோத்து நிலைக்கும் கொண்டு செல்கின்ற சூழல் ஒன்றை ஏற்படுத்தி வருகின்றன. இலங்கையில் ஊழலை முழுமையாக ஒழிக்கும் கோசத்தோடு ஆட்சியைப் பிடித்த ஜே.வி.பி. அரசாங்கம் ஊழலின் பிடிக்குள் அகப்பட்டிருக்கிறது. ஊழலை ஒழித்தல் என்பது இலங்கையில் எப்போதும் அரசியல் பிரச்சாரத்தின் அம்சமாகவும் மக்களை ஏமாற்றுகின்ற ஒரு குறிகாட்டியாகவும் மட்டுமே காணப்படுகிறது. இக்கட்டுரையும் ஜே.வி.பி. அரசாங்கத்தின் ஊழல் பற்றிய உண்மையான பக்கங்களைத் தேட முயலுகின்றது.

இலங்கை அரசியலில் அவ்வப்போது ஆட்சியை கைப்பற்றுவதற்கு உத்திகள் வகுக்கப்படுகிறது. இனவாதத்தின் பெயரால் நீண்ட காலம் ஆட்சியை நடத்திய வலதுசாரி கட்சிகள் மற்றும் சமூக முதலாளித்துவ கட்சிகள் காணப்பட்டன. இக் கட்சிகளிடமிருந்து ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஜே.வி.பி. ஊழலற்ற ஆட்சி என்ற கோஷத்தை முதன்மைபடுத்தியது. அவ்வாறே அது இனவாதம் அற்ற ஆட்சியை அமைப்பது என்றும் கோவத்தையும் சேர்த்துக் கொண்டது. ஆனால் அதன் ஊழல் அற்ற அல்லது ஊழலுக்கு எதிரான அணுகுமுறை என்பது குறுகியகால ஆட்சியிலே முடிவுக்கு வந்தது. ஊழல்வாதிகளை கைது செய்வதும் சிறையில் அடைப்பதும் ஊழலற்ற இலங்கை அரசாங்கத்தின் ஆட்சி முறையை உருவாக்குவதும் ஜே.வி.பி. இன் அணுகுமுறையாக அமைந்திருந்தது. ஆனால் தற்போது ஜே.வி.பி. அரசாங்கத்தின் ஆழும் அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி உறுப்பினர்களையும் அவர்களது ஊழலிலிருந்து பாதுகாக்க முடியாமல் அதற்குள் மூழ்கிப் போகின்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இது மக்களிடம் போலி வார்த்தைகளையும் நம்பிக்கை ஊட்டல்களையும் ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிப்பதற்கான உத்தியாகவே தெரிகிறது. இடதுசாரி ஆட்சியாளர்கள் என்று கூறிக் கொள்ளும் ஜே.வி.பி. இனரிடம் ஆழமாகவே ஊழல் கறைபடியத் தொடங்கியுள்ளது. இது ஒரு வகையில் இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் பிரதான பக்கமாகவே தெரிகின்றது. இதனை ஜே.வி.பி.அரசாங்கத்தின் அண்மைய சம்பவங்களோடு தொடர்புபடுத்தி புரிந்து கொள்ள வேண்டிய அவசியம்.

முதலாவது அதிகம் பேசப்படும் நாளாந்தம் இலங்கைத் தீவின் சாதாரண மக்கள் முதல் உயர் வர்க்கங்கள் வரை முக்கியத்துவப்படுத்தும் சக்தி வளத்தோடு தொடர்புடைய நிலக்கரி ஊழல் பற்றியதாகும். இது பாரிய பொருளாதார நெருக்கடியையும் அரசியல் உறுதியற்ற தன்மையையும் ஏற்படுத்த வழிவகுத்துள்ளது. இது 2015 இல் ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் முறைகேட்டிலிருந்து நிகழ்வதாகவும் தெரியவருகிறது. இதில் குறிப்பாக ஒன்று, விலை கோரல் முறைகேடு பற்றிய குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதாவது குறைந்த விலை வழங்கிய நிறுவனத்தைத் தவிர்த்து அதிக விலை கோரிய நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு. இரண்டு, தரமற்ற நிலக்கரி கொள்வனது பற்றிய குற்றச்சாட்டு. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரமற்றதாக இருந்ததால், மின் நிலையங்களில் தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. மூன்று, அரசியல் தலையீடு பற்றியது. அரசியல் தொடர்புகள் உள்ள நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. நான்கு, இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு பற்றியது. இந்த முறைகேடுகளால் அரசுக்கு ஏறக்குறைய 200-300 மில்லியன் அ.டொ இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நிலக்கரி கொள்வனவு ஊழல் அரசாங்கத்தின் அமைச்சரவையாலும் அதன் அதிகாரிகளாலும் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பொருளாதார இழப்புகளும் இதனால் ஏற்பட்டுள்ள மின்சார பரிவர்த்தனையின் நெருக்கடியும் அதன் சுமைகளும் சாதாரண மக்களுக்கு உரியதாகவே மாறியுள்ளது. அதன் இழப்பை கொள்வனவு செய்த நிறுவனத்தின் மீது சுமத்திவிட்டு அரசாங்கமும் ஆட்சியாளர்களும் ஊழல் புரிந்தவர்களும் தப்பிக்கொள்வதற்கும் தப்பவைப்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கா அரசாங்கம் வழி வகுத்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஊழலை நிகழ்த்துவது என்பதை விட ஊழலை நிகழ்த்துபவரை பாதுகாப்பதே மிக அபாயகரமான விளைவை ஏற்படுத்தக்கூடியது. அதனையே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நிகழ்த்தியுள்ளது. தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஊழலை ஒழிக்கும் அரசாங்கத்தின் கோசம் அதிகமான நம்பிக்கையினை ஏற்படுத்தியிருந்தது. இந்த நம்பிக்கையின் ஜே.வி.பி. அரசாங்கத்தின் உண்மையான முகத்தை இலங்கை தீவில் உள்ள அனைத்து மக்களும் அனுபவிக்கும் நிலையை இச்சம்பவம் உணர்த்துகின்றது. இது ஏறக்குறைய இலங்கை தீவில் இடதுசாரிகள் வலதுசாரிகள் என்ற பாரபட்சம் இல்லாததென்றென உணர்த்தியுள்ளது. இலங்கைத் தீவில் ஊழல் அடிப்படையான அரசியல் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக மாறி இருக்கின்றது. அதனை கோசங்களால் ஒருபோதும் மாற்ற முடியாது. ஓர் ஆயுதப் போராட்ட அனுபவத்தை கொண்ட ஜே.வி.பி. இன் கைகளில் ஆட்சி ஒப்படைக்கப்படுகிற போது மக்கள் அதிகமான நம்பிக்கையை கொண்டிருந்தனர். ஆனால் அதன் விளைவு முழுமையாகவே ஊழலை இலங்கை தீவில் இருந்து எந்த சக்தியினாலும் முடிபுக்கு கொண்டுவர முடியாது என்பதை உணர்த்தியுள்ளது. ஜே.வி.பி. ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பு என்ற அடிப்படையிலிருந்து ஒரு மிதவாத சக்தியாக மாறி ஆட்சியை பிடித்தது. ஆனால் அதன் இடதுசாரி அரசியலும், ஆயுதப் போராட்ட அரசியலும் இலங்கையின் அரசியல்கலாசாரத்திற்கு உட்பட்டதேயாகும்.

இரண்டாவது அரசாங்க அமைச்சரவை உறுப்பினராக விளங்கும் அமைச்சர்கள் தமது சொந்த நலனுக்கு ஏற்ப சொத்துப் பெருக்கத்தையும் விரிவாக்கத்தையும் மேற்கொள்வதை காணமுடிகிறது. அரசியல் பதவியை கொண்டு பாரிய அளவான சொத்துக்களை குவிக்கும் நிலை ஒன்றினை ஜே.வி.பி. அமைச்சர்கள் மேற்கொள்வதாக தென் இலங்கை ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. இது மக்களுடைய சொத்துக்களை தமது சொந்த நலனுக்கு பிரயோகிப்பதாகவே தெரிகிறது. இவை அனைத்துமே ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் வெளிப்படுத்துவதாக காணப்படுகிறது. ஜே.வி.பி. அரசாங்கத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே அதனுடைய போக்கில் காணப்படும் மோசமான அனுபவமாக உள்ளது. குறிப்பாக பாராளுமன்றம் தொடங்குகின்ற போது சபாநாயகரின் கல்வித் தகமை பொறுத்து எழுந்த சர்ச்சையைப் போன்று ஊழல் விடயம் அமைந்துள்ளது. அதனை அடுத்து படிப்படியாக பல அம்சங்களில் ஜே.வி.பி.இனர் அதிகார துஷ்பிரயோகம் ஊழல் மக்களிடம் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை செயல்படுத்தாமை என பல அம்சங்களில் விரோதப்போக்கை ஜே.வி.பி. பின்பற்றி வருகிறது. திக்வா புயலின் போது ஜே.வி.பி. உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட பாரிய அளவிலான அதிகார முறைகேடுகள் இலங்கைத் தீவின் அரசியல் கலாசாரத்மதின் தன்மையைக் காட்டியது. இது அதிகாரத்தை கைப்பற்ற முனைந்தபோது முன் நகர்த்திய அனைத்து கோசங்களும் போலியானவை என்பதை அடையாளப்படுத்தியது. இது ஒரு வகையில் ஜே.வி.பி. இன் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

எனவே ஊழலை ஒழித்தால் நாட்டை மீளக்கட்டி எழுப்புதல் பலமான அரசாங்கத்தை பதவியில் அமர்த்துதல் ஆரோக்கியமான அரசாங்கத்தை அமைத்தல் தேசத்தின் அபிவிருத்தியை உருவாக்குதல் என்ற பல கோசங்கள் அனைத்தும் தேர்தல் வாக்குறுதிகளாகவே உள்ளன. அவற்றை படிப்படியாக மீறுகின்ற ஒரு தரப்பாகவே ஜே.வி.பி. மாறிவருகின்றது. இதுவே ஜே.வி.பி.இன் மாற்றத்திற்கான வடிவமாகத் தெரிகின்றது. முறைமை மாற்றம் என விவாதித்த ஜே.வி.பி. தனது அடிப்படை போலித்தனமான கொள்கை நோக்கிய மாற்றத்தை முதன்மைப்படுத்த தொடங்கியிருக்கிறது. இது இலங்கைத் தீவின் அரசியல் கலாச்சாரத்தின் அங்கமாகும். இதனை இல்லாமல் செய்வதென்பது தென் இலங்கை சக்திகளால் ஒருபோதும் முடியாது. அனைத்து ஆட்சி முறைகளும் அத்தகைய அரசியல் கலாச்சாரத்தினால் கட்டி எழுப்பப்பட்டவையே. ஊழலும் இனவாதமும் ஒன்றோடு ஒன்று இசைந்து பயணிக்கும் தென்னிலங்கையின் அரசியல் கலாச்சாரம் மாற்றமுறும் என நம்புவது ஏமாற்றுத்தனமானது. வலதுசாரிகளை விட மிக மோசமான அணுகுமுறைகளை இடதுசாரிகள் கொண்டிருக்கின்றனர் என்பது வரலாற்றில் இன்னோர் பதிவாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: யாழ் தினக்குரல்)