மேற்காசியாவில் நிகழும் போர் மீள முடியாத பொருளாதார சுமையை உலகத்துக்கு தந்திருக்கின்றது. அமெரிக்க தலைமையிலான உலக ஒழுங்குக்கான போரின் உலகளாவிய நியதிகள் அனைத்தும் மீறப்படுகின்றதை காண முடிகிறது. ஹார்மூஸ் நீரிணை மீதான ஈரான் -அமெரிக்கா முற்றுகை சமாதான முயற்சிக்கான வாய்ப்புகளை பலவீனப்படுத்தியதோடு வத்திக்கானோடு அமெரிக்க நிர்வாகம் மேற்கொண்டிருக்கும் ராஜதந்திர ரீதியான மோதல் உலக நியதிக்கான அடிப்படைகள் அனைத்தையும் தகர்த்து வருவதாக தெரிகிறது. இக் கட்டுரையும் பாகிஸ்தானில் நிகழ்ந்த ஈரான்-அமெரிக்கா சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னான போரின் போக்கனை அளவீடு செய்வதாக உள்ளது.
ஈரான் மீதான போரின் அமெரிக்க பெருமளவுக்கு தோல்வியை எதிர்நோக்கி உள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடனான இராணுவ போரில் தோற்றாலும் ராஜதந்திர ரீதியான முயற்சிகளில் வெற்றிகரமான நகர்வை சாத்தியப்படுத்த முனைகின்றது. போரை விட ஆபத்தானது சமாதானம் என்பது உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அம்சமாகும். இதன் எல்லைக்குள்ளேயே ஈரான்-அமெரிக்கப் போர் நகர்கின்றது. ஆனால் ஈரானைப் பொறுத்தவரை இப்போரின் போக்கினை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது. சமாதான பேச்சுக்களின் போது அமெரிக்காவின் நிபந்தனைகளை விடவும் ஈரானின் பத்து அம்ச நிபந்தனைகள் அதிகம் நியாயம் பொருந்தியதாக விளங்குகிறது. இதுவே இரு தரப்புக்குமான சமநிலை தன்மையை அடையாளப்படுத்துகிறது. போரைப் போன்று சமாதானத்திலும் சமவலு உடைய சக்திகளாக ஈரான் அமெரிக்காவுக்கு நிகரானதாக விளங்குகிறதா என்பதை அவதானித்தல் அவசியமானது.
முதலாவது பாகிஸ்தானில் நிகழ்ந்த சமாதானப் பேச்சு வார்த்தையை (April 11-12இ 2026) ஈரான் அணுகிய விதம் சர்வதேச மட்டத்தில் அதன் அடையாளத்தையும் நாகரிகத்தையும் (Minab-168) வெளிப்படுத்தியிருந்தது. அமெரிக்க-இஸ்ரேலின் கூட்டு நாகரீகமற்ற இராஜதந்திர தோல்விகரமானது என்பதை மீண்டும் நிறுவியுள்ளது. அத்தரப்பின் சமாதான உரையாடலின் மத்தியில் போரை தொடங்குவதும் தலைமைகளையும் இராணுவத் தலைமைகளையும் கொல்வதும் அழிப்பதுமாகவே உள்ளது. அதன் மூலம் மாற்றத்தை சாத்தியப்படுத்தலாம் என்ற உத்தியை முழுமையாகவே ஈரான் தகர்த்து இருக்கின்றது. போரின் தொடக்க நாட்களில் கொல்லப்பட்ட சிறுவர்களின் நினைவாக சமாதான உரையாடலை முன்னெடுத்த ஈரான் ராஜீக ரீதியாக முன்வைத்த நிபந்தனைகள் பத்தும் நியாயத்தன்மை பொருந்தியதாகவே இனங்காணப்படுகிறது. குறிப்பாக ஹார்மூஸ் நீரிணையில் ஈரானின் இறைமையை அங்கீகரித்தல், யுரேனியம் செறிவூட்டும் உரிமை ஏற்றல், பொருளாதாரத் தடை நீக்குதல், பிறநாடுகளுடனான வர்த்தகத் தடை நீக்குதல், ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்களை இரத்துச் செய்தல், அணுசக்தி முகாமையின் தீர்மானங்களை இரத்து செய்தல், போர் இழப்பீடு வழங்குதல், அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கிலிருந்து விலகல், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தத்தை ஏற்றல் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன. போரின்களத்தை விட சமாதானத்தின் களம் அமெரிக்கதரப்புக்கு அதிக இழப்பீட்டை தந்துள்ளது. உலகளாவிய அரசியல் வரைபுகளில் அமெரிக்காவின் அநாகரிகங்கள் யூதர்களின் பின்னால் ஒழித்து இருந்த அமெரிக்கா ஜனநாயகத்தின் முகத்திரைகள் அம்பலப்படுத்தப்பட்டதாகவே தெரிகின்றது. இதன் இயலாமையே கடல்படை முற்றுகையின் ஆரம்பமாக அமைந்திருந்தது. ஆனாலும் அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டு ஓய்ந்துவிட்டதாக கருத முடியாது. அத்தரப்பு இறுதிவரையும் போராடும்.
இரண்டாவது ஹார்மூஸ் நீரிணை முற்றுகை என்பது இரு தரப்புகளாலும் அடையாளப்படுத்தப்பட்ட போரின் இன்னொரு வடிவம். இராணுவ கூட்டு தாக்குதலை கைவிட்டு கடல் சார்ந்த போரை நகர்த்துவதன் மூலம் ஈரானின் இருப்பை முடிவுக்கு கொண்டு வரலாம் என அமெரிக்கா போரில் உபாயம் திட்டமிட்டுள்ளது. ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகை இடுவதன் ஊடாக ஈரானின் கடல் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி இராணுவ வலிமையை தோற்கடித்து விட முடியும் என அமெரிக்கா கருதுகிறது. ஆனாலும் ஈரான் ஹார்மூஸ் என்பது ஈரான் ஓமான் இரு நாடுகளுக்கு பகிர்ந்துள்ள எல்லைகளாகும். அந்த எல்லைகள் சர்வதேச நிபந்தனைகளுக்குள் உட்பட்டவை என்ற அடிப்படையில் பொதுவானதாக அடையாளப்படுத்தப்பட்டாலும் போரில் ஈரானின் இருப்பு என்பது தீர்மானிக்க கூடியது என்ற அடிப்படையில் ஈரான் அதனை முற்றுகையிட திட்டமிட்டது. அங்குதான் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பு அடையாளம் காணப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் குறிப்பிடுகின்றது. இப்போரின் அடிப்படையும் பாகிஸ்தானில் நிகழ்ந்த சமாதானம் உடைந்து போவதற்கான காரணமுமாகும். ஹார்மூஸ் பிராந்தியத்தில் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை கைப்பற்றுவதே அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டின் நோக்கமாக உணரப்படுகிறது. இதனை இஸ்ரேல் அழித்து விடுவது அல்லது பாதுகாப்பாக கைப்பற்றுவது என்ற நகர்விலேயே அமெரிக்காவில் விமானங்கள் சகிதம் பாரிய கடல்படை நகர்வுகளைக் கொண்டு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டது. அதில் பாரிய இழப்பை அமெரிக்கா எதிர் கொண்டது. இதனாலேயே மீண்டும் முற்றுகை போர் முக்கியத்துவம் பெறத் தொடங்கி இருக்கின்றது.
மூன்றாவது சர்வதேச மட்டத்தில் மேற்குலக ஊடகங்கள் சர்வதேச விதிகளையும் கடல் சட்டங்களையும் அதிகம் பிரஸ்தாபிக்க தொடங்கியிருக்கின்றன. போரின் ஆரம்ப நாட்களில் ஒரு நாட்டின் தலைவர்களை அழித்தொழிக்கின்ற போதும் சிறுவர்கள் கொல்லப்படுகின்ற போதும் மௌனமாய் நகர்ந்த மேற்குலக ஊடகங்கள் கடல் சட்டங்களையும் சர்வதேச நியதிகளையும் பிரசாபிக்க முனைவது அமெரிக்க தலைமையிலான மேற்குலகத்தின் தோல்வியை அடையாளப்படுத்துகிறது. மேற்குலக ஊடகங்களே அமெரிக்க மற்றும் மேற்குலகத்தின் அரசியல் இருப்பின் தோல்விக்கு பின்னால் இருக்கும் காரணிகள் என்பதை நிராகரித்து விட முடியாது. மேற்காசியா பொறுத்து மேற்குலகம் வகுத்த அனைத்து கொள்கைகளையும் மேற்குலக ஊடகங்கள் பங்காளிகளாக இருந்தன. ஈரானின் நியாயமற்ற நடைமுறைகளை விவாதிக்க மேற்குலக ஊடகங்கள் அமெரிக்கா இஸ்ரேலின் கூட்டு தாக்குதலின் நியாயமற்ற பக்கங்களை உரையாடுவதற்கு தயார் இல்லாத நிலை ஒன்றை வெளிப்படுத்துகிறது. இதுவே உலகத்தின் அராஜகத்தின் இருப்புக்கான வடிவமாக தெரிகின்றது. மேற்குலக ஊடகங்களின் பலவீனமே மேற்குலகத்தின் ஆதிக்கத்தை தமது நியாயமற்ற இருப்புக்குள் வைத்துக் கொள்ள வழி வகுத்து செல்கின்றன.
நான்காவது அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் வத்திக்கானுடன் நிகழ்த்தும் மோதல் என்பது அதன் நியாயமற்ற, நெறிமுறை இல்லாத சமூக இருப்பின் வடிவத்தை அடையாளப்படுத்தி இருக்கின்றது. வத்திக்கான் மீதான அமெரிக்காவின் விமர்சனம் அதன் மேலாதிக்கத்தின் அடையாளமாகும். அத்தகைய அதிகார மேலாதிக்கத்தை காட்சிப்படுத்துவதற்கு மதங்களையும் மதநிறுவனங்களையும் மட்டுமல்ல சர்வதேச விதிகளையும் தமக்கேற்ற வகையில் வகுத்து அதை பின்பற்ற தவறுகின்றபோது நியாயப்படுத்த முயற்சிப்பதற்கு ஒப்பதனது. அவ்வாறே மத அமைப்புகளையும் அதன் தலைமைகளையும் அவர்களை குறிப்பிட்ட அத்தகைய புனிதத்தையும் அவமதிக்கும் சக்திகளாக மாறி இருக்கிறார்கள். இங்கே அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தேவையானது உலக மேலாதிக்கத்துக்கான அதிகாரம் மட்டுமே. அதன் முன் பாபரசர்களும் ஜனநாயகத்தின் விதிகளும் தாராளமாதத்தின் முகங்களும் சர்வதேசட்டத்தின் நியாயங்களும் ஒன்றானதாகவே காணப்படுகிறன.
எனவே ஈரான் மீதான் போர் சீனாவிலுள்ள பீஜிங் மூன்ஷhட் கல்லூரியின் பேராசிரியர் ஜியாங் (Jiang Xueqin) குறிப்பிடுவது போல் ஈரான் போரில் அமெரிக்காவில் இழப்பீடு உலகளாவிய அரசியல்-பொருளாதார-இராணுவ ஒழுங்கில் பாரிய மாற்றமொன்றுகான வாய்ப்பு காணப்படுகிறது. அடுத்து வரும் குறுகிய காலப்பகுதி அடுத்து வரும் தசாப்தங்களுக்கான உலக ஒழுங்கை வரையக்கூடியதாக மாறும் என்ற எதிர்பார்க்கை அதிகரித்து வருகிறது. அதற்கான கட்டமைப்புகள் முன்கூட்டியே தயாராகிவிட்டன. அதற்கு தலைமை தாங்கின்ற திறன் சீனாவிடம் குவிவதற்கான வாய்ப்பை மேற்கைரோப்பிய நாடுகளும் ஆசியா ஆபிரிக்க நாடுகளும் உறுதிப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
