April 26, 2026
அரசியல் கட்டுரைகள்

இலங்கை-இந்திய உறவும் இந்திய துணை ஜனாதிபதியின் இலங்கை வருகையும்?

இலங்கை தீவின் அரசியலில் இந்தியாவின் வெளியுறவுக்கு கொள்கை அயல் நாடுகளுக்கு முதலிடம் (Neighbourhood first policy) எனும் அடிப்படையில் வலுவானதாக பேணப்படுகிறது. 2014 முதல் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் முதன்மைப்படுத்திய அயல் நாடுகளுக்கு முதலிடம் என்ற வெளியுறவுக் கொள்கை தென்னாசிய நாடுகளுடன் பின்பற்றிவருகிறது. தென்னாசிய நாடுகளுக்குள் இலங்கைத் தீவை அதிகம் அத்தகைய கொள்கைக்குள் இந்தியா முன்னிறுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே இந்தியத் துணை ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் இரண்டு நாள் (20-21.04.2026) இலங்கைக்கான அரசமுறைப் பயணம் அமைந்திருந்தது. அப் பயணத்தின் முக்கியமான பொருளாதார வர்த்தக மற்றும் அரசியல் சமூக ரீதியான விடயங்களில் கலந்துரையாடலும் உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. இந்தியத் துணை ஜனாதிபதி பதவி கௌரவமானதாக அமைந்தாலும் அவர் ஓர் இராஜதந்திரி என்ற வகையில் இலங்கைக்கான விஜயம் இராஜதந்திர நகர்வாகவே தெரிகிறது. துணை ஜனாதிபதியின் வருகை தென் இலங்கை அரசியலிலும் மலையக மற்றும் இலங்கை தமிழ் மக்களின் அரசியலிலும் அதிகமான புரிதலை கொண்டிருக்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தமிழக தேர்தல் களம் இறுதிக் கட்டத்தை அடைகின்ற போது அவரது இலங்கை விஜயம் அமைந்துள்ளது. அவரது உரையாடல் அதிகம் மலையக மக்கள் சார்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக புரிந்து கொள்ளப்படுகிறது. இந்திய துணை ஜனாதிபதியின் இலங்கை பயணம் ஏற்படுத்தியுள்ள இராஜதந்திர முக்கியத்துவத்தை தேடுவதாக இக்கட்டுரை அமைக்கப்படுகிறது.

இந்திய-இலங்கை உறவு இராஜதந்திர ரீதியில் பலமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. உலக இராஜதந்திர அரசியலில் ஜனாதிபதி துணை ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தூதுவர்கள் விசேடதூதுவர்கள் ஆகியோர் ஒரு நாட்டின் இராஜதந்திரிகளாகவே பார்க்கப்படுகின்றனர். இந்த வகையில் கௌரவ பதவியை ஆட்சி துறையில் இந்தியத் துணை ஜனாதிபதி வகித்தாலும் அவரது பதவிக்கான அடையாள மொழியியலில் இராஜதந்திரியாகவே பார்க்கப்படுகிறார். அதன் அடிப்படையிலேயே அவரது இலங்கை வருகை புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது. அவரது விஜயத்தின் முக்கியத்துவம் இராஜதந்திர ரீதியில் மூன்று பிரதான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

முதலாவது இந்திய துணை ஜனாதிபதியின் இலங்கை வருகை இலங்கை அரசாங்கத்துடனான இந்தியா உறவை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் புரிந்து உணர்வு சார்ந்த விடயங்கள் முக்கியமானவையாக உள்ளன. இலங்கையின் ஜனாதிபதி பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வரிசையில் அவரது சந்திப்புகள் தனித்துவமானவையாகும். அதிகம் பொருளாதார விடையங்கள் பற்றியும் சமூக அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் உரையாடல்கள் வலுவானதாகவும் காணப்பட்டன. கடந்தகாலத்தில் இந்திய இலங்கைக்கு வழங்கிய உதவிகள் பற்றி அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உரையாடப்பட்டதை காணமுடிந்தது. இருதரப்புக்கும் இடையில் பரஸ்பரம் நெருக்கமான ஒத்துழைப்பும் எதிர்கால இந்தியா இலங்கை நட்புறவுக்கான மூலாதாரங்களை முன்னிறுத்தியும் உரையாடல் நிகழ்ந்திருக்கிறது. இது ஒரு வகையில் இந்தியா இலங்கை பொறுத்த வெளியுறுவுக்குள் நிலைத்திருப்பை ஏற்படுத்துவதோடு இலங்கையை இந்தியாவோடு நெருக்கமான உறவு சார்ந்து வைத்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நகர்வாக அமைந்திருக்கிறது. இலங்கை தீவுக்கு தொடர்ச்சியான இந்திய இராஜதந்திர வருகை அமைவது என்பது பிற சக்திகள் செல்வாக்குக்குள் இலங்கை அகப்பட்டாது பாதுகாப்பதற்கான உத்தியாகவே தெரிகிறது. தொடர்ச்சியாக இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பினை நினைவு கொள்வதன் மூலம் இலங்கையை தமது செல்வாக்குப் பிராந்தியமாக வைத்துக் கொள்ள இந்திய கொள்கை வகுப்பினர் முயலுகின்றனர்.

இரண்டாவது இந்திய துணை ஜனாதிபதி இலங்கை பயணத்தில் மலையக மக்கள் தனித்துவமான உறவின் பக்கமாக காணப்பட்டதை உணரமுடிகிறது. மலையக தமிழ் அரசியல் கட்சிகளுடன் சந்திப்பும் அதன் போது அவரது உரைகளும் அதன் அடையாளத்தை மேலும் வலுப்படுத்தியது. குறிப்பாக தாம் வருகை தந்திருப்பது அயல்நாடு ஒன்றுக்கு அல்ல அயல் வீட்டில் இருப்பது போல் உணர்வை ஏற்படுத்தியதாக தெரிவித்திருந்தார். மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டங்களை கையளித்தமை மலையக மக்களுக்கான பொருளாதார ரீதியான கட்டுமானத்திற்க்கான உதவிகள் திக்வா புயலுக்குப் பின்னரான ஒத்துழைப்புக்கள் மலையக மக்களின் பொருளாதார தேவைகளை நிறைவு செய்வதற்கான பக்கங்களை அதிகம் முதன்மைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்திய துணை ஜனாதிபதிக்கான வரவேற்பும் அவரது நடவடிக்கைகளும் மலையக மக்களை அதிகம் முதன்னிறுத்தியதாகவே அமைந்திருந்தது.

மூன்றாவது இலங்கைத் தமிழர்கள் அல்லது ஈழத் தமிழர்கள் பொறுத்து இந்திய துணை ஜனாதிபதியின் உரையாடல் வழமை போன்று அமைந்திருந்தது. இந்திய தலைவர்களின் சம்பிரதாயபூர்வமான வெளிப்பாடாகவே துணை ஜனாதிபதியில் சந்திப்பு அமைந்திருந்தது. தமிழ் அரசியல் கட்சிகளோடு மேற்கொண்ட உரையாடல் மாகாணசபைக்கான தேர்தல் பற்றிய இலங்கை ஜனாதிபதியிடம் பகிர்ந்த விடயங்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமை பற்றிய விவாதங்கள் மடடுமே உரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது இந்திய இராஜதந்திரத்தின் சம்பிரதாயபூர்வமான அணுகுமுறையாக அடையாளப்படுத்தப்படுகிறது. இது பெருமளவுக்கு ஈழத்தமிழர்கள் அரசியல் பொருளாதார மற்றும் சமூக அடிப்படையில் முக்கியத்துவம் கொடுக்கப்படாத சம்பிரதாயபூர்வமான விடயமாக மட்டுமே அமைந்திருந்தது. அவரது உரைகள் முழுவதும் மலையக மக்களையே தமிழர்கள் என்ற அடிப்படையிலான விவாதங்களை வெளிப்படுத்தியிருந்தது. ஆனாலும் ஈழத்தமிழர்களின் தமிழ் அரசியல் கட்சிகளுடான சந்திப்பு இராஜதந்திர ரீதியில் எத்தகைய நிலையில் இருக்கிறது என்பதை காட்டியுள்ளது. ஏனைய இந்திய இராஜதந்திரிகள் போன்றே இந்திய துணை ஜனாதிபதியும் வெளிப்படுத்தியிருந்தனர். இந்தியாவின் கொள்கை வகுப்பிலும் வெளியுறவிலும் இராஜதந்திர உரையாடலிலும் ஈழத் தமிழர்கள் இலங்கை தீவின் அரசியல் முக்கியத்துவம் அற்றவர்களாக புரிந்து கொள்ளப்படுகின்ற நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதற்கு ஈழத்தமிழர்களும் ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகளும் அடிப்படையான காரணம் என்பதை விளங்கிக் கொள்ளுதல் அவசியம்.

எனவே இலங்கை தீவிற்க்கு விஜயம் செய்த இந்திய துணை ஜனாதிபதி அதிக முக்கியத்துவம் கொடுத்த விடயமாக தென்னிலங்கையின் ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதில் கவனம் கொண்டதாகவும் இந்திய ஒத்துழைப்பை நினைவூட்டுவதாகவும் தெரிகிறது. அவ்வாறே மலையக மக்களின் அரசியல் பொருளாதார இருப்பிற்கான அடிப்படைகள் வகுக்கப்பட்டதை காணமுடிந்தது. ஈழத்தமிழர்கள் முக்கியத்துவம் அற்ற நிலையினை துணை ஜனாதிபதியின் இராஜதந்திர நகர்வுகள் அடையாளப்படுத்துகிறது. ஆனால் ஈழத் தமிழர்கள் இருப்பின் அமைவிடம் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த புவிசார் அரசியல் களத்தைக் கொண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாதது என்பது புரிந்து கொள்ளப்படாததாகவே உள்ளது. சீனாவின் உலக வல்லரசு ஆதிக்கம் சாத்திப்பட்ட பின்னர் இந்திய இராஜதந்திரிகள் இலங்கை பொறுத்து எதிர்கொள்ளப்போகும் நெருக்கடி அதிகமானதாகவே அமையப் போகிறது. ஈரானில் அமெரிக்காவுக்கான நெருக்கடி இலங்கை-இந்திய உறவின் போக்கில் புதிய திசையினை அடையளப்படுத்த வாய்ப்புள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)