உலகளாவிய அரசியல் மேற்காசியாவில் மையம் கொண்ட போதும் முழு உலகத்தையும் குழப்பத்திற்கும் மீள் ஒழுங்குக்கும் தயாராகின்றதை காட்டுகிறது. ஈரான் அமெரிக்காவுக்கு இடையான பேச்சுவார்த்தை போர் நிறுத்த உடன்பாடு சமாதானம் இன்றி நிகழ்கின்றது. அமெரிக்காவின் இலக்கு ஈரானிய தலைவர்களையும் முக்கியஸ்தர்களையும் கொல்வதன் ஊடாக மேற்காசியப் போரை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டது. இச்சூழலிலே ஈரான் பாகிஸ்தானில் நிகழவிருந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுப்பதை தவிர்த்திருந்தது. ஈரானின் ஒத்துழைப்பின்மையே அமெரிக்கா போர் நிறுத்தத்தை ஒருதலைப்பட்சமாக நீடிப்பதற்கு காரணமாகியது. சமாதானமும் போர் நிறுத்தமும் பேச்சுவார்த்தையும் அமெரிக்காவின் போர் உத்தியாக அமைந்திருந்தது. அதற்குப் பதிலாக ஈரானின் சிதைக்கும் ஆற்றலைக் கட்டுப்படுத்தி இராஜதந்திரத்திற்குத் திரும்புவதற்கான ஒரு பாதையைக் கண்டறிய முயலுகிறது. அமெரிக்கக் தலைமையிலான அணிக்கு புத்துயிர் அளிக்கும் ஒரு நடைமுறைக்குரிய நடுநிலைப் பாதையை அமெரிக்கா பின்பற்றவே பாகிஸ்தான பேச்சுவார்த்தை. இதன் பிரகாரம் ஈரான் போரில் ஒரு தெளிவான வெற்றியாளர் உருவாகாமல் போகுமானால் இறுதியில் சீனாவோ ரஷ்சியாவோ வெற்றியை உரிமை கோராமல் இருப்பதை அமெரிக்காவால் உறுதி செய்ய முடியாது போய்விடும். இக்கட்டுரை ஈரான் எதிர்கொள்ளும் போர் சீனாவுக்கு எப்படி பயனளித்துள்ளது என்பதை தேடுவதாக உள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிடுவது போல் மேற்காசியா அரசியலில் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிந்தைய 20 ஆண்டுகளில், அமெரிக்கா அப்பிராந்தியத்தின் மீதான போர்களில் தீவிரமாக இருந்தபோதும் சீனாவின் சர்வதேச நிலை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. இரண்டு தசாப்தங்களாக, சீனா மேற்காசியாவில் போரிடாமல் வென்று கொண்டிருந்தது, அதே நேரத்தில் அமெரிக்கா வெல்லாமல் போரிட்டுக் கொண்டிருந்தது எனத் தெரிவித்துள்ளார். ஆதன் யதார்த்தத்தை புரிந்து கொள்வது அவசியமானது.
முதலாவது மேற்காசியப் போரின் மேற்குலகத்தின் உறுதியற்ற நிலை சீனாவின் எழுச்சியை உறுதிப்படுத்துவதாகவே மதிப்பிடப்படுகிறது. ஈரான் சீனாவின் போரையே நிகழ்த்துவதாக தெரிகின்றது. மறுபக்கத்தில் ஈரான் மீதான போர் சீனா-ரஷ்சியா-வடகொரியா போன்ற நாடுகள் மீதான போராகவே மேற்குலகம் கருதியது. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக போரைத் தொடங்கிய போது ஈரானின் அணு ஆயுதத்தையும் போரியல் திறனையும் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டது. ஆனால் அத்தகைய திட்டமிடலுக்கு பின்னால் மேற்காசியாவை மையப்படுத்திய உலகத்தினுடனான வர்த்தகம் சந்தை மற்றும் உணவு பரிமாற்றத்திற்கான சங்கிலித் தொடரின் ஒரு பகுதியை அழித்து ஒழிப்பதன் ஊடாக மாற்றத்தை கொண்டுவர முடியும் என அமெரிக்கா தலைமையிலான போரியியல் உத்தியாக இருந்தது. பிரிக்ஸ் அமைப்பை சிதைப்பதன் மூலம் சீனா தலைமையிலான அணியின் இருப்பை உடைக்க முடியும் என அமெரிக்கத் தரப்பின் கருத்தியல் காணப்பட்டது. இது சீனாவுக்கு எதிரானதாகவே கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் நடைமுறையோ தலைகீழான விளைவுகளை அமெரிக்க தலைமையிலான போரியல் உத்திகளுக்கு கொடுத்துள்ளது. ஒரு ஈரானால் அத்தகைய நெருக்கடியை அமெரிக்கதரப்புக்கு கொடுக்க முடியுமா என்ற கேள்வி பிரதானமானது. ஈரான் சீனாவுடன் மட்டுமன்றி வடகொரியா ரஷ்சியா போன்ற நாடுகளில் ஒத்துழைப்போடு பலமான இராணுவ தொழில்நுட்பத்தையும் 21ம் நூற்றாண்டுக்கான போரியல் உத்திகளையும் தனதாக்கிக் கொண்டது. இது நவீன தொழில்நுட்பத்தின் 21ம் நூற்றாண்டின் வடிவமாக அமெரிக்காவை விட சீனா முதல் நிலைகுள் வந்துள்ளது என்பதை காட்டுகின்றது.
இரண்டாவது பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலே போர் நிகழ்ந்த போது அதிகமான போரியல் வல்லுநர்கள் மேற்குலகத்தின் விமானங்களையும் இராணுவ தளபாடங்களையும் பாகிஸ்தான் முறியடித்ததுக்கு பின்னால் சீனாவின் இராணுவ தொழில்நுட்ப பலமே காரணம் என்ன குறிப்பிட்டிருந்தனர். ஈரான் மீதான போருக்கு ஒத்திகையாகவே இந்திய பாகிஸ்தான் போர் சீனாவுக்கு காணப்பட்டது. இந்தியா மேற்குலகத்துடன் கொள்வனவு செய்திருந்த இராணுவ தொழில்நுட்பம் ஆயுததளபாடங்களை எல்லாவற்றையும் சீனாவுடைய இராணுவத் தொழில்நுட்பம் தகர்த்தெறிந்தது. அவ்வாறான ஒரு சூழலை இஸ்ரேலிய-அமெரிக்க கூட்டு அளவீடு செய்ய தவறியதன் விளைவு ஈரான் மீதான போரியல் நெருக்கடிக்கான காரணமாக கொள்ளப்படுகிறது. எதிர்கால போர்களிலும் இத்தகைய விளைவு அதற்கு தலைமையிலான மேற்குலகம் எதிர்கொள்ள போகிறது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. சர்வவல்லமையுள்ள அமெரிக்க இராணுவம் என்ற பிம்பம் ஒரு பெரும் அடியை வாங்கியுள்ளது. ஈரான் ஒரு பெரும் தாக்குதலைத் தாங்கி இன்னும் நிலைத்து நிற்கிறது. சீனாவின் அதிகாரத்தை முன்னிறுத்திக் கொண்டு உலகத்தின் இருப்பை அடிப்படையான இராணுவ தொழில்நுட்பத்தில் பலமான நிலைக்குள் நகர்ந்திருக்கின்றது. இதனையே ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேலிய கூட்டு தாக்குதலின் விளைவாக உணரப்படுகிறது. சீனா, ஈரானுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான இரசாயனக் கூறுகள் உள்ளிட்ட இராணுவ உதவியை வழங்கியுள்ளது. மேம்பட்ட ரேடார் அமைப்புகள் மற்றும் ஒலியைவிட வேகமான கப்பல் எதிர்ப்புப் ஏவுகணைகளை வழங்குவதன் மூலம் சீனா ஆதரவை அதிகரித்துள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் தகவல்களை உடனுக்குடன் ஈரானுக்கு பரிமாற்றுகிற முன்னணி நாடாக சீனா விளங்குகிறது. சமநேரத்தில் சமாதான நடைமுறையையும் சவுதியரோபியாவடனான உரையாடலை அதிகரிப்பதன் மூலம் வலுவான சமாதான பங்காளியாகக் காட்டிக் கொள்கிறது. இது மேற்காசியாவில் நம்பகத்தன்மை குறைந்துவரும் அமெரிக்காவிற்கு ஒரு மாற்றாக சீனா தன்னைக் காட்டிக்கொள்கிறது. இடர்களைக் குறைப்பதற்காக உறவுகளைச் சமநிலைப்படுத்த விரும்பும் நாடுகளுக்கு சீனா ஒரு மிகச் சிறந்த கூட்டாளியாகத் தெரிகிறது.
மூன்றாவது புதிய உலக வடிவத்தை கட்டமைப்பது சீனாவின் போரியியல் தொழில்நுட்பம் வெற்றிகரமாக விளங்குகிறது. அத்தகைய போரியியல் வடிவத்தின் எல்லைக்குள்ளேயே பொருளாதாரம் வர்த்தகமும் நாடுகளின் அதிகார படிமுறையும் வடிவமைக்கப்படுகிறது. போரற்ற உலகம் புதியவற்றுக்கு தயார் இல்லாத உலகம் என்பதை ஹகல் எனும் தத்துவஞானி குறிப்பிட்டிருந்தார். அதனை சமீப காலங்களில் அமெரிக்க ஜனாதிபதியின் சகபாடியமான எலான்மாஸ் குறிப்பிட்டிருந்தார். போர் என்பது உலக ஒழுங்கை மட்டுமல்ல பொருளாதாரத்தையும் உலகளாவிய வர்த்தகத்தையும் சந்தைக்கான அடிகட்டுமானங்களையும் தோற்றுவித்து செல்கிறது. காசாவின் நிலப்பரப்பை உல்லாச பயணிகளின் மையமாக மாற்ற ரொனால்ட் ட்ரம்ப்ன் குடும்பம் எடுத்த முயற்சியின் விளைவு ஓரினத்தின் இருப்பை கேள்வி உட்படுத்தியிருந்தது. உலகளாவிய அரசியல் அவகையான போர் பொருளாதாரத்துக்குள் இயங்குகிறது. சமாதானத்தையும் போர் நிறுத்தத்தையும் போரையும் மறுதலிக்கும் ஒரு காலத்தில் அதனுடைய அர்த்தங்களை நிராகரிக்கும் உலகத்தில் இருப்பு காட்சிப்படுத்தப்படுகிறது. பாகிஸ்தான் சமாதான உரையாடல் போரை சமாதானமற்ற சூழலை தோற்றுவித்துள்ளது என்பதை காட்டுகின்றது.
நான்காவது இந்தச் சூழலில் அமெரிக்காவின் சரியான உத்தி என்பது அதீதப் போரும் அல்ல, அப்பாவித்தனமான பின்வாங்கலோ சரணடைவோ அல்ல. மாறாக ஒரு யதார்த்தமான சமநிலையான இராஜதந்திர செயல்முறையை மேற்கொள்வதாகும். அதனையே பாகிஸ்தான பேச்சுக்களில் அமெரிக்காவின் கரிசனையாகும். ஈரான் மீதான போர் ஏற்பாடுகளை அப்படியே வைத்துக் கொண்டு நடவடிக்கைகளை எடுப்பதை கைவிட்டு இராஜதந்திரத்திற்கான நம்பகமான பாதையை மீட்டெடுக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. ரஷ்சியாவும் சீனாவும் விரும்பும் வகையான முடிவில்லாத பிராந்தியப் போராக மோதலை மாற்றுவதை அமெரிக்கா தவிர்க்க முயலுகிறது. ஈரானை அவமானப்படுத்துவதையோ அல்லது வீழ்ச்சியடையச் செய்வதையோ அமெரிக்கா வெற்றியாக வரையறுத்தால் அது விரும்புவதற்கு நேர்மாறான விளைவுகளையே எதிர் கொள்ள வேண்டிவரும் என்பதை அமெரிக்க இராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர். அதாவது, பாதிப்பட்ட ஈரான் மேலும் ரஷ்சியா மற்றும் சீனாவுடன் இறுக்கமாகப் பிணைப்பை ஏற்படுத்தும். அது அமெரிக்காவின் சர்வதேச அங்கீகாரத்திற்கும் நீடித்த சேதம் ஏற்படும் என்ற ஆலோசனைக்கு நிகராகவே பேச்சுக்களை வடிவமைக்க முனைகிறது. ஆனால் இதற்கான மறுதலிப்பை ஈரான் வழங்கியிருப்பது அமெரிக்காவுக்கான வாய்ப்புக்களை தகர்த்துள்ளதாகவே தெரிகிறது.
எனவே அமெரிக்க தலைமையிலான தரப்பில் ஈரான் மீதான போர் சீனாவின் இராணுவ தொழில்நுட்பத்துக்கு எதிரான போராக மட்டுமல்லாது சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு எதிராகவும் உள்ளது. ஆனால் சீனாவின் இராணுவ தொழில்நுட்ப திறன்களை தோற்கடிக்க முடியாத ஒரு நிலைகுள் மட்டுமல்ல அதன் இராஜதந்திர பொறிக்குள்ளும் அமெரிக்கா அகப்பட்டுள்ளது. அதனால் அனைத்தையும் நிராகரித்துக் கொண்ட சூழலுக்குள் சமாதானத்தையும் போர்நிறுத்தத்தையும் போரையும் ஒரே களத்தில் அமெரிக்க இஸ்ரேல் கூட்டு மட்டுமல்ல உலகம் எதிர்நோக்கியுள்ளது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
