இலங்கையின் அரசியலில் ஊழலையும் நிதி மோசடியையும் ஆட்சியிலிருந்து பிரித்து பார்க்க முடியாத ஒன்றாக நீண்டகாலமாக காணப்படுகிறது என்பது துரதிஷ்டமான அரசியலாகவுள்ளது. ஊழலை ஒழிப்பது பிரதான தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்து ஆட்சியை கைப்பற்றிய ஜே.வி.பி. ஆட்சியாளர்களின் காலத்திலும் அத்தகைய ஊழலும் நிதி மோசடியும் நிகழ்ந்து கொபண்டே இருகிறது. இது மக்கள் மீதான பொருளாதார சுமையை மேலும் அதிகரிப்பதும் ஆட்சியாளர்கள் அதற்கான காரணங்கள் பலவற்றை கூறி தப்பிக் கொள்வதும் வழமையான ஒன்றாக விளங்குகிறது. ஓர் அரசாங்கம் என்ற அடிப்படையில் ஊழலையோ மோசடியையோ தடுக்க முடியாத திறன் அற்ற சூழல் ஒன்றென்பதே ஊழலுக்கான ஆட்சியாகவே தெரிகிறது. இக் கட்டுரையும் திறைசேரியில் கடந்த ஆண்டு தொடக்கம் நடந்த நிதி மோசடி தொடர்பில் எழுந்திருக்கும் விவாதங்களையும் அதன் உண்மைகளையும் தேட முயலுகிறது.
இலங்கையின் 2.5 மில்லியன் டாலர் கடன் அவுஸ்ரேலிய நாட்டுக்கு திருப்பிச் செலுத்துதலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு ஒரு சாதாரண ஊடுருவிகளால் நிகழ்ததாக அரசாங்கம் கூற முயலுகிறது. மாறாக இது முறைகேடான பணப்பரிவர்த்தனைச் செயல்முறையின் ஒரு நிகழ்வாக நிதிசார் வல்லுனர்களால் பார்க்கப்படுகிறது. இதில் பலவீனமான சரிபார்ப்பு அடுக்குகள், மின்னஞ்சல் அடிப்படையிலான அறிவுறுத்தல்கள் மற்றும் போதுமான அமைப்புப் பிரிப்பு இல்லாததால் மோசடிக்கு ஒரு வாய்ப்பு உருவானது என்று நிதி சார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனை ஆழமாக புரிந்து கொள்வது அவசியமானது.
முதலாவது திறைசேரியில் நிகழ்ந்த 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் பரிமாற்றத்தை ஆஸ்திரேலியாவிற்குப் பதிலாக மூன்றாம் தரப்பினருக்குச் செலுத்தியமை தொடர்பானது. இதனை கண்டறிந்த தரப்பாக சுயாதீன சட்டத்தரணிகள் குழுமமே என்பது முக்கியமானது. இச் சிவில் சமூகக் குழுமம் கடந்த 23.04.2026 வெளிப்படுத்தியிருந்தது. அதுவரை அரசாங்கம் எத்தகைய தகவலையும் வெளிப்படுத்தவில்லை. கடந்த 2025 செப்ரெம்பர் முதல் ஜனவரி 2026 வரையான காலப்பகுதிக்குள் நிகழ்ந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவுஸ்ரேலிய நாட்டுடனான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறையான வங்கிக் கணக்கு திறைசேரியிடம் இருந்தபோதிலும் சில மூத்த அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்ட மற்றொரு கணக்கிற்கு அந்தப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கிலக்கத்தை திறைசேரி அல்லது நிதி அமைச்சின் பிரதானியின் ஒப்புதலின்றி மாற்ற முடியாது என்று தெரியவருகிறது. திறைசேரி காலங்காலமாகப் பின்பற்றும் நடைமுறைகளை கடைப்பிடிக்கப்படவில்லை என்றே தெரிகிறது. இந்த மோசடியை உயர் அதிகாரிகளால் அல்லாமல், ஒப்பீட்டளவில் கீழ்நிலை அதிகாரிகளே கண்டறிந்துள்ளனர். செப்டம்பர் 2025-ல் ஒரு மூன்றாம் தரப்பினர் கணினி அமைப்புக்குள் அணுகலைப் பெற்றுள்ளது. இந்த மோசடியில் மொத்தம் 16 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் சுயாதீன சட்டவாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இரண்டாவது நிதி ஆய்வு. எல்லை தாண்டிய பொதுப் பணம் செலுத்துதலில், குறிப்பாக அரசாங்கம் ஒன்றின் கடன் சேவையின் பரிவர்த்தனைகள் பொதுவாகப் பல கட்டுப்படுத்தப்பட்ட அடுக்குகளின் வழியாகச் செல்கின்றது. பணம் செலுத்துவதற்கான அறிவுறுத்தல்களை உருவாக்குதல், அங்கீகாரம், வங்கி வழிப்படுத்துதல் வங்கி பரிவர்த்தனைக் கொள்கையூடாகவே நிகழ்வது வழமையாகும். இறுதித் தீர்மானம் எடுப்பாதனது நிதியானது உரிய கடனளிப்பவரைத் தவறவிட்டு மூன்றாம் தரப்பினரைச் சென்றடைய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதில் இரண்டு விடயங்களில் நிகழ்ந்திருக்க வேண்டும்.ஓன்று பணம் செலுத்தும் வழிமுறைகள் செயல்படுத்தப்படுவதற்கு முன்பே மாற்றப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இரண்டு ஒப்புதல் செயல்முறையின்போது பயனாளியின் விவரங்கள் மோசடியாக மாற்றப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எதுவானாலும் அரசாங்க சேவைக்குள்ளிருந்தே நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. இது ஒரு ஆழமான, அமைப்பு அளவிலான இணைய ஊடுருவலை விட, வணிக மின்னஞ்சல் சமரச சூழ்நிலையையே நிகழ்ந்ததாக தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் ஊடுருவிகளின் (ஹேக்கர்கள்) அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் கணக்குகளை அணுகுகிறார்கள் அல்லது போலியாக உருவாக்குகிறார்கள் என்றே கூறப்படுகிறது. மாற்றப்பட்ட வங்கி விவரங்களுடன், சட்டப்பூர்வமானவை போலத் தோற்றமளிக்கும் பணம் செலுத்தும் வழிமுறைகளை அனுப்புகிறார்கள். நிதித்துறை அதிகாரிகள், திரும்ப அழைக்கும் நெறிமுறைகள் அல்லது தனித்துவமான அங்கீகாரம் போன்ற சுயாதீனமான சரிபார்ப்பு இல்லாமல், மின்னஞ்சலை ஒரு நம்பகமான வழியாக கருதுகின்றனர். இது இந்த அமைப்பை எளிதில் ஏமாற்றியிருக்க முடியும். இது பரிமாற்றத்தின் போது ஏற்படும் அங்கீகரிப்பதில் நிகழ்ந்த முறைகேடாக தெரிகிறது. இந்த மோசடி அநேகமாக உறுதி செய்வதிலும் செயல்முறையிலுமே தங்கியுள்ளது. முழுமையான இரகசிய குறியீதல்; நபர் திட்டமிட்டு கையாளப்பட்டிருக்கலாம். அதாவது தரவுகளை இடைமறித்து கையாண்டிருக்கவும் வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. ஆனால் அனுப்புநர் உண்மையானவர் என்பதையோ அல்லது அறிவுறுத்தல்கள் முறையானவை என்பதையோ அது உறுதிப்படுத்தியிருக்கவில்லை. இது ஒரு பலவீனமான கட்டமைப்பாகவே தெரிகிறது. மூலத்தைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு அறிவுறுத்தலும் தனித்தனியாகச் சரிபார்க்கப்பட வேண்டும். வணிக வங்கிகளில் உள்ளவை உட்பட நவீன திறைசேரி அமைப்புகள் பல அடுக்கு அங்கீகாரம் டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் பாதுகாப்பான பணம் செலுத்துதல் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. மின்னஞ்சலை முற்றிலுமாகச் சார்ந்திருப்பது. மற்றொரு தொழில்நுட்ப இடைவெளியாக நேரடிச் செயலாக்கம் இல்லாததை உணர்த்துகிறது. நன்கு வடிவமைக்கப்பட்ட அதிகாரம் செலுத்தும் முறைமைகளில் செலுத்தும் வழிமுறைகள் குறைந்தபட்ச பிறருடைய தலையீட்டோடு பாதுகாப்பான வங்கி நபர்கள் வழியாக திறைசேரித் தளங்களிலிருந்து மத்திய வங்கி அமைப்புகளுக்கு நேரடியாகச் செல்கிறது. மின்னஞ்சல் உறுதிப்படுத்தல்கள் அல்லது ஆவண இணைப்புகள் போன்ற கையெழுத்துப் படிகள் ஆய்வுக’கு உட்படுத்தாதது தெரியவருகிறது. மத்திய வங்கியிடமிருந்து கடன் மேலாண்மைப் பணிகளை நிறுவன ரீதியாக மாற்றுவது பாரிய குறைபடாக உள்ளது.
மூன்றாவது இலங்கையின் ஜனாதிபதி டிஜிட்டல் உள்கட்டமைப்புப் பொறுப்பையும் வகிப்பதாலும், அரசாங்க அதிகாரிகள் ஆலோசனைத் தலைமையில் இருப்பதனாலும் மோசடியின் நோக்கத்தை விட பங்குதாரர் மீது அதிக கேள்விகளை எழுப்புகிறது. ஒரு நாட்டின் ஆரோக்கியமான பொருளாதாரம் மிகவும் நுட்பமான நிதிச் செயல்பாடுகளின் பாதுகாப்பில் தங்கியுள்ளது. நடைமுறையில், நிதி அமைச்சகத்திற்கும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அதிகாரிகளுக்கும் இடையே ஒரு சிறந்த ஒருங்கிணைந்த உத்திகள் ஆட்சித்துறையில் உண்டு. இவை பாதுகாப்பான வழிகள் பரிவர்த்தனைக் கண்காணிப்பு மற்றும் முறைகேடுகளைக் கண்டறியும் அமைப்புகளை அமுல்படுத்தியிருந்துள்ளன. பயனாளியின் விவரங்கள் மாறினாலோ அல்லது முந்தைய முறைகளிலிருந்து விலகினாலோ பெரும் நிதிப்பரிவர்த்தனைகள் தானியங்கி இயந்திரத்தின் எச்சரிக்கை சமிக்ஞைகளைத் தூண்டியிரக்கும். அவை அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்தில் பழியை சுமத்திவிட்டு செல்ல முடியாது.
எனவே இலங்கைத் தீவில் வன்முறையும் படுகொலையும் ஆளும் வர்க்கத்துக்கு புறம்பான வடிவம் இல்லாத ஒன்றாக விளங்குவது போன்று ஆட்சியாளர்களின் ஊழலையும் மோசடியையும் பிரிக்க முடியாத ஒன்றாக காணப்படுகிறது. வலதுசாரிகளானாலும் இடதுசாரிகளானாலும் அத்தகைய இயல்புக்கத்திலிருந்து இலங்கை தீவை பிரித்துப் பார்க்க முடியாது என்ற யதார்த்தத்தை தந்துள்ளது. இத்தகைய நெருக்கடியில் இருந்து மீள்வதென்பது இலங்கை தீவில் இருக்கும் அரசியல் கலாச்சாரத்தின் மாற்றங்களை அடையும் போது மட்டுமே சாத்தியமாக கூடியதாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: யாழ் தினக்குரல்)
