அரசியல் கட்டுரைகள்

இலங்கைத் தீவின் சுதந்திரமான நீதியும்; தமிழ் மக்களும்

இலங்கை அரசியல் நீதி பற்றிய உரையாடல் இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரையில் துயரமானது என்பது புரிந்து கொள்ளக்கூடியது ஒன்றாகும். இலங்கையின் நீதி பெரும்பான்மை இனத்தினருக்கானதாகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த வரலாறு முழுவதும் இலங்கை தமிழர் மீதான அடக்குமுறைகளும் ஆக்கிரமிப்புகளும் படுகொலைகளும் நீதியின் பால் பட்டு நியாதிக்கத்திற்கு உட்படுத்தப்படவில்லை. அதில் நீதி, சுதந்திரமான நீதி நியாயாதிக்கத்தின் கட்டமைப்பு என எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் அவை அனைத்தும் இனவாதமாகவும், இன உணர்வின் பிரதிபலிப்பாகவும் உருவாக்கப்பட்டிருந்தது. இலங்கையின் ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க நடந்து முடிந்த(2026) மே தினத்தில்; உரையாற்றுகின்ற போது முன்வைத்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அதிக குற்றச்சாட்டுகளும் முன்வைப்புகளும் காணப்படுகிறது. எதிர் கட்சியினர் ஐக்கிய நாடுகள் சபை வரையும் அத்தகைய உரையை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் இலங்கைத் தமிழர் மீதான அனைத்து படுகொலைகளையும் ஐ.நா.சபையில் ஆளும் கட்சி மட்டுமல்ல எதிர்கட்சியினரும் நிராகரித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமான நீதி பற்றி எவ்வாறான எண்ணம் கொண்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ளவே இப்பகுதி முனைகிறது.

நீதி பற்றிய உரையாடல் கிரேக்க மரபிலிருந்து முன்வைக்கப்படுகின்றதாக காணப்படுகிறது. கிரேக்க சிந்தனையாளனான பிளேட்டோவின் சகோதரன் கிளாகோன் (Glaucon) கூற்றின்படி நீதி என்பது யதார்த்தில் சுயநலத்திற்கான அநீதியின் ஒரு வடிவம் என்றார். நீதியின் கொள்ளவு என்னவெனில் எம்மால் தவறு செய்ய இயலாத நிலையில் எழக்கூடிய ஒப்பீட்டளவிலான நிர்ணயமாகும் என்று குறிப்பிட்டார். நீதி என்பது சமூக ஒப்பந்தமாக வடிவம் பெறுவதாகவும் ஒருவரை மற்றவர் ஒடுக்க முடியாத அளவுக்கு ஏறக்குறைய சமபலங்கொண்ட தரப்பினரிடையே நீதி உருவெடுக்கின்றது என்றும் கிளாகோன் விபரிக்கின்றார். நீதி என்பது சமத்துவம் சமவதிகாரம் சமபலம் இல்லாதவர்கள் மத்தியில் உண்மையானதாக இருக்காது என்பதே அவரது விவாதமாகும். பிளேட்டோவின் இன்னோர் சகோதரனான அடிமண்டஸ் (Adeimantus) குறிப்பிடும் போது நீதி என்பது எப்போதும் சுயநலம் வாய்ந்ததாய் உள்ளதென்றும் நீதியை எவரும் மனமுவந்து மேற்கொள்வதில்லை என்றும் விவாதிக்கின்றார். இத்தகைய விவாதத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல் அவசியமானது. இலங்கை தமிழர்களோடு அதிகம் பரீட்சையமானதும் சுதந்திரமான நீதி என்பது இலங்கை தீவுகள் பொருத்தமற்ற உரையாடல் என்பதும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அதன் பிரகாரம்,

முதலாவது சுதந்திரமான நீதி என்பது தலையீடற்ற, நிர்பந்தங்களுக்கு அடிபணியாத, நியாயாதிக்கத்தை தடுக்காத ஒன்றாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. அவ்வகை புரிதலை கொண்டே அதிகார முறைகளும் ஆட்சி முறைமைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வலுவேறாக்கக் (Separation of Power) கோட்பாடு உருவாக்கப்பட்ட போது மூன்று துறைகளும் சுதந்திரமானதாகவும் தனித்துவமானதாகவும் இயங்குவதற்கான அடிப்படைகளை ஏற்படுத்தி இருந்தது. எல்லா சந்தர்ப்பங்களிலும் சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை என்பன ஒன்றின் மீது ஒன்று தலையிடாது சுதந்திரமாக இயங்குவதையே வலுவேறாக்க கோட்பாட்டின் அடிப்படையாகும். அக்கோட்பாடு சுதந்திரமான நீதியின் முக்கியத்துவத்தை உணர்த்தி இருந்தது. அதிகாரப் பிரிவினை குறித்த மொன்டெஸ்கியூவின் மிக முக்கியமான நூலாக 1748-ல் வெளியிடப்பட்ட சட்டங்களின் ஆன்மா (The Spirit of the Laws) விளங்கியது. கொடுங்கோன்மையைத் தடுக்கவும் அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், அரசாங்க அதிகாரம் சட்டத்துறை, நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தனித்தனி கிளைகளாகப் பிரிக்கப்பட வேண்டும் என்றார். ஆனால் அதன் அடிப்படைகளுக்குள் தலையீடுகளை துறைகளுக்கு இடையே சமநிலைப்படுத்துவதற்கான செல்வாக்கினை ஏற்படுத்தலாம் என்ற அடிப்படையில் சமநிலையும் தலையீடுகளும் (checks and balances) என்ற அம்சம் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஆனாலும் உலக நடைமுறையில் இவை எதுவும் அமுல்படுத்தப்படாது தேவைகளுக்கும் நலன்களுக்கும் விருப்புக்களுக்கும் ஏற்ற வகையில் ஆட்சியாளர்கள் நீதித்துறை மீது தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டாவது இலங்கையின் வரலாற்றில் 1958 ஆம் ஆண்டிலிருந்து சமகாலம் வரை பாரிய இனப்படுகொலைகளை தமிழர் மீது பெரும்பான்மை இனத்தின் அரசாங்கங்கள் நிகழ்துகின்ற போது நீதியற்ற பொறிமுறையே காணப்பட்டது. 1958 ஆம் ஆண்டு கல்லோயாவில் இருந்த தமிழர் குடியேற்றத்தின் மீதான தாக்குதலிலிருந்து 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை பெரும் அழிவுகளையும் படுகொலைகளையும் நிகழ்த்திய போதும் நீதி என்பது இல்லாத ஒன்றாகவும், வழங்கப்பட முடியாது ஒன்றாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்படக் கூடியதாக இல்லாததொன்றாவும் காணப்பட்டது. 1983 ஆம் ஆண்டு பாரிய இனப்படுகொலையை திட்டமிட்டு மேற்கொண்ட அரசாங்கங்கள் மீது எந்த விசாரணையோ தண்டனையே நிகழ்த்தப்படாது நீதித்துறை இயங்கியது. இத்தகைய அநீதியான செயல்களுக்கொல்லாம் நியாயம் கிடைக்காத போது சுதந்திரமான நீதி சாத்தியமானதா என்ற கேள்வி பிரதானமானது. தமிழர் மீதான அநீதிக்கு ஆட்சியாளர்கள் காரணமானவர்களாக விளங்கினர். ஆட்சியாளர்கள் நீதித்துறை மீது தலையீடு செய்வதும் கட்டுப்படுத்துவதும் இயல்பான விடயமாக இலங்கையின் அரசியல் காணப்படுகிறது. இலங்கையின் அரசியல் யாப்பு ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள நிறைவேற்று அதிகாரம் அத்தகைய ஆதிக்கத்தை செயல்படுத்த வழி வகுத்துள்ளது.

மூன்றாவது ஜனாதிபதிகள் நிறைவேற்று அதிகாரத்தை கொண்டு போர் பிரகடனங்களையும் படுகொலைக்கான பிரகடனங்களையும் பாராளுமன்றத்துக்குள்ளும் பாராளுமன்றத்துக்கு வெளியேயும் கடந்த காலங்கள் நிகழ்த்தியுள்ளனர். அதன் விளைவாகவே பாரியாளவில் படுகொலைகளும் இனக்கலவரங்களும் நிகழ்ந்து முடிந்துள்ளன. இது ஆட்சியாளர்களின் திட்டமிட்ட செயல் வடிவம் என்பதை நீதித்துறையினர் அறியாததென்றில்லை. எல்லா காலப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை நிகழ்த்துகின்ற போது பிரடனங்களை ஆட்சியாளர்கள் முன் வைத்திருந்தனர். இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கான பாரிய பட்டியல் காணப்படுகிறது. இவை அனைத்துக்கும் பின்னால் இலங்கையின் அரசியல் அமைப்புகளும் ஆட்சியாளர்களும் அடிப்படை காரணமானவர்களாக விளங்கினர். அதனை நீதித்துறை பார்த்துக் கொண்டிருந்தது. ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்ட பிரகடனங்களின் முன்னே படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. அவற்றுக்கு எந்த விதமான குற்ற உணர்வோ நிவாரணங்களோ அழிவுக்கான துயரத்தையோ ஏற்படுத்தவில்லை. நீதி அமைப்புகள் நியாயாதிக்க மன்றுகளும் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற சூழலை ஏற்படுத்தியிருந்தது. இதுவே இலங்கை தீவில் சுதந்திரமான நீதி பற்றிய உரையாடலுக்கான கேள்வியை தந்துள்ளது.

நான்காவது இலங்கை தீவின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு தந்திருக்கும் அனுபவம் என்பது தனித்துவமானது. காரணம் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு ஒப்பானதாக இலங்கை தீவில் உள்ள அதிகார வர்க்கத்தில் மனோநிலை காணப்படுகிறது. பெரும்பான்மை அதிகார வர்க்கம் நீதியின் பால்பட்டு ஒழுக வேண்டியதற்கு பதிலாக ஆக்கிரமிப்பு நோக்கத்தோடு அதிகார வெறியோடும் கட்டுப்படுத்துகின்ற சூழலோடும் காணப்படுகிறது. தான்தோன்றித்தனமாக இயங்கும் நீதியின்; இயல்பு மனித சமூகத்தின் வரலாற்றையும் அதன் வடிவத்தையும் பலவீனப்படுத்தி விடுகின்றது. தமது விருப்புக்கும் நலனுக்கும் உட்பட்ட விதத்தில் நியாயாதி கத்தை வளைத்துப் போடுவதில் வெற்றி காணுகின்றன. இலங்கைத் தீவில் நீதிபதிகளே நாட்டைவிட்டு தப்பியோடும் நிலை வரையும் எதிர்கட்சிகளது மௌனம் நியாயத்திற்கு உட்பட்டதல்ல என்பதை நிறுவுகிறது.

ஐந்தாவது இலங்கையின் நீதி தமிழர் மீது ஏற்படுத்திய துயரங்களையும் வடுக்களையும் அளவீடு செய்ய தவறுகின்ற போது சுதந்திரமான நீதி பற்றி உரையாடலை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது பிரதான கேள்வியாகும். நம்பிக்கையூட்ட கூடிய விதத்தில் இயங்குகின்ற சமூக நியதிகளை பலவீனப்படுத்திவிட்டு ஒரு பலமான சமூகத்தை கட்டி எழுப்ப முடியுமா என்பது கேள்விக்குரியது. இலங்கை தீவின் நீதியும் நியாயமும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் அமைப்புக்கு உட்பட்டது. அத்தகைய அரசியலமைப்பு ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் அபாயமானவை. அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு ஒவ்வொரு பிரஜைக்கும் உரியது. ஆனால் நீதிக்குட்பட்டவர்களும் நியாயாதிக்க மன்றுகளும் சாமானிய மனிதர்களையும் அவர்களுடைய எண்ணங்களையும் சிதைப்பதன் மூலம் தமது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்த முயல்கின்றது.

எனவே இலங்கையிடம் நீதியே இல்லாத சூழலில் சுதந்திரமான நீதி சாத்தியமாவது கேள்விக்குரியதே. அவ்வாறான எண்ணங்களை இழைத்தவர்கள் ஆட்சியாளர்கள் என்பதை மறுக்க முடியாது. நீதியின் பால்பட்டு இயங்க முடியாத ஒரு தேசம் சுதந்திரமான நீதியை பற்றி உரையாடுவது அதன் போலித் தன்மையின் நியாயங்களை அடையாளப்படுத்த தவறுவதன் விளைவுகளை தேடுவதாகவே அமையும். கிளாகோன் மற்றும் அடிமண்டஸ் குறிப்பிடுவது போன்றதே இலங்கைத் தீவின் நீதி. நீதியின் அடிப்படையையே கொண்டிராத நாட்டில் சுதந்திரமான நீதி பற்றி தேடுவது வேடிக்கையானது. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்து நாற்பத்தி மூவாயிரம் மக்களுக்குமான அநீதிக்கு அனைத்து ஆட்சியாளர்களும் பொறுப்புடையவர்களே.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)