March 29, 2026
அரசியல் கட்டுரைகள்

ஈரான் மீதான போரினால் அமெரிக்க வல்லரசின் ஆதிக்கம் சரிகிறதா?

ஈரான் மீதான போர் இஸ்ரேல்-அமெரிக்க கூட்டின் இருப்பில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் அழிவும் ஈரான் இஸ்ரேல் மீது நடத்தும் அழிப்பும் வரலாற்றில் எதிர்பார்க்க முடியாததென்றாக மாறியுள்ளது. மேற்காசியாவில் நிகழும் போர் தற்போது முக்கிய திருப்பங்களை எதிர்கொண்டுள்ளது. பரஸ்பரம் இருதரப்பிலும் பாரிய அழிப்புகள் சாத்தியமானாலும் போர் முடிவுக்குவராத ஒன்றாக உள்ளது. போரின் முடிவை ஈரான் தானே மேற்கொள்ளும் என்பதை உறுதிப்படுத்துகிறது. அமெரிக்கா இப்போரின் ஈடுபட்டதன் மூலம் உலக வல்லரசுக்கான தனித்துவத்தை இழக்க ஆரம்பித்துள்ளது. அதனால் அமெரிக்கா போரில் தனிமைப்படுத்தப்படுவதைவிட உலக ஆதிக்கத்திலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. இக்கட்டுரையும் அமெரிக்க-இஸ்ரேலிய போரின் பிந்தைய நிலைமைகளை தேடுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான போரில் அமெரிக்கா பாரிய நெருக்கடி எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் எதிர்கொண்ட நெருக்கடிகள் தற்போது அமெரிக்க ஜனாதிபதியின் அரசியல் இருப்பையும் அமெரிக்காவின் முதல்தரவல்லரசு நிலையையும் நெருக்கடிக்கு உள்ளாக்க ஆரம்பித்துள்ளது. அதனை விரிவாக நோக்குதல் அவசியமானது.

முதலாவது இப்போரினை குறுகிய காலத்தில் முடிக்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஆனால் அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கைகளையும் ஈரான் முறியடித்துவிட்டதாகவே தெரிகிறது. ஈரானின் இராணுவ கட்டமைப்பு வலிமையான தாக்குதல் தருணம் அமெரிக்காவின் இலக்கை தோற்கடித்துள்ளது. அமெரிக்காவின் போர் உத்திகளை சரியான முறையில் நகர்த்த முடியாத சூழலை ஈரான் உருவாக்கியுள்ளது. ஈரானின் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி வளைகுடா நாடுகளின் அமெரிக்கத் தளங்களையும் இஸ்ரேலின் இருப்பையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்கா தனிமைப்படுத்தப்படுவதோடு போரின் வெற்றியை அடைய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வல்லரசொன்றின் இருப்பு அதன் போர் வெற்றியில் தங்கியுள்ளது.

இரண்டாவது அமெரிக்காவின் நெருக்கடிக்கு அதன் போர் உத்தியும் பிரதான காரணமாகத் தெரிகிறது. காரணம் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் நிகழ்ந்த இத்தகைய போர்களில் அமெரிக்கா தனித்து போரிட்ட வரலாறு குறைவானது. வியட்நாம் போரின் தோல்விக்குப் பின்னாலும் அத்தகைய இயல்பு ஒன்றைக் கண்டு கொள்ள முடிந்தது. ஈரான் மீதான போரில் அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்புகளையும் நேட்டோ அணியினரையும் கைவிட்டே ஈடுபட்டது. அந்த நாடுகளை ஆலோசனை பெறாமலும் இராணுவ ஒத்துழைப்பை கோராமலும் போரில் ஈடுபட்டது. ஆனால் போரின் தோல்வியை எதிர்கொள்ள முடியாத நிலையிலும் உலக பொருளாதாரத்தின் நெருக்கடியை தவிர்ப்பதற்கும் நோட்டோவினை அமெரிக்க நிர்வாகம் அணுக ஆரம்பித்து தோற்றுப் போயுள்ளது. நேட்டோ நாடுகளின் வலுவான எதிர்ப்பு அமெரிக்காவுக்கு மேலும் இன்னொரு தோல்வியாக மாறியுள்ளது. குறிப்பாக பிரித்தானிய, பிரான்ஸ், போன்ற நேட்டோ நாடுகளும் ஜெர்மனி,ஸ்பெயின் போன்ற நேட்டோ நாடுகளும் முழுமையாகவே போரில் ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டுவதுடன் முடிவுக்கு வராத போர் ஒன்றில் ஈடுபாடு காட்டுவது பலவீனமானது என பிரித்தானிய பிரதமர் கெயர் ஸ்டாமர் ஊடகங்களுக்கு முன்னே தெரிவித்துள்ளார். அதேபோன்றே பிரான்சின் ஜனாதிபதியும் ஜெர்மனியின் தலைவரும் இப்போரில் ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டியுள்ளனர். ஏறக்குறைய அமெரிக்கா தனித்துவிடப்பட்டதோர் நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அமெரிக்கா உலக ஆதிக்க வல்லரசுக்கான தலைமை நாடு என்பதை இழப்பதற்கான அடிப்படையை தோற்றுவித்துள்ளது.

மூன்றாவது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத்தாக்குதலில் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியானது உலக நாடுகளால் நிராகரிக்கப்பட காரணமாகியுள்ளது. ஈரானின் பதில் தாக்குதலின் வீரியம் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளாலும் அமெரிக்கா நிராகரிக்கப்படுகின்ற நிலைக்கு தள்ளப்பட வழிவகுத்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் வரி விதிப்புகளால் அதிர்ந்து போன உலகம் போரில் அமெரிக்க தரப்புக்கு ஏற்பட்ட பலவீனத்தை அடுத்து அமெரிக்க மேலாதிக்கத்தை நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர். இது முழுமையாகவே அமெரிக்காவின் தலைமைத்துவத்தை உலக நாடுகள் நிராகரிக்க வழிவகுத்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்காவின் இராணுவரீதியான நடவடிக்கை வெளிப்படையாக நிராகரிக்கின்றன. ஓவல் அரங்கில் ஜப்பானிய பிரதமர் சனே தகச்சி ட்ரம்ப் உடன் உரையாடுகின்ற போது இந்த விஜயத்தின் நோக்கம் ஜப்பானையும் அமெரிக்காவையும் ஒன்றிணைக்கும் வலுவான பிணைப்புக்கான வலுவான தொலைநோக்குப் பார்வையே அன்றி பிளவுபடுத்தும் கடந்த காலத்தையோ போரின் கசப்பான போட்டி மற்றும் மோதலையோ அல்ல எனக் குறிப்பிட்hர். இது ஏறக்குறைய அமெரிக்கா தனித்து விடப்படுகின்ற நிலையை உணர்த்துகின்றது. அமெரிக்கா தனித்துவிடப்படுதல் என்பது அமெரிக்காவின் வல்லரசு நிலையை இழப்பதற்கு ஒப்பானதாகவே தெரிகின்றது.

நான்காவது அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளாலும் ஆசியநாடுகளாலும் கைவிடப்படுகின்ற அதே நேரம் இஸ்ரேலை பாதுகாக்க முடியாத நிலைக்கும் யூதர்களாலும் அமெரிக்கா நிராகரிக்கப்படுகின்ற ஒரு தேசமாக மாறி வருகிருக்கிறது. யூதர்கள் போருக்கு எதிரான போராட்டங்களை தொடங்கியதோடு போரை நிறுத்துமாறு அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கூறுகின்ற நிலை வலுவானதாக மாறிவருகின்றன. இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு மீதான எதிர்ப்புணர்வை யூதர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதே நேரம் அமெரிக்காவுக்கு எதிராகவும் அவர்களது போராட்டம் மாறியுள்ளது. ஐரோப்பா எங்கும் ஆசிய நாடுகள் பலவற்றிலும் போருக்கு எதிரான போராட்டம் நிகழ்வது போல் இஸ்ரேலிலும் போருக்கு எதிரான போராட்டங்கள் முனைப்பு பெற்றிருக்கின்றன. இவை ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க வல்லரசு வலிமையை பலவீனப்படுத்துவதாக மாறியுள்ளது. அதிக உலக மக்களால் வெறுக்கப்படும் ஆட்சியாளராக டொனால்ட் ட்ரம்ப் மாறிவருகிறார்.

ஐந்தாவது உலகளாவிய ரீதியில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்படுகின்ற போது அமெரிக்காவிலும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்க்கப்படும் ஒருவராக மாறிவருகின்றனர். அவரது ஆட்சியில் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடியை முதன்மைப்படுத்தி அமெரிக்க மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர். தொடர்ச்சியான போராட்டங்கள் அமெரிக்காவில் எழுச்சி பெற தொடங்கியுள்ளன. குறிப்பாக அமெரிக்க ஆட்சியாளர்கள் முரண்படுவதும் உயர் இராணுவ அதிகாரிகள் பதவி விலக்குவதும் அமெரிக்க அரசியல் வரலாற்றில் மீண்டும் ஒரு நெருக்கடியான சூழலை தோற்றுவித்துள்ளது. அமெரிக்கர்களாலும் உலகத்தாலும் நிராகரிக்கப்படும் ஜனாதிபதியாக ட்ரம்ப் காணப்படுகின்றனர். வியட்நாம் போரில் அமெரிக்கா அடைந்ததைவிட ஈரான் போரில் அதிகமானவற்றை இழந்துள்ளது. அமெரிக்கா பொருளாதாரம், இராணுவம் மற்றும் அரசியல் பலத்தையும் இழந்துவருகிறது. அமெரிக்காவின் இழப்பென்பது உலகளாவிய நெருக்கடியாக மாறிவருகிறது. காரணம் அமெரிக்கா உலகளாவிய சக்தியாக விளங்கியதென்பதே அடிப்படையாகும்.

எனவே ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் அமெரிக்க வல்லரசு பலத்தையும் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் இன் இருப்பையும் கேள்விக்கு உட்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் டொலரின் வீட்ச்சியும் மறுபக்கம் இராணுவ ரீதியான தோல்விகளும் உள்நாட்டில் சர்வதேச மட்டத்திலும் மக்களின் எதிர்ப்பலைகளும் அமெரிக்கா அரசியலையும் உலக தளத்தில் அமெரிக்காவின் வல்லரசு நிலையையும் முடிவுக்கு கொண்டு வருகின்ற நகர்வாகவே தெரிகின்றது. சீனா ரஷ்சியா, வடகொரியா என்பவற்றின் பலமானது ஈரானின் இருப்பை பாதுகாப்பதைவிட அமெரிக்காவை வீழ்த்துவதில் முனைப்புக் கொண்டுள்ளன.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)