அரசியல் கட்டுரைகள்

ஜே.வி.பி.குழுவினரின் இந்திய விஜயம் வெளிப்படுத்தும் அரசியல்?

இலங்கை அரசியலில் இந்தியாவின் அணுகுமுறை பொறுத்து அதிக முக்கியத்துவம் காணப்படுவது வழமையான விடயமேயாகும். இந்தியாவை அயல் நாடாகக் கொண்ட இலங்கை இந்தியாவுக்கு கட்டுப்பட்டு செயல்படுகின்ற ஆட்சியாளர்களே நிலைத்திருக்கின்றனர். அரசியல் ரீதியில் இந்தியா கொண்டிருக்கும் புவிசார் அரசியல் கொள்கை அதற்கான அடிப்படையாக உள்ளது. இதில் மாற்றங்கள் ஏற்பட்ட போதும் அது இலங்கை ஆட்சியாளர்களை அணுகுகின்ற முறையினையும் அதற்கான உத்திகளையும் மாற்றி இருக்கின்றது என்பதை கண்டுகொள்ள முடிகிறது.. அதன் அடிப்படையில் ஜே.வி.பி. இன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினருடைய இந்தியா விஜயம் முக்கியம் பெறுகிறது. இக்கட்டுரையும் ஜே.வி.பி. குழுவினரின் இந்திய விஜயத்திற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியலை தேடுவதாக அமைந்துள்ளது.

இந்தியா செல்லும் ஜே.வி.பி. குழுவினர் கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களையும் அவற்றின் முதலமைச்சர்களையும் சந்தித்து உரையாடுவதுடன் இலங்கையின் உள்நாட்டு பொருளாதாரத்தை கட்டி வளர்ப்பதற்கான வாய்ப்புகளையும் தேட முயல்வதாக ஊடக பரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளது. அத்தகைய செய்திகளுக்கு அப்பால் இந்திய விஜயத்தில் இருக்கக்கூடிய முக்கியத்துவம் எது என்பது கவனத்தில்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். அதனை விரிவாக தேடுவது அவசியமானது.

முதலாவது இலங்கையில் இடதுசாரி ஆட்சி என்பது இந்தியாவைப் பொறுத்தவரையில் அங்கீகாரத்துக்குட்பட்டதென்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் ஜே.வி.பி. என்பது சீன சார்பு கட்சி என்றும் சீன சார்புக் கொள்கையை கொண்டது என்றும் விவாதங்களும் அதன் மீதான பார்வையும் காணப்படுகிறது. மறுபக்கத்தில் சமகால உலக ஒழுங்கில் இடதுசாரி, வலதுசாரி என்று வேறுபாடுகளில்லாத சூழல் ஒன்றுக்குள் இருப்பதனைக் காணமுடிகிறது. அவற்றையும் கடந்து உலகம் தாராள யுகத்துக்குள் பயணிக்கின்ற ஒரு சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. கட்சிகளும் கட்சிகளின் கொள்கைகளும் அவற்றின் ஆட்சிகளும் அதன் எல்லைக்குள் வரையறுக்கப்படுகின்றதே அன்றி நாட்டின் எல்லையைக் கடந்த விதத்தில் உலகளாவிய நியதிக்குள்ளால் நகர்த்தப்படுகின்றன. இலங்கை தீவிலும் அவ்வகையான ஆட்சி முறையை கொண்டிருக்கின்றது. ஆனால் அது சீனாவைப் போன்ற கட்சி கட்டமைப்பையும் கட்சி அரசியலையும் நிலைநிறுத்திக் கொள்வதற்கு அதிகம் முயலுகின்றது. ஜீன் 2025 இல் ரிவின் தலைமையில் சீனாவுக்கு விஜயம் செய்த குழுவினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டமைப்புச் சார்ந்து அதன் விரிவாக்கம் சார்ந்து ஆராய்ந்து இருந்தனர். அத்தகைய அனுபவம் இலங்கை தீவிலும் எதிர்கால அரசியல் இருப்போடு ஜே.வி.பி.யைக் கட்டமைக்க முயலுகின்ற போக்கு ஒன்றை அவர்களுக்கும் சீன கம்யூனிஸக் கட்சிக்கும் இடையிலான உடன்பாடு உணர்த்தி இருந்தது. அதன் அடிப்படையிலேயே உள்நாட்டில் ஜே.வி.பி. பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அது பற்றிய சலசலப்புகள் தமிழர் தரப்பிடம் ஏற்பட்டிருந்ததும் கவனத்திற்குரியது.

இரண்டாவது ரில்வின் குழுவினரின் இந்திய விஜயம் டித்வா புயல் காரணமாக காலம் தாழ்த்தப்பட்டதே அன்றி கைவிடப்படவில்லை என்பதை விஜயம் உறுதிப்படுத்துகிறது. அவ்வாறெனில் இந்தியா இலங்கை தீவின் அரசியலில் அதிக கவனத்தை பொருளாதார பாதுகாப்பு சார்ந்த விடயங்களைப் போன்று கவனத்தில் கொள்கிறது என்பதை உணர்த்துகிறது. அயல் நாடுகளுக்கு முதலிடம் என்ற கொள்கையின் பிரகாரம் இந்தியாவின் வெளியுறவு இலங்கையுடன் பொருளாதார உறவிலும் ஒத்துழைப்பிலும் உதவி வழங்குவதிலும் மட்டுமன்றி அரசியல் ரீதியான பகிர்விலும் கவனம் கொள்கிறது என்பதை கோடிட்டுக் காட்ட முயலுகிறது. அதற்கான ஒரு நகர்வாகவே ரில்வின் குழுவினரின் இந்திய பயணம் தெரிகின்றது. வெளிப்படையாக ஊடக பரப்பு குறிப்பிடுவதற்கு அப்பால் இவர்களது விஜயத்தின் உள்நோக்கங்கள் இரு தரப்பின் நலன்களையும் சார்ந்துதாக தெரிகின்றது. இலங்கைக்கு பாரியாளவான பொருளாதார உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கு ஜே.வி.பி.குழுவினர் விஜயம் செய்வது என்பது அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான நகர்வாகவே தெரிகின்றது. சீன சார்பு தளத்தை அதிகம் பிரதிபலிக்கும் ஜே.வி.பி.இன் பொதுச் செயலாளர் இந்தியாவுக்கு அழைத்துக் கொள்ளப்பட்டதும் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டதன் பிரதிபலிப்பாகவே உள்ளது. இலங்கைக்கான இந்திய தூதுவருடன் பல சந்திப்புகளை மேற்கொண்ட பொதுச் செயலாளர் கலாச்சார மையத்தின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கின்றமை அரசியல் ரீதியில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. பொருளாதார ஒத்துழைப்பை போன்று அரசியல் ஒத்துழைப்பும் இந்தியா இலங்கையுடன் இருத்தல் என்பதை உணர்த்துவதற்கான விஜயமாகவே காணப்படுகிறது. பிரதானமாக சீனாவின் கம்யூனிச கட்சி சார்ந்த இருக்கக் கூடிய கொள்கைகளை விஞ்சுமளவுக்கு இந்தியாவுடன் அரசியல் உரையாடல் ஒன்றை கட்டமைப்பது என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. அதேபோன்று சீன இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்கு நிகரான இந்திய இலங்கை ஒத்துழைப்பு காணப்பட்டது போன்று அரசியல் ரீதியானம் அத்தகைய ஒத்துழைப்பை பலப்படுத்த இந்தியா திட்டமிடுகிறது.

மூன்றாவது இந்தியா அண்டை நாடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தென்னாசியாவுக்குள் இலங்கையை அதிகம் நெருக்கமானது என்ற விவாதம் பொதுத் பரப்பில் காணப்படுகிறது. ஆனால் அத்தகைய விவாதத்துக்கு பின்னால் புவிசார் அரசியல் முக்கியத்துவம் பாதுகாப்பு முக்கியத்துவமும் இலங்கைப் பொறுத்து இந்தியாவுக்கு அதிக கரிசனை உள்ளது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இலங்கை தீவின் அரசியல் உறுதித் தன்மை பெறுகிற போதும் இந்தியாவை மீறாத பாதுகாப்பு கொள்கை கொண்டிருக்கும் போதும் மட்டுமே ஒரு ஆரோக்கியமான ஒத்துழைப்பை இந்திய தரப்பு பகிர்கிறது. அதுவே இலங்கை ஆட்சியாளர்கள் மீது தொடர்ச்சியாக கரிசனையும் கவனமும் இந்திய தரப்பிடம் காணப்படுகிறது. இது ஒரு வகையான இராஜதந்திர பரிபாசையாகும். நலன்களை நிறைவு செய்வதற்கான உத்திகளை பரஸ்பரம் தரப்புகள் பயன்படுத்திக் கொள்வது அரசியலில் சாதாரணமான விடயமாகவே காணப்படுகிறது. ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் தனது ஆட்சியை உத்தரவாதப்படுத்துகின்ற வாய்ப்புகளைத் தேடி செயல்படுகின்றது. இந்தியா அதற்கான பிரதான சக்தி என்ன ஜே.வி.பி.கருத்துகிறது.

நான்காவது அமெரிக்காவின் தென்னாசியா நோக்கிய கொள்கைகளில் இலங்கை தீவும் முக்கியம் பெறுவதனால் இலங்கை இந்திய உறவு பாதிக்காத வகையில் அதிக முக்கியத்துவத்தை இலங்கை பாதுகாக்க முயலுகின்றது. அதனுடைய அடிப்படைகளுக்குள்ளாலேயே இந்தியா அமெரிக்க தரப்புகளின் இசைவான நாடாக இலங்கை எப்போதும் செயல்பட முனைவது போல் காட்டிக் கொள்வது ஜே.வி.பி. ஆட்சியை தக்க வைப்பதற்கு அவசியமானது. ஜே.வி.பி. நிலையான ஆட்சியை கொண்டிருக்கின்ற சூழலை உறுதிப்படுத்திக்கொள்வதே அதன் அணுகுமுறையிலுள்ள பிரதானமான அம்சமாகும். சமகாலத்தில் உலக ஒழுங்கில் ஏற்பட்டு வரும் குழப்பங்கள் எல்லாவற்றையும்; ஜேவிபி எதிர்கொள்வதில் கவனம் கொள்கின்றது. அதனாலேயே அது இந்திய தரப்போடு அதிகம் விட்டுக்கொடுப்பை முதன்மைப்படுத்துவதோடு அமெரிக்க சீன தரப்புகளின் ஒத்துழைப்பை கைவிடாது செயல்படுகின்ற போக்கையும் பிரதிபலிக்க முயற்சிக்கிறது. இதுவே ரில்வின் சில்வாவின் இந்திய விஜயத்தின் வலுவான செய்தியாகும்.

எனவே இந்தியா இலங்கை அரசியல் எப்போதும் வலிமையான நட்பு உறவின் பால்பட்ட ஒன்றாக இல்லாத போதும் அடிப்படையில் ஒத்துழைப்புகளும் விட்டுக் கொடுப்புகளும் இலங்கை தீவின் ஆட்சியாளர்களின் இருப்பை பாதுகாக்க கூடியது. அத்தகைய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் நகர்வாகவே ஜே.வி.பி. குழுவினரது இந்திய விஜயம் காணப்படுகிறது. அதில் தமிழ் பராளுமன்ற உறுப்பினர்களும் இடம்பிடித்துள்ளமை தமிழ் மக்களை திருப்திப்படுத்தும் விடயம் மட்டுமல்ல இந்தியத் தரப்பின் கவனத்தை நோக்கியதாகவும் உள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: யாழ் தினக்குரல்)