இராஜதந்திரம் (Diplomacy)
இராஜதந்திரம் என்ற தனித்துறை கி.பி 1300 ஆம் ஆண்டளவில் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் பின்னர் உருவாகியதாக தெரிய வருகிறது. அரசியல் சிந்தனை மாற்றமும் அதற்கான செயல்பாடுகளும் நவீன அரசியல் வளர்ச்சியின் வழிகாட்டியாகவும் இராஜதந்திரத்திற்கான அடிப்படையாகவும் உள்ளது. இத்தாலிய குடாவில் அமைந்திருந்த இராட்சியங்களது மன்னர்களுக்கிடையிலே தகவல் பரிமாற்றம் செய்ய தூதுவர்களை அனுப்பும் நடைமுறையில் இருந்தது. தூதுவர்களை அத்தாட்சிப் படுத்துவதற்கு தூதரிடம் மன்னன் அதற்கான அத்தாட்சியாக மடிக்கப்பட்ட பத்திரமென்ற வழங்குகின்ற மரபு காணப்பட்டது. இலத்தீன் மூலச் சொல்லான Diploun என்ற பதத்தில் இருந்து உருவான Diploma எனும் பத்திரத்தை கொடுத்து அனுப்பியதன் விளைவு இராஜதந்திரம் எனும் Diplomacy என்ற ஆங்கில பதத்தின் உருவாக்கம் நிகழ்ந்தது. அதுவே பிற்காலத்தில் துரைசார் நிறுவனமாக விரிவடைந்தது. மேற்குலக நாடுகளில் இராஜதந்திரம் என்ற பொருளைக் கொண்ட இப்பதம்; அரசுகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வ வெளியுறவு என்ற அர்த்தத்தை பெரிதும் பின்பற்றுவதாக அமைந்தது.
இந்திய மரபில் இராஜதந்திரமென்ற சொல்லுக்கு மேற்குலக இராஜதந்திரம் என்ற சொல்லுக்கும் இடையே சொல் வேறுபாடு பொருள் வேறுபாடு உண்டு. இந்திய அர்த்தத்தில் இராஜதந்திரம் என்பது அரசன் செய்யும் தந்திரங்களை நியாயப்படுத்துவதற்காகவும் அதனை நீதி மையப்படுத்துவதற்காகவும் உருவான ஒரு வித்தையாய் கருதப்பட்டது. அதனை கலை என்ற வடிவத்திலும் இந்திய மரபில் கருதினர். அது முதல் நிலை அர்த்தத்தில் அரச நன்மைக்காக தந்திரம் என்ற சொல்லை அல்லது தந்திரம் செய்வதை நியாயப்படுத்தும் அல்லது புனிதப்படுத்தும் பதமாகவே புரிந்து கொள்ளப்பட்டது. அதாவது அரசன் தீய செயலைச் செய்தாலும் அதற்கு அரசின் பெயரால் அங்கீகாரம் வழங்கி இராஜதந்திரமென்று மதிப்பூட்டப்பட்டது. தந்திரம் என்பது வித்தை, உபாயம், உத்தி போன்ற பல சொற்களை உள்ளடக்கியது. ஆனால் மேற்குலகத்தில் இராஜதந்திரம் என்ற சொல்லில் அரசுகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வ உறவுகள் என்ற பொருளில் முதலாவதாகவும் அரசியல் உத்தி அரசியல் உபாயம் என்பன இரண்டாவதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. இந்த வகையில் அரசுகளுக்கு இடையிலான உறவுகளை உத்தியோபூர்வமாகவும் கலைச்சொல் ரீதியாகவும் பிரயோகப்படுத்தும் நிலை பல நூற்றாண்டுகளாகவே காணப்பட்டது. அரசுகளுக்கு இடையிலான உறவானது ஒரு தனித்துறையாக இராஜதந்திரம் வளர்ந்துள்ளது.
இவ்வாறு இராஜதந்திரம் அரசுக்கிடையில் நிகழ்ந்தாலும் இரண்டாவது,(Track-II Diplomacy) மூன்றாவது தட (Track-III Diplomacy) இராஜதந்திரமும் பிரயோகத்தில் உள்ளது. இரண்டாம் தட இராஜதந்திரம் என்பது கல்வியாளர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் சிவில் தலைவர்கள் போன்ற அரசசாரா அமைப்புகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற, முறைசாரா உரையாடல்களைக் குறிக்கிறது. இது அதிகாரப்பூர்வ உறுதிமொழிகள் ஏதுமின்றி சாத்தியமான தீர்வுகளைப் பாதுகாப்பாக ஆராய்வதன் மூலமும் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலமும் மோதல்களின் உளவியல் மூல காரணங்களைக் கையாள்வதன் மூலமும் முறையான அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளுக்குத் துணைபுரிகிறது. சமாதான முயற்சிகளின் ஒரு பரந்த தளத்தில் இரண்டாம் தட இராஜதந்திரத்தை வேண்டி நிற்கிறது. அதிகாரப்பூர்வ அரசுப் பிரதிநிதிகள் பொதுவெளியில் எதிர்கொள்ளும் கடுமையான எல்லைகளையும் அரசியல் அபாயங்களையும் சமாளிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பங்கேற்பவர்களாக தனியாட்கள், அறிஞர்கள், அரசு சாரா நிறுவனப் பணியாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் காணப்படுவர். இவர்கள் அதிகாரப்பூர்வ அரசாங்கப் பிரதிநிதிகளாக அல்லாமல், தங்களின் தனிப்பட்ட தகுதிகளில் பங்கேற்பவராக உள்ளனர்.
இரண்டாம் தட இராஜதந்திரத்தின் நோக்கம் பதற்றத்தைக் குறைத்தல், அச்சத்தைத் தணித்தல் மற்றும் பரஸ்பர புரிதலை வளர்த்தலாகும். பங்கேற்பாளர்கள், அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிகாட்டவோ அல்லது அதிலுள்ள தடைகளை நீக்கவோ கூடிய ஆக்கப்பூர்வமான கொள்கை யோசனைகளையும் கற்பனைச் சூழ்நிலைகளையும் சோதித்துப் பார்பவர்களாக உள்ளனர். பொதுவான விதியின் கீழ் நடுநிலையான சூழல்களில் உரையாடல்கள் நடைபெறுகின்றது. இது முறையான பேரம்பேசல் அல்லது ஊடகக் கண்காணிப்பு போன்ற அழுத்தங்கள் இன்றி வரலாற்று பிரச்சினைகள்; குறித்து வெளிப்படையான நேர்மையான தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
இராஜதந்திரத்தின் வெவ்வேறு வழிமுறைகளைக் கொண்டுள்ளது. தடம் ஒன்று அதிகாரப்பூர்வமான முறைசார்ந்த அரசாங்கங்களுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் பற்றியது. தடம் ஒன்றுக்கு மேல், அதிகாரப்பூர்வ அரசாங்கப் பிரதிநிதிகளும் அதிகாரப்பூர்வமற்ற அரசு சாரா நிபுணர்களும் முறைசாரா வகையில் ஒரே மேசையில் அமர்ந்திருக்கும் கலப்பினக் கலந்துரையாடலை மேற்கொள்வது. தடம் இரண்டு செல்வாக்கு மிக்க குழுக்களுக்கு இடையேயான முற்றிலும் அதிகாரப்பூர்வமற்ற அரசு சாரா தொடர்புகள்சார்ந்தது. தடம் மூன்று அடிமட்ட அல்லது சதாரண மக்களுக்கு இடையேயான இராஜதந்திர உரையாடலைக் குறிப்பதாகும்.
இச்சொல் முதலில் 1981-ல் அமெரிக்க இராஜதந்திரி ஜோசப் மான்ட்வில் (Joseph Montville) என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த முறைசாரா சிக்கல் தீர்க்கும் பயிலரங்குகளின் மிகவும் குறிப்பிடத்தக்க சில வரலாற்றுப் பயன்பாடுகள் காணப்பட்டன. ஓஸ்லோ உடன்படிக்கைகள் (1993) நோர்வே கல்வியாளர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளால் நடத்தப்பட்ட இரகசிய அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் மூலம்; இஸ்ரேலுக்கும் பி.எல்.ஓ-வுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ அமைதி ஒப்பந்தத்திற்கான அடித்தளக் கட்டமைக்கப்பட்டது. 1990களில் நடந்த தஜிகிஸ்தான் உள்நாட்டுப் போரின்போது பிளவுகளைக் குறைக்க உதவிய சர்வதேச அறிஞர்களால் முன்னெடுக்கப்பட்ட முறைசாரா உரையாடல். சீனா, கா~;மீர் மற்றும் வட கொரியாவின் அணுசக்தித் திட்டம் ஆகியவை சம்பந்தப்பட்டவை உட்பட மிகவும் உணர்திறன் வாய்ந்த புவிசார் அரசியல் பதட்டங்களைக் கையாள்வதற்காக அதிகாரப்பூர்வமற்ற மறைமுகப் பயிலரங்குகள் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இரண்டாம் தட இராஜதந்திரம் முறையான பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகி எதிரெதிர் குழுக்கள் அல்லது நாடுகளின் செல்வாக்கு மிக்க உறுப்பினர்களுக்கு இடையேயான முறைசாரா தொடர்புகளை உள்ளடக்கியது. இது கல்வியாளர்கள் மற்றும் சிவில்; சமூகத் தலைவர்கள் போன்ற அரசு சாரா அமைப்புகளால், அவர்களின் தனிப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை விட, மோதல்களின் மனிதப் பரிமாணத்தை ஆராய்வது நம்பிக்கையை உருவாக்குவது மற்றும் பரஸ்பர புரிதலை வளர்ப்பது என்பதே இதன் முதன்மை நோக்கமாகும். இந்த அணுகுமுறை அதிக இடர் நிறைந்ததாகக் கருதப்படும் யோசனைகளையும் சாத்தியமான தீர்வுகளையும் சோதித்துப் பார்க்க அனுமதிக்கிறது.
அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளைத் தாமதப்படுத்தும் பிரச்சினைகளை, குறிப்பாக அச்சம், வரலாற்றுப் குற்றச்சாட்டுகள்; மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றால் எழும் பிரச்சினைகளைக் கையாள்வதால் இரண்டாம் தட இராஜதந்திரம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. மனிதக் காரணிகளை அடிக்கடி புறக்கணிக்கும் முறைசார் இராஜதந்திரத்திற்கு மாறாக, இரண்டாம் தட முறையானது அதிகாரப்பூர்வமற்ற தரப்பினரிடையே உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் அமைதிக்கான உளவியல் தடைகளை அகற்ற முயல்கிறது. முறைசார் உறவுகள் இல்லாத சூழல்களில் இது ஒரு முக்கியத் தகவல் தொடர்பு இணைப்பாகவும் ஒரு முக்கியப் பங்காற்றுவதாகவும் செயல்படுகிறது.
இரண்டாம் தட இராஜதந்திரம் முறையான பேச்சுவார்த்தை முறைகளுக்கு மாறாக உரையாடல் மற்றும் உறவுகளைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகிறது. இதன் முதன்மை உத்தி, சிக்கல் தீர்க்கும் பயிலரங்கமாகும். இதில் பங்கேற்பாளர்கள் ஒரு நடுநிலையான வழிகாட்டியின் வழிகாட்டுதலுடன் பாதுகாப்பான அதிகாரப்பூர்வமற்ற சூழலில் தங்கள் தனிப்பட்ட அனுபவங்களையும் அடிப்படைத் தேவைகளையும் விவாதிக்கின்றனர். நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் கல்வி மாநாடுகள், கலாச்சாரப் பரிமாற்றங்கள் மற்றும் கூட்டுத் திட்டங்கள் போன்றவை பிற அணுகுமுறைகளாகும். அதிகாரப்பூர்வமற்ற தரப்பினரும் தனியாள் இராஜதந்திரப் பயணத்தைப் பயன்படுத்தலாம்.
இரண்டாம் தட இராஜதந்திரம் நம்பிக்கையையும் வெளிப்படையான உரையாடலையும் ஊக்குவிப்பதற்காக பல்கலைக்கழகங்கள் மாநாட்டு மையங்கள் அல்லது தொலைதூர அரங்குகள் போன்ற நடுநிலையான மற்றும் தனியார் அமைப்புகளைப் பயன்படுத்தி வழக்கமான அதிகார மையங்களுக்கு வெளியே நடைபெறுகிறது. இவ்வகை இராஜதந்திரம் உள்ளூர் அல்லது உலகளாவிய அளவில் செயல்படக் கூடியது. இது இருதரப்பு அல்லது பலதரப்பு முயற்சிகள் மூலம் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்கிறது. இது நெகிழ்வானது மற்றும் குறிப்பிட்ட மோதல்களில் கவனம் செலுத்தி தனிநபர்களையும் கருத்துக்களையும் இணைக்கும் உரையாடல் சூழல்களை உருவாக்க முயல்கிறது.
(ஆதாரம்: 1. திருநாவுக்கரசு.மு.(2019). பூகோளவாதமும் புதிய தேசியவாதமும். பூவரசி வெளியீடு, சென்னை, இந்தியா)
(Source: 2. John Peter, (2015). Track Two Diplomacy: Theory and Practice. Stanford University Press, United States)
