June 14, 2026
அரசியல் கட்டுரைகள்

இலங்கை-அமெரிக்க உறவின் நெருக்கமும் இந்திய-இலங்கை தரைவழித் தடமும்?

இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமான உறவு 1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் பலமானதாகவே உள்ளது. வெளித்தோற்றத்தில் முரண்பாடுகளை அதிகம் கொண்டது போல் காட்டிக் கொண்டாலும் அமெரிக்கா முதலாம், இரண்டாவது மூன்றாம் தட(ம்) (Track-I,II,III. Diplomacy) இராஜதந்திரத்தை கொண்டு இலங்கை அரசியலை கையாளுவதில் அதிக கவனம் செலுத்துகிறது. இலங்கையின் இடதுசாரி ஆட்சியாளர்களும் அமெரிக்காவுடன் கைகோர்ப்பதில் அதிக கவனம் கொண்டவர்களாக சமகாலத்தில் விளங்குகின்றனர். இலங்கைக்கான இந்தியத் தூதுவரின் வடக்கு மாகாணத்திற்கான வருகை இராஜதந்திர ரீதியில் அதிக முக்கியத்துவத்தை கொண்டிருந்தது என்பது அவரது விஜயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்கள் உணர்த்துகிறது. இலங்கை ஆட்சியாளர்களும் இந்தியாவுடன் நெருக்கமாக இருந்தாலும் இந்திய-இலங்கை உறவை இந்தியாவின் எல்லாவகை அணுகுமுறைகளையும் அங்கீகரிப்பவர்களாக இல்லை என்பது அவர்களின் அணுகுமுறையில் கண்டுகொள்ள முடிகின்றது. இந்தியாவின் அண்மைக்காக போக்கில் இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான தரைவழிப் பாதை தொடர்பில் அதிக முக்கியத்துவத்தை கொடுத்திருப்பதோடு அதற்கான நிதி ஒதுக்கங்களையும் ஆய்வு பணிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இதனால் அமெரிக்காவும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் இலங்கை ஆட்சியாளர்கள் இலங்கை தீவினை உத்தரவாதப்படுத்திக் கொள்ள அதிக இராஜதந்திர உத்திகளை நிகழ்த்தி வருகின்றனர். இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடி இந்தியாவின் எல்லையற்ற ஒத்துழைப்பையும் உதவிகளையும் அதீதமாக ஏற்படுத்தி இருக்கிறது. அத்தகைய பொருளாதார ஒத்துழைப்பு இலங்கை மீது இந்தியாவின் நேரடியான செல்வாக்கை அதிகப்படுத்துகின்றது. அதுவே இலங்கை ஆட்சியாளர்களுக்கான நெருக்கடியாக மாறி இருக்கின்றது. இந்தியா இலங்கை ஆட்சியாளர்களோடு கொண்டிருக்கின்ற நெருக்கம் அமெரிக்க இலங்கை உறவில் புதிய அத்தியாயங்களை தொடங்குவதில் முனைப்பு காட்டி இருக்கின்றது.

இத்தகைய நடவடிக்கை ஒன்றை 1984 ஆம் ஆண்டு இலங்கை தீவு அமெரிக்காவோடு கூட்டுச் சேர்ந்து கையாண்டது என்பதை தென் இலங்கையைச் சேர்ந்த இராஜதந்திரியான ஸ்டான்லி ஜெயவீர (Stanley Jeyaweera) அப்போது தெரிவித்த கருத்திலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. 1984 ஆம் ஆண்டு இந்திராகாந்தி இலங்கைக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை திட்டமிட்டிருந்தார் என்பதை குறிப்பிடுகின்ற போது திருவனந்தபுரத்தில் விசேட இராணுவ படைபிரிவு (50T.K.Independent Para-Brigade) ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் மத்திய அரசாங்கத்தின் கட்டளைக்காக அது காத்துக் கொண்டிருந்ததாகவும் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின் அக்கட்டளை என்றுமே வரவில்லை என்றும் அவர் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.(The Island-06.10.1991) இலங்கைக்கு எதிராக இந்திரா காந்தி இராணுவ நடவடிக்கைக்கு ஆணை பிறப்பிக்க விரைந்த தருணத்தில் அவர் கொல்லப்பட்டார். இந்திரா காந்தியின் மரணம் சம்பந்தமாக  தர்க்கார் கமிஷனின் விசாரணை அறிக்கையில் ஓர் அந்நிய சக்தி இக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக நாட்டின் பெயர் குறிப்பிடப்படாமல் கூறப்பட்டது. உண்மையிலேயே அந்நிய சக்தி என்ற பதம் எந்த நாட்டை சுட்டுவது என்பது அன்றைய சூழலை வைத்துக் கொண்டு புரிவது பொருத்தமானது. எப்படியும் இந்திரா காந்தியின் கொலையின் மூலம் இலங்கைக்கு எதிராக இந்திய இராணுவ நடவடிக்கைத் திட்டம் முடிந்தது அல்லது முறிக்கப்பட்டது எனலாம். அதன் பிரகாரம் இலங்கைத் தீவுக்கு நெருக்கடி வருகின்ற போது அமெரிக்கா மட்டுமல்ல பிற வல்லரசுகள் தலையீடு செய்வதைக் காணமுடிகிறது. அதில் முதன்மையான நாடாக அமெரிக்காவே விளங்கும். காரணம் அமெரிக்காவே உலக வல்லரசுப் போட்டியில் முதல் நிலையை தக்கவைக்க போரிடும் ஓரரசாக உள்ளது. ஆனால் தென் இலங்கை ஆட்சியாளர்கள் நெருக்கடி வரும் போது இந்தியாவை அரவணைத்து கையாளுவது அல்லது பிற சக்திகளோடு கூட்டு சேர்ந்து இந்தியாவை எதிர்த்து கையாளுவது அல்லது சரணடைந்து கையாளுவது என்ற இராஜதந்திர பொறிமுறை ஒன்றை கொண்டுள்ளனர். அதேபோன்று ஒரு சூழலை மீண்டும் இலங்கை எதிர்கொள்ளுகின்ற காலப்பகுதிக்குள் நுழைவதாக தெரிகின்றது. அதனை எதிர்கொள்வதும் முறியடிப்பதும் இலங்கை அமெரிக்கா ஒத்துழைப்பின் ஓர் அம்சமாகவே தெரிகின்றது. அதற்கேற்ற வகையிலேயே அமெரிக்காவின் முதலாம், இரண்டாம், மூன்றாம் தட இராஜதந்திர செய்முறைகள் பிரயோகப்படுத்தப்படுகிறது. இதற்கு ஆதாரமாக சமகாலத்தில் நிகழ்ந்து வரும் சம்பவங்களை அடையாளப்படுத்த முடியும்.

முதலாவது அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஜனநாயக கூட்டாண்மை (HDP) மற்றும் காங்கிரஸ் வரவு செலவு அலுவலகம் (CBO) ஆகியவற்றின் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தொழில்நுட்ப உதவி அமர்வில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் பங்கேற்ற நிகழ்வொன்று (11.06.2026) நடைபெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும், பாராளுமன்ற வளாகத்தில், இரு குழுக்களாலும் வழி நடத்தப்பட்ட ஒரு தொழில்நுட்ப உதவி அமர்வில் பங்கேற்றனர். இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அத்தகைய விசேட குழுவுடன் இணைந்து அரசாங்க செலவினங்கள், பொருளாதார கொள்கைகள் மற்றும் முன்மொழியப்பட்ட சட்டங்களை சுயாதீனமாக பகுப்பாய்வு செய்யும் திறனை வலுப்படுத்துவதில் இலங்கை பாராளுமன்றத்திற்கு ஆதரவளிப்பது பற்றிய விடயத்தில் கவனம் செலுத்தியது. ஒரு வார கால தொழில்நுட்ப உதவிப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, HDP திட்ட பணிப்பாளர் மீகன் மூர் (Meagan Moore) மற்றும் CBO நிபுணர்களான மேகன் கரோல் (Megan Carroll) மற்றும் கிறிஸ்டி ஹாவ்லி அந்தோணி (Christi Hawley Anthony) ஆகியோரைக் கொண்ட ஒரு தூதுக்குழு வரவுசெலவுத் திட்ட மேற்பார்வை மற்றும் பொதுச் செலவினங்களுக்காக சுதந்திரமான, பாரபட்சமற்ற பகுப்பாய்வை வழங்குவதில் அமெரிக்காவின் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது நிதிக் குழுவின் (COPF) பணியாளர்களுடன் நடத்தப்பட்ட பணி அமர்வுகள் அடங்கும். இந்த அமர்வுகள் ஒரு நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்ட அலுவலகத்தின் (PBO) வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு, பராளுமன்ற உறுப்பினர்களின் தகவல் தேவைகளைக் கண்டறிதல் மற்றும் நீண்டகால நிறுவனத் திறனுக்கான ஒரு செயல் திட்டத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தின.

இரண்டாவது அமெரிக்க விசேட தூதுக்குழுவினர் எதிர்க்கட்சித் தலைவரோடு சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது. இது வழமையான நிகழ்வென கடந்து செல்லலாம். ஆனால் தூதுவர்களதும் தூதுக்குழுக்களதும் சந்திப்புகள் இராஜதந்திர நகர்வுகள் என்பதை புரிந்து கொள்ள அவசியமான விடயமாகவே தெரிகிறது. இரு தரப்பும் நீண்ட காலமாக நிலவிவரும் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது, சமகாலத்தில் இலங்கை எதிர் கொள்ளும் அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் பற்றி விரிவாக கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.

மூன்றாவது அமெரிக்காவின் போர் கப்பலான யுஎஸ்எஸ் கன்பெரா(USS Canberra -LCS 30) 12.06.2025 இல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஈரான் போர்க்கப்பல் தொடர்பு ஏற்பட்ட சர்ச்சையில் இலங்கை சிக்கிக் கொண்டதோடு ஈரானின் போருக்கு பயன்படுத்துவதற்கு மாத்தள விமான நிலையத்தில் தமது விமானங்களை நிறுத்த அமெரிக்கா கோரிய போதும் இலங்கை மறுத்திருந்தது மட்டுமின்றி அதனை பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை இராஜதந்திர ரீதியில் அதிக குழப்பத்தை தந்திருந்தது. ஒரு சிறிய நாடு அமெரிக்காவுடன் முரண்படுவதற்கான வாய்ப்புகளை கோடிட்டுகாட்டுவதாகவே பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரை அமைந்திருந்தது. ஆனால் அது ஒரு சாத்தியமான செய்முறையா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அத்தகைய எழுச்சிகரமான உரைக்குப் பின்னால் அமெரிக்க இலங்கை உறவின் இறுக்கத்தன்மை அதிகரித்திருப்பதோடு தொடர்ச்சியாக இலங்கையோடு அமெரிக்க முதலாம் இரண்டாம் மூன்றாம் இராஜதந்திர உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இவை அனைத்தையும் அவதானிக்கின்ற போது ஈழத்தமிழர்கள் அதிகம் கவனம் கொள்ள வேண்டிய விடையங்கள் நிகழ்வதாகவே தெரிகின்றது. குறிப்பாக இந்திய தூதர் வடக்கு பயணமும் இந்தியாவின் அண்மைக்கால போக்கில் காணப்படும் இந்தியா-இலங்கை தொடர்பான தரைவழிப் பாதை அமைப்பதற்கான உத்திகள் வலுவான நிலையை நோக்கி நகருகின்றது. அதனை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை புதுடில்லி ஒத்துழைப்பு சுமூகமான போக்கினை கொண்டிருப்பதாக இல்லாத சூழலில் அமெரிக்காவுடன் தென் இலங்கை ஆட்சியாளர்கள் அதிக நெருக்கமான உறவை கொண்டு தரைவழிப்பாதை உருவாக்கப்படுவதை தடுத்து நிறுத்த திட்டமிடுகின்றனர்.

எனவே இத்தகைய சூழலுக்குள் தரைவழிபாதை தொடர்பில் ஏற்படக் கூடிய இலங்கை-இந்திய உறவை துண்டிக்க வேண்டிய அடிப்படை நலன் அமெரிக்காவுக்கு உண்டு. இதில் சீனாவுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற வகையில் அமெரிக்க-இலங்கை உறவை சீனா ஆதரிக்கும் என்றும் புரிந்து கொள்ளுதல் ஆரோக்கியமானது. எனவே தான் ஈழத்தமிழர்களும் அவர்களது அரசியல் பக்கங்களும் இது தொடர்பில் கவனம் கொள்வதும் விழிப்படைவதும் அவசியமானது. வெளித்தோற்றத்தில் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களோடு கூட்டிச் சேர்வது போல் காட்டிக் கொண்டாலும் நடைமுறையில் அவர்களது அணுகுமுறை அடிப்படையில் இந்தியாவுக்கு எதிரானது மட்டுமின்றி ஈழத்தமிழருக்கான வாய்ப்புக்களை முறியடிப்பதாகவே உள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி:யாழ்.தினக்குரல்)