ஈழத்தமிழரின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு வரைபுகளுடன் மட்டுப்படுத்தப்படும் நிலையை கொண்டிருப்பதாக விவாதிக்கப்படுகிறது. அதனையும் கடந்து அத்தகைய வரைபு முயற்சிகள் இனவாதமாகவும் நோக்கப்படுகிறது. ஈழத்தமிழரது தேசிய உணர்வை இனவாதமாகவும் ஜே.வி.பி.இன் அணுகுமுறையை இலங்கைத் தேசியத்தின் அடையாளமாகவும் உரையாடப்படுகிறது. கடந்த 70 வருடங்களில் தமிழர்கள் முன்னெடுத்த தீர்வுகளுக்கான வரைபுகளும் உடன்பாடுகளும் அறிக்கைகளும் எத்தகைய தீர்வையும் தரவில்லை. அவற்றை எந்த தரப்பும் கவனம் கொள்ளாத நிலை ஒன்றை கண்டுகொள்ள முடிகிறது. மீண்டும் வரைவுகளுக்கான முக்கியத்துவம் உணரப்பட்டிருப்பதுடன் தீர்வுகளை நோக்கி நகரவேண்டிய தேவை ஈழத்தமிழருக்கு ஏற்பட்டுள்ளது. காரணம் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை ஒன்று இல்லை என்ற விவாதம் அதிகரித்துவருகிறது. இவ்வகை சவால்மிக்க களத்தை வரைபுகளால் மட்டும் வெற்றி கொள்ள முடியுமா என்பது கேள்விக்குரியதே. வரைபுகளை மட்டும் முன்வைப்பதோடு அதனை நடைமுறைப்படுத்தும் விதத்திலான அழுத்தங்களை ஆட்சிகளுக்கு வழங்க தயாராக வேண்டும்.
முதலாவது ஈழத்தமிழர்களின் அரசியல் பாராளுமன்ற மரபுக்குள் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என்பது கடந்த கால அனுபவமாகும். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு எதனையும் 76 சதவீதமான பாராளுமன்றத்தின் பெரும்பான்மை இனத்துக்கு முன்னே சாத்தியமற்ற செய்முறையாகவே உள்ளது. அரசியல் அமைப்பு மாற்றமும் ஆட்சி மாற்றங்களும் தீர்வுகளைப் பற்றி உரையாடினாலும் பாராளுமன்றம் ஒருபோதும் எத்தகைய தீர்வையும் ஈழத்தமிழருக்கு வழங்க தயாராக இல்லை என்பது கடந்த வரலாறு முழுவதும் பெற்றுக் கொண்ட அனுபவமாகும். அவ்வாறு வெற்றி கொள்ள வேண்டுமாயின் பாராளுமன்றத்தை பேராட்ட களமாக மாற்றும் திறனும் தலைமைகளும் அவசியமாலைவயாகும்.
இரண்டாவது இலங்கைத் தீவின் எல்லைகுள் இனப்பிரச்சினைகான தீர்வு சாத்தியமாகுமா என்ற கேள்வி எல்லா காலப்பகுதியிலும் எழுப்பப்பட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்திற்கு முன்பும் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பும் இவ்விடயம் விவாதத்துக்குரியதாகவே மாறி இருக்கின்றது. இலங்கை தீவுக்குள் தேசிய இன பிரச்சனைக்கான தீர்வு சாத்தியமற்றது என்பது தெளிவாகவே கண்டு கொள்ள முடிகிறது.அதனால் அதறடகு வெளியே இனப்பிரச்சினையையும் அதற்கான தீர்வையும் முடுன்னெடுக்கும் வரைபுகள் கட்டமைக்கப்பட வேண்டும். இலங்கை அரசாங்கத்திற்கு முன்வைக்கும் வரைபுகளுக்கு சமாந்தரமாக வெளியேயும் தீர்வுக்கான உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.
மூன்றாவது பிராந்திய அடிப்படையில் இந்தியாவின் அரசுடன் மேற்கொள்ளப்பட்ட இலங்கை- இந்தியா ஒப்பந்தம் முன்வைத்த பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் கூட அமுல்படுத்த முடியாத நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. அதனுடைய உள்ளடக்கங்கள் முழுமையாக இல்லை என்பது மட்டுமல்ல இலங்கை தீவில் அதனை அமுலாக்கப்பட முடியாத ஒன்றாக மாறி உள்ளது என்பதும் அவதானத்திற்கு உரியது. இனப்பிரச்சனையின் தீர்வுக்காக முன்வைக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டம் அமுலாக்கம் செய்வதற்கு முடியாத அரசியல் கலாச்சாரத்தை இலங்கை தீவு கொண்டிருக்கின்றது.
நான்காவது சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆறு கட்ட பேச்சுக்களும் அதனால் அங்கீகரிக்கப்பட்ட புரிந்துணர் உடன்படிக்கையும் காலாவதியான வரலாறு ஆயுதப் போராட்ட காலபகுதியில் நிகழ்ந்து முடிந்தது. அதனால் ஒரு பெரும் போரையும் தமிழ் மக்களின் அடிப்படை இருப்பையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியதோடு இனப்பிரச்சனைக்குரிய தீர்வை எட்ட முடியாத சூழல் ஒன்று இலங்கை தீவில் ஏற்பட்டுள்ளது.
ஐந்தாவது இடதுசாரி அரசாங்கம் ஒன்று இனப்பிரச்சினையை தீர்க்கும் என்ற எதிர்பார்ப்பை தமிழ் மக்களிடம் காணப்பட்ட போதும் நடைமுறையில் எத்தகைய முயற்சியையும் மேற்கொள்ளாமல் வலதுசாரி அரசாங்கங்கள் போன்று செயல்படுவதைக் கண்டுகொள்ள முடிகிறது. இடதுசாரி அரசாங்கம் வலதுசாரி அரசாங்கங்களை விட தீவிரமான எதிர்ப்பு வாதத்தை கொண்டு செயல்பட முனைகிறது.
ஆறாவது இவ்வகை சூழலிலேயே மீளவும் இனப்பிரச்சினைக்குரிய தீர்வு பொறுத்து வரைவுகள் தொடர்பில் உரையாடலை அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் முன்வைத்து வருகின்றன. ஏற்கனவே பல சிவில் அமைப்புகள் ஒன்றுக்கும் மேற்பட்ட வரைவுகளை முன்வைத்து அவை எதுவும் சாத்தியமற்றவை என்பதற்காக வரைபுகள் தேவையற்றதாகிவிடாது. ஆனால் வரைபுகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அதற்குரிய தனித்துவம் ஒன்றுசேர்தல் நிகழ வேண்டும். புதிதாக முன்வைக்கப்படபோகின்ற வரைவுகளினால் விளைவை ஈழத்தமிழர்கள் அடைய வேண்டும். ஈழத்;தமிழர்கள் ஆயுதப்போராட்டத்தின் முடிவுக்கு பின்னர் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு தயார் என்ற நிலைக்குள் வரைபுகள் கட்டமைக்கப்பட வேண்டும். அதனாலேயே வரைவுகளையும் உடன்பாடுகளையும் கொண்டு தீர்வை பெற்றுக் கொள்ளலாம் என்றும் நம்பிக்கை உருவாக்கப்பட வேண்டும். அந்த நம்பிக்கைக்காக ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வரைவுகளை முன்வைப்பவர்களும் வரைபுகளுக்கு உள்ளடக்கங்களும் எந்த விதத்திலும் ஈழத்தமிழர்களுடைய போராட்டத்தை முதன்மைப்படுத்த கூடிய அளவுக்குரியதாக விளங்க வேண்டும். வரைவுகளுக்கு அப்பால் போராட்டங்களே தற்போதைய சூழலில் மாற்றத்துக்கான அடிப்படையாகும். ஜனநாயக ரீதியில் நகரங்களையும் தூதரகங்களையும் முற்றுகையிட வேண்டும். இத்தகைய செய்முறை ஒன்றை முன்னெடுக்கின்ற போது மட்டுமே ஈழத்தமிழர்கள் அரசியல் ரீதியில் தீர்வுகளை நோக்கி இலங்கை அரசையும் உலக நாடுகளையும் ஈர்க்க முடியும். வரைபுகள் எத்தகைய விளைவும் ஏற்படப்போவதில்லை என்று கருதும் அரசாங்கத்திற்கு அதன் முக்கியத்துவத்தை ஜனநாயக போராட்ட வழிமுறையூடாக உணர்த்த வேண்டும். பிராந்திய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அவ்வகையான சூழலை உருவாக்க வேண்டும். போராடுகின்ற துணிச்சலோடு கட்சிகளும் சிவில்அமைப்புகளும் கூட்டாக செயல்பட முனைகின்ற போது மட்டுமே மாற்றத்தை நோக்கி நகர முடியும்.
எனவே வரைபுகள் ஆரோக்கியமானவை. ஆனால் அவற்றின் விளைவுகளும் ஆரோக்கியமானதாக அமைய வேண்டும். வரைவுகளுடன் நின்றுவிடாது ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தக் கூடிய துணிச்சல் மிக்க போராட்டங்களை முன்னெடுக்கும் தலைமைகளும் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் அவசியமானவை. அவற்றை நோக்கி ஈழத்தமிழர்கள் செயல்படுகிற போது மட்டுமே நிரந்தர தீர்வுக்கான ஏதாவது மாற்றம் சாத்தியமாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: யாழ் தினக்குரல்)
