ஓர் அரசானது அரசுகள் என்ற அமைப்பினுள் அவ்வரசின் கொள்கைத் தீர்மானங்களுக்கு அமைவாக நலன்களை அடைவதற்கான கொள்கைகளையும் நடைமுறைகளையும் அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கையெனக் குறிப்பிட்டுக் கொள்ள முடியும். பொருத்தப்பாடுடைய அரசுகளுடனும் வளத்தை பகிரக்கூடிய அரசுகளுடனும் இசைவான உறவைத் தெரிவு செய்வதும் வெளிநாட்டுக் கொள்கையாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஓர் அரசின் தேசிய நலன்களை அடைவதற்கான மிகப்பெரிய கருவிகளில் ஒன்றாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. இது அரசுகளின் முழு அரசியல் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
தேசிய அரசுகளின் தோற்றமானது நாடுகளுக்கிடையிலான உறவினை பொருளாதார, இராணுவ, அரசியல் அர்த்தத்தில் வளர்ச்சியை வெளியுறவுக்கு ஏற்படுத்தியது. இந்த வளர்ச்சியின் இறுதி விளைபொருளான வெளியுறவு இராஜதந்திர மரபுக்குள் இயங்கு நிலையைப் பெற்றது. வலுவான, வலுக்குறைந்த தேசிய அரசுகளுக்கிடையே முறைமையான உறவை வெளியுறவு ஏற்படுத்தியது. ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கம் பிராந்திய சர்வதேச அமைப்புகளது விரிவாக்கம் என்பனஅரசுகளின் உயிர்வாழ்வுக்கு வெளியுறவு அவசியமானதென்பதை மேலும் வலுப்படுத்தியது.
வெளிநாட்டுக் கொள்கை பற்றி அரசியல் அறிஞரான கரோல் நிக்கொல்சன் குறிப்பிடும்போது தந்திரமானதும், பிற நாட்டுடன் இணக்கப்பாடு உடையதுமான அரசியல், பொருளாதார, வர்த்தக, கலாசாரத் தொடர்பின் முழுமையான வெளிப்பாடே குறிப்பிட்ட நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையாகும் என்றார். ஜோர்ச் மொடஸ்கி என்பவர் வெளிநாட்டுக்கொள்கையானது ஒர் அரசு உலக சூழலுக்கேற்ப உள்நாட்டு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தவும் அதற்கு செயல்வடிவம் கொடுக்கவும் மேற்கொள்ளப்படும் முறையான நடைமுறை என்றார். மாடல்ஸ்கி வெளியுறவுக் கொள்கையின் முதன்மை நோக்கங்களாக, அரசுகளின் தற்போதைய நடத்தையில் மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட கொள்கையின் அம்சங்களை மட்டுமே குறிப்பிட்டார். இருப்பினும், வெளியுறவுக் கொள்கை மாறுவது மட்டுமல்ல, வெவ்வேறு நேரங்களில் நடத்தையின் தொடர்ச்சியும் ஆகும். இது தேசிய நலனுக்கு சேவை செய்யும் வரையில் மாற்றம் மற்றும் தற்போதைய நிலை ஆகிய இரண்டிலும் அக்கறை கொண்டுள்ளது. லிங்டன் என்பவர் ஓர் அரசு எல்லைக்குப்பட்ட பிரதேசத்தின் நலன்களை பாதுகாக்கவும் அதன் இலக்குகளை அடையவும், செயல்படுத்தவும், முயற்சிப்பதைக் குறிப்பதாகும் என்றார். ஒரு குறிப்பிட்ட தேசிய அரசுடன் எந்த உறவும் இல்லை என்று முடிவு செய்வது கூட வெளியுறவுக் கொள்கையாகும் என பெலிக்ஸ் கிராஸ் குறிப்பிடுகிறார்.
ஹெர்மன், வெளியுறவுக் கொள்கையை ஒரு தனிநபர் அல்லது தனிநபர்களின் குழுவின் அரசியல் மட்ட முடிவின் விளைவாக ஏற்படும் தனித்துவமான நோக்கமுள்ள செயல் என்று வரையறுத்தார். இது ஒரு அரசியல் மட்ட முடிவின் கவனிக்கக்கூடிய கலைப்பொருளாகும். இது முடிவு அல்ல, ஆனால் முடிவின் விளைபொருள். இதன் மூலம், ஹெர்மன் வெளியுறவுக் கொள்கையை அரசுகளின் நடத்தை என்று வரையறுப்பதைக் காணலாம்.
ஜோசப் பிராங்கலின் கூற்றுப்படி, ‘வெளியுறவு கொள்கை முடிவுகள் மற்றும் செயல்களைக் கொண்டுள்ளன. இது ஒரு அரசுகளிற்கும் மற்றவர்களுக்கும் இடையே சில குறிப்பிடத்தக்க அளவிற்கு உறவுகளை உள்ளடக்கியது’. இதன் மூலம், வெளியுறவுக் கொள்கை என்பது நாட்டின் எல்லைகளுக்கு வெளியே இருக்கும் சக்திகளை நோக்கமாகக் கொண்ட அரச எல்லைகளுக்குள் செய்யப்படும் செயல்களின் தொகுப்பை உள்ளடக்கியது. இது மற்ற அரசுகளுடன் அவர்களின் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தொடர்பு கொள்ளும்போது அரசுகளின் நடத்தையை நிர்வகிக்கும் யோசனைகளின் தொகுப்பை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று கூறிக்கொள்ள முடியும்.
அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய விடயத்தை நோக்கும் போது தெளிவான ஒரு வரலாற்று நியமம் காணப்படுகின்றது. ஓர் அரசின் வெளிநாட்டுக் கொள்கையை முதன் முதலில் ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் ஐக்கியத்துடன் ஆரம்பமானது. அதிலும் குறிப்பாக பிரஷ்சியா மாநிலஅரசின் இராஜதந்திரியும் அவ்வரசின் அரசியல் ஆலோசகருமாக பணிபுரிந்த பிஸ்மார்க் என்பவரே வெளிநாட்டுக் கொள்கைக்கான மதிநுட்பத்தை முதன்முதலில் உருவாக்கியிருந்தார். பிரஷ்யாவின் பலத்தையும் ஆட்புல பரப்பபையும் விஸ்தரிக்கும் நோக்குடன் இதர சிற்றரசுகளை கையாளுவதற்கான வழிமுறையொன்றை வரைந்து பிரஷ்யாவைப் பெரும் பேரரசாக அமைத்துக்கொண்டார். அதன் பின்னர் அரசுகள் ஒவ்வொன்றும் தமது, அரசியல், பொருளாதார கலாசார விடயங்களில் பிறநாடுகளுடன் பின்பற்றும் நுட்பமான, தந்திரமான உறவினை வெளிநாட்டுக் கொள்கையென அழைத்துக் கொண்டனர்.
(ஆதாரம்: கே.ரீ.கணேசலிங்கம், (2010), ‘சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் வெளியுறவுக் கொள்கை’)
