இந்திய-இலங்கை இராஜதந்திர உராவின் இன்னொரு பரிமாணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவிற்கும் இடையிலான தொலைபேசி உரையாட நிகழ்ந்துள்ளது. இலங்கை தீவில் ஏற்பட இருக்கின்ற உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை எட்டுவதற்கான ஓர் அங்கமாக இரு தலைவர்களுக்குமான உரையாடல் அளவீடு செய்யப்படுகிறது. அடிப்படையில் ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலியா தாக்குதல் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்திருக்கிறது. அதில் இலங்கையும் இந்தியாவும் தமக்கு ஏற்பட இருக்கும் பாதிப்புகளை சரி செய்கின்ற போக்கினை முதன்மைப்படுத்தி உரையாடியுள்ளனர்.தலைவர்கள் மட்டுமன்றி இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் உரையாடியுள்ளனர். இக்கட்டுரையும் இலங்கை இந்திய உறவில் நிகழும் இராஜதந்திர ரீதியான உரையாடல்களின் சரியான பக்கங்களை அடையாளம் காண முயற்சிக்கின்றது.
இலங்கை-இந்திய தலைவர்களுக்கிடையிலே நிகழ்ந்த தொலைபேசி உரையாடலில் பரிமாறப்பட்ட பிரதான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அடிப்படையில் பெற்றோலியப் பொருட்கள் தொடர்பில் ஏற்பட்ட நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி இருநாட்டு தலைவர்களும் உரையாடியுள்ளனர். அது மட்டுமின்றி இந்தியா இலங்கைக்கு ஏற்படப் போகின்ற நெருக்கடியை சரி செய்வதற்கான உத்தரவாதங்களை அதிகம் முன் வைத்திருக்கின்றது. உலகளாவிய உணவுச் சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் கடல் ரீதியான பாதுகாப்பை(மகாசகார் திட்டம்) பற்றிய விடயங்களை கையாளுவதற்கும் பிராந்திய ரீதியான பாதுகாப்புக்கான உத்தரவாதங்களை உறுதிப்படுத்துவதற்கும் உரையாடல் சில முன்மொழிவுகளை தந்துள்ளது. 2009 க்கு பின்னர் இரு நாடுகளுக்குமான உறவு வலுவானதாக இருந்தாலும் இந்தியா இலங்கையுடன் நீண்ட கால நெருக்கடி இராஜதந்திரத்தை பிரயோகப்படுத்தி வருகிறது. அதுவே இந்தியா இலங்கைக்குள் ஏற்படுத்திவரும் அரசியலாக உள்ளது. அதனை ஆழமாக அவதானித்தல் அவசியமானது.
முதலாவது 1991 ஆம் ஆண்டு வரை இந்தியா இலங்கையின் அரசியல் உறவானது தேசிய இனங்கள் தொடர்பில் எழுந்து நெருக்கடியை தேசிய இனங்களுக்கு ஊடாக கையாளுவதற்கான உத்தியை பிரயோகித்திருந்தது. 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்வைத்த திறந்த பொருளாதாரக் கொள்கையை அப்போதைய இந்திய ஆட்சியாளர்கள் எதிர்கொள்வதற்கு தேசிய இனங்களின் முரண்பாடுகளை அதிகம் பயன்படுத்திக் கொண்டனர். அது ஒரு வகையில் பனிப்போர்க் காலகட்டம். இன விடுதலையும் இனப் போராட்டத்திற்கான உலகளாவிய பரிமாணங்களில் ஒன்றாக நோக்கப்பட்டது. தேசிய இனங்கள் மீது வழங்கப்பட்ட ஒத்துழைப்பினால் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை கொடுக்க முடியும் என்ற உபாயத்தோடு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு ஆதாரமாகவே 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்தியா உடன்படிக்கை சாத்தியமானது.
இரண்டாவது 1990 க்கு பின்னான உலகளாவிய மாற்றங்களும் தேசிய இனங்கள் தொடர்பில் ஏற்பட்ட நெருக்கடிகளும் இந்தியா தேசிய இனங்கள் சார்ந்த அரசியலை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னிறுத்தி ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கங்களோடு அல்லது அரசோடு தனது நேரடி உறவை இராஜதந்திர ரீதியாக வலுப்படுத்தும் தொடங்கியது. அத்தகைய வலுப்படுத்தலில் அங்கமாகவே நெருக்கடி காலங்கள் எல்லாவற்றிலும் இந்தியாவின் உதவியும் ஒத்துழைப்பும் இலங்கை தீவுக்கு சாத்தியமாகியது. சிறிபெரும்புத்தூர் துயருக்கு பின்னர் அத்தகைய இராஜதந்திர அணுகுமுறை இந்தியா தீவிரப்படுத்தியது. இதனால் இலங்கை தீவில் உள்ள தேசிய இனங்களை முற்றாக கைவிட்டதென்றோ இலங்கை தீவில் பிற சக்திகளின் தலையீட்டை எதிர்கொள்வதில் சரியான வழிமுறைகளை பின்பற்றுகிறது என்றோ பொருள் கொள்ள முடியாது. மாறாக இந்தியாவின் இராஜதந்திர நடைமுறையில் புதிய உத்தி ஒன்றை அது மேற்கொள்ள தொடங்கியது.
மூன்றாவது இந்தியாவின் அத்தகைய நெருக்கடிகால இராஜதந்திர நடைமுறையானது இறுதி கட்ட போரிலும், கொவிட்-19 தொற்றின் போதும், அப்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போதும், பின்னர் நிகழ்ந்த அரசியல்-பொரளாதார நெருக்கடியின் போதும் வெளிப்படையாக காணமுடிந்தது. ஆரம்பகாலத்தில் இருந்த இலங்கையுடனா நெருக்கமான உதவிகளைவிட இந்தியா 2009 களுக்கு பின்னர் மிக தீவிரமான ஈடுபாட்டை இலங்கை தீவில் மேற்கொண்டது. இந்தியா நெருக்கடிகால உதவியனூடாக இலங்கைக்குள் நகர்ந்து வருகின்றது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை தீவை நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதில் இந்தியாவுக்கு பாரிய பங்கு இருக்கிறது. இதனை உறுதிப்படுத்த பலவிடயங்களை குறிப்பிடலாம். பாரிய நிதி பங்களிப்பை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது. 2022-2026 இடையில் மட்டும் ஏறக்குறைய 4.6 பில்லியன் அ.டொ. இந்தியா இலங்கைக்கு நிதி உதவியாக வழங்கியுள்ளதாக தகவல்கள் உண்டு. இதில் கடன்கள் நன்கொடைகள் சக்தி வள விநியோகம்; ஆயுத தளபாடங்கள் எனவும் அதற்கான பயிற்சியும் போன்ற பல விடயங்கள் உள்ளடங்குகின்றன. இந்தியா இலங்கை அரசோடு அல்லது அரசாங்கங்களோடு நெருக்கமான உறவை கொள்வதில் வெற்றிகரமான இராஜதந்திர பக்கத்தை கட்டிவருகின்றது. இதில் இலங்கைத் தரப்பும் நெருக்கடியான விடயங்களையும் குழப்பம் தரக்கூடிய முக்கியமான அம்சங்களையும் கிடப்பில் போடுவதும் காலத்தை இழுத்தடிப்பதுமாக நகருகின்றது. குறிப்பாக இலங்கை-இந்திய தரைவழிப் பாதை அமைப்பது, பலாலி விமான நிலையத்தின் சர்வதேச தரம் வாய்ந்ததாக மாற்றுவது, காங்கேசன்துறை துறைமுகத்தின் முக்கியத்துவம் திருகோணமலையிலுள்ள எண்ணைக் குதங்களின் பராமரிப்பு போன்ற பல விடயங்கள் ஒத்தி வைப்பதும் தந்திரமாக கையாளுவதும் இருதரப்பின் இராஜதந்திர நகர்வுகளாக விளங்குகின்றன. ஆனால் இவற்றை இந்தியா படிப்படியாக கையகப்படுத்துவதில் வெற்றிகரமான இராஜதந்திரத்தை கொண்டு விளங்குகிறது.
நான்காவது தற்போது எழுந்திருக்கும் பெற்றோலிய நெருக்கடி என்பது உலகளாவிய நெருக்கடியாக காணப்படுகிறது. ஆனால் இந்திய வெளியுறவு அமைச்சர் அறிக்கையின் பிரகாரம் மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை போன்ற நாடுகள் இந்தியாவிடம் பெற்றோலியம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. அவற்றில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது மாலத்தீவு ஒரு வெற்றிகரமான சேமிப்பை கொண்டிருக்கிறது என்ற விவாதங்கள் உண்டு. எல்லாவற்றையும் கடந்து இலங்கை தீவில் நெருக்கடியை சரிசெய்ய இந்திய ஆட்சியாளர்கள் வெளிப்படையாகவே உதவுவதாக அறிவித்து வருகின்றனர். தொலைபேசி உரையாடலிலும் அவர்களது எக்ஸ் தளத்தின் பதிவுகளிலும் இலங்கைக்கு இந்தியா பாரிய உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவே உணர்த்தப்படுகிறது.
ஐந்தாவது இத்தகைய உடனடி ஒத்துழைப்புக்கும் உதவிக்கும் அடிப்படையில் நெருக்கடி கால சூழலை பயன்படுத்திக் கொண்டாலும் அத்தகைய நெருக்கடிகால இராஜதந்திர செய்முறையை வெற்றிகரமாக இந்தியா நகரத்திவருகிறது. அடிப்படையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் புவிசார் அரசியல் ரீதியான தொடர்பு பிரதானமான ஒன்றாக விளங்குகிறது. அவ்வாறு நிலவுகின்ற புவிசார் அரசியல் உறவின் பிரகாரம் இலங்கை பிற வல்லரசுகளின் தலையீட்டுக்குள் அதீத செல்வாக்கை அடைந்து விடக்கூடாது என்பதிலும் அதனை கையாளுவதற்கான சரியான காலப்பகுதியாக இலங்கையின் அரசியல் பொருளாதார இராணுவ நெருக்கடிகளை பயன்படுத்திக் கொள்ளவும் இந்தியா முனைகிறது. இந்தியாவின் வெற்றிகரமான இராஜதந்திரம் நெருக்கடியான காலத்தில் உதவுவதன் ஊடாக இலங்கையுடனான உறவை வலுப்படுத்திக் கொள்வது பிரதான நோக்கமாகத் தெரிகிறது. அது நிரந்தரமான ஒத்துழைப்பையும் உறவையும் வலுப்படுத்துவதோடு பிற சக்திகளை தங்கி இருப்பதைவிட இந்தியாவோடு நெருக்கமாக இருத்தல் அவசியமானதென இந்தியா கருதுகிறது. அத்தகைய எண்ணத்தை இலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல இலங்கை மக்களும் எதிர் தரப்புகளும் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்ற ஒரு நீண்ட இராஜதந்திர செய்முறையின் வடிவமாகவே இந்தியா விளங்குகிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு உதவுதல் என்பது நட்படிப்படையிலோ, புவிசார் உறவின் அடிப்படையிலோ மட்டும் நிகழ்வது அல்ல. இராஜதந்திர ரீதியான நலன்களை அடிப்படையிலும் நிகழக்கூடியது.
எனவே இந்தியப் பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் நெருக்கடிகால இராஜதந்திரத்தின் அனுபவமாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது ஒன்றும் மறைவான விடயம் கிடையாது. அரசியல் என்பது வாய்ப்புகள் அல்லது சந்தர்ப்பங்கள் அமைகின்ற போது நிகழும் பயணமாகும். அத்தகைய இராஜதந்திர செய்முறைக்கான களம் இலங்கையில் எப்போதும் உண்டு. ஈழத்தமிழ் அரசியலானது அத்தகைய களத்தில் மிகப் பலவீனமான நிலையை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. தென்னிலங்கைக்கு இந்தியாவுக்குமான உறவின் பலம் ஈழத்தமிழர் அரசியலில் பலவீனமானதாகவே அமையும். இலங்கைத் தீவின் அரசியல்-பொருளாதார- இராணுவ மற்றும் சமூக ரீதியான உறவில் இந்தியா வலுவான நிலையினை நெருக்கடி காலத்தை பயன்படுத்திக் கொண்டு நகர்த்துகிறது. இது இந்தியா இலங்கை பொறுத்து கையாண்டுவரும் கொள்கையின் வெற்றிகரமான பக்கமாகவே காணப்படுகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
